உறியடி - 2
அதிகாரத்துக்கும் அழிவிற்கும் அடையாளமான தொழிற்சாலையை எதிர்த்து நடக்கும் மக்கள் யுத்தமே ‘உறியடி - 2’.நண்பர்கள் மூவர் கெமிக்கல் தொழிற்சாலையில் வேலைக்குப் போகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிற்சாலையில் சில மோசமான அனுபவங்களைப் பெறுகிறார்கள்.
 பாதுகாப்பில்லாத சூழல் மற்றும் அந்த கெமிக்கல் தொழிற்சாலை சரிவர இயங்காத விதம் ஆச்சரியப்படுத்துகிறது. விபத்தில் விஜய்குமாரின் நண்பர் இறக்க, பிரச்னை தீவிரப்படுகிறது. இதற்கான அரசியல் பின்னணி, அரசியல்வாதிகளின் கூட்டு என சதிவலையின் விஷவேர் தெரியவருகிறது. இறுதியில் தொழிற்சாலையின் பாதுகாப்பற்ற நிலையினால் மக்களுக்கு என்ன நேர்ந்தது? பின்விளைவுகள் என்ன? என்பதுவே க்ளைமேக்ஸ்.
அரசியல்வாதிகளின் சுயநல போக்கையும், மக்கள் நலன் மறந்த ஆலை அதிபரையும், அப்பாவி மக்களை ஆட்டுவிக்கும் அரசியலையும் அசலாக, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் - நடிகர் விஜய்குமார். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசியல் அமைப்பையும், காவல்துறையையும், சட்டத்தையும் எள்ளி நகையாடி, எச்சரிக்கையும் செய்கிறார் இயக்குநர்.
ஹீரோயிசத்தை தள்ளிவைத்துவிட்டு கிட்டத்தட்ட போராட்ட வீரராகவே மாறிவிடுகிறார் விஜய்குமார். ஒரு தடவைக்கு மேல் அவரை நாம் பார்த்திருக்கவில்லை என்பதாலேயே இன்னும் பாத்திரத்தில் நெருக்கமாகிறார். நண்பர்களோடு பேசும்போது ‘‘என்னடா பண்ற...’’ என கேட்டும் போலீஸ்காரரிடம் ‘இங்கு வந்து பேசுடா..’னு சொல்லும்போது தியேட்டரில் அனல் பறக்கிற கைதட்டல்.
விஸ்மயாவிடம் காட்டுகிற பிரியம், நண்பனுக்காக தெறிக்கும் கோபம், ஆத்திரம் உச்சிக்கு ஏறி ‘அரசியல்ல தலையிடணும். இல்லன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில் தலையிடும்’ என்று வருகிற வார்த்தைகள் அசலானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு படு இயல்பாக ஒரு ஹீரோ. வெல்கம் விஜய்குமார். பல இடங்களில் பளிச் சிந்தனையைப் புதைத்திருக்கும் அவரின் வசனமே படத்தின் நாயகன்!விஸ்மயா கொஞ்சம் கொஞ்சமாக விஜய்குமாரின் அன்பில் வசப்படுவது, விபத்தில் கிராமமே உருக்குலையும்போது பதறி அவர்களுக்கு மருத்துவம் செய்வது, கலங்குவது என அறிமுகத்திலேயே அசத்தல்.
அந்தக் கிராமம், பரந்த தொழிற்சாலையின் பிரிவுகள் என நுழைந்துகொண்டு கதாபாத்திரங்களின் தோளில் தவ்விப் பயணித்துப் பரபரக்கிறது பிரவீன்குமாரின் ஒளிப்பதிவு! பாடல்களுக்கு மெல்லிசை தரும் கோவிந்த் வஸந்தா, பாரதியின் வரிகளுக்கு அனலும், ஆவேசத்தையும் சேர்க்கிறார். ஆனாலும் பின்னணியில் கொஞ்சம் மௌனம் பழகியிருந்தால் அவரை இன்னும் உயர்த்தியிருக்கலாம்.
திரும்பத்திரும்ப தொழிற்சாலையின் கெமிக்கல் விளைவுகளைப் பற்றி நீண்ட பாடம் எடுப்பதை தவிர்த்திருக்கலாம். அவ்வளவு பெரிய தளத்தில் இயங்கும் தொழிலதிபர்களைக் கொல்வது அத்தனை சுலபமா!சமூக அக்கறை பதித்த வகையில் பாராட்டலாம்.
குங்குமம் விமர்சனக் குழு
|