தெருவுக்கு வந்தார் சந்திரபாபு!



போஸ்ட் மார்ட்டம்-2

‘‘என்ன சொல்றீங்க சுப்பையா..?’’ அதிர்ந்து போனார் சந்திரபாபு. ‘‘நாம தயாரிக்கப் போற ‘மாடி வீட்டு ஏழை’ பட பூஜைக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. அதுக்குள்ள மிஸ்டர் ராமச்சந்திரனுக்கு அட்வான்ஸ் தரணும். இந்த நேரத்துல இப்படிச் சொல்றீங்களே...’’
‘‘பதறாதீங்க பாபு. பூஜை அப்ப எல்லா ஏரியாவும் வித்துடும். நம்ம கைலயும் பணம் வந்து சேர்ந்துடும்...’’

‘‘இதுக்கு முதல்ல பூஜை நடத்தணுமே...’’ முணுமுணுத்தாரே தவிர வேறெதுவும் சந்திரபாபு சொல்லவில்லை. ஏனெனில் சுப்பையாவின் நிலை அவருக்கு புரிந்திருந்தது. எம்ஜிஆர் படத்தை தயாரிக்கிறோம்... இனி நாமும் முன்னணி தயாரிப்பாளர்தான் என்ற பரவசத்தில் ஒரு காரியத்தை செய்துவிட்டார்.

வேறொன்றுமில்லை. ஒரே நேரத்தில் ஏழு படங்களை தயாரிக்கப் போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவிட்டார்.

 தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் செலவழித்து அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளில் இறங்கிவிட்டார். அதனால் காலணா கூட சுப்பையாவின் பாக்கெட்டில் இல்லை.யோசனையுடன் வி.கோவிந்தராஜை பார்த்தார். உதட்டை பிதுக்கியபடி வி.ஜி., தலைகுனிந்தார்.முன்வைத்த காலை பின் வைக்க முடியாது.

பெருமூச்சுடன் சாவித்திரியைத் தேடி சந்திரபாபு சென்றார். ‘‘அவசரமாக ரூ.25 ஆயிரம் வேணும். சும்மா கொடுக்க ேவண்டாம். அடமானமா இதை வைச்சுக்க...’’ என்றபடி பத்திரத்தை நீட்டினார்.பத்திரம்தான். சென்னை அடையாறு பகுதியிலுள்ள கிரீன்வேஸ் சாலையில் இருந்த கேசவபெருமாள்புரத்தில், 20 கிரவுண்ட பரப்பளவு கொண்ட இடத்தை - அதாவது 48 ஆயிரம் சதுர அடி - சந்திரபாபு வாங்கியிருந்தார். அந்த இடத்தில்தான் தனது கனவு வீட்டையும் கட்டி வந்தார்.

இன்னும் முழுமை பெறாத அந்த பங்களாவின் - இடத்தின் - பத்திரத்தைத்தான் சாவித்திரியிடம் நீட்டினார்.  ‘‘என்ன பாபு இது... பணம்தானே வேணும்? நான் தரேன். பத்திரமெல்லாம் வேண்டாம்...’’நெகிழ்ந்துபோனவர், சாவித்திரி கொடுத்த பணத்துடன் நேராக எம்ஜிஆரைப் பார்க்கச் சென்றார். அட்வான்ஸைக் கொடுத்தார்.

‘‘பாபு சார்... படத்தை அருமையா கொண்டு வரலாம்...’’ தட்டிக் கொடுத்து எம்ஜிஆர் அனுப்பி வைத்தார்.தெம்புடன் அடுத்து சந்திரபாபு சென்ற இடம் பரணி ஸ்டூடியோதான். ‘‘அண்ணே... விஷயத்தை கேள்விப்பட்டிருப்பீங்க. ராமச்சந்திரனை வைத்து படம் இயக்கறேன்.

பூஜையை உங்க ஸ்டூடியோவில் நடத்திக்கலாமா?’’பதறிவிட்டார் ஏ.எல்.சீனிவாசன், ‘‘இதென்ன கேள்வி. டைரக்டராகவும் நீ ஜெயிக்கணும். அதுதான் என் ஆசை. இது உன் ஸ்டூடியோ. தாராளமாக இங்கேயே படப்பிடிப்பு நடத்திக்க...’’

