ரத்த மகுடம்-64



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

யோசித்தபடியே குன்றில் இருந்து இறங்கத் தொடங்கிய அந்த இளைஞனின் உள்ளத்தில் ‘கஜ சாஸ்திர’ சுவடிகளில் இருந்த வாசகங்கள் கண்முன்னால் விரிந்தன.பதினோரு திங்களுக்குப் பின் இரண்டாவது பத்தாண்டுதானே..?ஆம். இரண்டாவது பத்தாண்டில் யானைகள் முகத்தில் அடர்த்தியான மயிர், வேகமான நடை, வலுப்பெற்ற மாமிசம், தேகபலம், வலுவுக்கு இழுத்து சண்டையிடும் குணம், செருக்கு, தாது தோஷமற்ற உடல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

மூன்றாவது பத்தாண்டில் கோபத்தால் கொல்ல நினைக்கும். சந்திகள், இடுப்பு, துதிக்கை வலுப்பெற்றிருக்கும். மூன்று சந்திகளிலும் மடிப்புகள் இருக்கும். சில இடங்களில் மடிப்புகள் மாறியும் காணப்படும்.நான்காவது பத்தாண்டில் மேயும் இடங்களில் பிடிகளை நாடும். பக்கங்கள், கன்னங்கள், காதுகளில் மதமுள்ளதாக இருக்கும்.

ஐந்தாவது பத்தாண்டில் கொழுத்த பிடிகளிடம் காமம் கொள்ளும். பக்கம், கன்னம், காது ஆகியவற்றில் மதமுடையது. தலையில் மயிர்கள் அடர்ந்து உடல் முழுமையும் மதமுடையது. துன்பங்களைப் பொறுக்கும். பசி, தாகம் தாங்கும். துதிக்கையை தந்தத்தில் சுற்றிக் கொள்ளும். சப்தங்களைக் கேட்டு பயமடையும். காது, கன்னம், காதின் சுற்றுப்புறம், புச்சமூலம், மத்தகம் ஆகியவற்றில் மதமுடையது.

ஆறாவது பத்தாண்டில் பளபளப்பாக இருக்கும். தலையிலும் உடலிலும் மயிர்கள் அடர்ந்திருக்கும். உடம்பில் சுருக்கங்கள் தோன்றியிருக்கும். இந்திரியங்களின் சக்தி குறையும். தாதுபலம் குறைந்து மேன்மை வீழ்ச்சி அடையும்.ஏழாவது பத்தாண்டில் உடல் முழுமையும் மயிர்கள் அடர்ந்திருக்கும். சண்டைகளில் சிரமமடையும்.எட்டாவது தசையில் நீண்டகால ரோகமும் புண்களும் காணப்படும். உடல் முழுமையும் மயிர்கள் அடர்ந்திருக்கும். அழகு குறையும். கண்களில் குழி விழும். குகைகளில் வசிக்கும்.

ஒன்பதாவது தசையில் உடல் முழுக்க சுருக்கம் காணப்படும். மிருதுவான உணவுகளையே உட்கொள்ளும். சங்கடமான இடங்களுக்குப் போகாது.
பத்தாவது தசையில் குதிகால் நழுவி உயரத் தூக்கும். தோளில் சுமக்கவும் சக்தியற்று குறைந்த அளவே உண்ணும். ஆண்குறி எழாது. தலைமயிர், கண், கால்களின் சந்திகள், வால் எல்லாம் வெலவெலத்திருக்கும். அடிக்கடி மலஜலம் விடும்.

பதினோராவது தசையில் சுருக்கங்கள் விழுந்து மயிர் உதிர்ந்துவிடும். கோசத்திலேயே சிறுநீர் வழியும். செயல் குன்றிவிடும். ஒருவேளை நன்கு போஷிக்கப்பட்டிருந்தால் மயிர் அடர்ந்து அதிக சோபையுடன் இருக்கும்.பெரிய காதுகளும், மத்தகமும் உடைய யானை நூறு வருடங்கள் பிழைத்திருக்கும். முகம், எலும்பு, மூக்குத்தண்டு, சந்திகள் ஆகியவற்றில் காயமுற்று காணப்படும்.பதினோராவது தசையை அடைந்த யானைக்கு ‘பூர்வகம்’ என்று பெயர்.

