டான்ஸ் ஃப்ளோரில் ஆல் பர்பஸ் அங்கிள்ஸ் !



சென்னை Pubs -3

உங்களுக்கு வந்த பியரை சிப்பிக்கொண்டே நோட்டம் விட்டால்... இப்போது சில ஜோடிகள் உள்ளே வருவார்கள். அவர்களில் சிலர் புருஷன் - பொண்டாட்டி. பொண்டாட்டி ‘பப் பாக்கணும்’ என்று நச்சரித்ததால் வந்தவர்கள் அவர்கள். அந்தக் கணவன் - மனைவியை மலர்வளையம் வைத்து அழைத்துச் செல்வதைப் போல ஜாக்கிரதையாக அழைத்துச் செல்வதை வைத்து இவர்களை இனம் கண்டு கொள்ளலாம்!

மணி பத்தரையை தாண்டும்போது பப் கொஞ்சமாக களை கட்டும். நீங்கள் இன்னொரு பிண்ட் சொல்லிக் கொள்ளுங்கள்.  களை கட்ட இரண்டு காரணங்கள். சில பெண்கள் குழுவாக பப்புக்குள் நுழைவது ஒரு காரணம் என்றால், பப்பில் எல்லோருக்கும் போதை ஏறி இருப்பது அடுத்த காரணம்!இந்த நிலையில் டீஜே இசையின் ஒலியைக் கூட்டுவார். சேர் டேபிள் கொஞ்சம் கொஞ்சமாக காலி ஆக ஆரம்பிக்கும்.

முதலில் எழுந்து நின்று தங்கள் இருக்கையின் அருகிலேயே லேசாக ஆடி வார்ம் அப் செய்து கொள்வார்கள். பொதுவில் டான்ஸ் ஃப்ளோருக்கு சென்று முதல் ஆளாக ஆடக் கூச்சம். இந்த ஸ்டார்ட்டிங்  டிரபுளை உடைக்கவென்றே எப்போதும் ஒரு தடிமாட்டு கோஷ்டி வந்து சேரும்! நிறை போதையில் இந்தக் குழு தாங்கள் ஆண்கள் என்றும் பாராமல் தொப்புள் தெரிய ஆட ஆரம்பிக்கும்! இவர்களை பௌன்ஸர்களால் விரட்ட முடியாது. இவர்கள் அக்கவுண்ட் வைத்துக் குடிக்கும் ரெகுலர் கஸ்டமர்கள்!

இவர்கள் ஆட்டத்தை ஆரம்பித்த பின்பு ஒவ்வொரு ஜோடியாக வந்து நடனத்தை முயன்று பார்க்கும். லேசாக கூட்டம் சேரும். டான்ஸ் ஃப்ளோரில் பெண்கள் குழு வந்து ஆட ஆரம்பித்ததும்தான் கச்சேரி களை கட்டும். அங்கிள்ஸ், தாத்தா என வாலிப வயோதிக அன்பர்கள் படையெடுத்து டான்ஸ் ஃப்ளோருக்கு வருவார்கள்.இப்போது அனைவருக்கும் வெட்கம் நீங்கி தத்தக்கா பித்தக்கா என ஆட ஆரம்பித்திருப்பார்கள். டேபிள் சேர்களில் கூட்டம் இருக்காது. சேர் டேபிளை ஓரமாக ஒதுக்கிப் போட்டிருப்பார்கள்.

இப்போது மது வேண்டுமென்றால் பார் கவுண்டரில் சென்று வாங்கிக்கொள்ள வேண்டும்.சென்னை பப்களில் இசையை ராக், ஜாஸ் என்றெல்லாம் ஒலிக்க விடுவதில்லை. ஒரு தீமும் கிடையாது. கமர்ஷியலாக புகழ்பெற்ற ஓர் ஆங்கிலப்பாட்டு ஓடும். அடுத்து, பாலிவுட் ஹிட் ஒன்றைப் போடுவார்கள். கூட்டம் எல்லாவற்றுக்கும் நான்கைந்து ஸ்டெப்ஸை திருப்பித் திருப்பி போடும். திடீரென்று ‘நாக்க முக்க நாக்க முக்க...’ என்று ஸ்பீக்கர் அலறும். கூட்டமும் குத்தாட்டம் போடும்.

வெளிநாட்டு பப்களைக் கூட விட்டுவிடலாம். இங்கே பெங்களூரிலேயே ராக், மெட்டல் என ரசனையாக பாடல்கள் போடும் பப்கள் உண்டு. இந்தப் பாடல்களில் பெரிய அர்த்தம் இல்லையெனினும், ஒரு கான்செப்ட்டும், ஒரு ஃபீலிங்கும், ஓரளவு அர்த்தமும் இருக்கும்.
சுதந்திரம், விதிமீறல், பிரேக் அப், பிரிவுத் துயரம், அரசை எதிர்த்தல் என ஏதாவது ஒன்று இருக்கும்.

