லன்ச் மேப்-கோவை வளர்மதி கொங்குநாட்டு சமையல்



மதுரைக்கு காரமான கறி சோறு, நாஞ்சில் நாட்டுக்கு கூட்டு - பொரியல் இருப்பது போல் கொங்கு பகுதிக்கு தனி அடையாளம் என எதுவும் சமையலில் இல்லை. ஆனாலும் தனித்துவமானது!

எப்போதும் மிதமான காரம். பாசிப் பருப்பு, மிளகு, சிறு தானியங்கள், தேங்காய் மற்றும் மஞ்சள் அதிகமாக இப்பகுதியில் கிடைப்பதால் வேண்டிய அளவுக்கு அவற்றை சமையலில் பயன்படுத்துகின்றனர். எளிதில் செரிமானம் ஆகும் என்பது கொங்கு சமையலின் மிகப்
பெரிய சிறப்பு. போலவே அசைவ உணவுகளில் மிளகாயை விட மிளகையே இங்கு பிரதானமாகப் பயன்படுத்துகின்றனர். மீனை விட ஆடு, நாட்டுக் கோழியை வைத்தே அதிகமும் உணவு தயாரிக்கின்றனர்.

இப்படி சொல்லப்பட்ட... சொல்லாமல் விட்ட கொங்கு சமையலை பிரமாதமாக சமைத்து வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது வளர்மதி மெஸ். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் இந்த மெஸ்ஸின் பெயரே ‘வளர்மதி கொங்கு நாட்டு சமையல்’தான்.‘‘பூர்வீகமே கோவைதான்...’’ சிரித்த முகத்துடன் பேச ஆரம்பிக்கும் ராஜன், பல ஆண்டுகளாக கொங்கு சமையல் குறித்து ஆய்வு நடத்தி வருபவர். கிராமம் கிராமமாகச் சென்று பாரம்பரிய கொங்கு சமையலை கைப்பக்குவத்துடன் கற்று வருபவர்.

ஆட்டுக்கறியில் ‘நல்லி கறி’, கோழியில் ‘பிச்சுப்போட்ட கோழி’, கொத்துக்கறி, நாட்டுக் கோழி சூப் என இவர்கள்  உணவகத்தின் ஸ்பெஷல் அனைத்தையுமே கிராமத்து கொங்கு ஃபார்முலாவில் செய்கிறார்கள்‘‘அப்பா ஜெயராமன் 1986ல இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சார். அக்கா பிறந்ததும் வளர்மதினு பெட்டிக் கடை ஒண்ணை தொடங்கினார். அந்தப் பெயரே மெஸ்ஸுக்கும் வந்துடுச்சு. அப்பாவும் அம்மாவும்தான் சமைப்பாங்க. கொங்கு நாட்டு கைப்பக்குவத்தோட அவங்க சமைச்சதால மக்கள் வர ஆரம்பிச்சாங்க.

ஆரம்பத்துல 6 பேர்தான் இங்க உட்கார்ந்து சாப்பிட முடியும்...’’ என்று சொல்லும் ராஜன், குழம்புகள்தான் தங்கள் மெஸ்ஸின் ஸ்பெஷல் என்கிறார். சோறுடன் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு... என பல குழம்புகளைத் தருகிறார்கள். எல்லாமே கொங்கு நாட்டு கிராமத்து பக்குவம்.

“நான் எம்பிஏ முடிச்சிருக்ேகன். அப்பாவுக்கு உடம்பு முடியாமப் போனதும் முழுசா இதுல இறங்கிட்டேன். கோவை சமையலுக்குனு தனி அடையாளமோ மெனுவோ கிடையாது. பொதுவா காரத்துக்கு மிளகைப் பயன்படுத்துவாங்க. புளிப்பு கூடுதலா இருக்கும். எல்லா ரெசிபிலயும் புளி கொஞ்சூண்டு சேர்ப்பாங்க. எங்க மெஸ்லயும் அப்படித்தான் செய்யறோம்.

முன்னாடி சமையலுக்குத் தேவையான பொருட்களை அப்பா பார்த்துப் பார்த்து வாங்குவார். அம்மா வீட்டுப் பக்குவத்துல செய்வாங்க. மூணு வருஷங்களுக்கு முன்னாடி அப்பா தவறிட்டார். இப்ப அம்மாவும் நானும் மெஸ்ஸை பார்த்துக்கறோம்.

பெண்கள்தான் சமைக்கறாங்க. இந்த வயசுலயும் அம்மா துடிப்பா இருக்காங்க. குழம்பு வாசைனயை வைச்சே காரம், உப்பு அளவை சொல்லிடுவாங்க! பாரம்பரிய கொங்கு சமையல் எங்க மெஸ்ல கிடைக்கும்னு மக்கள் நம்பக் காரணம் எங்க அம்மாவோட கைப்பக்குவம்தான்...’’ என்கிறார் ராஜன்.

எல்லா ஊர்களிலும் இருக்கும் அதே ரெசிபிதான் கொங்கு மெனுவிலும் உள்ளது. ஆனால், செய்முறை வேறு. மற்ற பகுதிகளில் ஆட்டுக்கறி வறுவலில் மிளகாய் சேர்ப்பார்கள். இங்கு மிளகு. போலவே தேங்காய்ப் பால் கலந்து தொடுகறியை சுண்ட வைக்கிறார்கள்.

பிச்சுப்போட்ட கோழியும் பிரியாணியும் வளர்மதியில் தனி ரகம். மீன், மட்டன், நல்லி நெஞ்சுக்கறி, கோலா உருண்டை... என எல்லாமே சப்புக்கொட்ட வைக்கின்றன. கொத்துக்கறி, ப்ரைன் ஃப்ரை, தவா மீன் வறுவல், நாட்டுக்கோழி சூப்... எல்லாம் வேற லெவல்! கோவை ஸ்டைல் வெள்ளாட்டு மட்டன் கறி தோசை, கொத்தமல்லி பெப்பர் பிரான், கறிவேப்பிலை பெப்பர் பிரான், இறால் தொக்கு, நண்டு மசாலா, மண்சட்டி மீன் குழம்பு... என சகலமும் திரும்பத் திரும்ப சாப்பிட வைக்கின்றன. காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைபாய்வதே இதற்கு சாட்சி!                  

கொங்கு நெய் கோழி வறுவல்

நாட்டுக்கோழி - 1 கிலோ  
சின்ன வெங்காயம்
(பொடியாக நறுக்கியது ) - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
கொத்தமல்லி விதைகள் - ஒரு மேஜைக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 8 பல்
எலுமிச்சம்பழச்சாறு - 2 மேஜைக்கரண்டி
தயிர் - 4 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பசு வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு  
பசு நெய் - 3 சிட்டிகை

பக்குவம்:நாட்டுக்கோழியை மஞ்சள் தேய்த்து நன்றாக சுத்தம் செய்யவும். அடி கனமான பாத்திரத்தில் மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாயை தனித்தனியாக வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் இவற்றை ஒன்றாகக் கொட்டி எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் நாட்டுக்கோழியுடன் தயிரை தேவையான உப்புடன் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.இன்னொரு தனி பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பசு வெண்ணெய், நெய்யிலேயே ஊறவைத்துள்ள நாட்டுக்கோழியைச் சேர்த்து வேக வைக்கவும்.

பிறகு அரைத்த இஞ்சி பூண்டு மசாலாவைச் சேர்க்கவும். வாசம் போனதும் கெட்டி பதமாக வரும். அப்போது அரைத்த மிளகு சீரக மசாலாவைச் சேர்த்து குறைவான அனலில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.

திலீபன் புகழ்

மூர்த்தி