ரோஜா முத்தையா நூலகம் மூடப்படுகிறதா?



சென்னையின் முக்கிய அடையாளம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். எங்கேயும் கிடைக்காத அரிய ஆவணங்களையும், நூல்களையும் தன்னகத்தே கொண்ட அற்புத உலகம் இது. தரமணியில் வீற்றிருந்தாலும் தரணிக்கே சவால் விடுகின்றன இதன் சேகரிப்புகள். நான்கு லட்சம் புத்தகங்கள், ஆடியோ, வீடியோ ஆவணங்களுடன் வெள்ளி விழா காண காத்திருக்கும் வேளையில் நூலகத்தைப் பராமரிக்கத் தேவையான நிதியில்லை என்ற செய்தி வெளியாகி பலரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து நூலகத்தின் இயக்குனரும், அறங்காவலர்களில் ஒருவருமான சுந்தரிடம் பேசினோம்.

‘‘காரைக்குடி நகரத்தார், உலகம் முழுவதும் பணச் செல்வத்தை நாடிச் சென்றபோது அதே காரைக்குடி கோட்டையூரில் வசதியில்லாத நகரத்தவரான முத்தையா தமிழின் அறிவுச் செல்வமான புத்தக சேகரிப்பை நாடிச் சென்றார். அந்த சேகரிப்பை அங்கேயே இலவச நூலகமாக அமைத்து, படிக்க வருபவர்களுக்கு உணவும் கொடுத்து உபசரித்தார்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அவரின் நூலகத்தில் இருந்தன. நூல்கள், துண்டறிக்கைகள், இதழ்கள், பாட்டுப்புத்தகங்கள் இதில் அடங்கும். இத்தோடு, தபால் தலைகள், பொம்மைகள், பழம்பொருட்கள் என பலவற்றையும் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

1992ல் அவர் இறந்தவிட்டார். நூலகத்தை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் குடும்பத்தினர் விளம்பரம் ஒன்றைக் கொடுத்தனர்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த ஆய்வாளர் சி.என்.லக்ஷ்மி அவர்கள் சிகாகோ பல்கலைக்கழகத்துக்குத் தகவலைத் தெரிவித்தார். அப்போது அங்கே ஏ.கே.இராமானுஜம் போன்றோர் பேராசிரியர்களாக இருந்தனர்.

 முத்தையா உருவாக்கிய நூலகத்தின் பெருமதிப்பை அறிந்தவர்கள் அவர்கள். நூலகத்தை வாங்க இராமானுஜம், நூலகர் ஜேம்ஸ் நைய் உள்ளிட்ட சிலர் நிதி சேகரித்தனர். ஆனால், நூலகத்தை எங்கே நடத்துவது என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்தது. தமிழ்நாட்டில் நடந்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று ஒருமனதாக முடிவெடுத்தனர். இங்குள்ள ‘மொழி அறக்கட்டளை’ எனும் அமைப்பு மூலமாக ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு 1994ல் சென்னைக்கு அந்த நூலகத்தைக் கொண்டுவந்தார்கள்.

2004 வரை அந்த அறக்கட்டளையின் பெயரில் இயங்கிய நூலகம் பிறகு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளைக்கு மாறியது.
ஆரம்பத்தில் முத்தையா கொடுத்த ஒரு லட்சம் புத்தகங்களுடன் இயங்கினாலும் சில வருடஙகளிலேயே இந்த அறக்கட்டளையின் மூலமாக 3 லட்சம் புத்தகங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆவணங்களுடன் நூலகம் விரிவடைந்தது...’’ என மாபெரும் சாம்ராஜ்யத்தின் வரலாறை சில வரிகளில் சொன்ன சுந்தர் சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

‘‘1980 வரை முத்தையா மிகத் தீவிரமான சேகரிப்பில் இருந்தார். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி அவரை மேலும் தீவிரமாக்கியது. எண்பதுகளில் நவீன காலம் ஆரம்பித்தது. இந்த நேரத்தில் புத்தகங்களின் அடக்கமும் மாறியிருந்தது. இருந்தாலும் 1950க்கு முன் வந்த தமிழ்ப் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் 1950க்கு முன் வந்த செம்மொழி இலக்கியங்களை அவர் மிக முனைப்புடன் சேகரித்தார். அத்துடன் நாட்டுப்புறக்கலை, நாடகப் பிரதிகள், பக்தி இலக்கியம், துண்டறிக்கைகள், சினிமா பாட்டுப் புத்தகங்கள், வெகுஜன இதழ்கள் என அவரது சேமிப்பில் இருந்தன’’ எனச் சொல்லும் அவர் இதன் இன்றைய தேவைகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.

1931ல்தான் தமிழில் பேசும் படம் வந்தது. அந்த ஆரம்ப கால பேசும்படங்களின் காப்பி நம்மிடம் இல்லை. இதனால்தான் தமிழ் சினிமாவின் வரலாற்றை நம்மால் துல்லியமாகச் சொல்ல முடிவதில்லை. ஆனால், முத்தையாவின் பாட்டுப்புத்தகங்களை வைத்து ஆரம்ப கால தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதலாம். மட்டுமல்ல, உள்ளுர், உலக சினிமா சார்ந்த பல இதழ்களும் அவரின் சேகரிப்பில் இருந்தன.உதாரணம், ‘சினிமா உலகம்’ எனும் வாரப்பத்திரிகை சேமிப்பு.

சுதந்திரப் போர் கால கட்டம், திராவிட இயக்க கால கட்டம், நீதிக்கட்சி வரலாறு, நாடக வரலாறு, பாமரர்களுக்காக பாடப்பட்ட குஜிலி இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தின் சில பகுதிகளையும் அவர் சேகரித்து வைத்திருந்தார். தமிழகத்தின், சென்னையின் வரலாறுகளை மறுபடியும் எழுதவும், தவறாக எழுதப்பட்டவற்றை திருத்தி எழுதவும் இது மாதிரியான மூல ஆதாரங்கள் முக்கியம்.

