கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-2



பிள்ளைகளின் சிரமங்களைத் தீர்க்கும் தாயார்!

‘‘என்னைப் பெற்ற தாயார்!’’ பக்தியுடன் உச்சரித்தார் நாகராஜன்.‘‘என்னைப் பெற்ற தாயாரா? எங்க ஐயா அந்தக் கோயில் இருக்கு..? எந்த சாமி அங்க இருக்கு..? எப்படி அந்த சாமி அங்க வந்தது..? அங்க போனா என் பிரச்னை எல்லாம் எப்படித் தீரும்..?’’ நம்பிக்கையும் பரவசமுமாக சரோஜா கேள்விகளை அடுக்கினாள்.திரும்பி தனக்குப் பின்னால் நின்றிருந்த ஆனந்தவல்லியைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு சரோஜாவை ஏறிட்டார். ‘‘சொல்றேன்மா... பல வருஷங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவம் அது...’’

நிறுத்திய நாகராஜன், கண்களை மூடி சில நொடிகள் தியானித்தார். பிறகு இமைகளைத் திறந்து வானத்தை நோக்கிக் கைகூப்பிவிட்டு அக்கதையை சொல்லத் தொடங்கினார்.முன்னால் அமர்ந்திருந்த சரோஜா மட்டுமல்ல... அவர் அருகில் உட்கார்ந்திருந்த கண்ணனும் ஆவலுடன் அதைக் கேட்க ஆரம்பித்தான்.

குதிரை மீது வந்த அவரைக் கண்டவர்கள் திகைத்தனர். அதற்கு காரணம் இருந்தது. அந்த மனிதர் பல போர்களைக் கண்டவர் போல இருந்தார். அரசனைப் போல் ஆடையைத் தரித்திருந்தார். நெற்றியில் திருநாமம் பளீரிட்டது. முகத்திலோ அசாத்திய தேஜஸ்.
இப்படி ஒருவரைக் கண்டால் மக்கள் திகைக்கத்தானே செய்வார்கள்?

ஆச்சர்யத்துடன் தன்னை ஏறிட்டவர்களை நோக்கி அவர் சென்றார். “இது திருநின்ற ஊர்தானே?”
‘‘ஆம்...” மக்கள் தலையசைத்தார்கள்.‘‘எனில் பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கு எந்த வழியில் செல்லவெண்டும்?” ஆர்வத்துடன் வினவினார்.
மக்களில் ஒருவன் வழிகாட்டினான். அந்தத் திக்கை நோக்கி தன் குதிரையை ஓடவிட்ட அந்த மகான், கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

பூஜைகள் முடிந்து கோயில் சாத்தப்பட்டிருந்தது. அவர் சளைக்கவில்லை. மாலவனை அழைத்தார். “நலம் நல்கும் நாராயணா! திருடனாக இருந்து உம்மால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டதிருமங்கை ஆழ்வான் வந்திருக்கிறேன்! சற்று எமக்கு தரிசனம் தந்து அருளும்...”
ம்ஹும். பதில் வரவில்லை. “மாலவா! உன் ஆருயிர் பக்தன் பரகாலன் வந்துள்ளேன். தரிசனம் தா அய்யனே...”
இப்போதும் பதிலில்லை.

ஆழ்வார் யோசித்தார். மாலவன் வராததன் காரணம் அறிய கண் மூடி மனதை ஒருமுகப்படுத்தி ஞானதிருஷ்டியினால் உள்ளே பார்த்தார். நாராயணனும் பிராட்டியாரும் பேசி இன்புற்று இருப்பதை அறிந்தார். இடைஞ்சல் தர வேண்டாம் என்று திரும்பிச் சென்றார். ஆனாலும் மாலவனின் அழகைக் காண முடியாமல் கனத்த இதயத்துடன்தான் சென்றார்.

