சில காதல் கடிதங்கள்...



என்னிடம் சில காதல் கடிதங்கள் இருக்கின்றன… என்று நான் ஆரம்பிப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு வயது நாற்பதுக்கு மேல். கடிதங்கள் தங்கள் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்த, 1990களின் பிற்பகுதியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் அவை. எனக்கு அல்ல. என் தோழி நித்யாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்.

பீரோவில், எனது நகைப்பெட்டிக்குக் கீழேயிருந்த பேப்பருக்குக் கீழே, மறைவாக வைத்திருந்த அந்தக் கடிதங்களை எடுத்தேன். ஹால் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவன் சுரேஷைப் பார்த்து, “என்னங்க… என்னங்க…” என்றேன். நான் அழைத்ததை காதில் வாங்காமல், வாட்ஸ் அப்பில் ஏதோ வீடியோ பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். நான் எனது மொபைலை எடுத்து வாட்ஸ் அப்பில், “என்னங்க… இங்க கொஞ்சம் வர்றீங்களா?” என்று மெஸேஜ் அனுப்பினேன்.

அவன் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, “என்ன விஷயம்?” என்று பதில் மெஸேஜ் அனுப்பினான். நான், “சீ… வா…” என்று பதில் மெஸேஜ் அனுப்ப… குடுகுடுவென்று ஓடி வந்து, “என்ன அனிதா?” என்றான். நான் அந்தக் கடிதங்களைக் காண்பித்து, “இது என்னன்னு தெரியுதா?” என்றேன்.“தெரியுமே… உன் ஃப்ரண்டு நித்யாவுக்கு ஒருத்தன் எழுதுன லவ் லெட்டர்ஸ். அதுக்கென்ன இப்ப?”

“நாளைக்கி நித்யா நம்ம வீட்டுக்கு வர்றால்ல? இருபது வருஷம் கழிச்சு அவளப் பாக்கப்போறேன். அப்ப இந்த லெட்டர்ஸ எல்லாம் காமிச்சா, இத்தனை வருஷம் கழிச்சு பாக்குறப்ப… அவளுக்கு பயங்கர த்ரில்லா இருக்கும்ல்ல? நான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுருப்பேன்னு நினைச்சுட்டிருப்பா...” “த்ரில்லாதான் இருக்கும். ஆனா, இதைப் பாத்து அவ ஃபீலாயி, அவன தேடிப் போய் பாத்து… நல்ல காதல், கள்ளக்காதலாகி…”
“சீ… ஆம்பள புத்தி போவுது பாரு…”

“ஏய்… கள்ளக்காதல்ல பாதிப் பேரு முன்னாள் காதலர்கள்தான்!”“அதெல்லாம் நடக்காது. அவன் தென்கொரியால இருக்கான். இவ அமெரிக்காவுல இருக்கா...”“வட கொரியால இருந்தாதான் பிரச்னை! தென்கொரியாவும், அமெரிக்காவும் ஃப்ரண்ட்ஸ்தானே?”
‘‘அய்யோ… உங்க கற்பனைய எல்லாம் தூக்கிப் போடுங்க. அவ இந்த லெட்டர்ஸ பாத்தா சந்தோஷப்படுவால்ல?”
“சந்தோஷப்படுவாதான். ஆனா, துயரமான சந்தோஷமா இருக்கும். அவ ஃபேமிலியோட வருவா. இதை எப்படி காமிப்ப?”
“நான் இப்பவே மாடி ரூம்ல கொண்டு போய் வச்சுடுறேன். அவள தனியா அழைச்சுட்டுப் போய் காமிக்கிறேன்…” என்று கூறிவிட்டு அந்தக் கடிதங்களை புன்னகையுடன் பார்த்தேன்.

நித்யா… என் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. அழகி. கவனியுங்கள்… ஒரு பெண் இன்னொரு பெண்ணை, அவ்வளவு சாதாரணமாக அழகி என்று ஒப்புக்கொள்ளமாட்டாள். ஆனாலும் நான் சொல்கிறேன். பெண்களின் பொறாமையை எல்லாம் தூள் தூளாக்கும் அற்புதமான அழகி நித்யா.
இதே சென்னையில் என்னுடன் கல்லூரியில் படித்தவள். நான் வாழ்க்கையில் கடுகு தாளிக்கக் கூட உதவாத பி.எஸ்ஸி பிஸிக்ஸ். அவள் மேத்ஸ். இருந்தாலும் கல்லூரிக்கு இருவரும் ஒன்றாக மந்தைவெளி பஸ்ஸ்டாண்டில் 21ல் ஏறுவோம். பார்வை, புன்னகை ஆகி, புன்னகை ‘ஹாய்’ ஆகி, ஒரே மாதத்தில், “எருமைமாட்டு நாயே….(?)” என்று திட்டிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய தோழிகளானோம்.

