இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு..?! நமோ டிவி எழுப்பும் சந்தேகங்கள்



டிடிஎச் பயன்படுத்தும் மக்கள் தலைசுற்றி அமர்ந்திருக்கிறார்கள். ம்ஹும். எல்லா டிடிஎச்சிலும் அல்ல. குறிப்பிட்ட இரண்டு.என்ன விஷயம்..?

‘நமோ டிவி’தான்!

இது கட்டண சேனல் அல்ல என்பதால் இலவச சேனல்களின் பட்டியலில் ‘நமோ’வையும் அவ்விரு டிடிஎச் நிறுவனங்கள் இணைத்திருக்கின்றன. பிரச்னை என்னவென்றால் மற்ற எந்த டிடிஎச் நிறுவனமும் இச்சேனலை தங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. போலவே கேபிள் டிவிகளும்!
பெயரே உணர்த்துவது போல் இது இப்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ்பாடும் சேனல்தான். ஆனால், பாஜக சேனல் அல்ல!
தலையைச் சுற்றுகிறது அல்லவா..? ‘என்னதான் சொல்ல வருகிறீர்கள்..?’ என எரிச்சல் அடைகிறீர்கள் அல்லவா..?

அதுதான் மேட்டர்! இதே வினாவைத்தான் பாஜகவும் தொடுக்கிறது!கடந்த மார்ச் 30ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி ‘NaMo TV’ இருப்பதை பதிவு செய்தார். இதற்கென தனி appம் உண்டு.முதலில் இந்த ‘நமோ டிவி’யை செய்தி சேனல் எனக் குறிப்பிட்ட அவ்விரு டிடிஎச் நிறுவனங்களும் பின்னர் திடீரென்று ‘உபயோகம் தேவையில்லாத ஒரு வகை ஒளிபரப்பு’ என அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியது!

என்ன இது... என தலை சுற்றி அத்தொலைக்காட்சியின் தளத்துக்குச் சென்றால் -‘நமோ டிவி ஓர் இந்தி மொழி செய்தி நிறுவனம். இதில், நரேந்திர மோடியின் நேரலைகள், அவருடைய காணொளிகள், செய்திகள், பேச்சுகள் உள்ளிட்டவை இடம்பெறும். இந்திய அரசியல் குறித்த சமீபத்திய செய்திகளை நீங்கள் இந்தத் தளத்தில் காணலாம்...’எனக் குறிப்பிட்டிருப்பதைக் காண முடிந்தது. இடையில் மற்ற சேனல்கள் செய்வதுபோல் ஒரு திரைப்படத்தையும் ஒளிபரப்பியது. அப்படம், ‘சுபாஷ் சந்திர போஸ்’ குறித்த திரைப்படம்.

பிறகு சினிமா எதுவும் ஒளிபரப்பப்படவில்லை. மாறாக நரேந்திர மோடி குறித்த செய்திகளை மட்டும் தொடர்ந்து பகிர்ந்தது. உலகின் எந்த நாட்டுத் தலைவருக்குமே அவர்களுக்கென தனியாக ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலையில் முதல்முறையாக நரேந்திர மோடி தனக்கென தொலைக்காட்சி உருவாக்கியிருக்கும் முயற்சி ஒருவகையில் முன்னோடிதான். தவறு என்று சொல்வதற்கில்லை.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தையே தொடங்கியிருக்கிறார்! இதுகுறித்து தேர்தல் ஆணையம் எதுவும் சொல்லவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்... பாஜகவினரே கூட இதை ஏன் ஹைலைட் செய்து விளம்பரப்படுத்தவில்லை..? தங்களது அதிகாரபூர்வமான செய்தித் தொலைக்காட்சியாக ஏன் கருதவில்லை..?

இரண்டாவது கேள்விக்கான விடை சிம்பிள். ‘நமோ டிவி’யில் பாஜக குறித்த எந்தச் செய்தியும் வெளியாகவில்லை! மாறாக நரேந்திர மோடி என்னும் தனி மனிதர் குறித்த காணொளிகள்தான் ஒளிபரப்பாகின்றன. எனவே, இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்பியிருக்கின்றனர்.ரைட். முதல் கேள்வி.. காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இப்போது ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. எனவே விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பலாம்.

ஓகே. மற்ற டிடிஎச் நிறுவனங்களும், கேபிள் நெட்ஒர்க்கும் இந்த சேனலை ஏன் ஒளிபரப்பவில்லை... இத்தனைக்கும் இலவசம்தானே..?

நியாயமான கேள்வி. இதற்கான பதில், பகீர்! யெஸ். இன்னும் டிராயில் முறைப்படி பதிவு செய்து லைசன்ஸை யாரும் வாங்கவில்லை!அப்படியானால் ‘நமோ டிவி’யின் உரிமையாளர் யார்..?

மில்லியன் டாலர் கொஸ்டின்! இந்தத் தொலைக்காட்சி சேனலின் வரலாறு அளவுக்கு சமீப காலங்களில் வேறு எந்த புதிரையும் யாரும் பார்த்திருக்க முடியாது. சேனலின் முன்னாள் உரிமையாளர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுஜாய் மேத்தா. இவர் ஒரு ஒரு ஹோமியோபதி மருத்துவர். 2012ம் ஆண்டு ரசிக்லால் என்பவருடன் இணைந்து, ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ‘New Hope Infotainment’ என்கிற நிறுவனத்தை உருவாக்கி அதன்கீழ் இந்தச் சேனலைத் தொடங்கினார்.

குஜராத் தேர்தல் சமயத்தில் இந்தத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டதால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. எனவே தேர்தலை ஒட்டி ஒரே ஒருநாள் மட்டும் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டது. பிறகு மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்கியது. ஒரே வருடத்தில் ரூ.65 லட்சம் வருமானத்தை ஈட்டியிருந்தாலும் அதன் பிறகு செயல்படாமல் முடங்கியது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பட்டியலிலும் இந்த நிறுவனம் இடம்பெறவில்லை!இதுதான் கடந்தகால வரலாறு. அப்படியானால் இப்போதும் இந்த செய்திச் சேனலை நடத்துவது சுஜாய் மேத்தாதானா..? ‘எனக்கு ஒன்றும் தெரியாது...’ என அவர் தன் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிடுகிறார்! ஆக, இந்த செய்திச் சேனல் இப்போது யாரால் இயக்கப்படுகிறது... சேனலுக்கான முதலீட்டை யார் தருகிறார்கள்... என்பதெல்லாம் கேள்விகளாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நரேந்திர மோடியின் இணையதளத்திலும் அதிகாரபூர்வமாக இந்த சேனலின் லிங்க் இணைக்கப்பட்டு, தொடர்பு எண் தரப்பட வேண்டிய பகுதியில் ‘தீனதயாள் மார்க்’ என பாஜக மத்திய அலுவலகத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அனைத்துக்கும் விடைகள் கிடைக்கும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.

சுப்புலட்சுமி