தலபுராணம்-மெட்ராஸ் வரைபடம்!



கார்ட்டோகிராஃபி… நிலப்பட வரைவியல் அல்லது நிலப்படக்கலை. அதாவது, வரைபடம் (Map) வரையும் கலையின் பெயர். மெட்ராஸிற்கான வரைபடங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நிலப்படக் கலைஞர்களால் வரையப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆரம்ப கால நிலஅளவை என்பது கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் கேப்டன்கள் கடற்கரையைச் சுற்றி நடத்திய அளவைகள்தான்.

இது 17ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் நடந்தவை. பின்னர், அவர்கள் மசூலிப்பட்டிணம், ஆர்மகான் போன்ற பகுதிகளுக்கு வந்து இறுதியாக மெட்ராஸ் வந்து சேர்ந்தனர்.ஆனால், ‘‘இந்த அளவைகள் உள்ளிட்ட ஆங்கிலேயர்களின் நிறைய பதிவு புத்தகங்கள் துரதிர்ஷ்டவசமாக 1855ல் கல்கத்தாவில் எரிந்திருக்கலாம் அல்லது 1860ல் இந்திய அலுவலகத்தில் அழிந்திருக்கலாம்’’ என 1939ல் வெளியான ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் குறிப்பிடுகிறார் மெட்ராஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பி.எம்.திருநாரணன்.

அதனால், இதன்மூலம் ஆரம்பகால மெட்ராஸின் வரைபடங்கள் எதுவும் இல்லை என்பதை அறியமுடிகிறது.பழங்காலத்திலும், முகலாயர் காலத்திலும் அளவையில் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. பொதுவாக, எல்லைகளை வரையறுக்க அவர்கள் கற்களை நட்டு வைத்துள்ளனர். 

ஆனால், முறையான நிலஅளவை, வரைபடங்கள் எல்லாம் 19ம் நூற்றாண்டிலேயே ெசய்யப்பட்டன. அவை மெட்ராஸில் இருந்தே துவங்கின
என்பது ஆச்சரியம்.   

ஆங்கிலேயர்கள் இங்கே காலடி வைத்த சில வருடங்களில் டாக்டர் ஃப்ரையர் மெட்ராஸ் வந்து சேர்ந்தார். இவரே செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடிவத்தை ஓரளவு வரைந்து முடித்தவர்.‘‘கோட்டையின் ஆரம்ப கால வடிவத்தை ஃப்ரையரின் வரைபடம் மூலமே அறியமுடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இது துல்லியமாக வரையப்படவில்லை’’ என வருத்தப்படுகிறார் ‘Vestiges of Old Madras- Vol I’ நூலில் கர்னல் லவ்.

இதன்பிறகு, 1698 முதல் 1709 வரை கவர்னராக இருந்த தாமஸ் பிட் காலத்தில் மெட்ராஸின் வடிவம் வரைபடமாக தீட்டப்பட்டது.  இதுவே முதல் ‘Plan of City of Madras’ எனப்படுகிறது. பின்னர், 1733ம் வருடம் முத்தயால்பேட்ைட, ெபத்தநாயக்கன்பேட்டை, அங்கிருந்த வீடுகள், தோட்டங்கள், கோயில்கள், விவசாய நிலங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய வரைபடம் வெளியிடப்பட்டது.

இதை அப்போது பாதுகாப்புத் துறையில் உதவியாளராக இருந்த ஜான் ஹாக்ஸ்டன் என்பவர் வரைந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.  
பின்னர், 1746ம் வருடம் பிரஞ்சு வசம் மெட்ராஸ் வந்தபோது அவர்கள் மெட்ராஸ் வரைபடம் ஒன்றை தயாரித்தனர். இதில், மருத்துவமனை, தோட்டங்கள், நிலங்கள் என எல்லாவற்றையும் குறித்துள்ளனர்.

