தினமும் 5 கி.மீ. நடந்து... 20 கி.மீ. பஸ்ஸில் பயணம் செய்து... ஓட்டப்பந்தய பயிற்சியை மேற்கொள்வார்!



ஒன்றல்ல… இரண்டல்ல… நிறைய தடைகள். எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி தடம் பதித்து திரும்பியிருக்கிறார் கோமதி மாரிமுத்து. கடந்த வாரம், தோஹா ஆசியதடகள சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தவர் இவர்தான்.
திருச்சி அருகே முடிகண்டம் என்கிற குக்கிராமத்திலிருந்து வந்த கோமதியை இன்று இந்தியாவே பாராட்டிக் கொண்டிருக்கிறது. ‘‘நினைச்சுக்கூட பார்க்கல. இலக்கை எட்டியபிறகு தேசிய கீதம் ஒலிச்சதும்தான் என் நீண்ட நாள் கனவு நிறைவேறியதே தெரிஞ்சது. ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ உற்சாகமாகச் சொல்கிறார் கோமதி.

ஆனால், இந்த உற்சாகத்தின் பின்னால் பெரும் வலி இருக்கிறது.‘‘எங்க வீட்டுக்காரர் பெயர் மாரிமுத்து. நானும், அவரும் விவசாயக் கூலி வேலை பார்த்துதான் பிள்ளைகள கரை சேர்த்தோம். மூத்த மகன் சுப்ரமணி, திருச்சி ஊர்க்காவல் படையில வேலை பார்க்குறான். அடுத்து லதா, திலகவதினு ரெண்டு பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணியாச்சு. கடைக்குட்டிதான் கோமதி...’’ மகிழ்ச்சியுடன் பேசத்தொடங்குகிறார் கோமதியின் அம்மாவான ராசாத்தி.

‘‘தொடக்கப் பள்ளியை எங்க ஊர்லயே படிச்சா. மேற்கொண்டு படிக்க குன்னத்தூர் பக்கம் நாசரேத் புனித தோமையார் மேல்நிலைப் பள்ளிக்கு போனா. அங்கதான் ஓட்டத்துல ஆர்வம் வந்திருக்கு. எட்டாவது படிக்கும் போது ஓடச் சொல்லி சொல்லியிருக்காங்க. அங்க ஜெயிச்சு தட்டு, தம்ளர்னு வாங்கிட்டு வந்தா. அப்புறம் நிறைய பதக்கங்கள் பள்ளி அளவுல வாங்குனா.  

ப்ளஸ் டூ முடிச்சதும் மேற்கொண்டு படிக்கப் போறேன்னு சொன்னா. குடும்பமே கஷ்டப்பட்டுட்டு இருக்கிறப்ப எப்படி அவளைப் படிக்க வைக்கிறதுனு அவ அப்பா யோசிச்சாரு. அதுக்கு கோமதி, ‘வீட்டுல யாரும் காலேஜுக்கு போகல. நானாவது போய் படிக்கிறேன்ப்பா’னு சொல்லி அனுமதி வாங்குனா.

ஆனா, எங்க ஊருக்கு பஸ் வசதி கிடையாது. இங்கிருந்து திருச்சி ரோட்டைப் பிடிக்க 5 கிமீ போகணும். அங்கிருந்து திருச்சி 20 கிமீ. அங்க ஹோலி கிராஸ் காலேஜ்ல போய் பி.ஏ. படிச்சா...’’ கண் கலங்கும் ராசாத்தியை ஆறுதல் படுத்திவிட்டு தொடர்ந்தார் கோமதியின் அண்ணன் சுப்ரமணி.
‘‘ஊர்ல இருந்து திருச்சி ரோட்டுக்கு நடந்தே போவா. எப்பவாவது நாங்க வண்டில கொண்டு போய் விடுவோம். எங்கப்பா கஷ்டப்பட்டு அவளை படிக்க வச்சார். அப்புறம், நான் ஓடிதான் ஆவேன்னு சொன்னா. எங்களு க்கு பயமா இருந்துச்சு. காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பிடுவா. மழையிலயும், காத்துலயும் கூட போவேன்னு அடம் பிடிப்பா. அப்ப வீட்ல சண்டையே நடக்கும்!  