உதாரணமாக, குஜிலி பாடல்களில்தான் ‘முதல் இரயில்’, ‘எம்டன் குண்டு’ போன்ற செய்திகள் உள்ளன. தமிழனின் முதல் நாத்திக இதழான ‘தத்துவவிவேசினி’ கூட முத்தையாவின் சேகரிப்பில்தான் இருந்தது...’’ என்றவர் நூலகத்தின் வளர்ச்சியைப் பற்றியும் பேசினார்.
‘‘ஆரம்பத்தில் ஏ.கே இராமானுஜம், மில்டன் சிங்கர், தமிழ் அறிஞர் மு.அருணாச்சலம், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்ற அறிஞர்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை வாங்கினோம்.

இதில் மிக சுவாரஸ்யமான நூல்கள் எல்லாம் கிடைத்தன. உதாரணமாக, திருக்குறளானது சுவடியிலிருந்து நூலாக முதன்முதலில் 1812ல்தான் அச்சடிக்கப்பட்டது. இந்த நூல் மு.அருணாச்சலம் சேகரிப்பிலிருந்து எங்களுக்குக் கிடைத்தது.

இதை எல்லா தமிழர்களும் படிக்க வேண்டும் என ரோஜா நூல் நிலையம் அதை நூலாகக் கொண்டுவந்தது. இந்த திருக்குறளில் எழுத்துகளுக்குப் புள்ளிகள் இருக்காது. தமிழர்கள் அந்த மூலப் புத்தகத்தின் வரலாறு தெரிந்துகொள்வதற்காக அப்படியே புள்ளியில்லாமல் அச்சிட்டோம்.
இதேபோல் கணித மேதை இராமானுஜத்தின் கணித நோட்டுகளையும் தொழில்நுட்பரீதியாக புதுப்பித்து டாட்டா நிறுவனத்துக்கு செய்து கொடுத்தோம் இது தவிர சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மூலமும் பல ஆய்வுகள் செய்யப்படுகிறது.

நூலகத்தின் சார்பாக ஒரு காலாண்டு இதழையும் நடத்தினோம்...’’ என்கிற சுந்தர் நூலகத்தின் இப்போதைய நிலையை விவரித்தார். ‘‘ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதன் தாளைப் பொறுத்தளவில் கால எல்லை உண்டு. சில புத்தகம் சீக்கிரம் அழிந்துவிடும், சில புத்தகம் கொஞ்ச நாள் தாக்குப்
பிடிக்கும். ஆனாலும் அழியக்கூடிய நிலையில் இருக்கும் தாள்களையும் அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு காப்பாற்றி வருகிறது நூலகம்.

இதற்கான லேப் வசதிகளும் தொழில்நுட்பமும் எங்களிடம் உண்டு. இதைப் பராமரிக்க பணம் தேவைப்படுகிறது. அதேபோல ஆரம்பத்தில் நூல்களைக் காப்பதற்காக மைக்ரோ ஃபிலிம் டெக்னாலஜி என்னும் நுண்படச் சுருள் முறையைப் பயன்படுத்தி வந்தோம். இப்போது டிஜிட்டல் ஸ்கேன் வசதியிருக்கிறது. இதற்கும் பணம் தேவை.

ஆரம்பத்தில் சில புரவலர்கள், நிறுவனங்கள், தனி நபரிடம் பண உதவி கேட்டு அந்த வேலைகளை முடிப்போம். ஆனால், எவ்வளவு நாட்களுக்குத்தான் பிறர் கையை எதிர்பார்ப்பது? இந்த ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை வேறு எங்கேயும் காண முடியாது. ஆனால், அதைக் காப்பாற்ற உதவிகள் வேண்டுமே. அப்போதுதான் இதன் பயன்கள் முழுமையாக மக்கள் மத்தியில் போய்ச் சேரும். அப்படிச் சேர்ந்தால்தான் நூலகத்துக்கு முழு நிறைவு கிடைக்கும். அதற்கு பல்வேறு வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது.

புத்தகங்களைப் பட்டியலிடும் முறை, பாதுகாக்கும் முறை, டிஜிட்டலாக்கும் வேலை அதில் முக்கியமானது. தவிர, நூலக வளாகத்தில் பல ஆண்டுகளாக புத்தக விமர்சனம், ஆய்வுக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடக்கின்றன. இதைத் தொடரவும் பணம் தேவை.

அரசும், நிறுவனங்களும், ஆர்வலர்களும், பொதுமக்களும் கரம் கொண்டு தூக்கினால் மட்டுமே இதுபோன்ற நூல் நிலையங்கள் சிறப்புடன் இயங்கும்.
உண்மையில் இந்த நூலகத்தைக் காப்பதற்கான செலவு மிகக் குறைவு. ஆனால், அந்தச் சிறிய உதவியைக்கூட அரசும், ஆர்வலர்களும், வாசகர்களும் செய்யாத போது இந்தப் புத்தகங்களை எப்படி பாதுகாப்பது..? மொத்தமாக தமிழில் அச்சு கண்ட புத்தகங்கள் 5 லட்சம்தான் இருக்கும். இதைக்கூட பாதுகாக்க தமிழர்களால் முடியாதா என்ற கேள்விகள்தான் எங்களைப் போன்ற நூல்நிலையங்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது...’’ என்று வேதனைப்படுகிறார் சுந்தர்.              

டி.ரஞ்சித்

ஆ.வின்சென்ட் பால்