பகவான்-27



சிட்டி ஆஃப் ரஜனீஷ் “சர்ச்சை சாமியார் ரஜனீஷ், அமெரிக்காவில் செட்டில் ஆகிறார்!”
‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை பரபரப்பை கிளப்பியது.அதுநாள்வரை நூற்றுக்கணக்கானவர்களுக்கு மட்டுமே ரஜனீஷ்புரம் உருவாகிக் கொண்டிருந்தது தெரிந்திருந்தது. பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தியாக ஆனபிறகு லட்சக்கணக்கானோர் அறிந்துகொண்டனர்.

அமெரிக்காவில் மட்டுமின்றி கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் ஒரேகான் மாகாணத்துக்கு படையெடுத்தனர். சின்னஞ்சிறு நகரமான ஆண்டலோப் நகருக்கு வந்து பகவானுக்காக அவர்களும் செட்டில் ஆகத் தொடங்கினார்கள்.அதுநாள் வரை வெறும் நூற்றுக்கணக்கில் இருந்த நகரின் மக்கள்தொகை, ஆயிரக்கணக்காக பெருகத் தொடங்கியது. இங்கே தங்கத் தொடங்கியவர்கள் தங்களையும் ஆண்டலோப்வாசிகளாக வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.

ஆண்டலோப் நகரின் மேயருக்கு எதையோ பிடிக்கப் போய் எதுவோ ஆனது.அடுத்து நடந்த தேர்தலில் இவர்களும் போட்டியிட்டு அதிகாரத்தை வென்றெடுத்தார்கள். நகர கவுன்சிலில் ஆண்டலோப் நகரின் பெயரையே ‘சிட்டி ஆஃப் ரஜனீஷ்’ என்று மசோதா கொண்டுவந்து பெயர் மாற்றுமளவுக்கு பெரும்பான்மை கொண்டிருந்தார்கள்.“நாங்கள் எதையும் அடாவடியாகச் செய்யவில்லை. ஜனநாயக பூர்வமாகவே நடந்துகொண்டோம்...” என்று பின்னாளில் இந்நிகழ்வுகளைப் பற்றி மர்மப் புன்னகையோடு சொன்னார் ஷீலா.

“ஆசிரமம் அமைப்பது மட்டுமே எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகளோ வம்படியாக எங்களையும் அரசியலில் குதிக்க வைக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக ஆண்டலோப் நகரின் மேயரும், அவரது மகனும். அவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியை நாங்கள் எங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம். ஆசிரமப் பிரச்னையை தேசியப் பிரச்னையாக முன்வைத்து ஊடகங்களில் பரப்பினோம். பகவானின் அமெரிக்க ஸ்லீப்பர்செல்கள் சரியான காலத்தில் உதவ முன்வந்தனர். ஆண்டலோப் நகரின் அதிகாரத்தையே கைப்பற்றுமளவுக்கு அந்த ஆதரவு இருந்தது...” என்று மேலும் விளக்கினார் ஷீலா.

எனினும் -இது பகவானின் பக்தர்களுக்கு கிடைத்த தற்காலிக வெற்றிதான்.ஒரேகான் மாகாணத்தின் ஒரு பகுதியை எங்கிருந்தோ இந்தியா என்கிற நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒரு சாமியாரால் கைப்பற்ற முடிகிறது என்றால், இந்த சிறுபொறி நாளைக்கு பெரிதாக வளர்ந்து அமெரிக்க தேசியத்துக்கே ஆபத்தாக முடியலாம் என்று அந்நாட்டின் அரசியல்வாதிகள் கொஞ்சம் மிகையாகவே சிந்தித்தார்கள்.

அடிபட்ட புலியின் ஆக்ரோஷம் அவர்களது சிந்தனையில் இருந்தது. பின்னாளில் பகவானின் கையில் விலங்கு மாட்டி, கிரிமினலைப் போல அவர்கள் நடத்துவதற்கும் ஒருவகையில் இதுவே காரணமாக அமைந்தது.சரி. இப்போதைக்கு கதைக்கு வருவோம்.ரஜனீஷ்புரம் அமைப்பதற்கு அப்போதிருந்த சிக்கல்கள் பலவும், அதிகாரத்தைக் கைப்பற்றியதால் உடனடியாகத் தீர்ந்தன. கட்டடங்கள் கட்டுவதற்கு இருந்த சட்டபூர்வமான ஆட்சேபணைகளைத் தகர்க்கவும் இவை உதவின. ஏற்கனவே திட்டமிட்டதைவிட ரஜனீஷ்புரம் மிகவும் பெரிதாக அமைக்கப்படவும் இதுவே காரணமானது.