காலேஜ் படிக்கிறப்ப கிரவுண்டுல ஓடினா. முதல்வர் அம்மா ரூ.25 ஆயிரமும் அவார்டும் கொடுத்தாங்க. அப்பதான் எங்க வீட்ல எல்லாரும் கோமதி எதையோ சாதிக்கிறானு புரிஞ்சுகிட்டோம். அதுக்கு அப்புறம் கடன் வாங்கி முட்டை, பால்னு வாங்கிக் கொடுத்தோம். நிறைய பதக்கங்கள் வாங்க ஆரம்பிச்சா. எது எதுக்கு வாங்கினானு கூட வீட்ல தெரியாது! ஒரு சூட்கேஸ் நிறைய இருக்கு!’’ பெருமையுடன் சுப்ரமணி முடிக்க ராசாத்தி தொடர்ந்தார்.

‘‘ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘நான் ஓடப் போறேன்ம்மா! 25ம் தேதி வரை உங்கிட்ட பேசமாட்டேன். கோவிச்சிக்காத!’னு சொன்னா. எனக்கு நியூஸ் வைக்கத் தெரியாது. அன்ைனக்குக் காலைல பக்கத்து வீட்டுல கோமதி ஓடிட்டு இருக்குனு சொன்னாங்க. அதுக்குள்ள ஆளுக எல்லாம் வந்துட்டாங்க. ஆனா, இந்த சந்தோஷத்தைப் பார்க்க அவ அப்பா இல்லைனுதான் ஒரே கவலை...’’ ராசாத்தி அழ... அம்மாவை சமாதானப்படுத்தித் தொடர்ந்தார் சுப்ரமணி.

‘‘இங்க ஹோலி கிராஸ்ல படிச்சாலும் காலைல ஓட்டமெல்லாம் செயின்ட் ஜோசப் காலேஜ் கிரவுண்ட்லதான். அங்க ராஜாமணி சார்னு ஒரு போலீஸ் அதிகாரிதான் கோமதிக்கு பயிற்சி கொடுத்தார். காலை நாலு மணிக்குக் கிளம்பி கிரவுண்ட்ல பயிற்சி முடிச்சுட்டு, அப்புறம் காலேஜ் போவா. மாலை திரும்பவும் பயிற்சி. அப்புறம் கம்ப்யூட்டர் கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்னு போய்ட்டு நைட் ஒன்பது மணிக்குதான் வருவா.
வீட்டு வேலைகள், காலேஜ் பாடங்கள் எல்லாம் செய்துட்டு 12 மணிக்குப் படுப்பா. எனக்குத் தெரிஞ்சு தினமும் நாலு மணி
நேரம்தான் தூங்குவா!

அப்புறம் சென்னைக்குப் போய் எம்.ஏ. தமிழ் முடிச்சா. அங்க அவ ஓடும்போது ெபங்களூரைச் சேர்ந்த காந்தினு ஒரு பயிற்சியாளர் பார்த்திருக்கார். இந்தப் பொண்ணு நல்லா ஓடுதேனு அவர்தான் பெங்களூர் அழைச்சிட்டுப் போய் ஒரு அகடமியில சேர்த்து பயிற்சி கொடுத்தார். ஆசியா போட்டில கலந்துக்கிட்டா. அப்ப பரிசு வாங்க முடியலை.

ஆனாலும், மனம் தளராம ஓடினா. வருமான வரித் துறையில வேலையும் கிடைச்சது. இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் அப்பா திடீர்னு இறந்துட்டார். இதனால கோமதி ரொம்பவே மனசு உடைஞ்சு போனா. அடுத்த இரண்டு மாசத்துல அவ பயிற்சியாளர் காந்தி சாரும் இறந்துட்டார். இரண்டு பேரின் இறப்பிலிருந்தும் மீண்டு வர அவளுக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷமாச்சு.

மறுபடியும் நிறைய பயிற்சி எடுத்து இன்னைக்கு சாதிச்சிருக்கா!’’ நெகிழ்கிறார் சுப்ரமணி.‘‘அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதியாகி இருக்கேன். அதுல பதக்கம் வெல்றதுதான் என் இப்போதைய குறிக்கோள். திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருக்காரு! கண்டிப்பா ஒலிம்பிக்குல வெல்வேன்...’’ சென்னை திரும்பிய கோமதி அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்!

தொகுப்பு: பேராச்சி கண்ணன்

ஜூடுபென்ஹர், ரமேஷ்