பாம்புகளைப் பிடிக்கும் போலீஸ்காரர்!சக மனிதர்களுக்கு செய்யும் தவறுகளுக்காக வருந்த முடியாத அளவுக்கு அவசர வாழ்வை இன்று வாழ்கிறோம்.இந்நிலையில்தான் தெலுங்கானா உள்ளூர் காவல் படையைச் சேர்ந்த கிருஷ்ணசாகர் சியர்லா, ஒரு பாம்புக்குச் செய்த தவறுக்காக பல்லாயிரம் பாம்புகளைக் காப்பாற்றி வருகிறார்!

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தெலுங்கானாவுலதான். இங்கயே உள்ளூர் காவல் படைக்கான பயிற்சி முடிச்சு காவல் படைலயும் இருக்கேன்.ஒருமுறை என்னை ஒரு பாம்பு கொத்திடுச்சு. எந்தப் பாம்பு கொத்தினதுனு காட்டினாதானே டாக்டரால அது விஷமுள்ள பாம்பா இல்லையானு தெரிஞ்சு சிகிச்சை அளிக்க முடியும்? ஆனா, பாம்பை உயிரோடு பிடிக்க முடியாது! அதனால அதைக் கொன்று எடுத்துட்டுப் போனேன்.
முதல் டாக்டரால அது விஷமுள்ள பாம்பா இல்லையானு கண்டுபிடிக்க முடியலை. உடனே இன்னொரு டாக்டர்கிட்ட எடுத்துட்டுப் போனேன். அவரு, ‘இது விஷமில்லாத பாம்புதான். பிரச்னை இல்லை’னு சின்னதா ஒரு மருத்துவம் மட்டும் செய்தார்...’’ என்ற கிருஷ்ணசாகர் சியர்லாவுக்கு இதன்பிறகு தன்மீதே கோபம் வந்திருக்கிறது.

‘‘கூடவே வருத்தமும்தான். ஓரளவு பாம்புகள் பத்தின அடிப்படை அறிவு எனக்கு இருந்திருந்தா தேவையில்லாம அதைக் கொன்றிருக்க மாட்டேனே..? பல நாட்கள் இதையே நினைச்சுட்டு இருந்தேன். அது வயல்கள்ல எலியைப் பிடிச்சுத் திங்கற சாதாரண பாம்பு. விவசாயிகளின் நண்பன்! இதெல்லாம் தெரிஞ்சதும் இன்னமும் என்மேல கோபம் அதிகரிச்சது.

வனர்பதி டவுன் போலீஸ் ஸ்டேஷன்ல வேலை பார்க்கறேன். வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல பாம்புகள் பத்தி படிக்க ஆரம்பிச்சேன். ஓய்வு கிடைக்கிறப்ப இருளர் குழுக்கள் கூட சேர்ந்து காடுகள், மலைகள்னு அலைஞ்சி பாம்புகள் பத்தி புரிஞ்சிக்கிட்டேன். முதல்ல நான் தெரிஞ்சிக்க நினைச்சது எந்தெந்த பாம்புகளுக்கு விஷமிருக்கு... எது எதுக்கு இல்லை என்றுதான். ஜாலிக்காக பாம்பு பிடிக்கிற கொம்பு ஒன்றை என் சகோதரர் வைச்சிருந்தார். அவர்கிட்ட இருந்து அதை வாங்கி நான் பயன்படுத்த ஆரம்பிச்சேன்.

இணையதளங்கள், யூ டியூப் சேனல்ஸ்னு எல்லா வகையிலும் பாம்புகள் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஆயிரக்கணக்காக பாம்புகளைப் பிடிச்சிருக்கேன். இப்ப ஊர்ல என்னை காவலாளியா யாருக்கும் தெரியாது! பாம்பு பிடிப்பவனாதான் பிரபலம் ஆகியிருக்கேன்!

பாம்பு கொத்திடுச்சுனா அதுக்கு பாட்டி வைத்தியம் செய்யக் கூடாது. பாம்புக் கடியைப் பொறுத்தவரை நம்ம இந்திய மருத்துவம் நல்ல முன்னேற்றத்துல இருக்கு. அதனால உடனடியா ஆம்புலன்ஸ் பிடிச்சு அரசு மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை எடுத்துக்கறதுதான் பெஸ்ட்...’’புன்னகைக்கும் கிருஷ்ண சாகருக்கு தினமும் இரு அழைப்புகளாவது வருகின்றன.

உடனே ஓடிச் சென்று பாம்புகளைப் பிடித்து, பல கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் விட்டுவிட்டு வருகிறார். அத்துடன் அவைபாதுகாப்பாக உள்ளனவா என்பதையும் கண்காணிக்கிறார்.‘‘இப்ப எங்க பகுதி மக்களுக்கு எதெல்லாம் விஷமுள்ள பாம்பு... எதுக்கெல்லாம் விஷமில்லைனு தெரியும். எல்லாம் என் டிரெயினிங்தான்! கூடவே உயிரியல் படிக்கிற மாணவர்களுக்கு பாம்புகள் பத்தி பாடமும் எடுக்கறேன்!’’ கண்சிமிட்டுகிறார் கிருஷ்ணசாகர் சியர்லா.     

ஷாலினி நியூட்டன்