நியூஸ் வியூஸ்-நாய்கள் ஜாக்கிரதை!



கடந்த வாரம் செய்தித் தாள்களில் இரண்டு வித்தியாசமான கொலைகளை வாசிக்க முடிந்தது.ஒன்று, சென்னையில் தெருநாயை அடித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.மற்றொன்று, செக் குடியரசு நாட்டில் தன்னை வளர்த்தவரையே ஒரு சிங்கம் கொன்றுவிட்டது. பதிலுக்கு காவல்துறையினர் அந்த சிங்கத்தை சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் என்பது, விலங்கு நிலையிலிருந்து (அதாவது குரங்கிலிருந்து) மனிதனாக பரிணமித்த காலத்தில் தொடங்கியது.குரங்குகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?நாம் இரண்டு கால்களால் நடக்கிறோம். இரண்டு கைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்கிறோம். பேசுகிறோம். சிந்திக்கிறோம். திட்டமிடுகிறோம்.அவ்வளவுதானே?

உலகில் வாழும் உயிரினங்களிலேயே தலையாய உயிரினம் நாம்தான் என்று கருதிக் கொள்கிறோம்.மனிதர்களோடு நட்புறவாக உறவாட விரும்பும் விலங்குகளை வீட்டு விலங்குகளாக்கி அடிமைப்படுத்தி விட்டோம். மற்றவற்றை காட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தி விட்டோம்.

எனினும் விலங்குகளுக்கும், மனிதனுக்குமான ஆதிகால முரண் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.அவையும் உயிரினங்கள். மனிதர்களைப் போலவே இந்த உலகில் வாழ்வதற்கான உரிமை அவற்றுக்கும் இருக்கிறது. மனிதத் தேவைக்காக அவற்றைத் துன்புறுத்துவதோ, கொல்வதோ தவறு என்கிற எண்ணம் நாகரிகமயமாக்கலின் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனை.

விலங்குகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்கிற வழிமுறையை அவ்வப்போது அரசுகள் வகுத்து இன்று அவை சட்டமாகவே இயற்றப்பட்டு விட்டன.
விலங்குகளைப் பாதுகாக்கக் கூடிய சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நமக்கு ஓரளவு இருக்குமேயானால், நாயைக் கொன்றுவிட்டு இப்போது சிறையில் வாடிக் கொண்டிருப்பவரின் நிலை ஏற்படாது.

இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 428 மற்றும் 429ன்படி விலங்குகளுக்கு விஷம் வைப்பது, காயப்படுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும். இதுபோன்ற செயல்களை சமீபத்தில் சில  இளைஞர்கள் செய்து வீடியோ எடுத்து, அதை ஃபேஸ்புக்கில் போட்டு நடவடிக்கைக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.

விலங்குகள் நல பாதுகாப்புச் சட்டம் 1960ன் பிரிவு 11(i)-ன்படி நம்முடைய வளர்ப்பு விலங்கினைக் கைவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் காரணமாக உணவின்றி அது மரணிக்கக்கூடிய வாய்ப்பை நாம் ஏற்படுத்துகிறோம்.வீட்டில் வளர்த்து வந்த நாய், பூனை போன்றவற்றை அவற்றின் வயதான காலத்தில் (மரணிக்கும் தருவாயில்) வேறு எங்கோ கொண்டு சென்று விட்டுவருவது நம்மில் பலருக்கும் வாடிக்கைதான்.

இது இந்திய சட்டப்படி குற்றம். முதல் முறை இந்த குற்றத்தைச்  செய்பவருக்கு அபராதமும், அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இதே குற்றத்தை திரும்பச் செய்தால் சிறைத்தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.முன்பெல்லாம் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அதிகளவிலான நாய் பிடிக்கும் வண்டிகளை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதுமாதிரி பிடித்துச் செல்லப்படும் நாய்கள் எதுவும், திரும்பவும் அவற்றின் சொந்தத் தெருவுக்கு திரும்பவே திரும்பாது. விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இந்தக்  கொடுமைக்கு எதிராகக் கிளர்த்தெழுந்தார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்தார்கள். அரசாங்கத்துக்கு திரும்பத் திரும்ப புகார்கள் அனுப்பினார்கள்.

