தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஹீரோயின்ஸ்!



‘‘திரையைப் பார்க்க முடியாமல் இங்கே 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது...’’ சமீபத்தில் இசைவெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சொன்ன அதிர்ச்சித் தகவல் இது. இன்னொரு புறம், ‘சினிமாவின் மொத்த வசூலே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்தான் அடங்கியிருக்கிறது.

நான்காவது நாளில் தியேட்டரிலிருந்து அந்தப் படத்தைத் தூக்கி விடுகிறார்கள்...’ என்ற எதார்த்தமும் தயாரிப்பாளர்களின் முகத்தில் அறைகிறது.தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நிலை இப்படி எல்லா பக்கங்களிலும் முள் பாதையாகவே இருக்கிறது.இதைக் குறித்து கவலையே படாமல் பல நடிகர், நடிகைகளும் டெக்னீஷியன்களும் ‘எக்ஸ்ட்ரா செலவுகளின் வழியே தயாரிப்பாளர்களை மேலும் மேலும் எப்படி சுரண்டலாம்’ என்றே கணக்கிடுவதாக கோடம்பாக்கம் குமுறுகிறது.

ஆமாம். உள்ளுக்குள்தான். யாரும் வாயைத் திறந்து இதைக் குறித்து பேசவே அஞ்சுகிறார்கள்.

என்னதான் நடக்கிறது கோடம்பாக்கத்தில்..?

‘‘டாப் டெக்னீஷியன் அவர். பாலிவுட் வரை ஒளிப்பதிவுக்கு பெயர் போனவர். திறமைசாலிதான். ஆனால், அவர் செய்யும் காரியங்கள்..? அவுட்டோர் ஷூட் என்றால் அவர் குறிப்பிடும் ஹோட்டலில்தான் ரூம் போட வேண்டும். இல்லையென்றால் ஸ்பாட்டுக்கு வர மாட்டார். தன் போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்.

இவர் என்றில்லை... பெரும்பாலான நடிகர் நடிகைகளும் டெக்னீஷியன்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்...’’ என தன் மொபைலை சைலன்ட் மோடில் வைத்துவிட்டு ஆவேசத்துடன் பேசத் தொடங்கினார் அந்த பெயர் சொல்ல விரும்பாத தயாரிப்பாளர். ‘‘பொதுவாக டாப் ஸ்டார்ஸ் நடிக்கும் படங்களில் ஹீரோ, ஹீரோயினின் சாப்பாட்டு விஷயங்களை கவனிப்பதற்கு என்றே தனி ஆட்களை நியமிப்போம். அஜித், தமன்னா போன்றோர் தங்களுடனேயே சமையல் கலைஞர்களை வைத்திருக்கிறார்கள். அவர்களையே வெளியூர் படப்பிடிப்புகளுக்கு அழைத்து வந்து தங்கள் உடல்நலத்துக்கு ஏற்ப சமைத்துத் தரச் சொல்வார்கள்.

சென்னையில் படப்பிடிப்பு என்றால் சில ஹீரோக்கள் தங்கள் வீட்டிலிருந்தே தங்களுக்கான சாப்பாட்டை வரவழைத்து விடுவார்கள். ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உட்பட ஹீரோக்கள் பலரும் கேரவனுக்கு போகாமல் யூனிட்டினருடன் அமர்ந்து யூனிட் சாப்பாட்டையே சாப்பிடுகிறார்கள். சில இயக்குநர்கள் ரோட்டுக் கடையில் சூடாக ஒரு  டீ குடித்துவிட்டும் படப்பிடிப்புக்கு வருவார்கள். பல இயக்குநர்கள் வடபழனியில் உள்ள சாதாரண ஹோட்டலில் இருந்து சுடச்சுட இட்லியை வரவழைப்பார்கள்.

சூர்யாவுக்கு க்ரீமியான டீ பிடிக்காது. எனவே ஸ்பாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சாதாரண டீக்கடையில் இருந்து தேநீர் வாங்கி வரச் சொல்வார். இப்படி ஹீரோக்கள், இயக்குநர்கள் பலரும் வறட்டு கவுரவம் பார்க்காமல், விரும்பியதை ஈகோ பார்க்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
எப்பொழுதாவது ஹீரோவாகவும், எப்பொழுதும் கேரக்டர் ரோலும் செய்பவர் அவர். மாடலிங், ஃபிட்ன்ஸிலும் ஆர்வம் உள்ளவர் என்பதால் கடும் டயட் கடைப்பிடிப்பார். ஒருவேளை மட்டும்தான் உண்பார்.

குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டலில் இருந்து குறிப்பிட்ட உணவு வகைகளைத்தான் அவர் குறிப்பிடும் நேரத்தில் வாங்கி வர வேண்டும். அவர் கேட்கும் உணவு அயிட்டங்களின் விலை மட்டுமே குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் இருக்கும்.20 நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பு என்றால் 20 X 5000.

