சீக்ரெட் ஆஃப் த சிக்சர்ஸ்!



நியூஸ் வியூஸ்

ஐபிஎல் டி20 போட்டிகளில் அரை செஞ்சுரி அடிப்பதற்கே பேட்ஸ்மேன்களுக்கு தாவூ தீர்ந்து விடுகிறது. அப்படியிருக்க சிக்ஸர்களின் எண்ணிக்கையிலேயே ஒரே சீஸனில் ஹாஃப் செஞ்சுரி அடித்திருக்கிறார் ஆண்ட்ரே ரஸ்ஸல்!இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை 2019 ஐபிஎல்லில் 12 போட்டிகளில் 486 ரன்கள்.
இவற்றில் சிக்ஸர்களின் எண்ணிக்கை மட்டுமே 50. ஃபோர்களின் எண்ணிக்கை 29. ஆக அவர் எடுத்த 486 ரன்களில் சிக்ஸர் மற்றும் ஃபோர்களின் வாயிலாக மட்டுமே 416 ரன்களை எடுத்திருக்கிறார்.

மீதி 70 ரன்களை மட்டுமே போனால் போகிறது என்று ஓடியிருக்கிறார். இப்படியொரு சிக்ஸர் மெஷினை இதுநாள் வரை ஐபிஎல் கண்டதில்லை.கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இரவு மும்பை அணிக்கு எதிராக 40 பந்துகளில் 80 ரன்கள் என்று ருத்ரதாண்டவம் ஆடியது அவர் வாழ்க்கையின் ஸ்பெஷல் மொமெண்ட். ஏனெனில் நள்ளிரவில் ‘மேன் ஆஃப் த மேட்ச்’ வாங்கியபோது, தன்னுடைய 31வது பிறந்தநாளையும் சேர்த்தே கொண்டாடத் தொடங்கி இருந்தார்.

ஹிட்மேனுக்கு ஐபிஎல் நிர்வாகம் பிறந்தநாள் பரிசாக இன்னொரு இன்ப அதிர்ச்சியையும் சஸ்பென்ஸாக வைத்திருந்தது.யெஸ். அன்று அவருடைய பர்த்டே ஸ்பெஷலாக அவரை பேட்டி கண்டவர் டொமினிக்கன் கனவுக்கன்னியான ஜாஸிம் லோரா. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பிரபல மாடலாக விளங்கும் ஜாஸிம் இப்போது மிஸஸ் ஆண்ட்ரே ரஸ்ஸல் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

“நான் ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே தூக்கி அடிப்பது என்பது என் அழகிய மனைவியை கவர்வதற்குத்தான்...” என்று ரஸ்ஸல் ‘ஐஸ்’ வைக்க, அப்படியே நாணத்தில் முகம் சிவந்தார் ஜாஸிம்.“நீ எனக்கு லக்கி. நீ என் வாழ்வில் வந்தபிறகுதான் எனக்கு எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது...” என்று கண்களில் நீர்கசிய நெகிழ்வாகவும் சொன்னார்.

ஜாஸிம், ரஸ்ஸலுக்கு எந்தளவுக்கு லக்கி என்பதை அறிய ரஸ்ஸலின் பின்கதைச் சுருக்கத்தை தெரிந்துகொண்டால்தான் உணரமுடியும்.ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் 1988ல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரஸ்ஸல். அப்பா, மைக்கேல் ரஸ்ஸல். அம்மா, சாண்ட்ரா டேவிஸ். நான்கு குழந்தைகளில் ஆண்ட்ரேதான் மூத்தவர்.

அவருடைய சிறுவயது ஹீரோ மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கர்ட்னி வால்ஷ். அவரைப் போலவே பெரிய பவுலராக வேண்டுமென்கிற ஆசையில் எப்போதும் பந்தும், கையுமாகவே திரிந்துகொண்டிருப்பார்.ஆசிரியையான அம்மாவுக்கோ தன் மூத்தமகன்படிப்பை கோட்டை விட்டு விட்டு கிரிக்கெட் கனவுகளில் மிதப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஒரு நாள் ரஸ்ஸலை அழைத்தார்.“தம்பி, நீதான் இந்த வீட்டுக்கு மூத்தபையன். தம்பி, தங்கச்சிகளைக் கரைசேர்க்கிற கடமை உனக்கு இருக்கு. நீ நிறைய படிச்சி, நல்ல வேலைக்கு போனாதான் இந்தக் குடும்பமே தலைநிமிரும். புரியுதா?”“அம்மா, எனக்கு ரெண்டே வருஷம் டைம் கொடுங்க.

கிரிக்கெட்டில் என்னாலே சாதிக்க முடியும்னு நெனைக்கிறேன். படிச்சிட்டு ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கிறதைவிட கிரிக்கெட்டில் நூறு மடங்கு சம்பாதிச்சி நம்ம குடும்பத்தையே யாரும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு மேலே கொண்டுவருவேன். என்னை நம்புங்க. ரெண்டு வருஷத்துலே என்னாலே முடியலைன்னா நீங்க என்ன சொல்றீங்களோ, அதை செய்யுறேன்...”

அரைமனதோடுதான் தன் மூத்த மகனின் விருப்பத்துக்கு சம்மதித்தார் சாண்ட்ரா.அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காப்பாற்றினார். குடும்பத்தையும் கரை சேர்த்தார்.ரஸ்ஸலைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது பிடித்தமான துறை மட்டுமல்ல, வருமானத்துக்குமான வழி.எனவேதான் -ஐபிஎல் போன்று உள்ளூர் கிரிக்கெட் டோர்னமென்டுகள் எங்கே நடந்தாலும், அதில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார். கொல்கத்தா அணிக்காக கடந்த ஆண்டு அவர் ஒப்பந்தமான தொகையே எட்டு கோடி.

