கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-22



பள்ளியில் சேர்ப்பதற்கு முன் ஏன் குழந்தைகளை திருவொற்றியூர் அழைத்துச்செல்ல வேண்டும்?

‘‘தாத்தா..! திருவொற்றியூர்ல நந்தி தேவர், மஹா விஷ்ணு, லக்ஷ்மி, ரோமச முனிவர், பிரம்மானு எல்லாரும் சிவ தாண்டவ தரிசனம் கிடைக்க தபஸ் பண்றாங்கனு சொன்னீங்க... மேல என்ன நடந்தது?’’ ஆர்வம் தாங்காமல் கேட்டான் கண்ணன்.

‘‘இரு கண்ணா...’’ என கண்ணனை தடுத்த அவன் மாமா சுந்தரம், ‘‘மாமா... சிவனும் விஷ்ணுவும் ஒண்ணுனு நீங்க சொன்னதா கண்ணன் சொல்லுவான். அப்படியிருக்க சிவதாண்டவத்தைப் பார்க்க பெருமாள் தபஸ் பண்றார்னு இப்ப சொல்றீங்களே... எங்கயோ இடிக்குதே மாமா..?’’ தன் மனதில் இருந்த கேள்வியை நாகராஜனைப் பார்த்துக் கேட்டார்.

நாகராஜன் புன்னகைத்தார். ‘‘இந்த உலகம் இப்படி இருக்கக் காரணமே எனர்ஜினு சொல்லப்படக்கூடிய சக்திதான். இயக்கத்துல இருக்கும் சக்திய kinetic energyனும், இயங்காம இருக்கற எனர்ஜிய potential energyனும் சொல்றோம்.

நடராஜரின் நடனம் kinetic energy. ரங்கநாதர் potential energy. ஒரு சக்தி அடங்கி இருந்தாதான் விஸ்வரூபம் எடுத்துச் செயல்பட முடியும்! அதனால பெருமாள் (potential energy) அடங்கி தவம் செய்யறார். சிவன் (kinetic energy) விஸ்வரூபம் எடுத்து ஆடறார்! இதுதான் இந்தக் கதையோட தாத்பரியம்! எல்லா இடத்துலயும் நிறைந்திருக்கும் பரம்பொருள் ஒரு ரூபத்தில் அடங்கி இன்னொரு ரூபத்தில் இயங்கி உலகத்த நடத்திக்கிட்டு வருது...’’  ‘‘அற்புதமான விளக்கம் தாத்தா...’’ என்று தன்னையும் மறந்து கண்ணன் கைதட்டினான்.

‘‘எங்க எதிர் வீட்டு தாத்தாக்கு தெரியாத விஷயமே இல்லைனு கண்ணன் ஏன் சொல்றான்னு இப்ப புரியுது...’’ பிரமிப்புடன் சொன்னார் சுந்தரம்.  ‘‘இத்தன பேர் தவம் பண்ணும்போது ஈசன் மனமிரங்காம இருப்பாரா? எல்லோருக்கும் காட்சி கொடுத்து அவங்க ஆசைப்பட்ட மாதிரியே நடனமாடினார். இந்த சம்பவத்தின் நினைவா இப்பவும் வடக்கு மாட வீதி வழியா சுவாமி ஊர்வலம் வரும்போது அங்க இருக்கும் நந்தி தேவர் சன்னதிக்கு - அங்கதான் அவர் தவம் செய்தார் - முன்னாடி நின்னு ஆனந்தத்தாண்டவம் ஆடிட்டு போறார்.

இங்க இருக்குற சுவாமியை பிரம்மாவே வணங்கினதால அவரை - ஈசனை - வணங்கினா பிரம்மா எழுதின தலையெழுத்தப் பத்தி கவலையே படவேண்டாம்...’’ நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லி தன் பங்குக்கு கோயிலின் பெருமையைச் சொன்னாள்.  ‘‘புரியுது... புரியுது...’’ தலையசைத்த கண்ணன், ‘மேல சொல்லுங்க தாத்தா...’’ என்றான்.

‘‘ஒருமுறை திருவொற்றியூர்ல...’’ என்றபடி நாகராஜன் சொல்லத் தொடங்கினார்... அன்று திருவொற்றியூரில் அவ்வளவு கூட்டம். காரணம், புதிதாக வந்த இரண்டு பண்டிதர்கள்தான். அமுதம் போன்று கவி பாடினார்கள். அதைக் கேட்க கூட்டமும் வந்திருந்தது. அவர்கள் கவி பாடி முடித்ததும் கூட்டத்தில் இருந்த அனைவரும் தங்களால் முடிந்ததை அவர்களுக்கு பரிசாகத் தர முன்வந்தார்கள்.