நித்யா அழகி என்பதால், அவளுக்கென்று பஸ்ஸில் நிரந்தர ரசிகர் கூட்டம் உண்டு. அவள் பார்ப்பது போல் நின்றுகொண்டு தலையைக் கோதிக்கொள்வார்கள். நித்யா இருமியதற்காக அடுத்த ஸ்டாப்பில் இறங்கி ஒருவன் காஃப் சிரப் வாங்கி வந்து கொடுத்திருக்கிறான்! ஒருவன் லஸ் கார்னரில் ஏறி, ஸ்பென்ஸரில் இறங்கும் வரை ஒரு வினாடி கூட நித்யாவிடமிருந்து பார்வையை விலக்காமல் பார்த்துக்கொண்டேயிருப்பான்.
ஆனால், நித்யா அவர்களுக்கெல்லாம் மயங்காமல் வேறொருவனிடம் மயங்கினாள்.

“ஏய்… அங்க பாருடி…” என்று நித்யா அவனைக் காண்பித்தபோது நாங்கள் மயிலாப்பூர், சித்திரக்குளமருகில் இருக்கும் காளத்தி கடையில் ரோஸ்மில்க் அருந்திக் கொண்டிருந்தோம். அவள் காண்பித்த இடத்தில் உயரமாக, சிவப்பாக அந்த இளைஞன் ரோஸ்மில்க்கை அருந்தியபடி நின்றுகொண்டிருந்தான்.
“அவன் கைல பாலகுமாரன் நாவல் வச்சுகிட்டிருக்கான். ரொம்ப நாளா ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரில கேட்டுட்டிருந்தோம்ல… ‘இரும்புக்குதிரைகள்’…”
“ஆமாம்...”

“புக்கு மேல ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி ஸ்டிக்கர் ஒட்டியிருக்கு. எடுத்துட்டு வரானா? ரிட்டர்ன் கொடுக்கப் போறானான்னு தெரியலையே… அவன் ரோஸ்மில்க்க குடிச்சுட்டு, கச்சேரி ரோட்டுப் பக்கம் போனா, ரிட்டர்ன் கொடுக்க, லெண்டிங் லைப்ரரிதான் போறான். பின்னாடியே போய் வாங்கிடலாம்...”

ரோஸ்மில்க் குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு அவன் கச்சேரி ரோட்டை நோக்கித் திரும்பினான். நித்யா, “அங்கதான் போறான்… வா… வா…” என்று பின்னாலேயே எங்கள் சைக்கிளில் சென்றோம். அவன் கச்சேரி ரோடில் லெண்டிங் லைப்ரரியில் நுழைந்து, புத்தகத்தை டேபிளில் வைக்க… பாய்ந்து டப்பென்று அதைக் கையில் எடுத்த நித்யாவை அவன் திரும்பிப் பார்த்தான்.“ஸாரி… ரொம்ப நாளா தேடிட்டிருக்கேன்...” என்றாள் நித்யா.

“உங்களுக்கு பாலகுமாரன் பிடிக்குமா?” என்றான்.“பாலகுமாரன்னா உயிர்...”“எனக்கும் உயிர்!”இரண்டு உயிர்களும் விரைவில் கலந்தன. அவன் பெயர் மனோஜ். தஞ்சாவூர்க்காரன். சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கௌண்டன்ட்டாக இருக்கிறான். மந்தைவெளியில் அறை எடுத்துத் தங்கியிருக்கிறான்.

மனோஜும், நித்யாவும் அடிக்கடி ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி… தேனாம்பேட்டை பாரதிதாசன் லைப்ரரி… என்று சந்தித்தார்கள்.
பாலகுமாரனை நேரில் பார்த்துவிட்டு வந்து, “கடவுளே…” என்று மாய்ந்துபோனார்கள். மூன்றே மாதத்தில் காதலித்தார்கள். கடற்கரையில் ஒற்றை ஐஸ்
க்ரீமை மாற்றி மாற்றி சாப்பிட்டார்கள். 2064 வரை எப்படி வாழ்வது என்று திட்டமிட்டார்கள். எதிர்காலத்தில் தாங்கள் பெறப்போகும் பிள்ளைகளுக்கு ஆதித்யா, சஹானா என்று பெயர் வைத்தார்கள்.

நேரில் பேசியது போதாமல், மனோஜ் நித்யாவுக்கு காதல் கடிதங்களும் எழுதுவான். நித்யா அந்தக் கடிதங்களை கண்கள் மின்ன, உதடுகள் சிரிக்க, மார்புகள் விம்ம படிப்பாள். ஆனால், அவற்றை அவள் வீட்டில் வைக்க பயந்துகொண்டு என்னிடம் தந்துவிடுவாள். எல்லாக் கடிதங்களையும் மனோஜ், “நினைவெல்லாம் நித்யாவுக்கு…” என்று ஆரம்பித்தே எழுதியிருந்ததால், தைரியமாக நான் அவற்றை வைத்திருந்தேன்.

இரண்டு ஆண்டுகள்… நித்யாவின் கண்களில் வெளிச்சமும், கனவுகளும், காதலும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட… யார் எது பேசினாலும் காதில் வாங்காமல், வானைப் பார்த்து நித்யா சிரித்துக்கொண்டிருந்த… நித்யாவின் உலகில் மனோஜ் என்ற கேரக்டர் தவிர மீதி எல்லோரும் காணாமல் போய்விட்ட... பூமியில் கால் நிற்காமல், உயரே பட்டம் போல் நித்யா பறந்துகொண்டிருந்த… இரண்டு ஆண்டுகள். பட்டம் ஒருநாள் அறுந்தது.

நித்யாவின் காதல் அவள் தந்தைக்குத் தெரிய வர… சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி கடுமையாக எதிர்த்தார்கள். அவளும் தொண்ணூறுகளின் ஏராளமான வயசுப் பெண்கள் போல், “உடல்தான் உன்னை விட்டுப் பிரிகிறது. உயிர் எப்போதும் உன்னோடுதான்...” என்று கண்ணீருடன் கடிதம் எழுதி என் மூலமாகக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டாள்.

ஒரு வாரம் அழுதாள். ஒரு மாதம் சோகமாக இருந்தாள். ஆறு மாதங்கள் வரை, வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றாள். அடுத்த ஆண்டே அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சியாட்டிலுக்கு பறந்துபோனாள். என்னை கோயம்புத்தூரில் ஓர் அரசு ஊழியருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு பெண் குழந்தைகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ப்ரமோஷனில் அவர் சென்னைக்கு டிரான்ஸ்ஃபராக… மீண்டும் சென்னையில், அதே மந்தைவெளியில் வாடகை வீட்டு வாழ்க்கை.

இவ்வளவுக்கு நடுவிலும் இன்னும் அந்தக் கடிதங்களைக் கிழித்துப் போடாமல் வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று இல்லாததாலோ என்னவோ, அந்தக் காதலின் மீது எனக்கு மிகவும் மரியாதை இருந்தது. நான் சாட்சியாக இருந்த ஒரு காதலின் சாட்சியங்கள் அவை.
நித்யா கொடுத்த இறுதிக் கடிதத்தை ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் கொடுத்தபோது, மனோஜ் அதைப் படித்துவிட்டு, புத்தக அலமாரிக்குப் பின்னால் மறைந்தபடி சத்தமின்றி அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

மரண வீட்டில் இல்லாமல், வேறொரு இடத்தில் ஓர் ஆண் அழுவதை அங்குதான் பார்த்தேன். அந்தக் கடிதத்தைக் கொடுத்தபோதும் நித்யா அழுதுகொண்டேதான் கொடுத்தாள். இரண்டு கண்ணீருக்கும் நான் சாட்சி. அந்தக் கடிதங்கள் சாட்சி. அவற்றை எப்படி நண்பர்களே என்னால் கிழிக்கமுடியும்?

