தல புராணம்



மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி!

‘‘இன்றைக்கு அரசு விதிக்கின்ற வரிகளுக்கு எதிராக எத்தனையோ எதிர்ப்புகளைப் பார்க்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் இருந்த வரிகளைப்பற்றி படிக்கிறபோது இன்று எவ்வளவோ மேல்...’’ என வரிகள் பற்றிப் பேசத் தொடங்கினார் மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவரான ராம்குமார் ராமமூர்த்தி.

‘‘கடந்த 2011ம் வருடம் சேம்பர் தன் 175வது வருடத்தைக் கொண்டாடியது. அதையொட்டி, ‘Championing Enterprise’ என்ற பெயரில் மெட்ராஸ் சேம்பர் பற்றி ஒரு நூல் வெளியிட்டோம். இதை சென்னை வரலாற்று ஆய்வாளர் வி.ராம் தொகுத்து எழுதினார். அதில், கோயமுத்தூர் மாவட்டத்தில் 1830களில் நடைமுறையில் இருந்த சில வரிகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மொத்தம் 35 விதமான வரிகள் மக்கள்மீது விதிக்கப்பட்டிருக்கின்றன. பானை, நெய், புகையிலை, தானியக் குவியல்கள், சுண்ணாம்பு, புளி, பாக்கு, தாமரை இலை, சாயம் போன்ற பொருட்களுக்கும்; வாரச் சந்தைக்கும், நதிக்கரையோர பண்ணைகளுக்கும், வீட்டுக் கொல்லைப்புற தோட்டங்களுக்கும், கால்நடை மேய்ச்சல் வயல்களுக்கும், கால்நடை விற்பனைக்கும், மாட்டுக் கொட்டில்களுக்கும், மீன்பிடித்தலுக்கும், ெநசவுத் தறிகளுக்கும், நன்கொடைகளுக்கும், கோயில் காணிக்கைகளுக்கும், உழவுக்கும் வரி இருந்துள்ளது.

இது மட்டுமல்ல. நாட்டியப் பெண்களுக்கும், கிராமியக் கலைஞர்களுக்கும், வீடு கட்டும் கொத்தனார்களுக்கும் கூட வரி போட்டுள்ளனர். இப்படிப்பட்ட வரிகளுக்கு எதிராகத்தான் சேம்பர் போராடி அவற்றை ஒழித்தது.முதன்முதலாக உள்நாட்டின் சாலைப் போக்குவரத்து பற்றி சேம்பர் ஆய்வு நடத்தியது. நல்ல சாலை வசதிகள் இருந்தால்தான் சரக்குகளை வேகமாகக் கொண்டு செல்ல முடியும் என்பதையும், அதனால் மூன்றில் ஒரு பங்கு செலவு குறையும் என்பதையும் சேம்பர் கண்டறிந்தது.

இந்த ஆய்வை முன்வைத்து போதுமான சாலை வசதிகள் வேண்டுமென மாகாண அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன்பிறகே சாலை வசதிகள் மேம்பட்டன. இந்நேரம், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வர, பிரிட்டிஷ் அரசிடம் இந்தியா சென்றது. 1859ம் வருடம் மார்ச் 14ம் தேதி இந்திய கவர்னர் ஜெனரலான லார்டு கான்னிங்கும் அவரின் செயற்குழுவும் சுங்க வரியை உயர்த்தினர்.

இதற்கு அன்றைய மெட்ராஸ் சேம்பரின் சேர்மன் ஹென்றி நெல்சன் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். இது ஒரு பெரிய பிரச்னையாக வெடிக்க, இந்திய அரசு ஜேம்ஸ் வில்சன் என்கிற பொருளாதார நிபுணரை வரவழைத்தது. இவர்தான் இந்தியாவில் முதல்முதலாக பட்ஜெட் முறையை அறிமுகப்படுத்தினார். தவிர, பட்ஜெட்டில், ‘வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்’ என்றார்.

இதற்கும் அன்றைய சேம்பர் தலைவர் ஹென்றி நெல்சன் பச்சையப்பா ஹாலில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருமான வரியை எதிர்த்தார். இதற்கு மெட்ராஸ் கவர்னர் ட்ரவல்யனும் ஆதரவளித்தார். ஆனால், இந்த எதிர்ப்புகளால் எந்தப் பலனும் விளையவில்லை.

இதற்கிடையே ரயில்நிலையம் வேண்டும் என்கிற கோரிக்கையையும் சேம்பரே முதல்முதலாக வைத்தது. பின்னர், மெட்ராஸில் ரயில்வே துறை உருவாக்கப்பட்டு ராயபுரத்திலிருந்து ஆற்காட்டிற்கு முதல் ரயில் விடப்பட்டது. அன்றைய சேம்பர் தலைவர் கவர்னருடன் இணைந்து கொடியசைத்து இதனைத் தொடங்கி வைத்தார்.