தொடர்ந்து, 1755ம் வருடம் மெட்ராஸின் எல்லைகளையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடிவத்தையும் கொண்டு எஃப்.எல்.கான்ராடி என்பவர் ஒரு வரைபடம் தயாரித்தார். இவையெல்லாம் கோட்டையையும், கோட்டையைச் சுற்றியிருந்த பகுதிகளையும் மட்டுேம குறித்தன. தெற்கேயோ, மேற்கேயோ, வடக்கேயோ உள்ள இடங்களை வரையவில்லை. அதாவது, சிந்தாதரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்டவை இதனுள் அடங்கவில்லை.

ஹைதர் அலி, திப்புசுல்தான் உடனான போர்களுக்குப் பிறகே நிலங்களை அளவிட ஆங்கிலேயர்கள் நினைத்தனர். காரணம், நிலங்களுக்கான வரி வசூல் செய்வதற்காக! மட்டுமல்லாமல் இந்திய வரைபடத்தையும் வரைய முயற்சித்தனர். இந்நிலையில்தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் கேப்டனாக ஜேம்ஸ் ரென்னல் 1763ம் வருடம் இந்தியா வந்தார். அன்றிலிருந்து 1782 வரை இந்திய நிலஅளவை செய்தார். குறிப்பாக, வங்காளம் மற்றும் பீகாரின் அளவைகளை முடித்தார்.

இதன்பிறகு, மைக்கேல் டோப்பிங் என்பவர் 1785ம் வருடம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கடற்கரையோர சர்வேயராக வந்தார். இவராலேயே, அரசு நிலஅளவைப் பள்ளி தொடங்கப்பட்டது. அதுவே, பின்னாளில் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியாகப் பரிணமித்தது. இவர் கோதாவரி மற்றும் பெஜவாடா பகுதிகளின் நிலஅளவைப் பணிகளைச் செய்தார்.

பிறகு, வானியல் ஆய்வுக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே காலின் மெக்கன்சி தக்காண நிலஅளவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். இவரே, 1818ம் வருடம் இந்தியாவின் முதல் தலைமை நில அளவையாளராக நியமிக்கப்பட்டார். 1800ல் மெட்ராஸ் கவர்னரான லார்டு வில்லியம் பென்டிங்க்கும், கமாண்ட்ர் இன் சீஃப்பான மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்டும் மெட்ராஸின் அளவை என்பது அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என நினைத்தனர்.

இப்படியாக, 1802ம் வருடம் ஏப்ரல் பத்தாம் தேதி வில்லியம் லாம்ப்டன் என்பவர் திரிகோணவியல் அளவை (Great Trigonometrical Survey) முறையைக் கொண்டு நில அளவையை மேற்கொண்டார். இந்தப் பணி செயின்ட் தாமஸ் மவுன்ட்டிலிருந்து தொடங்கப்பட்டது. அச்சரேகை, தீர்க்கரேகைகளைக் கொண்டு இந்த அளவைகள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலமே இந்தியாவின் முழு கிராஃப்பும் துல்லியமாக கணக்கிடப்பட்டது. இவை இன்றும் செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் உள்ளது.
‘‘முதல் முக்கோணத்திற்கு அடிப்படையாக இந்த இடத்தைத்தான் லாம்ப்டன் ஒரு அடிக்கோட்டின் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொண்டார். அக்கோடு, இந்திய தீபகற்பத்தின் மையத்தில் செல்லும் 78 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கு செங்குத்தாக அமைந்திருந்தது. இதற்கான பெஞ்ச்மார்க் இன்னும் நீதிமன்ற வளாகத்திலுள்ள மதராசபட்டினத்துப் பழைய கலங்கரை விளக்கத்தின் கீழ் உள்ளது.

அன்று அவர் எடுத்த முடிவுதான் இன்றும் இந்தியப் புள்ளியியல் வல்லுநர்களுக்கு ஆதாரமாக உள்ளது...’’ என ‘மதராசபட்டினம்’ நூலில் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் நரசய்யா.ஆக, இந்திய வரைபடத்திற்கான ஆதாரப் புள்ளியாக மெட்ராஸ் விளங்கி இருக்கிறது. இதற்கிடையே 1816ம் வருடம் வில்லியம் ஃபேடன் என்பவர் மெட்ராஸின் சுற்றுப்புறங்கள் அடங்கிய வரைபடத்தை லண்டனில் வெளியிட்டார்.

