இனி நடிக்காதீங்க..! சமந்தாவை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்ஆத்தி... சமந்தாவா இது? நன்றாக யோசித்துத்தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்தாரா?

கோலிவுட், டோலிவுட், பாலிவுட்... என எல்லா வுட்டிலும் இதுதான் பேச்சு. காரணம், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் ஏற்ற வேம்பு கேரக்டர்.
‘‘முதல்லயே சொல்லிடறேன். கதையைக் கேட்டுதான் நடிக்கவே ஒப்புக்கிட்டேன். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நிறுத்தி நிதானமா ஒண்ணுவிடாம மொத்தக் கதையும் சொன்னார். பக்குனு இருந்துச்சு. எல்லா நடிகைகளுக்குமே வேம்பு கேரக்டர் சவால்தான். அதுல மட்டும் ஜெயிச்சுட்டா காலத்துக்கும் நடிகையா நிற்கலாம்.

ஆனா, என்னால வேம்புக்கு நியாயம் செய்ய முடியுமா..? இந்தக் கேள்விதான் சுத்தி சுத்தி வந்தது. டைரக்டர் ‘உங்களால முடியும்’னு சொன்னார். என் உள் மனசும் ‘செய்’னு சொல்லிச்சு. ஓகே சொல்லிட்டேன்...’’ கண்சிமிட்டும் சமந்தாவுக்கு எட்டு திசைகளில் இருந்தும் வாழ்த்து மழை பொழிந்துகொண்டே இருக்கிறது.

‘‘சத்தியமா இதை எதிர்பார்க்கலை. விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் மேம்... இவங்களோடு சேர்த்து என்னையும் ரசிகர்கள் பாராட்டறாங்கனா அதுக்கு நான் காரணமில்ல. வேம்பு கேரக்டரை உருவாக்கி திரைல கொண்டு வந்த டைரக்டருக்குதான் முழு கிரெடிட்டும் போய்ச் சேரணும்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் சமந்தா, வேம்பு போர்ஷனின் க்ளைமாக்ஸ்தான் தனக்கு நடிக்கவே நம்பிக்கையைக் கொடுத்தது என்கிறார்.

‘‘குறும்புக்கார நாயகி கேரக்டர்ல ஈசியா நடிச்சுடலாம். பெயரும் வாங்கிடலாம். ஆனா, வேம்பு..? கஷ்டம்தான். வேற ஒருத்தர் கூட உறவு கொண்டு அதனால அவர் மரணமடைந்து... இதை கணவன்கிட்ட சொல்லி... நிச்சயமா ஈசி இல்ல. குறிப்பா எனக்கு. ஏன்னா, எனக்கு பரிச்சயமில்லாத கேரக்டர் அது.ஆனா, உலகளவுல பல நடிகைகளுக்கு இந்த மாதிரி கேரக்டர்ஸ்தான் பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்திருக்கு. இப்பவும் ஹாலிவுட், பாலிவுட்ல வலிமையான பெண் கேரக்டர்ஸ் படங்கள் வருது. அஃப்கோர்ஸ்... தமிழ்லயும்தான்.

பட், என்னைத் தேடி முதன் முதல்ல இப்பதான் இப்படியொரு கேரக்டர் வந்திருக்கு. அதாவது என்னால முடியும்னு நம்பிக்கையோட ஒரு டைரக்டர் அணுகியிருக்கார்! மறுக்கவே இல்ல... ஆரம்பத்துல வேம்புவை வெறுக்கிற எல்லாருமே கடைசில அவளை ஏத்துப்பாங்க. இந்த ஜஸ்டிஃபிகேஷனை கதையா சொன்னப்பவும் சரி... திரைலயும் சரி... தியாகராஜன் குமாரராஜா பக்காவா கொண்டு வந்திருக்கிறார்.

