ரத்த மகுடம்-48பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘உங்கள் கோபம் புரிகிறது...’’ நிதானமாகவே சொன்னார் சாளுக்கிய மன்னர். ‘‘முதலில் அமருங்கள்... பிறகு வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்...’’
‘‘பரவாயில்லை மன்னா...’’ சொல்லும்போதே ராமபுண்ய வல்லபருக்கு உதடு துடித்தது. ‘‘அமர்வதற்காக வரவில்லை...’’ மீண்டும் அழுத்திச் சொன்னார்.
‘‘எனில் நிற்பதற்காகத்தான் வந்திருக்கிறீர்கள்... அப்படித்தானே..?’’

‘‘ஆம்!’’
‘‘வேண்டுதலா..?’’ சாதாரணமாகவே கேட்டார் விக்கிரமாதித்தர்.ஆனால், கொந்தளித்துக் கொண்டிருந்த சாளுக்கிய போர் அமைச்சரின் உள்ளத்தில் இக்கேள்வியே எண்ணெயைக் கொட்டியது போல் ஆனது. ‘‘வேண்டுதல்தான் மன்னா!’’ நெஞ்சை நிமிர்த்தினார். ‘‘சாளுக்கியர்களின் வெற்றிக்கான வேண்டுதல் இது!’’‘‘இப்போது நாம் எங்கிருக்கிறோம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே..?’’ எந்த மாற்றமும் இன்றி இயல்பான குரலில் சாளுக்கிய மன்னர் கேட்டார்.

‘‘காஞ்சியில் மன்னா..!’’
‘‘இந்த மாளிகை..?’’
‘‘பல்லவ பெரு வணிகருக்குச் சொந்தமானது..!’’
‘‘பல்லவர்கள் யார்..?’’
‘‘நம் பரம வைரிகள்!’’

‘‘அப்படிப்பட்டவர்களின் இருப்பிடத்தில் நாம் இருக்கிறோம் என்றால்...’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரின் அருகில் வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘இது சாளுக்கியர்களின் வெற்றியைக் குறிக்காதா..?’’
‘‘பதில் உங்களுக்கே தெரியும்!’’ மன்னரை நேருக்கு நேர் பார்த்தபடியே சாளுக்கிய போர் அமைச்சர் பதிலளித்தார்.
‘‘எனக்குத் தெரியுமா அல்லவா என்பதல்ல பிரச்னை...
உங்களுக்கு அதில் சந்தேகமா என்பதே என் வினா...’’
‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமா பொய் சொல்ல வேண்டுமா..?’’
‘‘எப்போதும் எதைச் சொல்வீர்களோ அதைச் சொல்லுங்கள்...’’
‘‘சமயத்துக்குத் தகுந்தபடி வெளிப்படுத்துவேன் மன்னா...’’
‘‘அதாவது..?’’

‘‘பொய்மையும் வாய்மை இடத்து!’’‘‘தமிழர்களின் மூதுரை!’’
‘‘தமிழகத்தை ஆள நினைப்பவர்கள் வள்ளுவனின் வாக்கைப் பின்பற்றுவதில் தவறேதும் இல்லையே மன்னா..!’’
‘‘சரி...’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இந்த சமயத்துக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுங்கள்!’’
‘‘எந்த சமயத்துக்கும் நீங்கள் கேட்ட வினாவுக்கு விடை ஒன்றுதான் மன்னா..! இது... இந்த காஞ்சி மாநகரத்தில் நாம் இருப்பதும் வசிப்பதும் சாளுக்கியர்களுக்கு வெற்றி ஆகாது!’’

‘‘அப்படியானால் எப்போது வெற்றி என்பதை ஒப்புக் கொள்வீர்கள்..?’’
‘‘பாண்டியர்களையும் வெற்றி பெற்று எப்போது மொத்த தமிழகத்திலும் வராகக் கொடியைப் பறக்கவிடுகிறோமோ அப்போது ஒப்புக்கொள்வேன்!’’
சாளுக்கிய மன்னரின் முகம் மலர்ந்தது. ‘‘அதற்கான முதல் படியாக இப்போது நாம் பல்லவ நாட்டில் இருப்பதைக் குறிப்பிடலாம் அல்லவா..?’’
‘‘வாய்ப்பில்லை மன்னா!’’ ராமபுண்ய வல்லபரின் முகம் இறுகியது.

