அடுத்த கமல்! ராசுக்குட்டியின் கதை‘‘நயன்தாரா மேமும் பேசல... நானும் பேசல! அவங்க பேசினாதானே நான் பேச முடியும்?’’ புருவத்தை உயர்த்தியபடி கேட்கிறார் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஐரா’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக வெளுத்து வாங்கிய அஷ்வந்த். ‘‘என் பேரு அஷ்வந்த். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு அப்புறம் எல்லாரும் என்னை ராசுக்குட்டினுதான் கூப்பிடறாங்க! இப்ப ரெண்டாவதுல இருந்து மூணாவது போறேன்!

நடிக்கணும்னு எல்லாம் நினைச்சதே இல்ல. எல்லாம் அப்பாதான். அவர் பேரு அசோக்குமார். அம்மா, அகிலாண்டேஸ்வரி. வெப் டிசைனரா அப்பா வேலைபார்க்கறார்.ஒரு தனியார் சேனல்ல ஆக்டிங் ஷோல கலந்துகிட்டேன். அப்புறம் சீரியல்ல நடிச்சேன். திடீர்னு ஒருநாள் அப்பா ‘வாடா’னு ஓர் இடத்துக்கு கூட்டிட்டுப் போனார். அங்கதான் தியாகராஜன் குமாரராஜா சாரை பார்த்தேன்.

ரொம்ப நாள் பழகினவர் மாதிரி ‘எப்படிடா இருக்கே’னு கேட்டார்! ‘நல்லா இருக்கேன்’னு சொன்னேன்! கொஞ்ச நேரத்துலயே ஓகே சொல்லி டயலாக்ஸ் பேப்பரை கொடுத்தார். வீட்ல அப்பா அதைப் படிச்சு என்னை பிராக்டீஸ் பண்ண வைச்சார்.உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..? விஜய் சேதுபதி அங்கிள் எனக்கு ரிமோட் கார், பில்டிங் பாக்ஸ், அப்பறம் டிரம் செட்னு மூணு கிஃப்ட் கொடுத்தார்...’’ கண்கள் விரிய சொல்லும் அஷ்வந்த் என்கிற ராசுக்குட்டி ஐபிஎல் விளம்பரம் தோனியுடன் செல்ஃபி, படிப்பு, நடிப்பு என செம பிசி!

‘‘எங்களுக்கு சென்னைதான் சொந்த ஊரு...’’ புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் அசோக்குமார். ‘‘என் மனைவிதான் இதையெல்லாம் ஆரம்பிச்சு வைச்சது! ஒரு போஸ்டரைப் பார்த்துட்டு சேனல்ல போட்டி இருப்பதை சொன்னாங்க. அப்ப ஆரம்பிச்சதுதான் எங்க மகனோட பயணம். சீரியல்ல அவன் நடிச்சப்ப படிப்பு கொஞ்சம் பாதிக்கப்பட்டது. வேலையும் அதிகம். அவனைக் கஷ்டப்படுத்தக் கூடாதுனு நாங்க உறுதியா இருந்ததால வேற ஆப்ஷன் யோசிச்சோம்.

அப்பதான் ‘சூப்பர் டீலக்ஸ்’ அசிஸ்டென்ட் டைரக்டர் மூலமா ஆடிஷன்ல இவனை கலந்துக்க வைச்சேன். நிறைய குழந்தைங்க வந்திருந்தாங்க. ஆனா, தியாகராஜன் குமாரராஜா சார் இவனைத்தான் செலக்ட் பண்ணினார்.

டயலாக்ஸ் பேப்பரை பார்த்தப்ப பயமா இருந்துச்சு. இவனால சமாளிக்க முடியுமானு யோசிச்சேன். ஆனா, அசால்ட்டா செஞ்சு க்ளாப்ஸ் வாங்கிட்டான்! ‘ஐரா’, ‘சூப்பர் டீலக்ஸ்’னு ஆரம்பமே இவனுக்கு அசத்தலா அமைஞ்சிருக்கு...’’ பெருமையுடன் சொல்லும் அசோக்குமார், இப்போது ‘காட்ஃபாதர்’ மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் அஷ்வந்த் நடித்து வருவதாக பட்டியலிடுகிறார்.
அடுத்த கமல்..!                   

ஷாலினி நியூட்டன்