இவரைப் போன்ற நல்லவர்களைப் பார்ப்பது அரிது. ஏனெனில் தன்னை ஒப்பந்தம் செய்ய வரும்போதே இந்த உணவு விஷயத்தை தெளிவாகச் சொல்லி விடுவார். அக்ரிமென்ட்டும் இதன்படியே எழுதுவார். ஆக, இதை ஒப்புக்கொண்டுதான் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தமே செய்கிறார்கள்.

இதுபோலவே இன்னொரு ஹீரோ இருக்கிறார். இவரும் கடும் டயட்டை கடைப்பிடிப்பவர்தான். ஈசி. ரில் படப்பிடிப்பு என்றாலும் லன்ச்சுக்கு உப்பு போடாத ஃபுல் க்ரில்ட் சிக்கன் இவருக்கு வேண்டும். அதுவும் அண்ணா நகரில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு ஹோட்டலில் இருந்து!
எனவே, புரொடக்‌ஷனில் இருந்து தினமும் ஓர் ஆள் அந்த ஹோட்டலுக்குச் சென்று குறிப்பிட்ட அந்த உணவை வாங்கி வருவார். இவரும் தன்னை ஒப்பந்தம் செய்ய வரும்போதே தெளிவாக தயாரிப்பாளர்களிடம் இதை தெரியப்படுத்தி விடுவார்.

ஆனால், சில ஹீரோயின்கள் செய்யும் அட்ராசிட்டி இருக்கிறதே...’’  நிறுத்திவிட்டு தன் மூச்சை இழுத்துப் பிடித்தபடி தொடர்ந்தார்.
‘‘பெரும்பாலான ஹீரோயின்ஸ் ஒரே ஸ்கேலில்தான் இருக்கிறார்கள். மூன்று வேளையும் ஸ்டார் ஹோட்டலில்தான் ஆர்டர். முந்தைய நாள் இரவே மறுநாளுக்கான மெனுவை எந்தெந்த ஸ்டார் ஹோட்டலில் இருந்து என்னென்ன அயிட்டங்களை எந்தெந்த நேரத்துக்கு வாங்கி வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார்கள்!

சாண்ட்விச்சே சாப்பிட்டாலும் அது குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டலில் தயாரானதாகத்தான் இருக்க வேண்டும்! ஸ்டார் ஹோட்டலில் ரூமிலும் இவர்கள் தங்க மாட்டார்கள். சூட் புக் செய்ய வேண்டும்!உணவு விஷயம்தான் இப்படி என்றால்..? அசிஸ்டென்ட்ஸ் தொல்லை பெரும் தொல்லை. ஒவ்வொரு டாப் ஹீரோயினும் குறைந்தது 5 பேரை உதவியாளர்களாக வைத்திருக்கிறார்கள். மேக்கப், டச்சப், காஸ்ட்யூமர் (டெய்லர்), பர்சனல் காஸ்ட்யூம் டிசைனர், பர்சனல் அசிஸ்டென்ட்... இப்படி. இவர்கள் கேட்பதையும் தயாரிப்பாளர்கள் செய்து தர வேண்டும்!

இந்த உதவியாளர்களின் பேட்டா மட்டுமே நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம்! அவுட்டோர் என்றால் டபுள் கால்ஷீட் பேமன்ட் + தங்கும் வசதி + சாப்பாடு (ஆமாம். ஸ்டார் ஹோட்டல் உணவு) + ஃப்ளைட் டிக்கெட்.இன்னோவா மாதிரி டாப் கேட்டகிரி கார் நடிகைகளுக்கு. அவர்களின் உதவியாளர்களுக்கு சுமோ  மாதிரி தனி கார். இந்த வண்டிகளுக்கான வாடகை, டிரைவர் பேட்டா எல்லாம் தனி.

இதுபோக அவுட்டோர் சென்ற இடத்தில் ஷாப்பிங் மேளா வேறு நடக்கும். அந்த பில் எல்லாமே தயாரிப்பாளர்களின் தலையில்தான் கட்டப்
படும். கூட்டிக் கழித்துப் பாருங்கள். தயாரிப்பாளர்களின் ரத்தம் எப்படியெல்லாம் உறிஞ்சப்படுகின்றது என்று புரியும்.
ஒரு படம், இரண்டு படங்கள் செய்த ஹீரோயின்கள் இப்படியில்லை. அவர்கள் யூனிட் சாப்பாட்டையே சாப்பிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே முன்னணிக்கு வந்தபிறகு தலைகீழாக மாறி அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்!

ஒரு படம் ஹிட் ஆகி கலெக்‌ஷனை அள்ளும்போது இந்த செலவெல்லாம் பெரியதாகத் தெரியாது. அதுவே படம் தோல்வி அடைந்தால்..?
ஹீரோயின்களுக்கு அவர்களது உடலழகு முக்கியம். எனவே ஹைஜீனிக், டயட் விஷயங்களுக்காக ஸ்டார் ஹோட்டல் உணவு
களைச் சாப்பிடுவது தவறல்ல. அதேநேரம் இன்று திரைப்படத்துறை இருக்கும் நிலையையும் அவர்கள் யோசிக்க வேண்டும்.