முன்னூறுக்கும் மேற்பட்ட சன்னியாசிகள் இரவும் பகலுமாக உழைக்கத் தொடங்கினர். அதுநாள் வரை நியூஜெர்ஸியில் தங்கியிருந்த பகவானும் அடிக்கடி ஷீலாவை நச்சரிக்கத் தொடங்கினார்.“என்னுடைய புதுவீட்டுக்கு நான் எப்போது குடிபெயரலாம்?”
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்வதில்தான் பகவானுக்கு ஏகத்துக்கும் சிக்கல் இருந்தது. பாஸ்போர்ட், விசா, குடியுரிமை மாதிரியெல்லாம். இம்முறை அம்மாதிரியான பிரச்னைகள் இல்லை.

ஆனால் -இடம் வாங்கியதிலிருந்தே அங்கு குடிபோகும் நாளை சிறு குழந்தை மாதிரி பகவான் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார்.
திடீரென ஒரு நாள் காலை ஷீலாவை தொலைபேசியில் அழைத்தார் பகவான்.“ஷீலா, இதற்கும் மேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இன்னும் இரு நாட்களில் நான் ரஜனீஷ்புரத்துக்கு வந்துவிடுவேன்...”ஷீலா பதில் சொல்வதற்கு முன்பாகவே தொலைபேசி அழைப்பைத் துண்டித்து விட்டார்.

ஷீலாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அரையும் குறையுமாகத்தான் ரஜனீஷ்புரம் தயாராகி இருந்தது. தூசியும், தும்புமாக இருந்த அந்த இடத்தில் பகவானை எப்படித் தங்க வைப்பது?பகவானுக்கு என்று பார்த்துப் பார்த்து வீட்டை அமைத்துக் கொண்டிருந்தவர் இன்னொரு சன்னியாசியான பத்மா. ரஜனீஷ்புரத்தில் இந்த ஒரு வேலை மட்டுமே அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.பூனா ஆசிரமத்தில் பகவானுக்கு அமைந்திருந்ததைப் போலவே, இயற்கை எழில் சூழ்ந்த குடிலை மாதக்கணக்கில் இன்ச் பை இன்ச்சாக செதுக்கிக் கொண்டிருந்தார். குடிலைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான புல்வெளியை உருவாக்கவே அவருக்கு சில மாதங்கள் பிடித்திருந்தன.

பத்மாவை அழைத்தார் ஷீலா.“முதலில் ஒரு நல்ல செய்தி. பகவான் நம்முடன் இருக்கப் போகிறார். அடுத்தது ஓர் எச்சரிக்கை செய்தி. இன்னும் இரண்டே நாட்களில் பகவானுடைய தங்குமிடம் தயாராக வேண்டும்..!”வழக்கம்போல ஷீலா ஜோக் அடிக்கிறார் என்றுதான் பத்மா நினைத்தார்.
“சும்மா சும்மா என்னிடம் காமெடி செய்யாதீர்கள் ஷீலா. இப்போதுதான் வீடு முடிந்திருக்கிறது.

இன்னும் எலெக்ட்ரிக்கல் பணிகள் செய்யவேண்டும். வாட்டர் கனெக்‌ஷன் ஏற்பாடு பண்ண வேண்டும். அது தவிர்த்து டிரைனேஜ் வேலைகள் வேறு இருக்கின்றன. இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும்...”“இல்லை பத்மா. பகவான் சொல்லிவிட்டார். இன்னும் இரண்டே நாளில் அவர் இங்கே குடியேறிவிடுவாராம். வீடு தயாராக இல்லையென்றாலும் ஏதேனும் டெண்டிலாவது வசிக்கிறேன் என்று அடம் பிடிக்கிறார்...”
ஷீலா சீரியஸாகத்தான் பேசுகிறார் என்பதை பத்மா உணர்ந்தார்.

“பகவான் அற்புதம் நிகழ்த்தாமல், இந்தப் பணிகள் இரண்டு நாளில் முடிய சாத்தியமில்லை...” என்று புலம்பினார்.“பகவானை ஏமாற்றத்துக்கு உள்ளாக்காதே...” என்று புன்னகையோடு, அதே நேரம் எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு, அடுத்தகட்ட வேலைகளைப் பார்க்கக் கிளம்பினார் ஷீலா.நியூஜெர்ஸியிலிருந்து - ரஜனீஷ்புரத்துக்கு அருகிலிருந்த - போர்ட்லேண்ட் நகரில்தான் அப்போது ஏர்போர்ட் இருந்தது. பின்னாளில் ரஜனீஷ்புரத்துக்கு என்றே தனி ஏர்போர்ட்டெல்லாம் அமைந்தது வரலாறு.

