கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்



தம்பதிகளின் ஊடலைத் தீர்த்து வைக்கும் தியாகேசர்

கைலாசம். ஒரு வில்வ மரத்தடியில் உமையும் ஈசனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் தனிமையைக்குலைக்கும் விதமாக அவர்கள் மீது ஒரு குரங்கு, வில்வ இலைகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. நெருப்பு தெரிந்து தொட்டாலும் சுடும் ,தெரியாமல் தொட்டாலும் சுடும். அதுபோல ஈசனும்,அறிந்து வழிபட்டாலும் அறியாமல் வழிபட்டாலும் அருளுவார். எனில் குரங்கை மட்டும் விட்டு விடுவாரா..?

கருணை பொழிய எண்ணம் கொண்டு அதை அருகில் அழைத்தார் ஈசன். ‘‘குரங்கே, உன்னையும் அறியாமல் என்னை நீ பூஜித்துள்ளாய். ஆகவே, வேண்டும் வரம் கேட்டு பெற்றுக்கொள்!’’ ‘‘தங்கள் பாத தரிசனமே போதும்...’’‘‘ஆஹா என்ன ஒரு பற்றற்ற நிலை! குரங்கே,  நீ  அண்டசராசரங்களையும் ஆளும் சக்கரவர்த்தியாகப் பிறப்பாய்!’’‘‘சுவாமி! பூமியில் பிறந்து அரசனாக வாழ்வதால் என்ன பயன்? புண்ணிய பலன் முடிந்ததும் மீண்டும் இடர்ப்பட வேண்டும். நிலையான இன்பம் தங்கள் பாதங்கள்தானே? ஆகவே தங்கள் சொல்படி பூமியில் பிறக்கிறேன்.

ஆனால், அப்படி பிறக்கும் பிறப்பிலும் எனக்கு இந்த குரங்கின் முகமே இருக்க வேண்டும்! தங்களை வில்வத்தால் என்னையும் அறியாமல் பூஜித்தே, உலகை ஆளும் வரத்தைப் பெற்றேன் என்று அந்த முகம் எனக்கு நினைவுபடுத்தும்! இதனால் உங்களை மறக்க வழி இல்லாமல் போகும். இந்த வரத்தை மட்டும் அருளுங்கள் சுவாமி...’’ வேண்டியது அந்தக் குரங்கு.

குரங்கின் பக்தியைக் கண்டு வியந்தார் பரமன். ‘‘குரங்கே, நீ பூமியில் முசுகுந்தன் என்ற பெயரில் சோழச்சக்கரவர்த்தியாகப் பிறப்பாய். இந்திரனுக்கு அசுரரை வெல்ல உதவுவாய். உன்னால் பூமியில் சிவ பக்தி தழைத்தோங்கும். இறுதியில் என் பதம் அடைந்து இன்பம் அடைவாய்!’’ என்று அருளினார்.

‘‘இப்படித்தான் கைலாசத்துல இருந்த அந்த குரங்கு முசுகுந்தரா பிறந்தது. புரிஞ்சுதா கண்ணா?’’ என்றபடி கண்ணனை அணைத்தார் நாகராஜன்.
‘‘அது சரி தாத்தா... சாதாரண குரங்குக்கு எப்பிடி இந்த உலக விஷயம் எதுலயும் ஆசை இல்லாமப் போச்சு..? பெரிய பெரிய முனிவர்கள் கூட ஆசையை விடலியே..!’’

‘‘சபாஷ்டா கண்ணா! நல்ல கேள்வி. இதுக்கான பதில் ஒண்ணே ஒண்ணுதான். அதுதான் வில்வம்!’’ ஆனந்தவல்லி கண்சிமிட்டினாள்.‘‘வில்வமா..? புரியலையே பாட்டி..?’’ கண்ணன் கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.

‘‘பாட்டி சொல்றது கரெக்ட் கண்ணா. வில்வத்தால சிவனை பூஜித்தா எல்லா ஞானமும் செல்வமும் கிடைக்கும். இதுக்கு முசுகுந்த சக்கரவர்த்தியே உதாரணம். இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சைன்ஸே இருக்கு. ‘யாவர்க்குமாம் இறைவனுக்கு ஓர் பச்சிலை...’னு அதனாலதான் திருமூலர் பாடினார்...’’ புன்னகையுடன் சொன்னார் நாக
ராஜன்.