‘‘ஏனோ..?’’
‘‘முதல் படியே ஆட்டம் காணும்போது அடுத்தடுத்த படிகளைக் குறித்து எப்படி திட்டமிட..?’’ கசப்புடன் சொன்ன சாளுக்கிய போர் அமைச்சர் சில கணங்கள் அமைதியாக இருந்தார்.
‘‘ஆட்டம் காண்கிறோமா..?’’
‘‘ஆம்! பாதாளத்தில் விழும் தருவாயில் இருக்கிறோம்!’’
‘‘அதை நிறுத்த உங்களிடம் வழி இருக்கிறதா..?’’

‘‘இருக்கிறது!’’
‘‘சொல்லுங்கள்...’’
‘‘சொல்லி என்ன ஆகப் போகிறது மன்னா..?’’ கேட்ட ராமபுண்ய வல்லபரின் கண்களில் துக்கத்தின் சாயை படர்ந்தது.
‘‘சொன்னால்தானே சரி செய்ய முடியும்...’’
‘‘முடியும் என்று தோன்றவில்லை...’’

‘‘ஏனோ..?’’
‘‘காரணமே நீங்களாக இருக்கும்போது யாரிடம் சென்று நிறுத்துவதற்கான வழியைச் சொல்ல முடியும்..?’’
‘‘நானா..?’’ விக்கிரமாதித்தர் ஆச்சர்யப்பட்டார். ‘‘நம் பரம வைரியான பல்லவர்களை வேரடி மண்ணோடு வீழ்த்தும் விஷயத்தில் நான் தடையாக இருக்கிறேனா..?’’

‘‘இல்லை என்கிறீர்களா மன்னா..?’’ சீறினார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘எதற்காக கரிகாலனைத் தப்ப விடுகிறீர்கள்..?’’
சாளுக்கிய மன்னர் அமைதியாக ராமபுண்ய வல்லபரை ஏறிட்டார்.மறைந்திருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த பாலகனும் தன் செவிகளைக் கூர் தீட்டினான்.‘‘சொல்லுங்கள் மன்னா... ஏன் அமைதியாக நிற்கிறீர்கள்..?’’ முடிந்தவரை நிதானத்தை வரவழைத்துக்கொண்டு சாளுக்கிய போர் அமைச்சர் கேட்டார்.விக்கிரமாதித்தரின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

சட்டென தன் முகத்தை ராமபுண்ய வல்லபர் திருப்பிக் கொண்டார்.
‘‘ஏன் அமைச்சரே... நான் சிரிப்பது அழகாக இல்லையா..?’’ விஷமம் தொனிக்க சாளுக்கிய மன்னர் கேட்டார்.
‘‘அழகுக்கு என்ன குறைச்சல் மன்னா...’’ தன் கீழ் உதட்டைக் கடித்தார் சாளுக்கிய போர் அமைச்சர். ‘‘என்றுமே நீங்கள் அழகுதான்...’’
‘‘பிறகு ஏன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்..?’’

‘‘சிவகாமியை ஆராய!’’ திரைச்சீலையில் இருந்த சித்திரத்தைச்சுட்டிக் காட்டினார்.‘‘நன்றாக வரையப்பட்டிருக்கிறதா..?’’
‘‘கச்சிதமாக! எதன் பொருட்டு இந்த ஓவியம் வரையப்பட்டதோ... எதற்காக சிவகாமியைத் திரைச்சீலையில் தீட்டினோமோ அதற்கு பலன் இல்லாதபோது நாம் தீட்டிய திட்டமெல்லாம் வீணாகிறதே என வெறுப்புடன் ஆராய்கிறேன்...’’ என்றபடி மன்னரை ஏறிட்டார். ‘‘சொல்லுங்கள் மன்னா... கரிகாலனை ஏன் தப்ப விடுகிறீர்கள்..? குறிப்பாக சிவகாமியை! அவள் நமக்குக் கிடைத்திருக்கும் ஆயுதமல்லவா..?’’

‘‘என்ன குழந்தாய் சொல்கிறாய்!’’ சாளுக்கிய சக்கரவர்த்தினி உண்மையிலேயே திகைத்தாள். ‘‘சிவகாமி நம் ஆயுதமா..?’’
‘‘ஆம் அம்மா!’’ நிதானமாகச் சொன்னான் கங்க இளவரசன். ‘‘அவளை வைத்து மன்னர் பெரும் விளையாட்டையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்...’’
‘‘புரியவில்லையே..?’’‘‘எனக்கும் முழுமையாகத் தெரியவில்லை அம்மா... சக்கரவர்த்தி மேல்மாடத்துக்கு வந்ததும் அவரிடம் இதுகுறித்து கேட்பதாக இருக்கிறேன்... தவிர...’’‘‘சொல் குழந்தாய்... ஏன் நிறுத்திவிட்டாய்..?’’

