அரசியலுக்கு வருகிறார் சூர்யா!



NGK ரகசியங்களை சொல்கிறார் இயக்குநர் செல்வராகவன்

கோலிவுட்டே அதிரிபுதிரி எதிர்பார்ப்பில் மினுமினுக்கிறது. யெஸ். அசத்தல் காம்போவான செல்வராகவன் - சூர்யாவின் ‘என்ஜிகே.’ (நந்த கோபாலன் குமரன்) ரிலீஸுக்கு ரெடி என்பதால் இந்த சம்மரை ‘சொடக்கு மேல சொடக்கு போட்டு’ கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

அவர்களின் அன்பில் இயக்குநர் செல்வராகவனும் செம ஹேப்பி. அதுசரிதான். ஆனால், செல்வாவை பார்த்துப் பேசி எத்தனை மாதங்களாச்சு? ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றால்... தியானக்கூடம் போல் இருக்கிறது அவரது அறை. ‘‘வணக்கம்... எப்படி இருக்கீங்க?’’ என நம்மை முந்திக்கொண்டு வரவேற்கிறார் ஜொலிக்கும் ஜென் புன்னகையுடன்.

கார்த்தியோடு மறுபடியும் கைகோர்ப்பீங்கனு பார்த்தால்... சூர்யாவோடு வந்து அசத்துறீங்க..?
இது தானாக அமைஞ்ச வாய்ப்பு. கார்த்தி சாரோட சந்தர்ப்பம் அமையும் போது அதையும் பண்ணலாம். ஆனா, சூர்யா சாரோடு ஒர்க் பண்ணணும் என்பது ரொம்ப நாள் ஆசை. அதுக்கான காலம் இந்தப் படத்துலதான் கனிஞ்சது. ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம்தான் ‘என்ஜிகே’. சூர்யா சாருக்கு பொருத்தமான ஸ்கிரிப்ட் அமைஞ்சதும் அவர்கிட்ட சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சிருந்தது. இது ஒரு பொலிட்டிகல் த்ரில்லர்.

என் முந்தைய படங்கள்ல லவ், கேங்ஸ்டர்ஸ்னு கொஞ்சம் பண்ணியாச்சு. இதுவரை பண்ணாத ஜானரை பண்றதுலதான் ஓர் இயக்குநரா திருப்தியா உணர முடியும். இது முழுக்க முழுக்க அரசியல் படம்னு சொல்லிட முடியாது. படிச்சவங்க நிறைய பேர் அரசியலுக்கு வரணும்னு சொல்லியிருக்கேன். என்னோட பார்வை அது. டீசரைப் பார்த்ததும் நிறைய பேர் என்கிட்ட, ‘முழுப்படமும் அரசியல் படமா?’னு ஆச்சரியமா கேட்டாங்க. இதுல பொலிடிக்கலும் இருக்கும். த்ரில்லரும் இருக்கும். என்டர்டெயின்மென்ட்டும் இருக்கும்.

படத்துல சூர்யா சார் தவிர ரகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி, ஜெகபதிபாபு, பொன்வண்ணன், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய்னு பலரோடவும் முதல் தடவையா ஒர்க் பண்ணியிருக்கேன். டெக்னீஷியன்ஸ் டீமும் சரியானதா அமைஞ்சிருக்கு. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அற்புதமான மனிதர். நல்ல தயாரிப்பாளர். எதையுமே டீம் ஆக செய்யணும்னு விரும்புவார். தயாரிப்பாளர் இல்லாமல் படங்கள் பண்ணிட முடியாது. அப்படி ஒருத்தர் கிடைச்சது பலமாகிடுச்சு.

சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். சினிமா மீதான தாகம் இருப்பவர். எங்க ரெண்டு பேருக்குமான அலைவரிசை பொருந்திப் போயிடுச்சு. ஷாட் நல்லா வரணும்னு அவரும் விரும்பி உழைப்பார். மறுபடியும் யுவன் ஷங்கரோடு ஒர்க் பண்ணியிருக்கேன். நண்பர்களுக்கிடையே ஒர்க் பண்ணும்போது படத்துக்கு தோதாக இருக்கும். சூர்யா சாரோட ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு அருமையான இசையை கொடுத்திருக்கார்.

என்ன சொல்றார் சூர்யா?

சூர்யா சார் திறமையான ஆக்டர் மட்டுமில்ல... நல்ல மனிதாபிமானி. தன்னை சுத்தி இருக்கறவங்க அத்தனை பேரையும் ரொம்ப பொறுப்பா கனிவா பாத்துக்குவார். அவரோடு செட்ல இருக்கும்போது அந்த சந்தோஷம் நமக்கும் துளிர்க்கும். அவர் எப்போதுமே டைரக்டரோட ஆர்ட்டிஸ்ட். அதனாலேயே எல்லா இயக்குநர்களுக்கும் அவரோட ஒர்க் பண்ணணும்னு கனவு இருக்கும். எனக்கு அந்த ட்ரீம் இப்ப நனவானதுல சந்தோஷம்.

ஸ்பாட்டுல சின்ன விஷயமோ... பெரிய விஷயமோ எதையும் ‘தி பெஸ்ட்டா’ கொடுக்கணும்னு அவர் உழைப்பார். கூடுதலா ரெண்டு டேக் போகணும்னு கேட்டால் கூட, முகம் சுளிக்காமல் பண்ணுவார். இயக்குநருக்கு திருப்தியா ஆனபிறகுதான், அடுத்த ஷாட் பத்தின சிந்தனை அவருக்கு இருக்கும். அவரோட ஒர்க் பண்ணினது ஹேப்பி மொமன்ட்ஸ்.

திடீர்னு சந்தானத்தோடு ‘மன்னவன் வந்தானடி’னு ஆரம்பிச்சீங்க..?

எனக்கு எப்பவுமே சந்தானத்தை பிடிக்கும். தியேட்டரில் உள்ள அத்தனை பேரையும் தன்னோட கண்ட்ரோல்ல கொண்டு வந்து கலகலக்க வச்சுடுவார். அவரோட டைமிங் காமெடிகள் எல்லாமே ரசிப்பேன். ‘மன்னவன் வந்தானடி’ முழுக்க முழுக்க காமெடி படம் கிடையாது.

அதுல லவ், காமெடி, எமோஷன்னு எல்லாம் கலந்த கலவையா பண்ணியிருக்கோம். சந்தானமும் அருமையா நடிச்சிருக்கார். இதுவரை அறுபது சதவிகித ஷூட் முடிச்சிட்டோம். அந்தப் படத் தாமதத்திற்கு நானோ, சந்தானமோ காரணம் இல்ல. சூழல்கள் அப்படி அமைஞ்சிருக்கு. இனி வரும் காலங்கள்ல மீதி படப்பிடிப்பையும் தொடரும் சூழல்கள் அமையும்னு நம்புறேன்.

பேய்ப் பட டிரெண்ட் டைம்ல ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டீசர் மிரட்டுச்சு... அப்புறம் படம் சைலன்ட்டாவே இருக்கே..?

டிரெண்ட்னு சொல்றதுல எப்பவும் எனக்கு உடன்பாடு இருந்ததில்ல. ஓடினா அது டிரெண்ட். அப்படித்தான் பார்க்கறேன். இதுவரை அந்தப் படம் ரிலீஸ் ஆகாமல் இருக்கறதுக்கு என்ன காரணம்னு எங்களுக்குத் தெரியல. என் ஒர்க் முடிச்சு, சென்ஸார் ஆகி படம் பக்காவா ரெடியாகிடுச்சு. அந்தப் படம் சீக்கிரம் வெளிவரும்னு எல்லார் மாதிரியும் நானும் நம்புறேன்.