பன்னிரண்டாவது தசையை அடைந்த யானை மிகுந்த அமைதியும் நிலைபெற்ற மனமும் நீண்ட விரலுடைய துதிக்கையும் கொண்டிருக்கும்...
இதற்கு மேல் கஜங்களின் வாழ்நாள் இல்லை என்பதை நினைத்து பெருமூச்சுவிட்ட அந்த இளைஞன் குழுமியிருக்கும் யானைகளை மனதில் பிரிக்கத் தொடங்கினான்.

காம்போஜம், லாடம், சிந்து, வநாயுஜம், அங்கம் ஆகிய இடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு மத்தகம், சரீரபாகங்கள், நகம், தந்தம் ஆகியவை வெளிர்நீலமாகவும்; அங்கங்களும் வாலும் குட்டையாகவும்; அண்டகோசம் மிருதுவாகவும் நீண்டுமிருக்கும் என்பதை உணர்ந்து இவை ரஜோகுணமுடையவை என சாஸ்திரம் சொல்வதை ஏற்றான்.

அநூபம், வங்காளம், புளிந்தம், ஹூணம், நேபாளம், அவந்தி, விதர்பம் ஆகிய தேசங்களின் யானைகளுக்கு அடிவயிறு, தந்தம், முகம், உடல், கண் ஆகியவை சிவப்பாக இருக்கும். கபாதிக்கமும் வலிமையும், சாந்த மனதும் உடையவை இவை.சவுராஷ்டிரம், கூர்ணிகம், கலிங்கம், யவந்தம், வத்சம், காஷ்மீரம் ஆகிய தேசத்து யானைகளுக்கு முகம், கன்னம், மயிர் ஆகியவை வெளுப்பாக இருக்கும். வாதாதிக்க சரீரமும், தாமத குணமும் உடையவை இவை.

மதகந்த சரீரமும் வெடித்த தந்தமும் நகமும் கொண்டவை சரயூ நதி, மாளவதேசம், கோசரபர்வதம், அங்கம், மதகத்தின் வடபாகம், புண்ட்ரம், காஷ்மீரம், கோசலம், பாஞ்சாலம், கலிங்கம் ஆகிய தேசங்களின் மலைகளிலும் காடுகளிலும் சஞ்சரிக்கும். சில யானைகள் கங்கை, கோமதி நதி தீரத்திலும் காணப்படும்.

இவைகளின் கழுத்து, தலை, உதடு, முகம், தந்தம், வயிறு, துதிக்கை, கால்கள், முதுகெலும்பு, பிருஷ்டபாகம் ஆகியவை பருத்திருக்கும். மஞ்சள் நிறமும் இனிய சப்தமும், கோபமின்மையும், அழகும், அக்கினி பலமும் உள்ளவை இவை.மத்ஸ்யம், பர்பரம், திரிகர்தம், மாளவம் ஆகிய தேசத்திய யானைகள் சிந்துநதியின் உப வனத்திலுள்ள ஆகாரங்களை புசிக்கும். தாமச குணமுள்ளவை. கண், நகம், உடற்கூறு, துதிக்கை ஆகியவை மஞ்சளாகவும் தந்த முனையும் ஆண்குறியும் குட்டையாகவும் வெளுப்பாகவும் இருக்கும்.

சவுவீரம், பாஹ்லீகம், தாசார்ணம் ஆகிய தேசங்களிலுள்ள யானைகள் கருங்காலியின் மணமுள்ளவை. மயிர், முகம், தந்த மூலம் ஆகியவை பொன்னிறமாகவும் கபாதிக்கத்தால் பிரகாசமான உடலையும் உடையவை. கடுமையாக யுத்தம் செய்யும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.

கீர்வாகணம், பாஹுகம், மராளம், தஹாரம் ஆகிய தேசத்திய யானைகள் வெடித்துச் சுருங்கிய நகமும் சிவந்த துதிக்கையும் மஞ்சள் நிற உடற்கூறுகளும் உள்ள விசித்திர சரீரம் படைத்தவை.

