ராமராஜன் டிரெஸ்தான் இப்ப ஃபேஷன்!



லைம்லைட்டுக்கு  வருகிறது நியான் கலர்ஸ்

‘‘என்னடா கலரு இது ராமராஜன் மாதிரி… ப்பா கண் கூசுது!’’ கிளிப்பச்சை, கத்தரிப்பூ, ரோஸ், பஞ்சுமிட்டாய்... இப்படி அடிக்கிற கலர்களில் உடையணிந்தால் இதைவிட மோசமான கமெண்ட்ஸ்தான் வரும்! ஆனால், எதிர்கால ட்ரெண்டே இதுதான் என்கிறது ஃபேஷன் உலகம்.

‘‘நாங்க இத நியான் ஃபேஷன்னு சொல்வோம்.
80கள்ல ஆரம்பிச்ச டிரெண்ட் அப்பறம் கொஞ்ச நாள்ல காணாம போயிடுச்சு…’’ என பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர் டிசைனர்ஸான ஜானும் அனந்தும். சமீபத்தில் நியான் தீம் வைத்து ஷோ நடத்தியிருக்கும் இவர்கள் இதுதான் அடுத்த ஃபேஷன் அப்டேட் என்கிறார்கள்.

‘‘இப்பவே சில கடைகள்ல பிங்க், ஆரஞ்ஜ் நிறங்களை நீங்க அதிகமா பார்க்கலாம். காரணம், மக்கள் பளிச் கலர்ஸை விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க. தனித்தன்மையோடு இது இருப்பதும் ஒரு ரீசன்.அதாவது முன்ன ஏதோ ஒரு கடைக்குப் போவோம்...
துணியை எடுப்போம்... டைலர்கிட்ட சின்னச் சின்ன டிசைன்ஸ்ல தைக்க கொடுப்போம். பிறகு கடைல சேல்ஸ்மேனை கூப்பிட்டு ஒரு டிரெஸ் வாங்க நூறு டிரெஸ்ஸை பிரிச்சுக் காட்ட சொன்னோம். தென்... பொட்டிக் போய் நாமே நமக்கு வேண்டியதை செலக்ட் செஞ்சோம்.

எல்லாத்துக்கு பின்னாடியும் இருக்கிற சைக்காலஜி ஒண்ணுதான். நாம் அணியற மாதிரி மத்தவங்க உடை போட்டுக்கக் கூடாது. ஊரே நம்மை திரும்பிப் பார்க்கணும்!இந்த மனநிலையோட லேட்டஸ்ட் வெர்ஷன்தான் பிரைட் கலர்ஸ். பொதுவா வெள்ளை நிறம் அணிஞ்சா நம்மைச் சுத்தி பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸ் இருக்கும்னு சொல்வாங்க. நியான் கலர்ஸ் ஒருவகைல அப்படித்தான்.

வெள்ளையும் நியான்தான்! நியானும் வெள்ளைதான்! சாதாரண லைட்ல ஒரு கலராவும், யுவி லைட்ல டியூப் லைட் கலர் போலவும் தெரியற கலர்ஸ் நிறைய இருக்கு. அப்படியான கலர்ஸை நீங்க தேர்வு செய்தாலும் பெரிசா கண்களை உறுத்தாது!’’ என அனந்த் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஜான் குறுக்கிட்டார்.

‘‘நியான் கலர் டிரெஸ்ஸை அணிய நமக்குத் தேவை தன்னம்பிக்கை. மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்களோ... முகத்துல அடிக்கிறா மாதிரி தெரியுமோனு தயங்கவே கூடாது. தில்லா அணியணும்!நியான் கலர்ஸை சில மிக்ஸ் மேட்ச் செஞ்சா அருமையான லுக் கிடைக்கும். வெள்ளை அல்லது கருப்பு சட்டைகள்ல நியான் கலர் டை அல்லது நியான் ஓவர் கோட்னு மேட்ச் செய்யலாம். கருப்பு நிற சேலை அல்லது வெள்ளை நிற சேலைகள்ல நியான் கலர் பிங்க், மஞ்சள், பச்சைனு ஏதோ ஒரு கலர்ல லேஸ் கொடுத்து டிசைன் செய்தா சேலை லுக்கே ராயலா மாறும்!

அடுத்து கம்மல், பிரேஸ்லெட், வளையல், பெல்ட்... இப்படி சின்னச் சின்ன அக்ஸசரிஸ்லயும் நியானை புகுத்தினாபோதும்... ஸ்டைல் லுக் கிடைக்கும். வடஇந்தியாவுல இப்பவே நியான் கலர்ஸை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. லெஹெங்கா, ஷெர்வானி, சல்வார்ல இதை அதிகமா அங்க பார்க்கலாம். காரணம், எல்லா விழாக்கள்லயும் பிரைட்டா தன்னைக் காட்டிக்கணும்னு நார்த் இந்தியன்ஸ் நினைக்கறாங்க.

ஆனா, தென்னிந்தியாவுலதான் வருங்காலத்துல அதிகமா பயன்படுத்த வாய்ப்பிருக்கு. வேஷ்டியுடன் பளிச்சுனு சட்டை போட்டுக்கிட்டா அதன் அழகே தனிதான். இப்படி அணிஞ்சதாலதான் இப்பவும் ராமராஜனை நாம மறக்காம இருக்கோம்!அதேபோல டெனிம் பாட்டம்ஸ் கூட நீங்க தைரியமா நியான் கலர் டாப்ஸை மேட்ச் செய்துக்கலாம். பக்காவா செட் ஆகும். அப்பறம் செருப்பு, ஹேண்ட்பேக், நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், ஐ ஷேடோ... இதுல கூட நியான் கலர்ஸை பயன்படுத்தலாம்.

எந்தவித வேலைப் பாடுகளும் இல்லாம வெறும் கலர்லயே சாதா உடையையும் கிராண்ட் ஆக காட்ட ஒரே வழி நியான் கலர்ஸ்தான். இப்ப எம்பிராய்டரி, ஜிமிக்கி ஒர்க்ஸ்லயும் நியான் வரத் தொடங்கிடுச்சு...’’ என்ற ஜான், ஸ்கின் டோனுக்கும் டிரெஸ் கலர்ஸுக்கும் தொடர்பே இல்லை என்கிறார்!‘‘எப்படி நம்மை புரஜெக்ட் செய்துக்கறோம் என்பதில்தான் நம்ம திறமையே அடங்கியிருக்கு. சொல்லப்போனா டல் கலரைக் காட்டிலும் டஸ்க்கி ஸ்கின் டோன்கள் மேல நியான் கலர் அம்சமா இருக்கும்.

ஆரம்பத்துல ரன்னிங், சைக்ளிங் மாதிரியான ஸ்போர்ட்ஸ் உடைகள்லதான் நியான் கலர்ஸ் இருந்துச்சு. இப்ப நியான் மாரத்தான் கூட நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதாவது இரவு நேர மாரத்தான்! அந்தளவுக்கு நியான் கலர்ஸ் மேல இப்ப மோகம் அதிகரிச்சிருக்கு.கூச்சப்படாம தைரியமா அணிங்க. ஊரே உங்களை திரும்பிப் பார்க்கும். ஆனா, கிண்டல் செய்யாது!’’ என ஜான் முடிக்க அனந்த் ஆமோதிக்கிறார்.                         

ஷாலினி நியூட்டன்