1860ல் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரால், இங்கிலாந்தில் பஞ்சுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தில் பஞ்சு அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டதால், இங்கிருந்து ஏற்றுமதியானது. இதுதான் மெட்ராஸில் ஏற்பட்ட முதல் வணிக வாய்ப்பு எனலாம்.

தொடர்ந்து 1868ம் வருடம் சேம்பர் வணிக வளர்ச்சிக்குத் துறைமுகம் அவசியம் என்பதை உணர்ந்து அதற்கும் கோரிக்கை வைத்தது. இதற்குக் காரணம், கப்பலில் இருந்து சரக்குகளைக் கரைக்குக் கொண்டு வரும் மசுலா படகுகளின் உரிமையாளர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினதுதான்!
அன்று துறைமுகம் இல்லாததால் மெட்ராஸ் வரும் கப்பல்கள் நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு நின்றுவிடும். பின்னர், உள்ளூர் மசுலா படகுகளின் வழியே சரக்குகள் கரைக்குக் கொண்டு வரப்படும்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட மசுலா படகுக்காரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகக் கட்டணம் வசூலித்தனர். ‘துறைமுகம்
வந்தால்தான் புயல், மழை போன்ற பருவநிலைகளிலிருந்தும், மசுலா படகு உரிமையாளர்களிடமிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்’ என்றது சேம்பர்.
இதை உணர்ந்து 1881ம் வருடம் துறைமுகம் கட்டப்பட்டது. அது இல்லையென்றால் இன்றைய சென்னையில் இவ்வளவு வணிகம் இருந்திருக்காது. அதேபோல், அன்று சேம்பர் இல்லையெனில் மெட்ராஸில் இவ்வளவு வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது...’’ என சேம்பரின் செயல்பாடுகளை விவரித்த ராம்குமார் ராமமூர்த்தி, தொடர்ந்தார்.

‘‘துறைமுகம் வந்தபிறகு ஆயில், ஆட்டோமொபைல் எனப் பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1911ம் வருடம், முதல்முறையாக மெட்ராஸ் அரசு தொழில்துறைக்கென ஓர் இயக்குனரகத்தை உருவாக்கியது.பின்னர், சேம்பருக்கு மெட்ராஸ் சட்டமன்றத்தில் இரண்டு இடமும், துறைமுக ட்ரஸ்ட்டில் ஐந்து இடமும், மாநகராட்சியில் மூன்று இடமும் ஒதுக்கப்பட்டன. இந்த இடங்களுக்கு சேம்பரிலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தவிர, மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டிலும் சேம்பர் உறுப்பினர்களுக்கு இடங்கள் அளிக்கப்பட்டன.இதையடுத்து, அமால்கமேஷன்ஸ், முருகப்பா, டிவிஎஸ் குழுமத்தினர் உள்ளிட்ட பலரும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு
அடித்தளமிட்டனர்.ஆனால், 1964 வரை சேம்பரின் தலைவர்களாக ஆங்கிலேயர்களே இருந்து வந்தனர். அதன்பிறகு, சேம்பரின் முதல் இந்தியத் தலைவராக ஏ.எம்.முருகப்பச் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்தில், பின்னி அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்தச் சேம்பர் 1869ம் வருடம், முதல் பீச் லைனில் இருந்த கட்டடத்திற்கு நகர்ந்தது. பின்னர், 1921 முதல் 1924 வரை இம்பீரியல் வங்கி, மவுண்ட் ரோடு, பெஸ்ட் அண்ட் கோ, பாரி அண்ட் கோ, மெர்க்கன்ைடல் வங்கி எனப் பல்வேறு இடங்களில் இருந்து செயல்பட்டது.

இப்போது நிறைவாக நந்தனம் வந்திருக்கிறோம். சுமார் 153 வருடங்கள் வரை சேம்பர் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கியது. 1988ம் வருடம் சேம்பருக்கு சொந்தக் கட்டடம் வேண்டுமென ஏ.எம்.எம்.அருணாசலம், சிவசைலம் ஆகியோர் தலைமையில் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குழுவின் முயற்சியால் 1991ம் வருடம் நந்தனத்திலுள்ள இந்த சொந்தக் கட்டடத்திற்கு வந்தோம்...’’ எனச் சேம்பரின் கதையைப் பகிர்ந்தவர், சேம்பரின் இப்போதைய செயல்பாடுகளை விவரித்தார்.  

‘‘முந்நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவும், சீனாவும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐம்பது சதவீதத்தை வகித்தன. ஆனால் இன்று, இந்தியாவின் பங்கு என்பது வெறும் சொற்ப இலக்கமே. இதற்கு சில காரணங்கள் உள்ளன.முதலில், உற்பத்தித் துறையில் நாம் பின்தங்கியுள்ளோம். தொழில்நுட்பம் சார்ந்த சிப், செமி கண்டக்டர், கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் கிடையாது.