இதை மாலவன் உணர்ந்தானோ இல்லையோ... பிராட்டி அறிந்துகொண்டாள். நாம் எடுக்கும் ஏழேழு பிறவிக்கும் அவள்தானே தாய்? இந்த ஒரு பிறவியின் தாய்க்கே, தான் பெற்ற பிள்ளை மீது அளவு கடந்த பாசம் இருக்கையில் அனைத்து பிறவிக்கும் தாயான அவள் அன்பைச் சொல்லவும் வேண்டுமா?

பேச்சு சுவாரஸ்யத்தில் தன்னை மறந்திருக்கும் பரம்பொருளை பக்தனுக்கு எப்படி காட்சி கொடுக்கச் செய்வதென்று யோசிக்கத் தொடங்கினாள் மகாலட்சுமி தாயார். நொடிக்கும் குறைவான நேரத்தில் யுக்தியைக் கண்டு அதைச் செயல்படுத்தத் தொடங்கினாள்.“சுவாமி, பார்த்தீர்களா அந்த பரகாலனை..? உங்களைப் பாடாமலே புறப்பட்டு விட்டான். நீங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டீர்கள்? பாருங்கள்... இப்போது அவன் திருக்கடல் மல்லை என்ற தலத்தில் உம் சயன கோலத்தைப் பாடுகிறான். என்ன ஆனாலும் சரி நீங்கள் அவனிடம் பாடல் பெற்று வந்தால்தான் இங்கு உங்களுக்கு இடம்!’’ என்று அந்த மாதவனை அனுப்பிவிட்டு தாழிட்டுவிட்டாள் கதவுக்கு!

பரமனாயினும் கணவன் ஆகி விட்டவன் அல்லவா? ஆழ்வாரைத் தேடி பாசுரம் பெறுவதற்கு திருக்கடல் மல்லைக்கு வந்தார் திருமால்.
முதலில் பாராமுகமாக இருந்துவிட்டு, இப்போது பாசுரம் கேட்டு ஆழ்வார் முன் நிற்க மனம் வரவில்லை. ஆதலால் திருக்கடல் மல்லை ஆலயத்திலிருந்த ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்றுகொண்டார் சுவாமி.

ஆழ்வார் இதை கவனிக்கத் தவறவில்லை. மாலவன் வந்த காரணத்தை ஊகித்தறிந்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...’ என்று கேட்டு அவரைக் கூச்சப்படுத்த மனம் வரவில்லை. ஆதலால் -
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றவூர் நித்திலத் தொத்தார் சோலை
காண்டவனத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே...

- என்று பாடினார். அதாவது திருநின்றவூர் நிமலனை கடைமல்லையில் கண்டேன் என உருகினார்.  இந்தப் பாடலை எடுத்துக் கொண்டு பிராட்டியிடம் வந்து பெருமையடித்தார் மாலவன்! ‘‘பார்த்தாயா..? என்னையும் பாடிவிட்டான் திருமங்கை மன்னன்!”

திருமகளோ, ‘‘போதும் உங்கள் பெருமை. மற்ற தலங்களுக்கு அவர் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். ஆனால், உங்களுக்கு கேவலம் ஒரே ஒரு பாட்டுதானா?! போங்கள்... இன்னும் ஒரு பாசுரமாவது வாங்கி வாருங்கள்...” என்று அனுப்பி விட்டாள்!இதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கை சென்றுவிட்டார். இதை யறிந்து கண்ணமங்கைக்கு பகவான் சென்றார். வழக்கம்போல் தூணின் பின்னால் மறைந்து நின்றார்!

திருநின்றவூர் இறைவனை தூணின் பின்னே கண்டார் ஆழ்வார், வெண்கல மணிக் குரலில் பின்வரும் பாசுரம் பாடினார்.

ஏற்றினை யிமயத்திெலம் ஈசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்தப்புறத்துய்த்திடும் ஐயனை
கையிலாழி ஒன்றேந்திய கூற்றினை
குரு மாமணி குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை
காற்றினை புனலைச் சென்று நாடி
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே...

