நட்பே துணைபாரம்பரிய ஹாக்கி மைதானத்தைக் கபளீகரம் செய்யத்துடிக்கும் அமைச்சரின் முயற்சியை நண்பர்களுடன் சேர்ந்து ஆதி முறியடிப்பதே ‘நட்பே துணை’.

பிரான்ஸ் நாட்டிற்குப் போய் விடத் துடிக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. அனகாவைப் பார்த்ததும் அவரோடு காதலாகி சுற்றுகிறார்.
ஹாக்கி வீரரான அவர் அந்த விளையாட்டை துறந்த காரணம் தனிக்கதை. இடையில் ஒரு தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு ஹாக்கி மைதானத்தை தாரை வார்க்க அமைச்சர் கரு.பழனியப்பன் முயற்சிக்கிறார்.

நிலைமையுணர்ந்து தன் நண்பர்களோடு களம் இறங்குகிறார் ஆதி. இறுதியில் எந்த உபாயங்களோடு அந்த மைதானம் மீட்கப்பட்டது என்பதே ‘நட்பே துணை’யின் இறுதிக் கணங்கள். மீண்டும் ஹாக்கியைக் கையிலெடுத்து அவர் செய்யும் அதிரடி பரபரப்பு விளையாட்டே க்ளைமேக்ஸ்.ஹிப்ஹாப் ஆதி இயல்பான உடல் மொழியும், இளமையும் கொண்ட ஹாக்கி வீரராக கை கொடுக்கிறார்.

அனகாவிற்குப் பின்னால் திரிவதாகட்டும், வழக்கமான பேச்சு டெலிவரியில் சிரிப்பு வெடி வெடிப்பதிலாகட்டும் மனிதர் செம கலகலப்பு. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆட்டமும், கொண்டாட்டமுமாக வருகிறார் ஆதி. போராட்டம், ஹாக்கி, மைதான மீட்பு என வந்து விட்ட பிறகு அவரது ஆவேசம் கை கொடுக்கிறது. அவருக்கும், அனகாவிற்குமான காதலை அலட்டிக்கொள்ளாமல் ரசிக்க முடிகிறது.

கண்களில் கள்ளத்தனம், உடல் மொழியில் அலட்சியம், வெறும் கண்களிலேயே மிரட்டுவது என அமைச்சராக கரு.பழனியப்பன் ஆவேசமாக தடம் பதித்திருக்கிறார். பேசும் விதம், சொல்லும் மொழி, கையாளும் ஏற்ற இறக்கம் என அப்படியே மறைந்த மணிவண்ணனை ஞாபகப்படுத்துகிறார்.

இனி தமிழ்ப்படங்களில் வஞ்சகம் புரியும் அரசியல்வாதியாக, பாசமுள்ள அப்பாவாக, கேள்வி கேட்கும் புரட்சியாளனாக அவரை எதிர்பார்க்கலாம்.
பயிற்சியாளராக ஹரிஷ் உத்தமன் மனதை நிறைக்கிறார். உயரமும், கம்பீரமும் அவரை நம்ப வைக்கிறது. குமரவேல், கௌசல்யா சின்னச் சின்ன கேரக்டர்களில் கவனம் ஈர்க்கிறார்கள்.

இன்னும் நிலைத்து மிகவும் உழைக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் ஆதி. ஆரம்பக்காட்சிகளில் வசனங்கள் புரியாமல் போவதைத் தவிர்த்திருக்கலாம்.
பாடல்கள் வகைக்கு ஒன்றாக வந்தாலும், ‘மொரட்டு சிங்கிள்’ மட்டுமே முணுமுணுக்க வைக்கிறது. அரவிந்த சிங் ஒளிப்பதிவில் இறுதி மைதானக் காட்சிகள் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் அத்தனை நெருக்க உணர்வு. துடிப்பு ஏற்றும் 30 நிமிட கடைசி கட்ட பரபரப்பில் பின்னணி இசை  துடித்து எழுகிறது.கொண்டாட்டமும், ஹாக்கி ஆட்டமுமாக வேகம் எடுக்கிறது ‘நட்பே துணை’.

குங்குமம் விமர்சனக் குழு