மத்ஸ்யம், கரஹாடகம், போடம் ஆகிய தேசத்திய யானைகள் எள்ளின் மணமும் நீண்ட துதிக்கையும் தந்தமும் மெல்லிய மயிரும் தீமையும் கபடமும் நிறைந்த மனமும் நடத்தையும் உள்ளவை.கர்நாடகம், ஆந்திரம், மலையாளம், சகுந்தம், பாண்டியம், பாஸ்சாத்தியம். தவ்லவகம், டங்கணம், கவுடம் ஆகிய தேசங்களிலுள்ள யானைகளுக்கு உடற்கூறுகள் நீலமாகவும், தந்தங்கள் வெண்மையாகவும், நகங்கள் சொத்தை விழுந்தும் காணப்படும். சிறந்த பராக்கிரமம் உள்ளவை.

சைலாஹ்வயம், அஹிரளம், ஸஹியகம், சால்வலம் தேசத்திய யானைகளுக்கு தந்தமுனை கூர்மையாகவும், உடல் சீதளமாகவும் மனோகரமாகவும் இருக்கும். இவை சாத்வீக குணமும், நாவற்பழ நிறமும், அழகிய தந்தங்களும் உடையவை.

கேரளாந்த பூமியிலுள்ள யானைகள் புள்ளிகளால் முகமும், காதும் சிவந்து மனதைக் கவரும் கண்களும் மெல்லிய வெண்ணிற தந்தங்களும், மனோகரமான உடலும் கொண்டிருக்கும்.சஞ்சுமல்ல தேச யானைகள் வெண்மையான தந்தமும் நகமும் உடையவை.கார்ணகவும தேச கஜங்கள் நீண்ட மயிர், பிளவுடைய தந்த மத்தியம், இளைத்த உடல், தான் இருக்கும் இடத்தில் சண்டை செய்யும் தைரியம், மதம் கொண்ட காலத்தில் தைரியமின்மை ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும்.

ஜலவர்ண கஜங்கள் சண்டையில் பயமுள்ளவை. குரு, சூரசேநம், குகுரம் தேசத்து யானைகள் மிகுந்த வேகம், பலம், பராக்கிரமம், ரோஷம், தைரியம், நீண்ட கூர்மையான மயிர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.ஜாங்கல தேச யானைகளின் மயிர்கள் நீண்டு கூர்மையாக இருக்கும். அநூபதேச கஜங்களின் உடல் குட்டையாகவும் ஆண்குறி பருத்தும் பித்த தேகம் உடையவையாகவும் இருக்கும்.

கண்களால் அலசிய அந்த இளைஞனுக்கு தனது ஆட்கள் இந்த யானைகளைப் பிடித்த விதம் பெருமிதம் கொள்ளச் செய்தது.முதலில் யானையின் மூத்திரம், லத்தி ஆகியவற்றை அவர்கள் தங்கள் உடலில் பூசிக் கொண்டு; உடலை சேங்கொட்டைத் தழைகளால் மறைத்து காடுகளுக்குச் சென்று யானைகளின் அடிச்சுவடு, நாசமுற்ற மரங்கள், படுத்திருந்த அடையாளம், பீறிடும் சத்தம் ஆகியவைகளால் அவை இருக்கும் இடத்தை அறிந்தனர்.

பிறகு கிரீஷ்ம காலத்தில் தக்க பரிவாரங்கள், கருவிகளுடன் பழகிய பிடிகளிலும் குதிரைகளிலும் சென்று யானைகளை வாரிபந்தம், வசாபந்தம், அநுகபந்தம் ஆகிய மூன்று முறைகளால் பிடித்தனர். ஆபாதம், அவபாதம் ஆகிய இரு முறைகளாலும் தீமைகள் உண்டாகும் என்பதால் அந்த முறைகளில் கஜங்களைப் பிடிக்க வேண்டாம் என எச்சரித்திருந்தான்.

ஜலாசயத்தை ஒட்டி ஒரு குரோசம் அகலம் நீளமுள்ள பூமியைச் சுற்றிலும் யானைகள் சென்று வர மட்டும் பாதையை விட்டுவிட்டு அகழ் வெட்ட வேண்டும் அல்லது நெருக்கமாக சுற்றிலும் மரங்களை வளர்க்க வேண்டும்.