ரிலீஸ் சமயத்தில் தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஹீரோயின்களில் இப்படி இருப்பவர்கள் குறைவு...’’ மூச்சு விடாமல் பொறிந்து தள்ளுகிறார் பெயர் சொல்ல விரும்பாத இந்த தயாரிப்பாளர்.‘‘என் பெயரையும் குறிப்பிடாதீர்கள்...’’ என்ற கண்டிஷனுடன் தன் படப்பிடிப்பில் நேர்ந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் அந்த சூப்பர் ஹிட் இயக்குநர்.

‘‘திறமையாக நடிப்பதுடன் தத்துவமாக பேசுவதிலும் எக்ஸ்பர்ட்டான ஹீரோ அவர். அவரது படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்றோம். பொதுவாக தங்கள் பர்சனல் மேக்கப், டச்சப் மேன்களை நடிகர் நடிகைகள் வெளிநாடுகளுக்கும் அழைத்து வருவார்கள். என்றாலும் தயாரிப்பாளரின் நலனை முன்னிட்டு ஹீரோக்கள் சிலசமயம் அட்ஜஸ் செய்து கொள்வார்கள்.

ஆனால், ஹீரோயின்ஸ்..? தங்களுடன் பர்சனல் அசிஸ்டென்ட்ஸுக்கு ஃபாரீன் ஷூட்டுக்கு கூட வர அனுமதி இல்லையென்றால் படப்பிடிப்பில் வேண்டா வெறுப்போடுதான் கலந்துகொள்வார்கள். வேண்டுமென்றே சொதப்புவார்கள்.யோசித்துப் பாருங்கள்.

எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்த நாட்டைச் சேர்ந்த மேக்கப், டச்சப் மேன்களை பயன்படுத்தினால் தயாரிப்பாளர்களுக்கு ஃப்ளைட் டிக்கெட், ரூம் வாடகை எல்லாம் மிச்சமாகும் அல்லவா..? இதுவே பல லகரங்கள் ஆயிற்றே! விஷயத்துக்கு வருவோம். ‘மேக்கப்மேன் இல்லைனாலும் பரவாயில்ல... அங்க உள்ளவங்கள வச்சு பார்த்துக்கலாம்...’ என ஹீரோ க்ரீன்சிக்னல் காட்டியதால் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு சென்றோம்.

முதல்நாள் ஸ்பாட்டுக்கு ஹீரோயின் வரவில்லை. ‘பயணக்களைப்பு... நாளைக்கு வர்றேன்...’ என்றார்.ஹீரோயின் இல்லாமல் எப்படி பாடல் காட்சிகளை எடுக்க முடியும்..? அன்றைய தினம் ஷூட் நடக்கவில்லை. இதனால் பல லட்சங்கள் வீணானது. நடிகை கேட்டிருந்தபடி அவரது அசிஸ்டென்ட்டை அழைத்து வந்திருந்தால் கூட அந்தளவுக்கு செலவாகி இருக்காது என்னும்படி நஷ்டத்தின் தொகை அதிகம்!

அப்போதுதான் நடிகை வேண்டுமென்றே இப்படிச் செய்திருக்கிறார் என்று புரிந்தது.பிறகு படம் முடிந்து, டப்பிங் நடக்கையில் நடிகையின் பேமென்ட்டில் அந்த சில லட்சங்களைக் கழித்துவிட்டு தயாரிப்பாளர் கொடுத்தார். கடுப்பான நடிகை பட ப்ரொமோஷனுக்கு வரவில்லை! நல்லவேளையாக எங்கள் படம் மெகா ஹிட்! இதன்பிறகு அந்த நடிகைக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது தனிக்கதை.

அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட அட்ராசிட்டிகள் நடக்கவில்லை. டாப் ஹீரோ, ஹீரோயின்ஸோ... டெக்னீஷியன்ஸோ... யூனிட் கொடுப்பதை மகிழ்ச்சியாக சாப்பிட்டார்கள். மரியாதையை மட்டுமே எதிர்பார்த்தார்கள். இன்று கார் உட்பட சகலத்திலும் பிராண்டை எதிர்பார்க்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தயாரிப்பாளர்கள்தான்...’’ என்கிறார் அந்த இயக்குநர்.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாமே சாம்பிள்கள்தான். இன்னும் அதிக அட்ராசிட்டிகள் இருக்கின்றன... என்றே அனைவரும் முணுமுணுக்கிறார்கள்.
முணுமுணுப்பதைத் தவிர்த்துவிட்டு வெளிப்படையாகப் பேசினால்தான் தீர்வு கிடைக்கும்;தமிழ் சினிமாவும் வாழும்!

மை.பாரதிராஜா