“மேற்கிந்தியத் தீவுகளுக்காக மட்டும் சர்வதேசப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்தால் எனக்குக் கட்டுப்படியாகாது...” என்று சிரித்தபடியே சொல்கிறார்.கிரிக்கெட் துறையில் பிரபலமாகி விட்ட இளம் வீரர் என்கிற முறையில்தான் டொமினிக்கன் குடியரசு வம்சாவளியில் அமெரிக்காவில் பிறந்து பிரபலமான மாடல் ஜாஸிம் லோரா அவருக்கு அறிமுகமானார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல், கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. அமெச்சூர் பாடகரும்கூட. ஊரில் இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காக சர்ச்சில் அருமையாகப் பாடுவார். நண்பர்களுக்காக நிகழ்வுகளிலும் பாடுவதுண்டு.லோராவை கண்டதிலிருந்தே காதல் பாடல்களை மட்டும்தான் ரஸ்ஸல் பாடிக் கொண்டிருந்தார்.

தான் பாடிய பாடல்களை மொபைலில் லோராவுக்கு அனுப்புவார். லோரா, மாடலிங்குக்காக எடுத்த படங்களை ரஸ்ஸலுக்கு அனுப்புவார். ஒலியும், ஒளியும் ஒரு கட்டத்தில் இணைந்தன. ஜோடியாக உலகம் முழுக்க வலம் வந்தார்கள். ரஸ்ஸல் விளையாடப் போகும்போதெல்லாம் ஸ்டேடியங்களுக்கு அசத்தலான காஸ்ட்யூமில் வந்து ஊக்குவிப்பார் லோரா.

டுவிட்டரிலும் காதல் வளர்த்தார்கள். பேரழகியை ரஸ்ஸல் காதலிக்கிறார் என்று ஊடகங்கள் கிசுகிசுக்கள் எழுதின.“லோராவை எனக்குப் புடிச்சிருக்கு. நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்...” என்று காலில் வட்டமிட்டவாறே வெட்கத்தோடு அம்மாவிடம் கேட்டார் ரஸ்ஸல்.உடனடியாக பெரியவர்கள் பார்த்துப் பேசி 2014ல் நிச்சயதார்த்தம். 2016ல் திருமணம். காதலுக்கு சாட்சியாக இப்போது ஆலியா ரஸ்ஸல் என்கிற அழகான பெண் குழந்தைக்கு பெற்றோர் இவர்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.“நீ எனக்கு லக்கி. நீ என் வாழ்வில் வந்தபிறகுதான் எனக்கு எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கிறது...” என்று கடந்த பிறந்தநாளின்போது மனைவியிடம் ரஸ்ஸல் உருகினார் இல்லையா?அதற்கு காரணம் இருக்கிறது.ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்பாக போதை மருந்து உட்கொண்டு கிரிக்கெட் ஆடினார் என்று ரஸ்ஸலுக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதித்திருந்தார்கள்.

இந்தத் தடை தீர்ப்பு வந்தபோதுதான் அவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தது. கரீபியன் நாடுகளில் சென்டிமென்ட் அதிகமாக பார்ப்பார்கள். லோரா வந்த வேளைதான் ரஸ்ஸலுக்கு விளையாடுவதற்கு முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது, அவர் ராசியில்லாத பெண்ணென்று இவர்களது காதில் விழும் வகையிலேயே சுற்றமும், நட்பும் வம்பு வளர்த்திருக்கிறது.

தன் காதல் மனைவி குறித்து காதில் விழுந்த இந்த கடுமையான சொற்களே, மீண்டும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை ரஸ்ஸலுக்கு ஏற்படுத்தியது. தன்னுடைய மனைவி, தனக்கு எவ்வளவு ராசியென்று ஊர், உலகத்துக்கெல்லாம் நிரூபிக்க வேண்டும் என்கிற வெறி அவருக்குள் ஊற்றெடுத்தது.

ஓராண்டு தடைக்குப் பிறகு 2018ல் மீண்டும் ஆடவந்த ரஸ்ஸல், முன்பு மாதிரி இல்லை. யாரிடமும் எதற்காகவும் கோபப்படுவதில்லை. மைதானத்தில் இருக்கும்போது எதற்காகவும் உணர்ச்சிவசப்படுவதில்லை.தன்னுடைய முழுக்கவனத்தையும் பந்திலும், பேட்டிலும் மட்டுமே செலுத்தினார். பவுலிங் செய்யும்போது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனை தண்டித்தார். போலவே, பேட்டை கையில் பிடிக்கும்போது பந்து வீசுபவரையும். தவம் மாதிரி இப்போது கிரிக்கெட்டை அணுகுகிறார்.

“முன்பு இளமை வேகத்தில், புகழ் போதையில் என்னென்னவோ தவறுகளைச் செய்திருக்கிறேன். அவற்றைத் திரும்பிப் பார்க்கக் கூட இப்போது எனக்கு நேரமில்லை. எனக்கு அழகான, அன்பான மனைவி இருக்கிறாள். குழந்தை இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. கிரிக்கெட் இருக்கிறது...” என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார் ‘லக்கி ஸ்டார்’ ஆண்ட்ரே ரஸ்ஸல்.

லோராவுக்கு மிகவும் பிடித்த சினிமா ஹீரோ ஷாருக்கான். தன்னுடைய கணவர் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் என்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவெஞ்சர்ஸ் சீரிஸின் தீவிரமான விசிறி ரஸ்ஸல். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் பிஸியாக இருப்பதால் ரிலீஸ் தேதி அன்றே ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தைப் பார்க்கமுடியவில்லையென்று அவருக்கு ஆதங்கமாம்.l

யுவகிருஷ்ணா