போலி வாக்காளர்கள்! ஷாக் ரிப்போர்ட்நம் நாட்டில் எத் தனை பிரச்னைகள் இருந்தாலும் நாம் தலை நிமிர்ந்து சொல்லும் விஷயம் ஒன்று உண்டென்றால் அது வாக்குரிமைதான். எவ்வளவு மோசமான அரசியல்வாதிகள், கட்சிகள் இங்கு வந்தாலும் மக்கள் சக்தி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அவர்கள் செயல்பாடுகளுக்கான பதிலைச் சொல்லிவிடும்.

மக்கள் நலனை மதிக்காமல் நாடாண்ட எத்தனையோ பெருந்தலைகளைக்கூட தயங்காமல் ஓரங்கட்டிய வரலாறு எல்லாம் இங்கு உண்டு. வாக்குரிமை எனும் சக்தி வாய்ந்த ஆயுதம் மக்களிடம் இருக்கும் பயத்தில்தான் பல அரசியல்வாதிகள் கொஞ்சமேனும் ஊருக்காக வேலை செய்கிறார்கள் அல்லது வேலை செய்வதுபோல பாவனையாவது செய்கிறார்கள்.

ஆனால், போலி வாக்காளர்கள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்வதாக உள்ளது. வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதில் நிகழும் நடைமுறைக் கோளாறுகள், தவறுகளில் தொடங்கி அரசியல் கட்சிகளின் கோல்மால் வேலைகள் வரை பல காரணிகள் இத்தகைய போலி வாக்காளர்களை உருவாக்குகின்றன.

இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னை மக்கள் தொகைப் பெருக்கம்தான். அரசு எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் காட்டாறு போல் பிரவாகித்துப் பெருகிக்கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தை அணை போட இயலவில்லை. இதனால் தேர்தல் கமிஷனுக்குத்தான் பெரும் தலைவலி. ஒவ்வோர் ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணியை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுச் செய்ய வேண்டியதாய் உள்ளது.

மேலும், இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் மக்கள் திரளில் கணிசமானோர் ஒரே இடத்தில் தங்கி இருப்பதுமில்லை. பிழைப்பு தேடி வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் எளிய மனிதர்கள் நிறைந்த பூமி இது.

அப்படி அவர்கள் செல்லும்போது வாக்காளர் பட்டியலைத் திருத்தி அமைக்க வேண்டியதாக உள்ளது. சமீப காலமாக தமிழகத்துக்கும் பிற தென்னிந்திய மாநிலங்களுக்கும் வரும் வட மாநிலத்தவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒவ்வோர் ஆண்டும் கணிசமான அளவில் அவர்கள் இங்கு வந்து பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படி வரும் அவர்கள் குடியேறிய ஊரில் ஒரு வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிக் கொள்கிறார்கள். இவர்களில் சிலர் பழைய பூர்வீக ஊரின் வாக்காளர் அடையாள அட்டையை முகவரி மாற்றம் செய்யாமல் இங்கு புதிதாக ஒன்றை வாங்கிக் கொள்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் என்னதான் கண்ணும் கருத்துமாக வாக்காளர் பட்டியலில் இப்படி குடி மாறிப் போனவர்களின் பெயரை நீக்கினாலும் சில விடுபடல்கள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த நடைமுறைக் குறையை அரசியல்வாதிகள் தவற விடாமல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும் நிகழ்கிறது.

வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு என்பது அப்படி ஒன்றும் தேர்தல் ஆணையம் ரகசியமாகச் செய்யும் வேலையும் அல்ல. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பினர் தேர்தல் கமிஷனின் இந்த வேலையை கண்கொத்திப் பாம்பாக கவனிக்கவே செய்வார்கள். ஏதேனும் ஒரு தரப்பு இதில் ஏதும் தில்லாலங்கடி வேலைகள் செய்ய முயன்றால் இன்னொரு தரப்பினர் உடனடியாகப் புகார் கொடுத்துவிட முடியும்.

ஆனால், அப்படி இருந்தும் போலி வாக்காளர்கள் பெருக்கம் என்பது கிட்டத்தட்ட இந்தியா முழுதுமே பரவலாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தேர்தல் கமிஷனே ஆளும் தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும்கூட எதிர்க்கட்சிகள் வைக்கின்றன.