‘‘நிறுத்தவில்லை அம்மா! ஒரு சந்தேகம் இருக்கிறது...’’
‘‘என்ன சந்தேகம்..?’’ பட்டத்து அரசி படபடத்தாள்.
‘‘வந்து... நம் இளவரசர்...’’
‘‘விநயாதித்தனா..?’’
‘‘ம்... காஞ்சிக்கு வந்தவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றீர்கள் அல்லவா..?’’
‘‘ஆமாம்...’’

‘‘அவர் மறைந்திருப்பதற்கும் சிவகாமிக்கும் கூட தொடர்பு
இருக்குமோ என நினைக்கிறேன்...’’
சாளுக்கிய சக்கரவர்த்தினி திக்பிரமை பிடித்து அப்படியே
அமர்ந்தாள். ‘‘என்னப்பா சொல்கிறாய்..?’’
‘‘ஐயம்தான் அம்மா... உறுதியில்லை...’’

‘‘பகவானே!’’ தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள் பட்டத்து அரசி. ‘‘சிவகாமி ஆபத்தானவள் என்கிறார்களே... அவளால் விநயாதித்தனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால்...’’ தழுதழுத்தபடி முணுமுணுத்தாள்.‘‘அச்சம் தவிர்க்க  அமைச்சரே! என் மகன் விநயாதித்தனுக்கு எந்த ஆபத்தும் இல்லை!’’ விக்கிரமாதித்தர் உறுதியுடன் சொன்னார்.

‘‘அப்படியானால் இளவரசர் எங்கே..?’’ ராமபுண்ய வல்லபர் உஷ்ணத்துடன் கேட்டார். ‘‘இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை மன்னா... நம் சாளுக்கியப் படை வீரர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள். வீரர்களுடனேயே உணவு உண்டு, உறங்கி, அவர்களது சுக துக்கங்களில் பங்கேற்று, அவர்களுள் ஒருவராகக் கலந்துவிட்ட நம் இளவரசர் காஞ்சிக்கு வந்ததும் எங்கு சென்றார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கிறது. எப்போது வெளிப்படையாக இதே வினாவைத் தொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தொடுக்கும்போது பிரளயம் ஏற்படுவது உறுதி...’’
சாளுக்கிய மன்னர் அசையாமல் நின்றார்.

மறைந்திருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாலகன் இருந்த இடத்தில் நின்றபடியே அசைந்தான்.
‘‘ஒருபோதும் நீங்கள் இப்போது சொன்னீர்களே... அதை நம் வீரர்கள் ஏற்க மாட்டார்கள்!’’ திட்டவட்டமாகச் சொன்னார் சாளுக்கிய போர் அமைச்சர்.
‘‘என்ன... மன்னரின் பேச்சை படைகள் கேட்காதா..?’’
விக்கிரமாதித்தரின் புருவங்கள் உயர்ந்தன.

‘‘உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் கேட்க மாட்டார்கள் மன்னா... கலகம் செய்வார்கள்! வரலாறு நெடுக இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன!’’
இதைக் கேட்டதும் சாளுக்கிய மன்னர் தன் கண்களைச் சுருக்கினார். ‘‘என் பதில் திருப்தியாக இல்லையா..?’’

‘‘இல்லை மன்னா! பல்லவ சைன்யத்துடன் எந்தெந்த குறுநில மன்னர்கள் எல்லாம் வந்தார்களோ... நம் வாதாபியைத் தீக்கிரை ஆக்கினார்களோ... அவர்களை எல்லாம் போர் முனையில் மட்டுமே வீழ்த்தி பழிக்குப் பழிவாங்கவேண்டும் என்கிறீர்கள்... அப்போதுதான் தங்கள் தந்தையும், நம் அனைவருக்கும் சக்கரவர்த்தியுமான இரண்டாம் புலிகேசியின் ஆன்மா சாந்தியடையும் என்கிறீர்கள்...’’
‘‘ஆம்...’’