‘‘சும்மா சொல்லாதீங்க தாத்தா... இதுல சைன்ஸ் எங்கிருந்து வந்தது..?’’ ரோஷத்துடன் கண்ணன் கேட்டான்.
“ரொம்ப ரொம்ப உஷ்ணமான ஆலகால விஷத்தை ஈசன் சாப்பிட்டார். அதனால ஏற்பட்ட சூட்டைத் தணிக்க அவருக்கு நாம வில்வத்தால அர்ச்சனை பண்றோம். அதே போல பெருமாள் சதா பாற்கடல்ல பள்ளி கொண்டிருக்கார். அதனால அவருக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு துளசியால அர்ச்சனை பண்றோம்!

மனிதனுக்கு ஏற்படுற எல்லா நோய்களுக்கும் காரணம் உடலோட தட்பவெப்ப நிலைல ஏற்படுகிற மாற்றம்தான்! இதை மனசுல வைச்சுதான் மூலிகைகளைப் பறிச்சு சாமிக்கு படைச்சுட்டு பிரசாதம்னு அதை நாம சாப்பிடறோம்! இதன் வழியா நம்ம உடலோட தட்பவெப்ப நிலையை சீரா வைச்சுக்க முயற்சி பண்றோம்! இந்த வகைலதான் விநாயகருக்கு உகந்த அருகம்புல்லும் வருது!’’ என்றபடி நாகராஜன் கண்சிமிட்டினார்.

‘‘கன்வின்சிங்காதான் இருக்கு தாத்தா...’’ கண்ணன் ஆமோதித்தான்.‘‘போதும். குழந்தை தியாகராஜர் பத்தி கேட்டுட்டு இருக்கான். அதைச் சொல்லுங்க...’’ ஆனந்தவல்லி நினைவுபடுத்தினாள்.‘‘சொல்றேன்... சொல்றேன்... முசுகுந்த சக்கரவர்த்தி தனக்குக் கிடைத்த சிலைகளை ஏழு கோயில்கள்ல பிரதிஷ்டை  பண்றார். அந்த ஏழு கோயில்களைத்தான் நாம சப்தவிடங்க தலங்கள்னு சொல்றோம். இதுல இந்திரன்  பூஜை செஞ்ச சிலையை பிரதிஷ்டை செஞ்ச இடம்தான் திருவாரூர்!

அந்த எல்லா சிலைகள்லயும் உமா என்ற பார்வதிதேவியும், ஸ்கந்தன் என்ற முருகனும் கண்டிப்பா சிவனோடு இருப்பாங்க. இதனாலதான் அவரை ‘சோமாஸ்கந்த’ (ஸ + உமா + ஸ்கந்த) மூர்த்தினு... அதாவது பார்வதி  முருகன் சமேத மூர்த்தினு சொல்றோம்! இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... சுவாமி தன்னை விட்டு போனதால எங்க தன் செல்வங்களும் போயிடுமோன்னு அஞ்சின இந்திரன் ஒரு காரியம் செஞ்சான்...’’ என்றபடி கண்ணனின் ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு கதைக்குள் நுழைந்தார் நாகராஜன்.

தேவலோகம் விட்டு இந்திரன் பூலோகத்துக்கு இறங்கி வந்தான். தனக்கு அருள் சுரந்த தெய்வம் திருவாரூரில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்தான்.
கோயிலுக்குள் நுழைந்ததும் அவனை ஆச்சரியம் சூழ்ந்தது. காரணம், தேவலோகத்தை விட கோலாகலமாக அங்கு வழிபாடு நடந்துகொண்டிருந்தது! முசுகுந்த சக்கரவர்த்தி தலைமையில் மக்கள் பக்தியில் திளைத்திருந்தனர்.

‘‘ஆரூரா போற்றி! தியாகேசா போற்றி!’’ என்ற இனிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இந்திரனின் முகத்தைக் கண்டதும் தியாகேசன், ‘‘வா இந்திரா! கடவுள் என்பவர் அனைவருக்கும் சமமானவர். ஆகவே, நான் இங்கு அனைவருக்கும் பொதுவாக இருப்பதே சரி. நீ எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து எம்மை பூஜிக்கலாம். கவலையை விடு. ஆசிகள்!’’ என்றார்.

‘‘அய்யனே! என் மனம் எந்த ஆறுதலையும் ஏற்கும் நிலையில் இல்லை. தயவுசெய்து என்னுடன் தேவலோகம் வந்துவிடுங்கள்!’’