- பாடிக் கொண்டே பரமனை நன்கு தரிசனமும் செய்து விட்டார்.
கடல்மல்லை திருக்கோயில் தூணின் பின் பெருமான் நின்றதால் ஆழ்வார் நன்றாக சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. இதை உணர்ந்ததாலேயே மற்றொரு முறை பாசுரம் பெறச் சொல்லி பெருமானை அனுப்பி வைத்தாள் திருமகள்.இதனால் ஆழ்வாரும் பகவானை நன்கு தரிசித்தார். வாயைத் திறந்து பெருமானை தரிசிக்க முடியவில்லையே என ஆழ்வார் வருந்துவதற்கு முன்பே தாயார் அதை உணர்ந்து வெகு சாமர்த்தியமாக அவர் குறையைத் தீர்த்து வைத்து விட்டாள்!

இதன் காரணமாகவே
வைபவ லட்சுமி என்றும் இத்தாயார் அழைக்கப்படுகிறார்.
“இதனாலதான்மா திருநின்றவூர் போய் என்னைப் பெற்ற தாயார் முன்னாடி நிக்கச் சொல்றேன்! பிராட்டியை வணங்கினா போதும். நீ சொல்லாமயே உன் கஷ்டங்களை அவ புரிஞ்சு சரி செய்துடுவா...’’ என்றார் நாகராஜன்.
அப்பொழுதே தன் சிரமங்கள் அனைத்தும் நீங்கியதுபோல் சரோஜா தெளிவு பெற்றாள்.
கண்ணனுக்குத்தான் இன்னொன்றும் கேட்கவேண்டும் என்று தோன்றியது. வாய்விட்டு அதைக் கேட்டுவிட்டான். ‘‘சரி தாத்தா... அவங்களுக்கு எப்படி ‘என்னைப் பெற்ற தாயார்’னு பேரு வந்துச்சு?’’
‘‘அதையும் சொல்றேன்...’’ என்றபடி நாகராஜன் தொடர்ந்தார்.

பாற்கடலில்தானே அன்னை மகாலட்சுமி உதித்தாள்? ஆகவே கடல் அரசன் அவளுக்கு தந்தை முறை அல்லவா?
ஒருமுறை தந்தைக்கும் மகளுக்கும் பிணக்கு ஏற்பட்டது. அதனால் தந்தை மேல் கோபித்துக்கொண்டு இந்த ஊர் வந்து நின்றுவிட்டாள்.
திரு என்ற மகாலட்சுமி வந்து தங்கியதால் திரு நின்ற ஊர் என்று அவ்வூர் அழைக்கப்பட்டது.

மகளின் பிரிவு தாங்காமல் வைகுண்டம் நாடி வந்தான் சமுத்திரராஜன். அங்கும் தன் மகளைக் காணாமல் மனம் நொந்தான்.
வைகுண்டத்தில் இருந்த மாதவனிடம் தன் மகளை சமாதானம் செய்யுமாறு வேண்டினான். பெருமானும் தேவி இருக்கும் இடம் கூறி அங்கே செல்லுமாறு பணித்து, தானும் பின்னே வருவதாகக் கூறினான். கடல் அரசனும் திருநின்றவூர் வந்து, “நீ என் மகளாகத் தோன்றினாலும் உண்மையில் ஈரேழு உலகுக்கும் நீயே தாய்! என்னைப் பெற்ற தாயே... என்னை மன்னித்துவிடு...” என்று பிராட்டியிடம் மன்றாடினான்.

பின்னால் வந்த பரந்தாமன் இதைக் கேட்டு மெய்மறந்தான். ‘என்னைப் பெற்ற தாயார்...’, ‘என்னைப் பெற்ற தாயார்...’ உச்சரிக்க நன்றாகவும் நெருக்கமாகவும் இருந்தது.உடனே இந்தப் பெயரே இத்தலத்தில் இருக்கும் தேவிக்கு நிலைக்கும் என்று ஆசி கூறினான். மகளின் கோபம் தணிந்தது. கடல் அரசன் ஆனந்தமடைந்தான். அந்த மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக சமுத்திர ராஜனுக்கு தம்பதி சமேதமாக மாதவன் காட்சியளித்தார்.

