நியூஸ் வியூஸ்-அரசுதான் கோயில்களை நிர்வகிக்கணும்அப்படி ஒரு காலம் இருந்தது.இறைவனின் இல்லம் என்று நம்பப்படும் திருக்கோயில்கள், அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. அதாவது இறைவன் என்பவன் மன்னர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும், பாளையக்காரர்களுக்கும் சொந்தமானவன்.
அவர்கள் அனுமதிப்பவர்கள் மட்டுமே இறைவனை தரிசிக்க முடியும். மற்றவர்கள் கோயிலுக்கு வெளியே நின்று ஒரு கும்பிடு போட்டுவிட்டு நகர வேண்டியதுதான். அதிலும் பிற்படுத்தப்பட்ட / ஒடுக்கப்பட்ட இனத்தோருக்கு கோயிலுக்குள் நுழைவது என்பதே பெரும் கனவாக இருந்த காலம் அது.

நந்தனாரை கோயிலுக்குள் விடாமல் அவர் வெளியே நின்றவாறே இறைவனை தரிசிக்க முற்படும்போது, குறுக்கே நின்ற நந்தி அவருக்காக வழிவிட்டு இறைவனைக் காண்பித்த மாதிரியான நெகிழ்ச்சியான கதைகள் எல்லாம் இங்கே ஆயிரம், ஆயிரம்.கோயிலுக்குள் யார் வரலாம், யார் வரக்கூடாது என்று சட்டம் போட்டதோடு இல்லாமல், காலம் காலமாக கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளையும் அதிகாரத்தில் இருந்தவர்களே அனுபவிக்கத் தொடங்கினார்கள்.

ஆங்கிலேயர்கள் இங்கே ஆட்சி புரிய வந்தபோது அவர்களுக்கு முதல் அதிர்ச்சியாக அமைந்தது இங்கே நிலவிய சாதிய ஒடுக்குமுறை சமூகம்தான்.
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்கிற நாகரிகம் நிலவிய மண்ணில் இருந்து வந்ததாலோ என்னவோ, கோயில்களில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்தினருக்கு கிடுக்கிப்பிடி போட்டனர்.

அந்தந்தப் பகுதி அரசாங்கத்தின் நிர்வாகிகளிடமே கோயிலை பராமரிக்கவும், தொடர்ந்து நடத்தவும் பொறுப்புகளை அளித்தனர்.இதெல்லாம் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கதை.1810 மற்றும் 1817ல் ஆங்கிலேயர் ஆட்சி அடுத்தடுத்து போட்ட சட்டங்களின் மூலமாக கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கோயில் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டது.தம் சமயம் சாராத கோயில்களை வெள்ளையர்கள் பராமரிப்பது, இங்கே மதம் தொடர்பாக ஊழியம் செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு நெருக்கடி கொடுத்தது. எனவே அவர்கள் கலகக்குரல் எழுப்பினர்.

அப்போது கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த லண்டனில் நல்ல செல்வாக்கு.மேலிடமும் இங்கிருந்தவர்களை, ‘தேவையில்லாத வேலை உங்களுக்கு எதுக்கு?’ என்று அடிக்கடி கடிந்துகொள்ள, கோயில் நிர்வாகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று கொண்டனர்.

நம்முடைய கோயில்கள் மீண்டும் இங்கிருந்த அதிகார வர்க்கத்தினர் கைக்கு போய்ச் சேர்ந்தது. எப்போது வேண்டுமானாலும் கோயில்களில் அரசாங்கம் நுழையலாம் என்கிற நிலையின் காரணமாக கோயில் சொத்துகள் கணிசமாக சூறையாடப்பட்டன. நிர்வாகத்தில் ஊழல் மலிந்தது.

கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு நீதி வழங்கும்படி பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தவாறே இருந்தனர். 1872ல் தொடங்கி சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என 1908 வரையில் கோயில்களை அரசு நிர்வகிப்பது தொடர்பான மசோதாக்கள் 7 முறை கொண்டுவரப்பட்டாலும், ஏனோ அது சட்டமாகாமலேயே இருந்தது. அரசாங்கத்திடம் செல்வாக்கு மிகுந்திருந்த உயர்சாதியினர் மசோதா வடிவத்தில் இருந்தபோதே முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்ததால் இந்த நிலைமை.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது 1925ல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ‘மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1927’ உருவானது. கோயில்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த தனியார் விரட்டியடிக்கப்பட்டனர். ஒரு தலைவர், மூன்று உறுப்பினர்கள் என்று அமைந்த வாரியம், நிர்வாக அதிகாரிகளை நியமித்து கோயில்களைப் பராமரிக்கத் தொடங்கியது.