‘‘சரி தேவேந்திரா... கிழக்கு கோபுர வாயிலில் நின்றுகொள். நான் அந்த வாயில் வழியாக ஊர்வலம் செல்லும் போது எம்மை அழைத்துச் செல்!’’ என்றார் பரமன்.

மகிழ்ச்சியுடன் இந்திரனும் தலையசைத்தான். ஆனால், இன்று வரை கிழக்கு கோபுர வாயில் பக்கம் சுவாமி தலையைக் கூட காட்டவில்லை!
இந்திரன் காத்திருந்து காத்திருந்து சிலையாகவே சமைந்து விட்டான்...‘‘சுவாமி ஏன் இந்திரனை இப்படி ஏமாத்தணும் தாத்தா..?’’ கண்ணன் இடைமறித்தான்.

‘‘நம்ம மேல இருக்கற கருணைனாலதான் கண்ணா! பூலோகவாசிகளான நம்ம குறைகளைத் தீர்த்து கடைசியா முக்தியும் கொடுக்கறதுதான் சுவாமியோட எண்ணம்.... நீயே சொல்லு, சுவர்க்கத்துல இருக்கிறவங்களுக்கு என்ன பிரச்னை வந்துடப் போகுது..?’’ நாகராஜன் பதிலுக்கு ஒரு கேள்வியை எழுப்பினார்.

‘‘கரெக்ட்தான் தாத்தா. ஒருவேளை இப்பிடி பக்தர்களுக்காக சுவர்க்கத்தையே தியாகம் செய்ததாலதான் சுவாமிய தியாகராஜர்னு சொல்றோமா?’’

‘‘ஒருவகைல நீ சொல்றது சரி கண்ணா...’’ ‘‘ஓகே. இப்ப விஷயத்துக்கு வருவோம் தாத்தா... தியாகராஜருக்கும் தம்பதி அன்னியோன்யத்துக்கும் என்ன சம்பந்தம்?’’நடுநிசி நேரம். ஆரூர் திருக்கோயிலின் பிராகாரத்திலேயே சுந்தரமூர்த்தி நாயனார் சயனித்திருந்தார். அவருக்கு உணவும் செல்லவில்லை. உறக்கமும் பிடிக்கவில்லை.

மனதில் அவரது முதல் மனைவி பரவை நாச்சியாரின் முகம் நிழலாடியது. அவளை இந்த தியாகேசன் சன்னதியில் முதன் முதலாகக் கண்டதும் காதல் கொண்டதும் நினைவுக்கு வந்தது. அன்று அவளை தனக்கு  மணம்முடித்து வைக்க வேண்டும் என்று இந்த தியாகேசனைத்தான் பிரார்த்தித்துக் கொண்டார். அவரும் பரவையின் கனவிலும் மற்றவர் கனவிலும் சென்று சம்பந்தம் பேசி கல்யாணத்தை இனிதே நடத்தி வைத்தார்.

ஆனால், இன்றோ சங்கிலி என்ற வேறொரு பெண்ணை மணந்ததால் பரவை கோபத்தின் உச்சியில் இருக்கிறாள். சுந்தரரை வீட்டுப் பக்கமே வர வேண்டாம் என திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். அவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல், சுந்தரர் படுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, கோயில் மணி டங் டங் என்று ஒலி எழுப்பியது. அதைக் கேட்டதும் சுந்தரருக்கு அந்த ஈஸ்வரனே ‘நான் இருக்க பயம் ஏன்...’ என்று சொல்வது போல் இருந்தது.

சட்டென்று எழுந்து பயபக்தியுடன் சன்னதிக்குச் சென்றார். ‘‘என் நண்பனே! ஈசா! மகேசா! ஜெகதீசா! எனக்கும் பரவைக்கும் இடையில் உள்ள ஊடலை நீதான் சரிசெய்ய வேண்டும். நீயே பார்த்துப் பார்த்துச் செய்து வைத்த கல்யாணம். அந்தக் கல்யாணம் பொய்த்துப்போகக்
கூடாது!

எனவே நீயே பரவையிடம் தூது செல். நான் இந்த திருவாரூர் வந்த அன்று நீயே வலிய வந்து என் தோழன் ஆனாய். காதல் பிரச்னையில் உதவாத தோழனும் ஒரு தோழனா? உனக்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையானது எனில் இப்போதே பரவையிடம் சென்று பேசி ஊடலைத் தீர்த்து வை!’’ பக்தியாலும் செந்தமிழ்ச்சொல்லாலும் ஈசனை தனது தோழனாகப் பெற்ற தைரியத்தில் பேசினார் சுந்தரர்.   