அந்த பூமியில் வாழை, கரும்பு, தாமரைக் கிழங்கு, பசும்புற்கள், அரசு, மூங்கில், கஜங்கள் விரும்பும் விருட்சங்கள் ஆகியவற்றைப் பயிரிட வேண்டும்.
அவைகளை உண்ணும் ஆசையுடன் அங்கு யானைகள் வரும். அவைகள் உள்ளே இருக்கும்போது வழிகளையும் நீர் மார்க்கங்களையும் பெரிய பெரிய மரங்களால் அடைத்து விட வேண்டும்.

பிறகு அவைகளில் லட்சணமுள்ள யானைகளை தகுந்த உபாயங்களால் பிடிக்க வேண்டும். இதற்கு வாரிபந்தம் என்று பெயர்.நன்கு பழக்கப்பட்ட வலிமையுள்ள பெரிய பெண் யானைகளின் மீது பாகர்கள் கயிறு முதலிய சாதனங்களுடன் ஏறிக்கொண்டு தழைகளால் தன்னை மறைத்து யானைகள் இருக்கும் இடம் சென்று அப்பெண் யானைகள் மூலம் யானைகளை கட்டி இழுத்து, அவற்றில் லட்சணமுள்ளவற்றை தேர்ந்தெடுப்பதற்கு வசாபந்தம் என்று பெயர்.

சில யானைகள் பிடியின் மோகத்தால் அதனுடனே வந்துவிடும். அவைகளைப் பிடித்துக் கட்டுவதற்கு அநுகதபந்தம் என்று பெயர்.விழுந்த யானை சுளுவாக ஏற முடியாத சிறு படுகுழியை வெட்டி அதன் மீது வாழை, கரும்பு முதலியவற்றை வளர்த்து, யானை விழுந்தவுடன் பிடிப்பதற்கு ஆபாதம் என்று பெயர்.

இந்தக் குழியே ஆழமாக இருந்தால் அது அவபாதம். இந்த இரண்டினாலும் கஜங்களுக்கு தீங்கு நேரிடும் என்பதால்தான் இம்முறைகளில் பிடிக்க வேண்டாம் என தன் ஆட்களுக்கு அந்த இளைஞன் கட்டளையிட்டிருந்தான்...இப்படி அழைத்து வந்திருந்த அனைத்து கஜங்களையும் பார்த்து திருப்தி அடைந்த அந்த இளைஞன் அதன் ஓட்டத்தை அறிய ஓடத் தொடங்கினான்.யானைகள் அனைத்தும் அவனைத் துரத்தத் தொடங்கின.

ஓர் எல்லை வரை ஓடியவன் சட்டெனத் திரும்பி கஜங்களை நேருக்கு நேர் சந்தித்தான்.பிறகு அவைகளை நோக்கி ஓடி வந்து முன்னால் நின்ற யானையின் துதிக்கையில் தன் வலக்காலை வைத்து இடது காலை தந்தத்தின் மீது ஊன்றி எகிறி அதன் உச்சியில் அமர்ந்தான். கையோடு உச்சந்தலையில் தன் வலது உள்ளங்கையால் ஓங்கி அறைந்தான்.மறுகணம் அந்த யானை முழங்கால் இட்டு அமர்ந்தது.

இதைக் கண்டு மற்ற கஜங்களும் முழங்காலிட்டு அந்த இளைஞனை வணங்கின.பெருமிதத்துடன் அமர்ந்திருந்த யானையைவிட்டு கீழே இறங்கியவன், அன்புடன் அதன் நெற்றியில் முத்தமிட்டான்.யாரோ வரும் ஓசை.திரும்பினான். வந்தவனைக் கண்டதும் இளைஞனின் முகத்தில் புன்னகை.‘‘வா நண்பா! சிவகாமி உருவத்தில் சாளுக்கியர்கள் அனுப்பி வைத்த பெண்ணை சிறை செய்துவிட்டாயா..?’’
கேட்டபடி கரிகாலனைக் கட்டித் தழுவினான்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்