ஆனால், அந்தப் பண்டிதர்கள் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ‘‘நாங்கள் ஆடகபுரியிலிருந்து வருகிறோம். அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு எங்களிடம் இருந்த மாணிக்கத்தைக் கொண்டு பதக்கம் செய்ய தீர்மானித்தோம். செவ்வனே அதைச் செய்தும் வந்தோம். ஆனால், அதைச் செய்துமுடிக்க மேலும் இரண்டு மாணிக்கங்கள் தேவைப்பட்டது. என்ன செய்வதென்று அறியாமல் அந்த ஈசனையே சரண் புகுந்தோம். அந்த தயாபரன் அன்றிரவு எங்கள் கனவில் தோன்றினான்.

உயர்ந்த வகை மாணிக்கங்கள் திருவொற்றியூரில் இருக்கிறது என்றும் அங்குள்ள கோயிலில் கவி பாடினால் நீங்கள் விரும்பிய இரண்டு மாணிக்கங்கள் கிடைக்கும் என்றும் சொன்னார்.அதன்படியே இங்கு வந்து உள்ளம் உருக நாங்கள் இருவரும் கவி பாடினோம். நாங்கள் ஈசனுக்கு பதக்கத்தை செய்து முடிக்க தேவையான இரண்டு மாணிக்கங்கள்தான் எங்களுக்கு வேண்டும்...’’ ஊரே அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு அசந்துபோய் நின்றது.

அப்போது திடீரென்று ஒரு சிவனடியார் அங்கு வந்தார். நெற்றியில் திருநீறு மின்ன, கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் ஆட, இடையில் காவி வேட்டி சர
சரக்க அங்கு வந்த அவரை யாரும் இதற்கு முன் பார்த்ததில்லை. ‘‘பண்டிதர்களே! நீங்கள் தேடும் மாணிக்கங்கள் இருக்குமிடத்தை நான் அறிவேன். என்னோடு வந்தால் அந்த இடத்தை தங்களுக்கு காட்டுவேன்...’’ கம்பீரமாகச் சொன்னார் அந்த சிவனடியார்.போதாதா..? உடனே பண்டிதர்கள் இருவரும் அந்த சிவனடியாரைப் பின்தொடர்ந்தார்கள்.

திருவொற்றியூரிலிருந்து திருமயிலைக்கு பண்டிதர்களை அழைத்து வந்தார்  சிவனடியார். அங்கு ஒரு வீட்டிற்குள் நுழைந்து ‘‘ஏலேல சிங்கரே...!’’ என்று குரல் கொடுத்தார். அந்தப் பெயருக்கு உரியவர் கை குவித்து வணக்கம் தெரிவித்தபடியே ‘‘நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லையே..?’’ என்றபடி வீட்டுக்குள் இருந்து வந்தார்.  

‘‘எங்களை தங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை சிங்கரே! நாங்கள் மூவரும் திருவொற்றியூரிலிருந்து வருகிறோம். தங்களிடம் உயர்ந்த மாணிக்கங்கள் உள்ளதாக அறிந்து தங்களை நாடி வந்துள்ளோம். ஆடகபுரி ஈசனுக்கு பதக்கம் செய்ய அவை தேவைப்படுகிறது..’’ என்றார் சிவனடியார்.

உடன் சிங்கர் கண்களில் பக்தியின் பெருக்கால் நீர் வழிந்தது. தழுதழுத்தபடியே ‘‘நேற்றிரவு ஈசன் என் கனவில் தோன்றி நீங்கள் வருவதைப் பற்றிச் சொல்லி உங்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்... அதன்படியே நீங்கள் வந்திருக்கிறீர்கள்... மிக்க மகிழ்ச்சி...’’ என்று கை குவித்தார் சிங்கர். உடன் அந்த சிவனடியார் தனது வலது கரத்தை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

பின்பு கற்பூரம் காற்றில் கரைவது போல் கரைந்து மறைந்து போனார்!அப்போதுதான் அந்த பண்டிதர்களுக்கும் சிங்கருக்கும் வந்தது சாட்சாத் அந்த கைலாச வாசனே என்று புரிந்தது! மெய்சிலிர்த்துப் போனார்கள்.இப்படி ஈசனே வந்து கேட்டபின் சிங்கர் ரத்தினங்களைத் தர மறுப்பாரா என்ன? பண்டிதர்கள் கேட்ட ரத்தினத்தை அவர்களுக்கு சற்றும் யோசிக்காமல் தந்துவிட்டார். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. பண்டிதர்கள் இருவரும் பெற்றுச்சென்ற ரத்தினங்கள் அந்த நாட்டு மன்னனுக்காக வைத்திருந்த ரத்தினங்கள்!

விஷயத்தை அறிந்த மன்னனுக்கு கோபம் வந்தது. விசாரணைக்கு அரசவைக்கு வரும்படி சிங்கருக்கு கட்டளையிட்டான்.சிங்கர் எதுவும் சொல்லவில்லை. மாறாக, ஒற்றியூர் தியாகராஜரை மனமார சரணாகதி அடைந்தார்.சிங்கரது பக்தியால் மனமிரங்கிய ஈசன், அவரது கனவில் தோன்றி, பொழுது விடிந்ததும் தைரியமாக அரசவைக்கு செல்லும்படி கட்டளையிட்டார்.