இந்தக் காலக்கட்டத்தில் கோயில்களில் ஒடுக்கப்பட்டோர் நுழைவதற்கான உரிமைப் போராட்டங்கள் பரவலாக நடந்துகொண்டிருந்தன என்கிற வரலாற்றைப் பொருத்திப் பார்த்தால், அரசு தலையிட வேண்டியதின் அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது புரியும்.அப்போது கோயில் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டோர், இந்து சமயத்தை சாதிவேறுபாடின்றி எல்லோருக்குமானதாக பரவலாக்க பாடுபட்டனர்.

உதாரணத்துக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு, ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு ஆதரவாக, அதிகார வர்க்கத்துக்கு எதிராக நின்று போர் புரிந்தார். உயர்சாதியினர் அவர் மீது ஏராளமான பொய்ப்புகார்களையும், வழக்குகளையும் தொடுத்தனர்.அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி, மதுரை கோயில் விவகாரங்களை தக்க ஆலோசகர்களை ஆய்வு செய்ய வைத்து ஆர்.எஸ்.நாயுடுவின் உயரிய நோக்கத்தை உணர்ந்துகொண்டார். நாயுடுவைக் காப்பாற்ற அவசர சட்டம் ஒன்றையே ராஜாஜி ஏற்படுத்தினார் என்றால், 90 ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய சமூகச்சூழலைப் புரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸைச் சேர்ந்த வைத்தியநாத அய்யர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தோரின் போராட்டங்கள் வெற்றி பெற்று, ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த மக்கள், ஒருவழியாக மதுரை கோயிலுக்குள் நுழைய முடிந்தது. அவர்களுக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்று கவுரவப்படுத்தினார் ஆர்.எஸ்.நாயுடு.

மதுரையில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் பல்வேறு சரித்திரப் பிரசித்தி பெற்ற கோயில்களில் அறநிலைய வாரிய நிர்வாகிகள், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு கோயில்களைப் பாதுகாத்தனர். அதுநாள்வரை கோயில்களோடு தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான மக்களைக் கோயில்களோடு பிணைத்தனர்.

அறநிலைய வாரியத்தை மேலும் வலிமைப்படுத்துவதற்காக 1942ல் ஓய்வுபெற்ற நீதிபதி பி. வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆறு பேர் அவரது குழுவில் ஆண்டுக்கணக்கில் பணியாற்றி கோயில் நிர்வாகத்தில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கத்துக்கு விரிவான ஓர் அறிக்கையை தயார் செய்து கொடுத்தனர்.

இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே 1951ல் இந்து சமய அறநிலைய நிர்வாகத் துறை என்கிற பெயரில் நேரிடையாக அரசுத்துறையே அமைந்தது. வாரியம், துறையான வரலாறு இதுதான். இதைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1959’ கொண்டுவரப்பட்டு, அறநிலையத்துறையின் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்குப் பின்னரே நிர்வாக அதிகாரிகளும் அரசு ஊழியர்கள் ஆனார்கள். கோயில் நிர்வாகத்தை அறங்காவலர்களின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையின் அடிப்படையில் அறநிலையத்துறை நடைமுறைப்படுத்துகிறது.கோயில்களை அரசாங்கம் நிர்வகிக்கிறது என்பது வெறுமனே நிர்வாகக் காரணத்துக்காக மட்டுமல்ல. இறைவன் எல்லோருக்கும் சமமானவன் என்பதால் கோயில்களில் சமூகநீதியைப் பேணவேண்டிய கடமையும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

மேலும் கோயில்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையின் அடிப்படையில் அந்தந்த பகுதி செல்வாக்கான பிரமுகர்களின் தனி நிர்வாகத்தில் விட்டால் ஊழலும், ஒடுக்குமுறையும் தலைவிரித்து ஆடக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எல்லா அரசுத்துறைகளிலும் இருக்கக்கூடிய நிர்வாக பலவீனங்களும், பிரச்சினைகளும் அறநிலையத்துறையிலும் உண்டுதான். அதற்காக அரசாங்கம் தன் பொறுப்பைத் தட்டிக் கழித்தால் நம் சமூகம், மீண்டும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சென்றுவிடும். திரும்பவும் ஆலயநுழைவுப் போராட்டங்கள் நடத்த வேண்டிய அவலங்களும் ஏற்படலாம்.  

யுவகிருஷ்ணா