சென்னை வந்தபிறகுதான் இடையில் டச் விட்டுப்போயிருந்த நித்யாவை, இன்னொரு தோழி மூலமாகக்  கண்டுபிடித்தேன். நித்யாவின் அமெரிக்க தொலைபேசி எண்ணைப் பெற்றேன். தொலைபேசியில் உரையாடிக்கொண்டோம். ஆனால். ஒருமுறை கூட மனோஜ் பற்றிப் பேசியதே இல்லை. இப்போது தனது அண்ணன் மகள் திருமணத்திற்காக நித்யா சென்னை வந்திருக்கிறாள். நாளை எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி
யிருக்கிறாள்.

மறுநாள் அவள் மட்டும்தான் வந்தாள். கணவரும், பிள்ளைகளும் மாமியார் வீட்டோடு அத்திவரதரைப் பார்க்க காஞ்சிபுரம் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு கும்பலில் போக விருப்பமின்றி நித்யா என் வீட்டுக்கு வந்துவிட்டாள். பார்த்தவுடன், எங்களுடைய நாற்பது ப்ளஸ் வயதுக்கு பொருந்தாமல், சத்தத்துடன் கட்டிப்பிடித்துக்கொண்டோம். நெடுநேரம் பழைய மந்தைவெளி, மயிலாப்பூர் கதைகள் பேசிவிட்டு மாடிக்குச் சென்றோம்.

நித்யா, “உன் வீட்டுக்கு வர்றப்பதான்டி பாத்தேன். காமதேனு தியேட்டர எடுத்துட்டாங்களா?” என்றாள்.“ஆமாம். இப்ப கல்யாண மண்டபமாக்கிட்டாங்க...”“கடைசியா அங்க ‘ஜீன்ஸ்’ படம் பாத்தோம். கீதாஞ்சலி ஹோட்டலக்கூட காணோம்டி…”

“ஆமாம்… அங்க இப்ப ரத்னா பவன் இருக்கு. மந்தைவெளி மார்க்கெட் இல்ல. ‘கபாலி’ தியேட்டர் இல்ல. பத்மினி பேக்கரி இல்ல. ஜெகன்மோகன் டாக்டர் இல்ல… ஆனா, ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி மட்டும் இன்னுமிருக்கு...” என்றவுடன் சட்டென்று நித்யாவின் முகம் மாறியது.
நான், “ஞாபகமிருக்கா?” என்றவுடன் நித்யாவின் முகத்தில் ஒரு வெட்கச் சிரிப்பு. நாற்பது வயது பெண்கள் சிறுபெண் போல வெட்கப்படும்போது, மீண்டும் சிறு பெண்ணாகிவிடுகிறார்கள்.

“ம்… இப்ப எங்கருக்கான்?”
“சௌத் கொரியாவுல இருக்கான். ஃபேஸ்புக்லதான் பாத்தேன். ஆனா, ஃப்ரண்ட் ரிக்கொயஸ்ட்ல்லாம் கொடுக்கல. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்…” என்று செல்ஃபிலிருந்த அந்தக் கடிதங்களை எடுத்து நீட்டினேன். அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாள். ஒரு கடிதத்தைப் பிரித்துப் படித்தவுடன் அவள் முகம் மாறியது. “ஏய்… இதையெல்லாம் இன்னும் வச்சிட்டிருக்கியா?” என்றவள் தொடர்ந்து சத்தமாகப்
படித்தாள்.  

“என் உயிரின் ஒவ்வொரு துளியிலும் நீதான் இருக்கிறாய்…” என்றவள் சட்டென்று சத்தமாகச்சிரித்து, “ஃபன்னியா இருக்குல்ல?” என்றாள்.
எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவள் கடிதங்களைப் படித்துவிட்டு கண்கலங்கி, அப்படியே உறைந்துபோய் நின்றுவிடுவாள் என்று நினைத்திருந்தேன். என்னைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்து, என் தோள் நைட்டியை நனைப்பாள் என்று நினைத்திருந்தேன்.
நித்யா தொடர்ந்து சில கடிதங்களைப் படித்தாள், “நம் காதல் பிரிந்தால் கடவுள் இல்லையென்று பொருள்...” என்று படித்தவள் சிரித்தாள். விழுந்து விழுந்து சிரித்தாள்.