இது போதுமே... விடிந்ததும் தனது ரத்தினப் பெட்டியை எடுத்துக்கொண்டு சிங்கர் அரசவைக்குச் சென்றார். காவலர்கள் அவரை விசாரணை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.‘‘உனது ரத்தினப் பெட்டியைத் திறந்து காட்டு..!’’ மன்னன் கர்ஜித்தான்.ஈசனை வணங்கியபடியே சிங்கர் தனது பெட்டியைத் திறந்தார்.உள்ளே மன்னருக்கு உரிய ரத்தினங்கள் பளபளத்தன!அதைக்கண்டு மன்னன் வாயடைத்துப் போனான். சிங்கரோ, ‘‘என் மாணிக்கமே... தியாகராஜா...’’ என்று கண்ணீர் மல்க கைகூப்பினார்.சிங்கர் மூலம் நடந்ததை அறிந்த மன்னனும் ஒற்றியூர் தியாகராஜரை எண்ணி எண்ணி உருகினான்.

‘‘பண்டிதர்களுக்கு வேண்டிய ரத்தினங்களையும் கொடுத்து, சிங்கரையும் தண்டனையில் இருந்து திருவொற்றியூர் தியாகராஜர் காப்பாத்திட்டார். அரசவைல தியாகராஜர் கருணைய நினைச்சு அவர மாணிக்கமேனு சிங்கர் கூப்பிட்டார் இல்லையா... அதனால இன்னிக்கும் அந்த ஊர் தியாகராஜரை ‘மாணிக்க தியாகராஜர்’னுதான் பக்தர்கள் பக்தியோட கூப்பிடறாங்க.

இன்னொரு விஷயம்... சிங்கருக்கு எதிரா வந்த வழக்குல அவரை ஈசன் காப்பாத்தினார் இல்லையா..? அதே மாதிரி நாமும் அந்த தியாகராஜரை வணங்கி சரணடைஞ்சா பொய்யா நம்ம மேல போடப்பட்ட வழக்குல இருந்து சிரமமே இல்லாம நம்மைக் காப்பாத்துவார்...’’ தன்னை மறந்து கைகுவித்தபடி சொன்னார் நாகராஜன்.

‘‘ஒற்றியூர்ல தியாகராஜரா? ஒற்றீசர்னுதானே தாத்தா நீங்க சொன்னீங்க..?’’ கண்ணன் சந்தேகத்துடன் கேட்டான். ‘‘திருவாரூர் கதைய தாத்தா உனக்கு சொன்னது நினைவிருக்கா கண்ணா..? அதுல முசுகுந்தர் இந்திரலோகத்தில் இருந்து ஏழு தியாகராஜர் சிலைகளைக் கொண்டு வந்து பூமில பிரதிஷ்டை செய்தார்னு தாத்தா சொன்னார் இல்லையா..? அந்த ஏழு இடங்கள்ல ஓர் இடம்தான் இந்த ஒற்றியூர்...’’ புன்னகையுடன் சொன்னாள் ஆனந்தவல்லி.

‘‘சென்னைல இப்பிடி ஒரு தலம் இருப்பதே நீங்க சொல்லித்தான் மாமா தெரியும்... தயவுசெஞ்சு உங்களுக்கு அந்தக் கோயில் பத்தி தெரிஞ்சதை எல்லாம் சொல்லுங்க...’’ கேட்டார் கண்ணனின் மாமாவான சுந்தரம்.

‘‘தெரிஞ்சதை சொல்றேன் சுந்தரம்... பாணினி என்பவர்தான் ஸ்மாகிருத இலக்கணம் எழுதினார். அவருக்கு வேதத்துல இருக்கற பதினாலு சூத்திரத்தைக் கொடுத்து இலக்கணம் எழுத வைச்சதே இந்த ஊர் ஈஸ்வரன்தான்!இன்னொண்ணு தெரியுமா... ஒட்டுமொத்த பாரத தேசத்தையும் ஒரு காலத்துல மாந்தாதா என்னும் மன்னன் ஆட்சி செஞ்சான். அப்ப எல்லாரும் தனக்கு கப்பம் கட்டணும்னு ஓலை அனுப்பினான்.

அந்த ஓலை ஒற்றியூருக்கு வந்தப்ப அதுல ‘ஒற்றியூர் நீங்கலாக அனைத்து ஊர்களும்’னு சுவாமி அருளால தானாகவே மாறிச்சு! அதைப் படிச்சி எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க!இதனாலதான் அங்குள்ள ஈஸ்வரனுக்கு ‘எழுத்து அறிவித்த நாதர்’னு பேரு வந்தது!

அந்த சுவாமி இன்னிவரைக்கும் பக்தர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கறார். அதனாலதான் உங்களையும் குழந்தைய ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு முன்னாடி திருவொற்றியூர் போய் ஈசனை வணங்கச் சொல்றேன்...’’ என்றார் நாகராஜன்.  

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்