கசிந்த மனதை சமன்படுத்தியபடி தன் நிலையை எடுத்துச் சொன்னார். ‘‘இப்ப கைல பணம் இல்லைண்ணே...’’‘‘நான் கேட்டேனா? போய் வேலையைப் பாரு...’’ சொன்னதுடன் நிறுத்தாமல் தனது செலவில் குடிசை செட்டையும் ஏ.எல்.எஸ். போட்டுக் கொடுத்தார்.

அந்த செட்டில்தான் பூஜை. அங்குதான் அன்றும் அதற்கு மறுநாளும் படப்பிடிப்பு.தகவல் சொன்னார்கள். குறித்த நேரத்தில் வருவதாக எம்ஜிஆர் வாக்கு கொடுத்தார்.ஆனால், வருவாரா என்ற கேள்வி பூஜை அன்று எழுந்தது. ஹீரோவைத் தவிர சகலரும் வந்துவிட்டார்கள். ேமக்கப் போட்டுக் கொண்டு சக  நடிகர்கள் காத்திருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.ஒரு வழியாக 11 மணிக்கு எம்ஜிஆர் வந்து சேர்ந்தார்.

‘‘வேற பட பூஜைக்கு போக வேண்டியதாகிடுச்சு...’’ தாமதத்துக்கான காரணம் சொன்னார்.‘‘நோ ப்ராப்ளம்...’’ தோளைக் குலுக்கினார் சந்திரபாபு சந்தோஷமாக பூஜை நடந்தது. படப்பிடிப்பு தொடங்கியது. முதல் ஷாட்டை சந்திரபாபு இயக்கினார். ஆனால், அந்தக் காட்சியை முழுமையாக எடுக்க முடியவில்லை. காரணம், எம்ஜிஆருக் கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு.சுப்பையாவும், வி.ஜி.யும் செய்வதறியாமல் விழித்தார்கள். ஏ.எல்.எஸ்ஸுக்கு திணறியது.

படப்பிடிப்பே நின்றுவிடுமோ என்ற அச்சம் எல்லோரது மனதிலும் எழுந்தது. நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை. முரண்பட்ட இயக்குநர் சந்திரபாபுவும் ஹீரோ எம்ஜிஆரும் சகஜமானார்கள். ‘அப்பாடா...’ என அனைவரும் ரிலாக்ஸ் ஆனார்கள். வெற்றிகரமாக முதல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டது.

‘‘நாளை மதியம் கொஞ்சம் வேலை இருக்கு. பகல் ஒரு மணி வரை ஷூட்டிங் வைச்சுக்க...’’ புன்னகையுடன் எம்ஜிஆர் சொன்னார்.ஹீரோ சொன்னபிறகு மறுக்கவா முடியும்? சந்திரபாபு சம்மதித்தார். மறுநாள் காலை சரியாக ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு. மதியம் ஒரு மணிக்கு பேக்கப்.

‘‘அடுத்த கால்ஷீட்..?’’ எம்ஜிஆர். புறப்படும்போது சந்திரபாபு இழுத்தார்.‘‘சொல்றேன் பாபு சார்...’’ உதட்டோரம் சிரித்தபடி எம்ஜிஆர் விடை பெற்றார். சரி... ஹீரோ கால்ஷீட் கொடுப்பதற்குள் மற்ற நடிகர்களை வைத்து எடுக்கலாமே...‘‘நல்ல யோசனைதான் பாபு. ஆனா, பணம்...’’ சுப்பையாவும் வி.கோவிந்தராஜும் இழுத்தார்கள்.

‘‘ரைட். நான் பாத்துக்கறேன். ப்ராஜெக்ட் டேக் ஆஃப் ஆகிடுச்சு. பிரேக் விடக் கூடாது...’’ உறுதியுடன் சொன்ன சந்திரபாபு, நேராக பைனான்சியரிடம் போய் பாதி கட்டிய நிலையில் இருந்த தன் வீட்டை நான்கு வட்டிக்கு அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆரூர்தாஸை தன் அலுவலகத்தில் தங்கவைத்து முழு வசனத்தையும் எழுதி வாங்கினார். தயாரான முழு ஸ்கிரிப்ட்டையும் பைண்டிங் செய்தார். பார்த்துப் பார்த்து படித்துப் படித்துப் படித்து பரவசப்பட்டார். கூடவே எம்ஜிஆர் இல்லாத காட்சிகளையும் மடமடவென்று எடுத்தார்.