அவர்களைச் செவிமடுத்து 2001ல் இந்திய அரசு விலங்குகளுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதியை விதித்தது. அதன் அடிப்படையில், தெருநாய்த் தொல்லை மாதிரி புகார்கள் வரும்போது, அப்பகுதியில் இருக்கும் நாய்களுக்கு ‘கட்டுப்பாடு’ செய்யப்படும். ரேபீஸ் மாதிரி நோய்கள் மனிதர்களுக்கு பரவாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்படும். மற்றபடி ஓரிடத்தில் வசிக்கும் விலங்குகளை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்வது தடை செய்யப்படுகிறது.
மேலும் 1960 விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி குறிப்பிட்ட ‘வயதுக்கு வந்த’ விலங்குகளுக்கு மட்டுமே தேவையின் அடிப்படையில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு சிகிச்சை செய்ய முடியும்.

சந்தைகளுக்கு அனுப்புவதற்காக மாடுகள், வண்டிகளில் ஏற்றப்பட்டு கயிறுகளாலோ, சங்கிலிகளாலோ இணைக்கப்பட்டு நீண்ட நேரத்துக்கு கொடுமைப்படுத்தப்படுமேயானால் சம்பந்தப்பட்டவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இம்மாதிரி வண்டிகளில் ஏற்றப்படும் விலங்குகள் பயணத்தை தாங்கக்கூடிய அளவில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வண்டியில் ஏற்றக்கூடாது. கர்ப்பமடைந்த விலங்குகளையோ, மிகவும் சிறிய வயதில் இருக்கும் விலங்குகளையோ ‘கும்பலோடு கோவிந்தா’ போடாமல் பிரத்யேகமாக தனி வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும்.

‘காக்கா முட்டை’ படத்தில் மரத்தில் ஏறி காக்காய் கூட்டுக்குள் இருக்கும் முட்டைகளை இரண்டு சிறுவர்கள் எடுக்கும் காட்சி, படம் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். பறவைகள் மற்றும் ஊர்வனவற்றைக் கொல்வது, அவற்றின் முட்டைகளை உடைப்பது, கூடுகளை அழிப்பது ஆகிய குற்றங்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

கறிக்காக வெட்டலாம் என்று அரசு அனுமதிக்காத இடங்களில் விலங்குகளைக் கொல்லுவதும் குற்றம்தான். மதம் மற்றும் சாதி சார்ந்த மரபுகளின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களில் பலி கொடுப்பதை இந்திய குற்றவியல் சட்டம், விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1960 மற்றும் வனவிலங்குகள் சட்டம் 1972 ஆகியவை தடுக்கின்றன. அந்தந்த மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளின் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் வெகு சில இடங்களில் மட்டும் இவற்றுக்கு விதிவிலக்கு கிடைக்கின்றன.

ஈவ் டீஸிங் மட்டுமல்ல, அனிமல் டீஸிங்கும் கிரைம்தான் தெரியுமா?

வனவிலங்குகள் சட்டம் 1972 பிரிவு 38 (j)-ன் படி விலங்குகளை தவறாக நடத்துவது, சீண்டுவது, ஒலியெழுப்பி துன்புறுத்துவது, காயப்படுத்துவது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையோ, 25 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது செய்த குற்றத்துக்கு ஏற்ப இரண்டுமோ கிடைக்கக்கூடும். அடுத்த முறை வண்டலூருக்குப் போகும்போது நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
அவை மட்டுமல்ல.

உங்கள் வீட்டு நாய் தங்குவதற்கான குறைந்தபட்ச உறைவிட மற்றும் போதுமான உணவு, தண்ணீரை நீங்கள் தருவதில்லை என்று பக்கத்து வீட்டுக்காரர் கூட உங்கள் மீது புகார் கொடுக்க முடியும். இதுவும் அபராதத்துக்கு உரிய குற்றமே.நாயை அடித்துக் கொன்றவர் கைதா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டதற்காக இவ்வளவு சட்டங்களையும் நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.l
 

யுவகிருஷ்ணா