பகவானை அழைத்துவர நியூஜெர்ஸிக்கு உடனடியாகக் கிளம்பினார் ஷீலா. அங்கே சிறப்பு விமானம் ஒன்றை பகவானின் பயணத்துக்காக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்தார். வாரஇறுதிகளில் இதுபோல தனி விமானம் கிடைக்காது. ‘பகவானுக்கு’ என்று அழுத்திக் கேட்டபிறகுதான் கிடைத்தது. இதற்காக அப்போதே 15,000 டாலருக்கு மேல் செலவானது.நியூஜெர்ஸியிலிருந்து விமானத்தில் கிளம்பிய பகவான், ஷீலாவிடம் அவ்வளவாகப் பேசவில்லை. பொதுவாக கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்து கொண்டே இருந்தார்.

போர்ட்லேண்ட் நகரில் இருந்து பகவானின் டிரேட்மார்க்கான ரோல்ஸ்ராய்ஸ் காரில் சாலைமார்க்கப் பயணம். சாலையின் இருபுறமும் வறண்ட பாலைவனமாக இருப்பதைப் பார்த்துக்கொண்டே வந்தார் ரஜனீஷ்.“இன்னும் சில காலத்தில் இப்பகுதி சோலைவனமாக பூத்துக் குலுங்கவேண்டும் ஷீலா...” என்று தன்னுடைய விருப்பத்தை மெல்லிய குரலில் சொன்னார்.

சம்மதத்துக்கு அடையாளமாக ஷீலா தலையாட்டினார்.அங்கே ரஜனீஷ்புரத்தில் பகவானுக்கு வீடு தயாராகி இருக்குமா என்று தெரியாத டென்ஷனில் இருந்தார் அவர். ‘முடியாது. முடியாது. கால அவகாசம் இல்லை’ என்று பத்மா புலம்பிய குரல் மட்டுமே அவருக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
மாற்று ஏற்பாடாக ஆண்டலோப் நகரில் ஏதேனும் விடுதியில் அறையெடுத்துக் கொடுக்கலாமா என்றுகூட யோசித்தார். ஆனால், அதை பகவான் தனக்கு செய்யப்பட்ட அவமதிப்பாக எடுத்துக் கொள்வாரோ என்றும் டென்ஷனாக இருந்தது.

ஒருவழியாக கார், ரஜனீஷ்புரத்தில் நுழைந்தது. ஆங்காங்கே கட்டடப்பணிகள் ஜரூராக நடந்து கொண்டிருப்பதை குழந்தையின் குதூகலத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார் பகவான்.அவருக்காக திட்டமிடப்பட்டிருந்த வீட்டுக்கு அருகே கார் வந்தது. ஷீலாவால் தன் கண்களையே நம்பமுடியவில்லை!முந்தைய சந்தர்ப்பத்தில் பார்த்தபோது கல்லும், முள்ளுமாக இருந்த அந்தப் பகுதி ஏதோ மலைவாசஸ்தலத்து விருந்தினர் மாளிகை மாதிரி மாறி இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான புல்வெளி. உயரமான மரங்கள். அவற்றுக்கு இடையில் அழகாக அமைக்கப்பட்டிருந்த குடில்.

ரஜனீஷ்புரத்தின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் ஆரஞ்ச் நிற உடையில் கையில் மலர் மாலைகளோடு பகவானை வரவேற்கத் தயாராகக் குழுமியிருந்தார்கள்.இரவும் பகலுமாக இரு நாட்கள் வேலை பார்த்து சோர்ந்துபோன தோற்றத்தில் இருந்தாலும் கண்களில் மட்டும் மின்னல் பொங்க ஷீலாவை அர்த்தத் தோடு பார்த்தார் அங்கிருந்த பத்மா.

பகவான் காரை விட்டு இறங்கினார். மெதுவாக சன்னியாசிகளை நோக்கி நடந்தார். அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டார்.

பத்மாவை நெருங்கிய ஷீலா, “தேங்க்ஸ்...” என்று மெல்லிய குரலில் சொல்லி கைகுலுக்கினார்.“நான் எதுவும் செய்யவில்லை. பகவான்தான் அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்...” என்றார் பத்மா.அங்கிருந்த மரங்கள், மெல்லிய காற்றில் அசைந்தன. மலர்ந்திருந்த பூக்கள், பகவானை வரவேற்றன. மெல்லிய தென்றல் இதமாக வீசத்தொடங்கியது!

(தரிசனம் தருவார்)   

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்