இனி ஹீரோ வந்தால்தான் படப்பிடிப்ைபத் தொடர முடியும் என்ற கட்டம் வந்ததும் எம்ஜிஆருக்காகக் காத்திருந்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சந்தித்து விவரம் சொன்னார்.‘‘சொல்றேன்... சொல்றேன்...’’ என்று சிரித்தபடி எம்ஜிஆர் நழுவினாரே தவிர தேதி கொடுக்கவேயில்லை.

நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகின.அதற்குள் எம்ஜிஆரும் சாவித்திரியும் நடிக்க ‘பரிசு’ (1963), ‘வேட்டைக்காரன்’ (1964) ஆகிய படங்களும் வெளியாகிவிட்டன.‘மாடி வீட்டு ஏழை’ படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடரவேயில்லை.

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சந்திரபாபு திணறினார். வட்டி குட்டி போட்டது. குட்டிக்கு குட்டி பிறந்தது.பொறுமையை இழந்தவர் வேறொரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்க்கச் சென்றார்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கால்கடுக்க காத்திருந்த பின்னரே தரிசனம் கிடைத்தது ‘‘பாபு சார்... பிரமாதமான கதை அது. நிச்சயம் செய்துடலாம். அண்ணனைப் பார்த்து தேதியை வாங்கிக்குங்க...’’

உடனே நெப்டியூன் ஸ்டூடியோ சென்றார். அதன் பெரும்பான்மையான பங்குகள் அப்போது எம்ஜிஆரிடம் இருந்தன. ஸ்டூடியோவை எம்.ஜி.சக்கரபாணி கவனித்து வந்தார். இந்த இடம்தான் பின்னால் சத்யா ஸ்டூடியோவாக மாறியது. மூச்சு வாங்க வந்து நின்ற சந்திரபாபுவை வரவேற்று இன்முகத்துடன் எம்.ஜி.சக்கரபாணி பேசினார்.இந்த சந்திப்பு பல முறை, பல நாட்கள் நடந்தது. கால்ஷீட் மட்டும் கிடைக்கவில்லை.

அதுவரை கட்டிக்காத்த பொறுமையை இழந்த சந்திரபாபு, ஒருநாள் மாலை சக்கரபாணியை அவரது அறையில் சந்தித்தார்.மூடப்பட்ட அந்த அறைக்குள் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.ஆனால், 45 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது மட்டும் நிச்சயம். அமர்ந்திருந்த நாற்காலியைத் தூக்கி சக்கரபாணியை அடிக்கும் அளவுக்கு சந்திரபாபு சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

நம்பிக்கையுடன் ஆரம்பித்த ‘மாடி வீட்டு ஏழை’ அன்றுடன் நின்றது.சாவித்திரியிடம் வாங்கியது... குடியாத்தத்தைச் சேர்ந்த கீதா பிக்சர்ஸ் என்ற விநியோக நிறுவனத்திடம் வாங்கிய தொகை, அடமானம் வைக்கப்பட்ட பங்களாவுக்கு வட்டி கட்ட முடியாத சூழல்...
வி.கோவிந்தராஜு ஊரைவிட்டே ஓடிவிட்டார். கே.டி.சுப்பையா தம்படி கூட இன்றி அழுதார்.கடைசியில் எல்லா கடனும் சந்திரபாபுவின் தலையில் விழுந்தது.

படுக்கையறை வரை கார் செல்லும் அளவுக்கு பிரமாண்டமாக எந்த பங்களாவைக் கட்டி வந்தாரோ - அந்த வீடு ஏலத்துக்குப் போனது. இதற்கெல்லாம் யார் காரணம்?பதில் சொல்ல மனமின்றி கிரீன்வேஸ் சாலை இன்றும் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதேநேரம், ‘மாடி வீட்டு ஏழை’ படத்தில் முக்கியமான வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி சந்திரபாபுவுக்கு நடந்ததை எல்லாம் கண்கூடாகப் பார்த்த கே.பாலாஜி, பின்னாளில் தயாரிப்பாளரான பிறகு எம்ஜிஆரிடம் கால்ஷீட் கேட்டுச் செல்லவேயில்லை!

கே.என். சிவராமன்