பக்தனின் வேண்டுதலை ஏற்றதுடன் அவன் பின்னால் வந்ததால் இங்குள்ள பெருமாள் ‘பக்தவத்சலப் பெருமான்’ என அழைக்கப்படுகிறார்!
‘‘இது வெறும் அப்பா பொண்ணு கோபம் மட்டுமில்ல... தந்தையாவே இருந்தாலும் கடல் அரசன் பக்தன்தானே? அவனுக்கு மணக்கோலம் காண்பிக்கணும்னு தாயார் ஆடிய நாடகம் இது! இந்தக் கதை பிரமாண்ட புராணத்துல இருக்கு...’’ கண்ணனைப் பார்த்து அன்புடன் சொல்லிவிட்டு சரோஜா பக்கம் திரும்பினார் நாகராஜன்.

‘‘திரும்பவும் சொல்றேன்மா... நீ அங்க போய் நின்னாலே போதும். மிச்சத்த அவ பாத்துப்பா! உனக்கு அம்மாவா இருந்து உன் குடும்பத்து கஷ்டங்களை எல்லாம் அவ தீர்த்து வைப்பா. உரிமையோட உனக்கு என்ன வேணும்னு ‘என்னைப் பெற்ற தாயார்’கிட்ட கேளு...’’ ‘‘கண்டிப்பா நாளைக்கே திருநின்றவூர் போறேன் ஐயா...’’ என்றபடி நாகராஜனைப் பார்த்து கரம் குவித்தாள் சரோஜா. ‘‘பெரிய பாரமே இறங்கின மாதிரி இருக்கு. மனசும் லேசாகிடுச்சு. நன்றிங்கய்யா... நான் வரேன். அம்மா... கிளம்பறேன்...’’‘‘கொஞ்சம் பொறு சரோஜா...’’ தடுத்த ஆனந்தவல்லி குங்குமச்சிமிழை எடுத்து அவள் முன்னால் நீட்டினாள். ‘‘இட்டுக்க...’’மலர்ச்சியுடன் தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சரோஜா புறப்பட்டாள்.

‘‘சரி... வாங்க சாப்பிடலாம்...’’ ஆனந்தவல்லி இருவரையும் அழைத்தாள்.‘‘இருங்க பாட்டி... தாத்தாகிட்ட இன்னொண்ணு கேட்கணும்...’’‘‘என்ன கண்ணா..?’’ நாகராஜன் புன்னகைத்தார்.

‘‘என் ஃப்ரெண்டோட அக்காக்கு ரொம்ப நாளா கல்யாணம் ஆகலை. தள்ளித் தள்ளிப் போகுது. இதுக்கு ஏதாவது கோயில் இருக்கா..?’’
‘‘இருக்கு! தாத்தா சொல்லுவார். ஆனா, இப்ப இல்ல. நாளைக்கு. லேட்டாகிடுச்சு இல்லையா... சாப்பிட்டு வீட்டுக்குப் போய் தூங்கு..!’’
வேறு வழியின்றி தலையசைத்த கண்ணனுக்குள் அது என்ன கோயிலாக இருக்கும் என்ற கேள்வி சுற்றிச் சுற்றி வந்தது.

(கஷ்டங்கள் தீரும்)

திருநின்றவூர்

* d108 வைணவ திருத்தலங்களில் பக்தவத்சலப் பெருமாள் கோயில் 58வது திவ்ய தேசம்.
* சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருநின்றவூர் அமைந்திருக்கிறது. பேருந்து வசதியும் உண்டு.
* காலை 7.30 முதல் 11.30 வரையிலும் மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும்.

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்