இந்த டயலாக் விஜய் ரசிகர்களுக்காக எழுதப்பட்டதா?!
ஒருத்தர் மேல் நீங்க விசுவாசம் காட்ட இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க..?
‘‘ஒரு கமர்ஷியல் படத்தை ரீமேக் பண்றது சுலபம். நாலு பாட்டு, நாலு ஃபைட்னு அதே மசாலாவை அப்படியே பண்ணினாலே படம் க்ளிக் ஆகும். ஆனா, ‘பிங்க்’ மாதிரி cult படங்களை ரீமேக் பண்றது சவாலானது. அதுல கதையும் வலுவானது. அதன் சீன்களும், வசனங்களும் சென்ஸிபிளா இருக்கும். அந்த சென்ஸிபிளிட்டியை நாம மிஸ் பண்ணிடக்கூடாது.
‘பிங்க்’ல கதைலயே நிறைய லேயர்ஸ் உண்டு. நுணுக்கமான வசனங்கள் இழையோடும். எதையும் மிஸ் பண்ண முடியாது. அதேநேரம் கிராமத்து ஆடியன்ஸுக்கும் இது ரீச் ஆகணும்; அவங்களும் ரசிக்கணும்.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... இந்த மாதிரி படங்கள்ல மாஸ் ஹீரோஸ் நடிக்கறது கஷ்டம்.
ஆனா, அஜித் சார் ‘பிங்க்’கை செலக்ட் செய்திருக்கார்! இதுல இருந்தே அவரோட சமூக அக்கறையை புரிஞ்சுக்கலாம்!பட், எனக்குத்தான் அள்ளு கழண்டுடுச்சு! படம் கரெக்ட்டா வரணும். அதேநேரம் ரீமேக் என்பதால் கண்டிப்பா ‘பிங்க்’ல நடிச்ச அமிதாப்புடன் அஜித்தை ஒப்பிடுவாங்க. இதையெல்லாம் மீறி ‘நேர்கொண்ட பார்வை’யைஎடுக்கணும்.
என்ன செய்ய..? ஏகப்பட்ட டாஸ்க்ஸ். எல்லாத்தையும் தாண்டி படத்தை முடிச்சிருக்கேன். தயாரிப்பாளரும் அஜித் சாரும் படத்தைப் பார்த்துட்டாங்க. ரெண்டு பேருக்குமே ஹேப்பி. என்மேல அஜித் சார் நம்பிக்கை வைச்சு இந்த ப்ராஜெக்ட்டை கொடுத்தார். அவர் நம்பிக்கையை காப்பாத்திட்டேன்.
அதேமாதிரி அஜித் சார் நடிக்கும் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களையும் இந்தப் படம் முழுமையா திருப்திப்படுத்தும்னு நம்பறேன்!’’ எனர்ஜியுடன் பேசுகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வழியாக கவனம் ஈர்த்தவர்.
‘‘இந்தப் படத்துல கதை ஸ்டிராங். அதுக்கு பலம் சேர்க்கற நடிகர்கள் தேவை. அதுவும் தென்னிந்தியாவுடன் கனெக்ட் ஆகும் முகங்கள். இதனாலயே ஒரு மாசம் ஷூட் தாமதமாச்சு. ‘என் டேட்ஸ் பத்தி கவலைப்படாதீங்க... உங்களுக்கு திருப்தியா காஸ்டிங் முடிஞ்சதும் சொல்லுங்க’னு அஜித் சார் எனக்கு சப்போர்ட்டா இருந்தார்.
அதேமாதிரி எல்லாம் பக்காவானதும் ஷூட் கிளம்பினோம். வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்னு சிலரைத் தவிர மத்த எல்லாருமே புதுமுகங்கள்தான். சில கேரக்டர்களுக்கு தியேட்டர், ஆக்டிங் ஸ்கூல்ஸ்ல இருந்து தேடிப் பிடிச்சோம். லீட் ரோல் பண்ற மூணு நடிகைகள்கிட்டயும் ‘பிங்க்’ பார்க்கச் சொல்லி, ஒரு பெண்ணா அவங்க என்ன ஃபீல் பண்றாங்க... அந்தக் கதைல இன்னும் என்ன சேர்க்கலாம்னு கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி ஸ்கிரிப்ட்டை இம்ப்ரூவ் செய்திருக்கோம்...’’ வெளிப்படையாக சொல்கிறார் ஹெச்.வினோத்.‘பிங்க்’ல சில போர்ஷன்ஸை தைரியமா தொட்டிருப்பாங்க. தமிழ்ல அப்படி எதிர்பார்க்கலாமா?
ஒரிஜினல்ல என்னென்ன டிஸ்கஷன்ஸ் இருந்ததோ அதெல்லாம் தமிழ்ல இருக்கும். விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கறதை எப்படி ஒரு கலாசார வளர்ச்சியா பார்க்கறோமோ... அப்படி அதையெல்லாம் தகர்ப்பதும் கலாசார வளர்ச்சிதான்.எந்த சமூகம் மொதல்ல அதை உருவாக்குதோ... மொதல்ல அதை உடைக்குதோ... அந்த சமூகம் முன்னாடி போயிட்டிருக்கும்.
இங்கே ஆண் - பெண் உறவுல புரிதல் இல்லாததால பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரிச்சிருக்கு. போன வருஷம் மட்டும் கள்ளக்காதல் விவகாரத்தால ஆயிரத்துக்கு அதிகமான கொலைகள் நடந்திருக்குனு செய்தி படிச்சேன்.
இதையெல்லாம் மனசுல வச்சுத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். அஜித் சார் ரசிகர்கள் காலம் முழுக்க கொண்டாடும் விதமா பல சீன்ஸ் இருக்கு! அது ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்! என்ன சொல்றார் அஜித்?
அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கலாம். ஒருமுறை, ‘வெற்றியோ தோல்வியோ எதுவும் என்னை பாதிக்காது. என் வேலையை செய்துட்டிருப்பேன். அது அடுத்தவங்களை பாதிச்சு அவங்க ஏதாவது ரியாக்ட் பண்ணினாலும் நான் கவலைப்பட மாட்டேன். என் வேலையை மட்டும் பார்த்திட்டிருப்பேன்’னு சொன்னார்.
டைரக்டர்ல ஆரம்பிச்சு லைட்மேன் வரை எல்லாருக்கும் மரியாதை கொடுக்கறார். யூனிட்ல எல்லாருக்குமே ஒரே மாதிரியான சாப்பாடு கிடைக்கணும்னு நினைப்பார். ஆக்ஷன் காட்சிகள்ல அவர் டூப் போட மாட்டேங்கறார். ‘டூப்புக்கான சம்பளத்தையும் எனக்குத்தானே கொடுக்கறீங்க..? அப்ப நான்தானே ரிஸ்க் எடுக்கணும்’னு கேட்கறார்.
ஆக்ஷன் ப்ளாக்ஸ் எடுக்கறப்ப நமக்கு மனசு பதைபதைக்கும். அவருக்கு எத்தனை முறை ஆபரேஷன்ஸ் நடந்திருக்கு..? ஏதாவது ஆச்சுனா..?
ஆனா, சார் கவலையேபடாம ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் சொல்றதை பண்றார்! ‘ஒருத்தர் மேல் நீங்க விசுவாசம் காட்ட இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க?’னு டிரெயிலர்ல அஜித் டயலாக் இருக்கே... அது அவர் ரசிகர்களுக்கானதா? இல்ல விஜய் ரசிகர்களுக்கானதா..? அது கதைக்கான டயலாக்! அந்த வசனம் எழுதறதுக்கு முந்தினநாள் ஷூட் முடிஞ்சதும் வழக்கம் போல அஜித் சார் உள்பட அங்கிருந்த ஆர்ட்டிஸ்ட்களோட உட்கார்ந்து பேசிட்டிருந்தேன்.
அப்ப, நெட்ல இருக்கற வெறுப்புத்தன்மை பத்தி பேச்சு வந்தது. ‘நம்ம நாட்டுல 90% மக்கள் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யறாங்க. அவங்களுக்கு ரிலாக்ஸ் தேவைப்படுது. காலம் காலமா நாலு பேர் சேர்ந்து பேசறப்ப அரசியல்ல இருந்து சினிமா வரை தீவிரமா அலசுவாங்க. அதுல சினிமா பத்தி பேசும்போது, ‘என் தலைவர் அப்படி... உன் தலைவர் இப்படி’னு பேச்சு வரும்.
அதனோட இப்போதைய வெர்ஷன்தான் சோஷியல் மீடியா. ரசிகர்கள் கொடுக்கற காசு, அந்த சினிமாவுக்கு மட்டுமில்ல... ஸ்டார்ஸோட பர்சனல் லைஃபுக்கும் சேர்த்துதான். ஸ்டார்ஸ் படம் ஹிட் ஆனாலும் ஆகலைனாலும் அவங்க மக்களை மறைமுகமா என்டர்டெயின் பண்ணிட்டேதான் இருக்காங்க. அதனாலதான் அவங்க படங்கள் வழக்கத்தை விட அதிகமா கலெக்ஷன் ஆகுது. ஸோ hatredடை தவிர்க்க முடியாது. இது பார்ட் ஆஃப் பிசினஸ்’னு சொன்னேன்.
உடனே அஜித் சார், ‘அது தப்புங்க. ஒருத்தரை இன்ஸ்பயர் பண்றதுக்காக இன்னொருத்தரை அசிங்கப்படுத்தக் கூடாது’ன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தை பிடிச்சிருந்தது. அது கதைல வர்ற ஒரு சீனுக்கும் பொருத்தமா இருந்ததால அதையே வைச்சுட்டோம்!
அமிதாப் - அஜித் ஒப்பிட முடியுமா?
அமிதாப்போடு நம்மள கம்பேர் பண்ணுவாங்கனு அஜித் சார் யோசிச்சதில்ல. ஏற்கெனவே ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ல அமிதாப் சார் பண்ணின கேமியோவை அஜித் சார் தமிழ்ல பண்ணியிருக்கார். ஆக்சுவலா ‘நேர்கொண்ட பார்வை’யை சார் அசால்ட்டா தன் மேனரிஸத்தோடு பண்ணியிருக்கார். ஷூட் நடந்தப்ப யூனிட்ல இருந்த யாருமே அமிதாப்புடன் சாரை கம்பேர் பண்ணலை. தோணவும் இல்ல. ஏன்னா, இது முழுக்க முழுக்க அஜித் சார் படம்! அப்படித்தான் வந்திருக்கு.
ஏன் தெரியுமா? ‘பிங்க்’ல அமிதாப் தன் வயசுக்கு ஏத்த மாதிரி நடிச்சிருப்பார். ‘நேர்கொண்ட பார்வை’ல அஜித் சார் தன் ஏஜுக்கு தகுந்த மாதிரி செய்திருக்கார்!ஸோ, ரெண்டு பேரையும் ஒப்பிடவே முடியாது!அப்புறம், முதன்முறையா யுவன் ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவோடு கைகோர்த்திருக்கேன். பாடல்கள் எல்லாம் மேஜிக்கா வந்திருக்கு. படமும் மேஜிக்தான்!
|