பகவான்-24பிதாகரஸ் - பாலியல் மருத்துவசோதனை!

ஓஷோவுக்கு என்றே பிரத்யேகமாக அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த ரஜனீஷ் புரத்துக்கு எப்படி அமெரிக்க பக்தர்கள் வரவைக்கப் பட்டார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் சூஸன் ஹார்ஃபோ என்கிற அமெரிக்க பெண் சன்னியாசினி விவரித்துக் கொண்டிருந்தார். அவரே தொடர்கிறார்…

போர்ட்லேண்ட் நகரை நோக்கி விமானம் பறக்கத் தொடங்கியது. அதுநாள் வரை பகவான் ரஜனீஷை தரிசித்தது இல்லை. அவர் எப்படியான சூழலில் வாழ்கிறார், ஆசிரமம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கேள்வி ஞானம்தான்.

பூமியில் படைக்கப்படும் சொர்க்கமாக அவர் அமெரிக்காவில் ரஜனீஷ்புரத்தை உருவாக்குகிறார் என்கிற பெருமிதத்தைத்தான் எங்களுக்கு ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த சொர்க்கத்தில் எனக்கும் ஓர் இடம் என்கிற நினைப்பே இனித்துக் கொண்டிருந்தது.

போர்ட்லேண்டில் விமானம் லேண்ட் ஆனது. அங்கிருந்து ‘மெட்ராஸ்’ (அமெரிக்காவிலும் ‘மெட்ராஸ்’ உண்டு) என்கிற சிறுநகருக்கு ஐந்து மணிநேர பஸ் பயணம். மெட்ராஸிலிருந்து ஆண்டலோப் நகருக்குச் செல்ல அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லை. என்னை வரவேற்க ஏற்பாடு செய்திருப்பார்கள்; ஆடம்பரமாக வரவேற்பார்கள் என்றெல்லாம் பஸ்ஸில் வரும்போது கனவு கண்டு கொண்டிருந்தேன்.

நான் வந்த பஸ்ஸிலேயே ஆரஞ்சு நிற உடையணிந்த இன்னொரு நடுத்தர வயதுப்பெண்ணும், அவரது இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். நல்ல வசதியான பெண்மணி என்று அவரது தோற்றத்திலேயே தெரிந்தது. சராசரி கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த எனக்கும் ரஜனீஷ்புரத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது என்பதை அவர் நம்பவேயில்லை. ஏனெனில் ரஜனீஷ்புரத்தில் இடம் கிடைப்பது என்பது பெரும் பணம் படைத்தவர்களுக்கே சாத்தியம் என்று அவர் நம்பிக் கொண்டிருந்தார்.

மெட்ராஸில் எங்களை வரவேற்க பெரும் தொப்பையோடு ஓர் ஆண் சன்னியாசி நின்று கொண்டிருந்தார். ஆள் பயங்கர முசுடு. ஆரஞ்சு உடை, கழுத்தில் பகவான் படம் பொறித்த மாலையென்று பக்கா சன்னியாசினி தோற்றத்தில் இருந்தும் அந்த முசுடு, என்னை ஏகத்துக்கும் கேள்விகள் கேட்டார். அழைப்புக் கடிதம் காண்பித்த பிறகே அவர் கொண்டு வந்திருந்த போக்ஸ்வேகன் காரில் அமர அனுமதித்தார். சன்னியாசிகளுக்கும் வர்க்கம் உண்டு என்கிற கசப்புணர்வு எனக்கு ஏற்பட்டது.

மெட்ராஸில் இருந்து ஆண்டலோப்புக்கு சென்ற பயணம் மிகவும் வறட்சியானது. கண்ணுக்குத் தெரிந்த தூரம் மட்டும் வெறும் மணல். மோசமான சாலைப்பயணம். இப்படியொரு வனாந்தரத்திலா நமக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டது.வறண்ட இந்த பூமிக்கு நடுவில்தான் பகவான் ஒரு சோலையில் மலரப்போகிறார். அவர் இங்கே வசிக்கத் தொடங்கியபிறகு இந்த ஒட்டுமொத்த பகுதியுமே பசுமையாக மாறும் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.

காருக்குள் இருந்த நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்களோடு வந்த குழந்தைகள், நீண்டநேரப் பயணத்தால் சோர்வில் தூங்கிவிட்டார்கள்.அந்த வறண்ட பூமியில் எங்களை வரவேற்க மழை பெய்யத் தொடங்கியது.

பாதையெல்லாம் சேறு. ஆங்காங்கே ஓரிரண்டு பண்ணைகளைத் தவிர்த்து ஜீவராசிகளின் நடமாட்டமே இல்லாத இடம் அது. பல்லாயிரம் மைல் தூரத்தில் இருந்து கடல் கடந்து, வானம் கடந்து இங்கே வந்து பகவான் ஏன் ஆசிரமம் அமைக்கிறார் என்கிற ஆச்சரியம் எழுந்தது.

சுமார் ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு ரஜனீஷ்புரத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். விமானம், பஸ், கார் என்று தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்ததால் எனக்கு உடலெல்லாம் வலி. வழியெல்லாம் தூசை சுவாசித்து, அலர்ஜி காரணமாக இருமிக்கொண்டே இருந்தேன்.
நேராகப் போய் குளித்துவிட்டு, பசிக்கு நல்ல சாப்பாடு உண்டுவிட்டு, சொகுசான படுக்கையில் உல்லாசமான உறக்கம் போடவேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது.