படத்தைப் பார்த்தவங்களுக்கு தெரியும்... கணவனுக்குத் தெரியாம தனது முன்னாள் காதலனோடு, அதுவும் பரஸ்பரம் சம்மதத்தோட உறவு கொள்ளும் வேம்பு, போலீஸ் அவளைப் பயன்படுத்திக்க நினைக்கும்போது முடியாதுனு மறுக்கறா. இந்த இறுதிக்கட்டம்தான் வேம்பு கேரக்டரை ஜஸ்டிஃபை பண்ணுது. அந்த நம்பிக்கைலதான் நானும் அந்த கேரக்டர்ல நடிச்சேன்...’’ திருப்தியுடன் சொல்லும் சமந்தா, இதற்கு முன்பும் புதுமையான முயற்சி கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் சில தோல்வி அடைந்திருக்கின்றன. ஆனா, அதற்காக, தான் வருத்தப்படவில்லை என்கிறார்.

‘‘இதுவரை நான் நடிச்ச எல்லாப் படங்களுமே நல்ல சினிமாக்கள்தான். அதுக்காக பெருமைப்படறேன். மத்தபடி வெற்றி, தோல்விகள் சகஜம். ஆனா, ஒண்ணு. மூணு வருஷங்களுக்கு முன்னாடி வேம்பு கேரக்டர் என்னைத் தேடி வந்திருந்தா இந்தளவுக்கு நான் நடிச்சிருப்பேனா... அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருப்பேனானு தெரியாது. ஏன்னா, அப்ப நான் முதிர்ச்சி அடையலை.

தவறு செய்யாம யாருமே வளர முடியாது! என் கரியர்ல நான் செய்த தவறுகள்தான் இப்ப இந்த நிலைல நான் இருக்கக் காரணம். அவ்வளவு ஏன்... தப்புகள்தானே நம்மை கற்கவே வைக்குது?!’’ கேட்கும் சமந்தா, திருமண வாழ்வே தனக்கு பெரும் வலிமையைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘யெஸ்... யெஸ்... யெஸ். அமைதியை, பாதுகாப்பை திருமணம்தான் எனக்குக் கொடுத்திருக்கு. நடிப்பு சார்ந்து நான் எடுக்கும் முடிவுகள்ல என் கணவர் உட்பட புகுந்த வீட்ல யாரும் தலையிடறதில்ல. குடும்பம் தரும் ஆதரவை இப்பதான் முழுமையா உணர்றேன்.

இதுக்காகத்தான் இத்தனை நாட்கள் ஏங்கினேன்!’’ நெகிழும் சமந்தாவை டுவிட்டரில் பலர் ‘இனி நடிக்காதீர்கள்...’ என வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். ‘‘கடவுளே... அது பாராட்டுங்க! வேம்பு கேரக்டருக்கு இதைவிட சிறந்த பாராட்டு கிடைக்க முடியாது! ‘உங்க கரியர்ல பெஸ்ட்டை கொடுத்துட்டீங்க... போதும்... சாதாரண படங்கள்ல நடிச்சு அதைக் கெடுத்துக்காதீங்க’னு சொல்றாங்க.அதையெல்லாம் படிக்கிறப்ப அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நிச்சயம் இனி சாதாரண கேரக்டர்ல நடிக்க மாட்டேன்...’’ கண்கள் மின்ன சொல்லும் சமந்தா, ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இப்போது நடித்து வருகிறார்.

‘‘இந்த ஆஃபர் வந்ததுமே தியாகராஜன் குமாரராஜாவைத்தான் தொடர்பு கொண்டேன். ‘நீங்க இதை அக்செப்ட் பண்றதால எதையும் இழக்கப் போறதில்ல... மாறா நிறைய பாராட்டை பெறத்தான் போறீங்க. ஜானு மாதிரி சிக்கலான கதாபாத்திரம் கிடைக்கறது ஈசி இல்ல. பிரேம்குமார் அரிதான டைரக்டர். அவர் டைரக்‌ஷன்ல நடிக்கிறப்ப நிறைய தெரிஞ்சுப்பீங்க... தவற விடாதீங்க’னு சொன்னார்.அக்செப்ட் பண்ணிட்டேன். த்ரிஷா மாதிரி என்னால நடிக்க முடியுமானு தெரியலை. ஆனா, ஜானு கேரக்டருக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு நியாயம் செய்வேன்!’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் சமந்தா.

சுப்புலட்சுமி