தேர்தல் ஆணையம் இதில் நேரடியாகத் தவறு செய்கிறது என்பதைச் சொல்வதற்கில்லை என்றாலும் ஆளும் கட்சியின் தரப்பு கொடுக்கும் அழுத்தத்தை அவர்களால் முழுமையாக நிராகரிக்கவும் முடியாது என்ற உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி; இப்படிக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியானால் என்ன நடக்கும்? அப்போதும் அதே குற்றச்சாட்டுகள்தான் தொடரும். ஆட்சி மாறினால் ஆட்கள் மாறுவார்களே தவிர இந்தக் காட்சி மட்டும் மாறாது. இதுதான் இருப்பதிலேயே மிக மோசமான விஷயம்.

ஆளும் கட்சியாக இருக்கும்போது போலி வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதைப் பற்றி எந்த உறுத்தலும் இல்லாமல், எதிர்க் கட்சியானவுடன் தவறாகத் தெரியும் என்றால் இவர்கள் தங்கள் நலனுக்கு மேல் எதையும் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்பதே பொருள். மேலும் இவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதோ அதன் உயர்வான விழுமியங்கள் மீதோ எந்த மரியாதையும் இல்லை என்றும் புரிந்துகொள்ள வேண்டியதாய் உள்ளது.

இந்தியாவில் போலி வாக்காளர் சேர்ப்பு பற்றிய குற்றச்சாட்டு எழாத மாநிலங்களே இல்லை. குறிப்பாக, பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவற்றில்தான் அதிகமான புகார்கள் எழுகின்றன. கடந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசத்தில் அறுபது லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக அதிர்ச்சியான புகார் ஒன்றை வெளியிட்டது. தேர்தல் ஆணையம் உடனடியாக குழு ஒன்றை நிறுவி இதை விசாரித்தது.

முடிவில், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மிகச் சில வாக்காளர்கள் மட்டும் இறந்திருக்கிறார்கள்; குடிமாறிப் போயிருக்கிறார்கள்; அவ்வளவே என்று ஆணையம் சொன்னது. இது நம்பும்படியாக இல்லை என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.

இரு மாதங்களுக்கு முன்பு மகாராஷ்ட்ர மாநிலத்தின் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் நிறைந்துள்ளார்கள் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆறுக்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள் நிரம்பியுள்ளார்கள். இவர்களை ஆளும் பிஜேபி அரசுதான் உள்ளடி வேலை செய்து சேர்த்துள்ளது என்று பகிரங்கமாகச் சொன்னார்கள். இதையும் தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது.
இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக தமிழகம்தான் இதிலும் சாதனை புரிந்துள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலின் போதே ஐம்பத்தேழு லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என்று திமுக பகிரங்க குற்றம்சாட்டியது. இவ்வளவு பெரிய எண்ணிக்கை என்பது கற்பனைகூட செய்ய முடியாதது என்று எதிர்க்கட்சிகளிலேயே சிலர்கூட சொல்லிச் சிரித்தார்கள். கடந்த ஆண்டு வாக்காளர் சரி பார்ப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிட்டபோது சுமார் பதினைந்து லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இந்த பதினைந்து லட்சம் பேர் எப்போது, யாரால் சேர்க்கப்பட்டார்கள்? இவர்களுக்கும் ஆளுங்கட்சிக்கும் ஏதும் தொடர்பு உண்டா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடையே இல்லை.போலி வாக்காளர்கள் என்பது ஜனநாயகத்துக்கு ஏற்படும் புற்றுநோய். பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் எளிய மக்களின் கையில் இருக்கும் ஒரே அதிகாரமான வாக்குரிமை என்பதையும் முடமாக்கி ஜனநாயகம் என்பதையே கேலிக் கூத்தாக்கி, அரசு என்பதை தங்கள் நூலுக்கு ஆடும் பொம்மையாக மாற்றும் மாபெரும் அயோக்கியத்தனம். தேர்தல் ஆணையம், நீதி மன்றங்கள் போன்றவை இந்தக் கீழ்மையை கடுமையாக ஒடுக்க வேண்டும். இல்லாவிடில் இந்த தேசமே நாசமாகிவிடும்.

இளங்கோ கிருஷ்ணன்