ஆனால், நாங்கள் அங்கே சென்றடைந்ததுமே, ‘பிதாகரஸ்’ என்கிற இடத்துக்கு சோதனைக்கு செல்ல வேண்டுமென்று அங்கிருந்த பாதுகாவலர்கள் கண்டிப்பாகச் சொன்னார்கள். ரஜனீஷ்புரத்தில் இருந்த ஒவ்வொரு இடத்துக்குமே இதுபோல ஒரு சிறப்பு புனைபெயர் சூட்டியிருப்பார்கள்.

‘பிதாகரஸ்’ என்பது மருத்துவ சோதனை மையம். ரஜனீஷ்புரம் என்கிற கனவுநகரத்தில் வசிக்க இருப்பவர்களுக்கு உடல்ரீதியாக அவர்கள் எதிர்பார்க்கும் குறைந்தபட்சத் தகுதி இருக்கிறதா என்று பரிசோதிப்பார்களாம்.

நானும், என்னோடு வந்த நடுத்தர வயதுப் பெண்ணும் பிதாகரஸ் அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஒரு ‘மா’ சன்னியாசினியால் ஏகப்பட்ட குறுக்குக் கேள்விகளால் விசாரிக்கப்பட்டோம். அவர் கேட்ட கேள்விகள் பெரும்பாலும் ‘பாலியல்’ தொடர்பானதாக இருந்ததால் நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

ரஜனீஷ்புரத்தில் வசிப்பவர்களுக்கு உடல்ரீதியான சுதந்திரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கினார். அதாகப்பட்டது, உடல்தேவை இருக்கும் பட்சத்தில் இந்த communeல் வசிப்பவர்களுக்குள்ளாக மட்டுமே அது பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும், வெளியாட்களோடு ‘stricly no’ என்று விளக்கினார்கள்.

அதன் பிறகு ஒரு டெண்டில் இருந்த மருத்துவ பரிசோதனை மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டோம். அங்கு வழக்கமான உடல் பரிசோதனைகளாக இல்லாமல் பாலியல் நோய் மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிப்பதிலேயே கவனம் காட்டினார்கள். VD சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பகவானே! இதென்ன சோதனை என்று நினைத்துக் கொண்டேன்.இந்த உடல் தேர்வில் (?) தேறியவர்களின் பெயர்கள் மட்டுமே ரஜனீஷ்புரத்தின் குடியிருப்பு வாசிகள் பட்டியலில் இடம்பெறும். அந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு சோறுகூட கிடைக்காது.

ஆம்.‘மகதலேனா’ என்று பெயரிடப்பட்டிருந்த உணவுக்கூடத்தின் பெரிய சுவரில் நம்முடைய பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே நாம் அங்கு அனுமதிக்கப்படுவோம்.புதியதாகக் குடியேறிய எங்களுக்கு சில சன்னியாசிகள் பாடமெடுத்தார்கள். பகவான் குறித்து ஏற்கனவே நாங்கள் அறிந்துவைத்திருந்த தகவல்களைத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

மேலும் ரஜனீஷ்புரத்தில் யாரும், யாரைப் பற்றியும் ‘கிசுகிசு’ பேசக்கூடாது. நீங்கள் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ உண்மையாகவே இருந்தாலும்கூட அதை மற்றவர்களிடம் விவாதிப்பதற்கு தடை இருக்கிறது. நம்முடைய communeல் மற்ற இடங்களில் இருக்கும் பிரச்சினைகள் எதுவும் ஏற்படக்கூடாது என்கிற எண்ணத்திலேயே கருத்துச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறோம் என்று வியாக்கியானம் பேசினார்கள்.

உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ தொலைபேசியில் பேசினாலும் வெறுமனே நலவிசாரிப்பு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். ரஜனீஷ்
புரம் பற்றி எந்தவொரு சிறு தகவலும் கொடுத்துவிடக்கூடாது என்று எச்சரித்தார்கள். அப்படி ஏதேனும் கேள்விப்பட்டால் உடனே வெளியேற்றுவோம் என்று கண்டிப்பு காட்டினார்கள்.

தொலைபேசி அழைப்புகள் மொத்தமே ‘டேப்’ செய்யப்படும் என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார்கள்.யாருக்கேனும் நாம் கடிதம் எழுதினாலும், உறையை ஒட்டிவிடக்கூடாது. அதற்கென்று அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய கடிதங்களை ஒட்டி, போஸ்ட் ஆபீஸில் சேர்த்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதாவது நம்முடைய கடிதங்கள், நிர்வாகிகளால் வாசிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதையெல்லாம் கேட்டபிறகு எனக்கு அச்சம் பாதத்திலிருந்து மூளைவரை தீவிரமாகப் பரவியது. நாம் ரஜனீஷ்புரம் என்கிற கனவு நகரத்துக்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதேனும் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இடம்பெறும் வில்லனின் பாசறைக்கு வந்திருக்கிறோமா என்றே சந்தேகம் வந்துவிட்டது.

இதெல்லாம் முடிந்தபிறகு இரவு எட்டு மணி வாக்கில் நாங்கள் எங்களுக்கான தற்காலிக முகாமுக்கு அனுப்பப்பட்டோம். உணவு உண்பதற்காக ‘மகதலேனா’வுக்குச் செல்லலாம் என்று பெரிய மனசு வைத்து அனுமதித்தார்கள்.

நாங்கள் உணவு உண்டுகொண்டிருந்தபோது வாசலில் பரபரப்பு ஏற்பட்டது. ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்று வந்து நின்றது. ரோல்ஸ்ராய்ஸ் என்றாலே எனக்கு பகவான்தான் நினைவுக்கு வருவார். அட, பகவான் இங்கேதான் இருக்கிறாரா என்று ஆவலுடன் எழுந்துநின்று வாசலை நோக்கினேன்.ரோல்ஸ்ராய்ஸிலிருந்து இறங்கியவர்….

(தரிசனம் தருவார்)  

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்