எங்கே... தூது போகாமல் இருந்தால் சுந்தரன் செந்தமிழால் தன்னைப் பாடாமல் போய்விடுவானோ என்ற பயத்தில் பரமன் தூது போகச் சம்மதித்தார்!
வயதான சிவனடியார் வேடம் பூண்டு திருவாரூர் வீதிகளில் தன் பாதங்கள் பட நடந்து பரவையின் வீட்டுக்குச் சென்றார்.அடியவர் வேடத்தில் வந்த சிவனுக்கு வேண்டிய மரியாதையை பரவை செய்தாள்.

‘‘அம்மணி, சிவனடியாரை சிவனாகப் போற்றினால் மட்டும் போதாது. கணவனையும் போற்றவேண்டும் அல்லவா?’’ மெல்ல ஈசன் பேச்சை ஆரம்பித்தார். ‘‘வேறு ஒருத்தியை மணந்தவருக்கு இனி என்னால் ஆகப்போவது என்ன? ஆதலால் அவரை அந்த சங்கிலியிடமே போகச் சொல்லுங்கள். அப்படியே நீங்களும் இந்த இடத்தை காலி செய்யுங்கள்!’’சிரித்தே முப்புரத்தையும் மன்மதனையும் எரித்த சிவ பெருமானால் ஒரு காரிகையிடம் பேசி ஜெயிக்க முடியவில்லை! முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சுந்தரனிடம் வந்தார்.

பரமனின் முகத்தைப் பார்த்தே சுந்தரர் நடந்ததை ஊகித்தார். உடன் ஈசனை இந்த சிவ ரூபத்திலேயே தூது அனுப்பினால் என்ன என்று சுந்தரருக்குத் தோன்றியது. ‘‘சுவாமி, உங்களை யார் சிவனடியார் ரூபத்தில் தூது போகச் சொன்னது? இதோ இந்த ஜடாமுடியோடும் புலித்தோல் ஆடையோடும் கையில் சூலத்தொடும் செல்லுங்கள். இந்த அழகிய கோலத்தைக் கண்டபின்பும் அவள் மறுப்பு சொல்வாளா?’’ என்று பரமனையே சுந்தரர்
விரட்டினார். இதை ஏற்று பரமனும் தன் நிஜ ரூபத்தில் தூது போனார்.

எந்தத் திருவடியை திருமாலும் வேதங்களும் தேடியும் கண்டு கொள்ளமுடியவில்லையோ அந்தத் திருவடி திருவாரூர் மண்ணை மிதித்து போகவும் வரவுமாகச் சேர்த்து  நான்கு முறை தூது போனது! இதனால்தான் திருவாரூரில் பிறந்தால் முக்தி என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் போலும்!பரமனே தன் நிஜ ரூபத்தில் தூது வந்த பின் பரவையால் எப்படி மறுக்க முடியும்..? சுந்தரர் ஆனந்தக் கடலில் நீந்தினார்!

‘‘புரிஞ்சுதா கண்ணா...’’ கண்ணனை ஆழமாகப் பார்த்தார் நாகராஜன். ‘‘மனைவியோடு பிணக்கு ஏற்பட்ட தன் பக்தனோட தாம்பத்ய வாழ்வு சிறக்கணும்னு அந்த தியாகேசரே நேர்ல தூது போனார். சுந்தரர்னு இல்ல... அவரை மனமார யார் பூஜித்தாலும் அந்த பக்தனோட தாம்பத்ய வாழ்க்கை சிறக்க பரமனே முயற்சி செய்வார்!’’ ‘‘புரியுது.

ஆனா...’’ இழுத்த கண்ணன் தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துவிட்டு சொன்னான். ‘‘எல்லாத்தையும் விட தன் தமிழால ஈசனையே மயக்கி வைச்சிருந்த சுந்தரரோட புலமைதான் எனக்கு பெருசா தெரியுது...’’‘‘சமத்து...’’ ஆனந்தவல்லி முகமெல்லாம் மலர்ந்தாள். அதன் எதிரொலி நாகராஜனின் முகத்திலும் படர்ந்தது.

‘‘சரி... அவ்வளவுதானே கண்ணா..?’’ என்றபடி நாகராஜன்எழுந்துகொள்ள முயற்சித்தார்.‘‘நோ...’’ கண்ணன் அவரைத் தடுத்தான். ‘‘தியாகராஜர் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கார்னு சொல்லுங்க!’’

(கஷ்டங்கள் தீரும்)

- ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்