“என்னடி சிரிக்கிற? இதைப் படிக்கிறப்ப உனக்கு ஃபீலாகலையா?”
“என்ன ஃபீல்? அதுலருந்தெல்லாம் விலகி நான் ரொம்ப தூரம் வந்துட்டேன் அனிதா. அது ஒரு வயசு காலத்து சலனம். இந்த சினிமாக்காரங்களும், எழுத்தாளருங்களும் பிரிஞ்ச காதலப் பத்தி மறுபடியும், மறபடியும் உருக்கமா காமிச்சு, காதல் தோல்விய பயங்கரமா ரொமான்டிசைஸ் பண்ணி வச்சிருக்காங்க. அதுவும் வாழ்க்கைல ஒரு பகுதி… அவ்வளவுதான்.

இதைப் போயி புதையல் மாதிரி, இத்தனை வருஷம் ஊர் ஊரா தூக்கிட்டு போயிருக்க… லூசு… முதல்ல கிழிச்சுப் போடுறேன். யாரு கண்லயாச்சும் பட்டா வம்பு...” என்று அக்கடிதங்களைக் கிழித்த நித்யாவை, நான் என்னவென்று சொல்லமுடியாத உணர்வுடன் பார்த்தேன்.

பாகுபலி Vs லயன் கிங்

வெளுத்து வாங்குகிறார்கள் நெட்டிசன்ஸ். குறிப்பாக ‘லயன் கிங்’ பார்த்தவர்கள். இந்த ஹாலிவுட் படத்தின் கதையைத்தான் அப்படியே காபி அடித்து ‘பாகுபலி’ என இரு பாகங்களாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.‘லயன் கிங்’ இப்பொழுதுதானே வெளியானது என்று கேட்பவர்களுக்கு... 90களில் அனிமேஷனாக வந்த படமே இப்பொழுது மோஷன் பிக்சர் ஆகியிருக்கிறது.ரைட். இதற்கு ராஜமவுலியின் பதில்..? மவுனமே!

Copy cat!

தொடர் தோல்வியால் துவண்டிருந்த தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் இப்பொழுது தெம்பில் இருக்கிறார். ராம் நடிப்பில் அவர் இயக்கிய ‘ஐஸ்மார்ட் சங்கர்’ வசூலில் ஆந்திராவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், தான் எழுதி இயக்கி நடித்த ‘நான் யார்?’ தமிழ்ப் படத்தைத்தான் ரைட்ஸ் வாங்காமல் பூரி ஜெகந்நாத் தெலுங்கில் எடுத்திருக்கிறார் என போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் ஜெய் ஆகாஷ்.இதில் என்ன ஹைலைட் என்றால்... ‘ஐபாய்’ என்ற பிரிட்டிஷ் சயின்டிஃபிக் த்ரில்லர்தான் இவ்விரு படங்களுக்கும் ஆதாரம்!

வயதானவரை காதலிக்கும் ரகுல்!

இப்படியொரு தர்மசங்கடத்தை எதிர்கொள்வோம் என நிச்சயமாக ரகுல் ப்ரீத் சிங் எதிர்பார்த்திருக்க மாட்டார்!முதன் முறையாக அவர் இந்தியில் நடித்த ‘தி தி பியார் தி’ ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. ஆனால், இந்த சந்தோஷத்தை அவரால் கொண்டாட முடியவில்லை. காரணம், அந்தப் படத்தில் 50 வயது ஆணை காதலிக்கும் 25 வயது பெண்ணாக அவர் நடித்திருந்தார்.ரியல் லைஃபிலும் ரகுல் வயதானவரை காதலிக்கிறார்... என யாரோ கொளுத்திப் போட... இந்த நியூஸ்தான் இப்பொழுது இண்டஸ்டிரியில் கொழுந்துவிட்டு எரிகிறது!

அனுஷ்கா 14 +

ஆமாம்... அனுஷ்கா இப்பொழுது என்ன செய்கிறார்..?
இந்தக் கேள்வியை கேட்பவரா நீங்கள்? எனில் இந்த நியூஸ் உங்களுக்குத்தான்! 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் அனுஷ்கா, ‘நிசப்தம்’ என்னும் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.ஆமாம். தமிழிலும் டப் ஆகும்! போதுமா?!

ஜி.ஆர்.சுரேந்தர்நாத்