மனிதன் என்பவன் Danger ஆகலாம்!



மனிதன் நாகரிகமடைந்து சில ஆயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. இன்று உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிக்கும் மனிதர்கள் நவீன வாழ்க்கைக்குள் வந்துவிட்டாலும் சூரிய ஒளிகூடப் புக முடியாத அடர்ந்த வனங்களிலும், யாரும் நெருங்கவியலாத மலைக்காடுகளிலும் இன்னமும் சில பழங்குடிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நவீன வாழ்க்கை சீரழிக்காத வெள்ளந்தியான அந்த ஆதிவாசிகளில் சிலர் ஆபத்தானவர்களும்கூட! நாமாகச் சென்று அவர்களைத் தொந்தரவு செய்யாதவரை அவர்களாக நம்மைத் தேடி வரப்போவதில்லை.

காடுதான் அவர்கள் உலகம்;  இயற்கைதான் அவர்களின் அன்னை என்று சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வெளியுலக மனிதர்கள் யாரையுமே சந்திக்க விரும்பாதவர்கள் அவர்கள். அதையும் மீறி அவர்கள் வாழிடங்களில் நுழைந்தாலோ அவர்களைச் சந்திக்க முயன்றாலோ அவர்கள் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். அப்படியான மூர்க்கமான ஆதிவாசிகள் சிலரைப்பற்றிப் பார்ப்போம்.

யெய்ஃபோ - வரவேற்கும் அம்பு மழை!

கூகுள் வரைபடத்தில் தேடினால் ஆஸ்திரேலியாவுக்கு மேலே சின்னஞ்சிறு கிழிந்த கொடிபோல் தென்படும் நாடுதான் பப்புவா நியூகினியா.
இத்தீவின் மலைச் சிகரங்களில் உள்ள தனித்துவமான ஆதிவாசி இனம் யெய்ஃபோ. பெனடிக்ட் ஆலன் என்ற ஆங்கில பயண இலக்கிய எழுத்தாளர் இவர்கள் பற்றி 1988ல் எழுதியிருக்கிறார். மிகமிக அரிதாகவே பப்புவா நியூகினியாவின் ஊர்ப்புறங்களுக்குள் வரும் இந்த ஆதிவாசிகளில் ஒருவரைச் சந்தித்ததாக அவர் எழுதியுள்ளார்.

யெய்ஃபோக்கள் தனித்துவமான சடங்குகள், கட்டுப்பாடுகள் கொண்ட இனம் என்று நம்பப்படுகிறது. இவர்கள் பற்றி இதற்கு மேல் எந்தத் தகவலுமே யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.... இவர்களின் குணநலன்கள் என்ன... என்பது எல்லாம் யாருக்குமே தெரியாது. யாராவது அத்துமீறி இவர்கள் வசிக்கும் எல்லைக்குள் நுழைந்தால், அம்பு மழை பொழிந்துதான் வரவேற்பார்கள் என்பதால் யாருமே இங்கு செல்ல நினைப்பதும் இல்லை.

கொரோவாய் - மனிதக் கறி!

மேற்கு பப்புவாவின் அடர்ந்த காடுகளில் வசிக்கும் இன்னொரு இனம் கொரோவாய். காட்டு விலங்குகளை அணியணியாக தங்கள் கடவுளுக்குப் படையலிட்டு பச்சை ரத்தம் பருகும் இந்த ஆதிவாசிகள், மிகக் கொஞ்ச காலம் முன்பு வரை மனிதக் கறியை (Cannibalism) விரும்பி உண்டவர்கள்!
பொதுவாக, மனிதக்கறி உண்ணும் ஆதிவாசிகள் யாருமே வெறுமனே உணவுக்காக அவர்களை உண்பதில்லை. இவர்களின் எல்லைக்குள் யாராவது அத்துமீறி நுழைந்தால் அவர்கள் எதிரிகளாகி விடுகிறார்கள். எதிரியைக் கொன்று தங்கள் கடவுளுக்குப் படைக்க வேண்டும் என்பது பெரும்பாலான கானிபலிசம் பழக்கம் உள்ள பழங்குடிகளின் மனநிலை.

அப்படி கடவுளுக்கு படைக்கப்பட்ட படையலையே அவர்கள் சாப்பிடுகிறார்கள். மற்றபடி, அவர்களாக நம்மைத் தேடி வந்து கொன்று சாப்பிடுவதில்லை. கொரோவாய்களிடம் இன்று கேனிபலிசம் வழக்கில் இல்லை. கடந்த இருபது வருடங்களில் இவர்களில் சிலர் சிவில் சமூகத்தினருடன் கொஞ்சம் இணக்கமாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும் கொரோவாய்கள் இன்றும் டேஞ்சரஸ்தான்.

சூரி - காமெடி பீஸ் அல்ல... டேஞ்சரஸ் பீஸ்!

பேரைக் கேட்டால் காமெடியாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். நிஜத்தில் பயங்கரமான டெரர் பீஸ்! இவர்களின் சடங்குகள், போர்க்குணங்கள் அனைத்துமே மிகத் திகிலூட்டுபவை. இவர்களுக்குள்ளே சண்டை கட்டும்போது கூட மரணிக்கும் வரை தாக்கிக்கொள்வார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை சண்டைக்கு ஒரே முடிவு தான் உண்டு. அது, மரணம். இறப்பது எதிரியாகவும் இருக்கலாம் அல்லது தாங்களாகவும் இருக்கலாம் என்பதை அறிந்தே சண்டையிடுகிறார்கள்.