உங்க தம்பி தனுஷ்... இயக்குநராகவும் கலக்கறார்...அவரோட வளர்ச்சியை ஒரு அண்ணனா பார்த்து சந்தோஷப்படறேன். அதைத்தாண்டி அவருக்கு நான் எந்த கைடுலைன்ஸும் கொடுத்ததில்ல.

பல வருஷங்களா அவரும் ஃபீல்டுல இருக்கார். படங்கள் பண்ணிட்டிருக்கார். ஸோ, அவருக்கும் நிறைய தெரியும். அவர் இயக்கின ‘பவர் பாண்டி’, ‘விஐபி’ படங்கள் எல்லாம் பார்த்தேன். அதில் டைரக்‌ஷன் நல்லாவே பண்ணியிருக்கார். பண்ணுவார். இன்னும் உயரங்கள் தொடுவார்.

பாடலாசிரியர் செல்வராகவன் எப்படி இருக்கார்?

பாடல்கள் எழுதணும்னு நினைச்சு அவர் எழுதறதில்ல. நிறைய பாடலாசிரியர்களோட ஒர்க் பண்ணணும்னுதான் நினைச்சிருக்கேன். ஆனா, யுவனோ அல்லது வேறு யாரோ, ‘நீங்களே எழுதிடுங்க’னு சொல்லும் போது தவிர்க்க முடியாமல் எழுதிடுவேன்.

சில நேரங்கள்ல நாமே எழுத வேண்டிய சந்தர்ப்பங்களும் வந்திடும். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ல அப்படித்தான் முழுப்பாடல்களையும் எழுதினேன். பாடலாசிரியர் என்பதை விட, இயக்குநரா கத்துக்கத்தான் நிறைய விஷயங்கள் இருக்கறதா நினைக்கறேன். ‘நந்த கோபாலன் குமரன்’ல கூட டீசர்ல வரும் நாலு வரிகள் மட்டும் எழுதினேன்.மனைவி கீதாஞ்சலி இப்ப ரொம்பவும் ஸ்லிம் ஆகியிருக்காங்களே..?

ஆமாங்க. அவங்களை ஸ்லிம் ஆகச் சொல்லி யாரும் கேட்கல. அவங்களாகவே ஆர்வமா ரொம்பவும் கடினமா ஒர்க் அவுட் செஞ்சு உடல் எடையை குறைச்சிருக்காங்க. முழுக்க முழுக்க டயட்ல இருந்தே எடை குறைச்சிருக்காங்க. எனக்கும் சரி, அவங்களுக்கும் சரி, வீட்ல இப்ப எங்க குழந்தைகளோடு நேரம் செலவழிக்கவே பிடிச்சிருக்கு.

இப்ப இண்டஸ்ட்ரி எப்படி இருக்கு?
ரொம்ப நல்லா இருக்கு. யங்ஸ்டர்ஸ் நிறைய பேர் படங்கள் பண்றாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு வயசானதா ஒரு ஃபீல் வருது. இளைஞர்கள் நிறைய பேர் வருவதை ஆதரிக்கறேன். அதை போட்டினு எப்பவும் நினைச்சதில்ல. நானும் அப்படி வந்தவன்தானே!
இதுல பல அட்வான்டேஜஸ் இருக்கு. ரசிகர்களுக்கு விதவிதமான நல்ல படங்கள் கிடைக்கும். நிறைய ஜானர்ஸை எதிர்பார்க்கலாம். சினிமா ஆரோக்கியமா இருக்கும்.

ஸோ, புதியவர்களின் வருகை ஹேப்பியா இருக்கு. சூர்யா சார் படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடர்ந்து இருந்ததால சமீபகாலமா புதுப்படங்கள் எதுவும் பார்க்கல. இப்ப டைம் கிடைச்சிருக்கு. நிறைய பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்!

மை.பாரதிராஜா