‘‘இதன் காரணமாகவே கரிகாலன் தப்பித்துச் செல்ல உதவினீர்கள்...’’
‘‘ஆம்...’’‘‘அப்படி உங்கள் உதவியால் வெளியேறியவன் தன் தந்தையான சோழ மன்னரையும் அல்லவா உடன் அழைத்துச் சென்றிருக்கிறான்..?’’
‘‘அவரை மீண்டும் சிறைப்பிடிக்கத்தான் வீரர்களை அனுப்பியிருக்கிறீர்களே...’’‘‘அனைவரையும் வீழ்த்தி தன் தந்தையுடன் தப்பித்துவிட்டானே...’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் ஆற்றாமை வழிந்தது.

‘‘அதனால் என்ன... குறுவாள் பாய்ந்த தன் தந்தைக்கு எப்படியும் சிகிச்சை அளிக்க ஆதுரச்சாலைக்குத்தானே சென்றிருப்பான்..? சுற்றி வளைக்கலாமே..?’’
கேட்ட மன்னரை உற்றுப் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘சுற்றி வளைக்கத்தான் கேட்கிறேன் மன்னா... எந்த ஆதுரச்சாலைக்கு அவர்களை அனுப்பியிருக்கிறீர்கள்..?’’

‘‘நானா அனுப்பியிருக்கிறேன் என்கிறீர்கள்..?’’ விக்கிரமாதித்தர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.‘‘இல்லை என்கிறீர்களா..?’’‘‘ஆம்... நிச்சயமாக நான் அவர்களை மறைத்து வைக்கவில்லை. கரிகாலன் புத்திசாலி... காஞ்சியில் இல்லையென்றால் வேறு எங்காவது அழைத்துச் சென்றிருப்பான்...’’‘‘அந்த இடம் பல்லவ இளவரசன் ராஜசிம்மன் மறைந்திருக்கும் பிரதேசமாக இருந்தால்..?’’
சாளுக்கிய மன்னர் அமைதியாக நின்றார்.

‘‘நீங்களே சொல்கிறீர்கள் கரிகாலன் புத்திசாலி என்று...’’ புத்திசாலிக்கு அழுத்தம் கொடுத்தார் ராமபுண்ய வல்லபர். ‘‘அப்படிப்பட்ட புத்திசாலி சிக்கியபோது அவனை நம் பக்கம் இழுப்பதுதானே ராஜ தந்திரம்? அதைத்தானே நான் செய்ய முற்பட்டேன்... அதற்காகத்தானே அவன் தந்தையைச் சிறையில் அடைத்து... அவன் பெரியம்மாவை மாளிகைக் காவலில் வைத்து... எல்லா திட்டங்களையும் உங்கள் பெருந்தன்மையால் குலைத்து விட்டீர்களே மன்னா!’’ சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது.

சில கணங்கள் அமைதியாக இருந்தவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு தொடர்ந்தார்: ‘‘உங்கள் நோக்கம் உயர்ந்தது மன்னா... ஆனால், அதே நோக்கமே சாளுக்கியர்களுக்கு எதிராக மாறும்போது போர் அமைச்சர் என்ற முறையில் என்னால் அமைதியாக இருக்க முடியாது! தங்கள் தந்தை இரண்டாம் புலிகேசி மாமன்னரின் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். அவரது கனவு, வராகக் கொடி பாரதம் முழுக்க பறக்க வேண்டும் என்பது. அதற்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பேன்... இதற்காக உங்களையே எதிர்க்க வேண்டிய சூழல் வந்தாலும்...’’

மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சாளுக்கிய மன்னருக்கு தலை வணங்கினார். ‘‘அந்த நிலைக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் மன்னா! நீங்கள்தான் தப்பிக்க வைத்தீர்களோ அல்லது கரிகாலனே தப்பித்தானோ... எதுவாக இருந்தாலும் அவனையும் அவன் தந்தையையும் நிச்சயம் சிறைப்பிடிப்பேன்... அதற்கு...’’நிமிர்ந்து விக்கிரமாதித்தரின் பின்னால் இருந்த திரைச்சீலையைச் சுட்டிக் காட்டினார். ‘‘சிவகாமி எனக்கு உதவி புரிவாள்!’’
கம்பீரமாக அறிவித்துவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ராமபுண்ய வல்லபர் வெளியேறினார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சாளுக்கிய மன்னரின் உதட்டில் குறுநகை பூத்தது.மறைந்திருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாலகனின் கண்களில் ஒளி வீசியது. ஆமாம்... கரிகாலரும் சிவகாமியும் இப்போது எங்கிருக்கிறார்கள்..?
‘‘இங்குதான் இருக்கிறேன்...’’ என்றபடி சிவகாமியின் கொங்கை பிளவுக்குள் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்