உதட்டில் வட்டத்தட்டு போன்ற ஒரு கருநிறப் பொருளைக் குத்திக்கொள்ளும் சூரிகள் தோற்றத்திலேயே எதிரிகளை நடுங்கச் செய்பவர்கள். எத்தியோப்பியாவின் கெஃபா பகுதிகளில் உள்ள மஜீ மற்றும் பெரோ சாஸாவிலும் சூடானின் போர்னா சமவெளிகளிலும் வசிக்கும் சூரிகளில் சிலர் இன்று சிவில் சமூகத்தினருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்றாலும் நாம் சந்திக்கவே கூடாது என்னும் அளவுக்கு மிகுந்த ஆபத்தானவர்கள்.

கொரூபோ - உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்!

அமேசானின் நிர்வாணப் பழங்குடி களில் கொரூபோக்களும் அடங்குவர். பிரேசில் அரசு இவர்களை அணுகி இவர்களின் நல்வாழ்வுக்கு(?) முயற்சி செய்தபோது இவர்களின் எல்லைக்குள் நுழைந்த அரசு ஊழியர்களை அடித்தே கொன்றார்கள். தங்கள் மூர்க்கத்தின் வழியாக இவர்கள் உலகுக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். ‘உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்’ என்பதுதான் அது.

இவர்களை ஸ்லாலா என்றும் சொல்வார்கள். இருபது முதல் நூற்று ஐம்பது பேர் வரை கும்பலாகத்தான் சுற்றுவார்கள். நீங்கள் எங்காவது ஒரு கொரூபோவைப் பார்த்தால் அங்கு பக்கத்தில் குறைந்தது இருபது பேராவது இருக்கிறார்கள் என்று பொருள்.

யானோமாமா - திடீரென தாக்கும் அபாயகரமானவர்கள்!

வெனிசுலாவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் உள்ள அமேசான் காடுகளில் வசிக்கிறார்கள் யானோமாமா பழங்குடிகள். இன்று சிவிலியன்களுடன் பழகி குடி, கூத்து என்று நாசமானாலும் இவர்களில் பலர் இன்றும் காட்டின் மடியில் யாரிடமும் ஒட்டாமல்தான் வாழ்கிறார்கள்.
யானோமாமாக்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. திடீரென எதிர்பாராத தருணத்தில் நம்மைத் தாக்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் இவர்களிடம் ஒதுங்கியிருப்பதே நல்லது என்பார்கள்.

இருநூற்று ஐம்பது கிராமங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் வசிக்கக்கூடும் என்கிறார்கள். யானோமாமா பழங்குடிகள் வாயில் இடது - வலது ஓரத்திலும், தாடைக்குக் கீழ் உதட்டின் அடியிலும் சிறு குச்சிகளைப் பொருத்திக்கொள்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டிலேயே சிவிலியர்களால் அடையாளம் காணப்பட்டாலும் தங்கள் வித்தியாசமான சடங்குகளாலும், விநோதமான பழக்க வழக்கங்களாலும்  தனித்துவமானவர்களாகவும் நெருங்க அஞ்சப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள் யானோமாமாக்கள்.

மாச்கோ-பிரோ - சிங்கத்துக்கு சமமானவர்கள்!

இவர்களை குஜாரெனோ என்றும் சொல்கிறார்கள். பெருவின் காடுகளில் வசிக்கும் ஆபத்தான பழங்குடிகள். இன்று மிகவும் அரிதாகிவிட்டவர்கள். இன்றைய தேதியில் சுமார் இருநூற்று ஐம்பது பேர் மட்டுமே இருக்கக்கூடும் என்கிறார்கள்.

பல்வேறுவிதமான நோய்களால் இந்த இனம் மெல்ல அழிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் உலகினரோடு கலக்காமல் தனியாகவே வாழ்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அத்துமீறி நுழைய முயன்ற ஓர் அந்நியரைக் கொலை செய்தார்கள். பெருவின் காடுகளில் சுற்றும்போது மாச்கோ பிரோவிடம் சிக்குவது ஒரு சிங்கத்திடம் சிக்குவதைப் போல ரிஸ்க்கானது.

இன்னும் சிலர்...

பர்மாவிலும் தாய்லாந்திலும் வசிக்கும் கடலோரப் பழங்குடிகளான கோகென்கள், பராகுவே, பொலிவியா காடுகளில் வசிக்கும் அயோரியோ எனும் வேட்டை சமூத்தவர்கள், அந்தமானின் சென்டினலிஸ் உட்பட பல்வேறு பழங்குடிகள் மனித நாகரிகத்தின் கறைபடாமல் இன்னமும் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள்.

நாமாகத் தேடிச் செல்லாதவரை அவர்களால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. அப்படியே மகிழ்ச்சியாக இருக்கட்டும் அந்த இயற்கையின் குழந்தைகள். அங்கு சென்று அவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருப்பதே நமக்கும் நல்லது.

இளங்கோ கிருஷ்ணன்