கூட்டம் அந்த வரிகளை உச்சரித்தவாறே அதே ஃபீலிங்குக்கு போய் ஆடிக்கொண்டு இருக்கும். இங்கே சென்னை பப்களில் குடித்துவிட்டு அர்த்தம் தெரியாத வரிகளுக்கு தையா தக்கா என குதிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? இதற்கும் 9ம் நம்பர் சாராயக்கடையில் பட்டைச் சாராயம் அடித்துவிட்டு, ‘சிங்காரி சரக்கு நம்ம சரக்கு...’ என லுங்கியை ஏற்றிக் கட்டிக்கொண்டு ஆடுபவருக்கும் என்ன வித்தியாசம்? ஆனால், சென்னை பப் ஆட்கள் அவரை ‘இன்டீஸண்ட் ஃபெல்லோ’ என்பார்கள்.

மணி பன்னிரண்டைக் கடக்கையில் இசையின் சத்தம் உச்சத்துக்கு போகும். உங்களை அறியாமல் நீங்கள் நான்கு பியரை முடித்திருப்பீர்கள். இதற்குப் பிறகு போதை ஏறி எல்லோரும் கனவான்கள்(!) ஆகி விட்டதால் யாரிடமும் புதிதாகப் பேச தைரியம் வந்து விடும். என்ன... ஆள்தான் இருக்காது!ஒன்று, பெண்கள் குழுவாக இருப்பார்கள். இல்லையென்றால் தங்கள் ஜோடியுடன் வந்திருப்பார்கள். பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்த கேங் இருக்கும். தனியாக சென்னை பப்புக்கு வரும் பெண்ணைக் காண்பது அரிது.

இருந்தாலும் ஜோடியுடன் வந்தாலோ, குழுவாக வந்தாலோ அதெல்லாம் கவனிக்காமல் பக்கத்தில் ஆடும் பெண்ணிடம் நூல் விட ஆரம்பிப்பார்கள்! அவளும் ஏதோ பதில் சொல்லிக்கொண்டு இருப்பாள். அவள் எதிரில் போய் ஆடி மயக்கி விடலாம் என பிரபுதேவா ஸ்டெப் எல்லாம் போடுவார்கள்.
கொஞ்சம் தைரியம் பெற்று அவள் கையைப் பிடிக்கப் போகும் போது சிறுநீர் கழிக்கவோ வாந்தி எடுக்கவோ போயிருந்த அவள் பாய் ஃபிரண்ட் வந்து விடுவான்!

உடனே விலகினால் அசிங்கம் என்று அவனை ஏற்றி விட்டு இரண்டு ஸ்டெப்ஸ் அவனுடன் ஆடி விட்டு டாய்லெட்டுக்கு ஓடுவார்கள். அடக்கிக்கொண்டு ஒரு மணி நேரம் ஆடி ஒரு பெண்ணுக்கு போட்ட ஸ்கெட்ச் பணால் ஆனதைத் தாங்க முடியாமல் பார் கவுண்டருக்குப் போய் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள்!

இதில் கவுரவமான ரோஷமுள்ள இளைஞர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் எந்தப் பெண்ணையும் தனிப்பட்ட முறையில் சென்று கவர மாட்டார்கள். டான்ஸ் ஃப்ளோர் நடுவே சென்று வெறித்தனமாக ஆடுவார்கள். உலகமே தன்னை கவனிக்கிறது என்பது போன்ற நினைப்புடன் சாமி வந்தது போல ஆடுவார்கள். தன் ஆட்டத்தைப் பார்த்து அசந்து போய் ஓர் தேவதை வந்து அணைத்துக்கொண்டு அறைக்கு கூட்டிச்செல்வாள் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை!

ஏசியிலும் வேர்த்து ஊற்றும். இவர்களை வெறுப்பேற்ற டீஜே மெலடி பாட்டு போட்டாலும், வயலின் மியூசிக் போட்டாலும் அதே வெறித்தனத்துடன் ஆடுவார்கள். தொண்டை தண்ணி வற்றி கூட்டத்தை வெறுமையாக நிமிர்ந்து பார்ப்பார்கள். நடை தளர்ந்து டாய்லெட்டுக்கு செல்வார்கள்!

நடனம் இப்போது உச்சத்துக்கு சென்றுகொண்டிருந்தாலும் டாய்லெட்டை ஒரு பார்வை பார்த்து விடலாம். அடுத்து போதை உச்சத்துக்கு போனதால் நடக்கும் அப்யூஸ்களையும் தறிகெட்டுத் திரிவதையும் கவனிக்கலாம்!

(ரவுண்ட் அப் தொடரும்)  

அராத்து