வில்லியம் லாம்ப்டனுக்கு உதவியாக ஜார்ஜ் எவரெஸ்ட் இருந்தார். 1823ம் வருடம் லாம்ப்டன் இறந்துவிட உதவியாளர் எவரெஸ்ட் வடக்கு நோக்கி மேலும் அளவீட்டைத் தொடர்ந்தார். இவர் இமயமலையின் ‘சிகரம் பி’ வரை மட்டுமே கண்டறிந்தார்.இவர் ஓய்வுபெற்று இங்கிலாந்து திரும்ப ஆண்ட்ரூ ஸ்காட் வாக் என்பவர் அவரிடத்திற்கு வந்தார். இவர், சிகரம் எண் 15தான் உலகில் மிக உயரமானது எனக் கண்டறிந்தார். மட்டுமல்லாமல், சிகரத்தைக் கண்டறியக் காரணமான எவரெஸ்ட்டின் பெயரையே அதற்கு சூட்டினார். அதுவே, எவரெஸ்ட் சிகரம்.

தவிர, லாம்ப்டனுக்கும், எவரெஸ்ட்டுக்கும் கருவிகளை டிசைன் செய்து தயாரித்துக் கொடுத்தவர் ஆற்காட்டைச் சேர்ந்த சையத் ஹுசைன் மோக்சின் என்பவர். அவர்களுக்கு உதவியாகப் பணிபுரிந்த அந்த மனிதரைப் பற்றிய குறிப்புகள் அவ்வளவாக இல்லை.தொடர்ந்து 1843ம் வருடம் செயின்ட் தாமஸ் மவுன்ட்டின் வரைபடமும் வரையப்பட்டது. பிறகு, நீர்நிலைகளின் வரைபடமும், ரயில்பாதைகளின் வரைபடமும் வரையப்பட்டு வெளிவந்தன. 1908, 1911, 1914, 1921 என அடுத்தடுத்த வரைபடங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இந்நிலையில் மெட்ராஸின் அமைவிடமும் துல்லியமாக அளவிடப்படுகிறது. நகரின் கிழக்கு மேற்கான மொத்த அகலம் மூன்றரை மைல்களே. ஆனால், 1939 வரை மெட்ராஸின் வரைபடம் மாம்பலம் மற்றும் தண்டையார்பேட்டை வரை மட்டுமே நீண்டிருந்தன. அதன்பிறகே, கார்ட்டோகிராபி எனப்படும் வரைபடக்கலையின் வளர்ச்சி அதிகரித்தது.

‘‘மெட்ராஸ் கார்ட்டோகிராபி பற்றி பலருக்குத் தெரியாது. மெட்ராஸ் ஆய்வாளர் மறைந்த எஸ்.முத்தையா கூட வரைபடங்கள் தயாரிக்கும் டிடிகே நிறுவனத்தில் வரைபடக் கலைஞராக பணியாற்றியவர்தான்.  இங்கிருந்துதான் இந்தியாவின் முழு நிலஅளவையும் தொடங்கப்பட்டது. நிலவரி வசூலுக்காக ஆரம்பமான பணிதான் என்றாலும் அதுவே துல்லியமான வரைபடத்தை நமக்கு உருவாக்கித் தந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு மாவட்டங்கள் வரைபடங்களாகின. தொடர்ந்து செயற்கைக்கோள்களின் உதவியுடன் மேலும் வரைபடங்களின் தன்மை துல்லியமாகின. இப்போது ட்ரோன் எல்லாம் கொண்டு அக்குவேறு ஆணிவேறாக வீடுகள், தெருக்கள் என எல்லாமும் கணினியில் வரைபடங்களாகிவிட்டன.

மெட்ராஸில் ஒரு முகவரியைக் கண்டறிய கூகுளில் தட்டினாலே போதும், மிகச்சரியான வரைபடத்துடன் ஏரியாவைக் காண்பிக்கிறது. அந்தளவுக்குகார்ட்டோகிராஃபி துறை வளர்ந்திருக்கிறது...’’ என்கிறார் சென்னை வரலாற்று ஆர்வலரும், பொறியாளருமான மீனாட்சி சுந்தரம் பெருமிதமாக!