மாறாக, அதிகளவு எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். அதனால், மனித சக்தி தேவைப்படும் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும். அதேநேரம், தொழில்நுட்ப நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும்.
இதற்காக, இன்று சேம்பர் இரண்டு ஆய்வுகளைச் செய்து வருகிறது. ஒன்று கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில முக்கிய இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்கள் பற்றியது. அரசின் இந்தத் தொழிற்பேட்டைகள் மீண்டும் புத்துயிர் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

அது முடிந்ததும் அரசுக்கு அறிக்கையாக அளிக்க இருக்கிறோம். இரண்டாவது, அடுத்ததலைமுறையின் Financial Hub ஆக சென்னையை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்தானது.ஏற்கனவே, இந்தத் தலைப்பில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசினோம். அதை இன்னும் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளோம்.

இன்று சேம்பர் ஐந்து குறிக்கோள்களுடன் செயல்படுகிறது. முதலாவதாக அரசுக்குக் கொள்கைகள் சார்ந்து ஆலோசனை வழங்குதல். அடுத்து, Knowlegde Sharing. அதாவது, சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் நிர்வாகிகளை இங்கே அழைத்து வந்து அனுபவங்களைப் பேச வைக்கிறோம். தொழில் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

மூன்றாவதாக, நெட்வொர்க்கிங். நிறுவனங்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறோம். நான்காவதாக, ஸ்கில் டெவலப்மென்ட். இதற்காக ஆறு வாரம், எட்டு வாரம் என சில கோர்ஸ்கள் நடத்தி வருகிறோம்.இதில், லாஜிஸ்டிக் கோர்ைஸசென்னைப் பல்கலைக்கழகத்தின் சான்றிதழுடன் நடத்து
கிறோம். ஐந்தாவதாக, இருதரப்பு மேம்பாட்டுக்கான வழிமுறைகள் பற்றியது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து நாட்டு தூதர்களைச் சந்தித்துள்ளோம். இதன்மூலம் அந்தந்த  நாடுகளில் ஏற்றுமதிக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றியும், இங்கே உள்ள வாய்ப்புகள் குறித்தும் பரிமாறிக் கொள்கிறோம்.

இப்படியான குறிக்கோளுடன் எங்கள் பணிகள் தொடர்கிறது. இப்போது சேம்பரில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தவிர, சமீபத்தில் தமிழக கவர்னர் சேம்பரிலிருந்து ஒருவர் பல்கலைக்கழகக் குழுவில் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படியாக, நான் எம்.ஜி.ஆர்.மெடிக்கல் பல்கலைக்கழகத்தின் செனட் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறேன்.

தவிர, இங்கிருந்து ஐம்பது நிறுவனங்களின் தலைவர்களை சென்னையைச் சுற்றியுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் செனட், சிண்டிகேட் மற்றும் அகடமி கவுன்சிலில் உறுப்பினர்களாக்க முயற்சி எடுத்து வருகிேறாம். ஏனெனில், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களிலிருந்து யாரும் இங்ேக வருவதில்லை என்கின்றன. அதேபோல், தொழில் நிறுவனங்களும் தரமான மாணவர்கள் கிடைப்பதில்லை என வருத்தப்படுகின்றன. இப்படி மாற்றி மாற்றி விரல் காட்டுவதில் அர்த்தம் இல்லை.

அதனால், நாங்களே தலைவர்களைத் தேர்ந்தெடுத்து கல்வி நிறுவனங்களுடன் பணியாற்ற முயற்சித்து வருகிறோம். இதன்மூலம், கல்லூரிப் பாடத்திட்டத்தில் என்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம்? ஆசிரியர்கள் கற்றுத் தரும் முறையில் என்னவிதமான மாற்றங்கள் தேவை என்பன போன்றவற்றை ஆலோசிக்க ஏதுவாகும். இன்றைய தேவைக்கேற்ப மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

தவிர, பெண்களுக்கென ‘உமன்ஸ் டைரக்டர்ஸ் ஃபோரம்’ என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். இதை கடந்த மூன்று வருடத்துக்கு முன்பு சேம்பரின் துணைத் தலைவராக இருந்த காயத்ரி ராம் முன்னெடுத்தார். இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வார கோர்ஸ் நடத்தினோம். இதை முடித்தவர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் இண்டிபெண்டன்ட் இயக்குநராக வாய்ப்புள்ளது.

இதேபோல், புதிய தொழில் முனைவோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறோம். தொடக்க நிலையில் உள்ள சிக்கல்கள், பிரச்னைகளை எப்படிக் களைவது என்பது போன்ற விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இப்படி தொழில் சார்ந்த விஷயங்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்ட்ஸ்ட்ரி அளப்பரிய பணியை தொடர்ந்து ஆற்றி வருகிறது...’’ என உற்சாகமாக முடித்தார் ராம்குமார் ராமமூர்த்தி.                                  

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா