நோயாளிகளுக்கு இருக்கும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைச் சிக்கல்கள்..!



நமது நாட்டின் முக்கியமான பலமும் பலவீனமும் அதிகமான மக்கள் தொகைதான். சுமார் நூற்றைம்பது கோடியை நெருங்கப் போகும் மாபெரும் மக்கள் திரள் உள்ள ஒரு தேசத்தின் தலையாய பிரச்னைகளில் ஒன்று நோய்.ஒருபுறம் நோய்கள் புதிது புதிதாய் பெருகிக் கொண்டிருக்க மறுபுறம் அதைப்பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல், மருத்துவம் பற்றியோ நோயாளிகளின் உரிமைகள் பற்றியோ எந்தப் புரிதலும் இல்லாமல் கோடிக்கணக்கானவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மத்திய குடும்பநலத்துறை அமைச்சகமும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இணைந்து சமீபத்தில்  நடத்திய நீதிமன்றங்களுக்கான சட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் தொடர்பான கூட்டத்தில் நோயாளிகளின் உரிமைகள் தொடர்பான மாதிரி வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவு, நோயாளிகள் தங்கள் உரிமைகள் பற்றி அறிவதற்கான கையேடாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

நம் நாட்டில் மருத்துவம் என்பது மாநில விவகாரம் என்பதால் மாநில அரசுகளோடு இணைந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த விஷயத்தை முன்னெடுக்க உள்ளது. மருத்துவம் மற்றும் நல்வாழ்வுக்கான உரிமை நமது அரசியல் சட்டத்தின் 21வது வரைவின் கீழ் வருகிறது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பல்வேறு நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு இந்தச் சட்டத்தை இப்போது வரை வழிநடத்தி வருகிறது.

இன்று, உலகின் பல்வேறு சமூகவியல் ஆய்வாளர்கள் மருத்துவத்தை அடிப்படை உரிமையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிவருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் இப்படியான மாதிரி வரைவு வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.நோயாளி என்பவர் யார் என்பது பற்றியே சட்டரீதியாக வரையறுக்க முடியாத சூழலில் அவரின் உரிமைகள் பற்றி என்னென்று வரையறுப்பது என்று சிலர் கேட்கிறார்கள்.

நம் நாட்டில் நோயாளிகள் என்று இல்லை... நமது மருத்துவ அமைப்புகள் தொடர்பாகக்கூட தெளிவான, திட்டமிட்ட வரையறைகள்... அதுபற்றிய தகவல்கள்... ஆகியவை முழுமையாக இல்லை. அளவுக்கு அதிகமான மக்கள்தொகைக்கு ஏற்ற டேட்டா சேமிப்பு முறைகள் நம்மிடம் இல்லாததே இந்தப் போதாமைக்குக் காரணம்.

நம் அரசு மனநலச் சட்டம் 2017, மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 போன்ற புதிய சட்டங்கள் மூலம் இதை எல்லாம் ஓரளவு சரிசெய்ய முயன்றாலும் நிைலமை நாம் திருப்தியடையும் விதமாக இல்லை. மருத்துவத்தைக் கையில் வைத்திருக்கும் மாநில அரசுகள் தங்கள் கடமையை உணராத வரை நோயாளிகளின் உரிமைகள் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

நம் நாட்டில் தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள், விபத்துகள் என விதவிதமான மருத்துவத் தேவைகளால் நாள்தோறும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இங்குள்ள மருத்துவக் காப்பீடு என்பது இவர்கள் அனைவரையும் போய்ச் சேர்வதாக இல்லை.அரசு வழங்கும் சலுகைகள், காப்பீடு தாண்டி சராசரியாக ஓர் இந்தியர் இரண்டாயிரத்து நானூறு ரூபாய் வரை செலவழிக்கிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் சொல்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. இப்போது இந்தத் தொகை இன்னும் அதிகரித்திருக்கக் கூடும்.

நம்மிடம் உள்ள சட்டங்களில் சிகிச்சை மையங்கள் உருவாக்கச் சட்டம் 2010 மட்டுமே அரசு மட்டும் தனியார் மருத்துவமனைகள் இரண்டையும் சமமாகப் பாவித்து அவற்றின் கடமைகள் பற்றி ஓரளவு தெளிவாகப் பேசுகின்றது. பனிரெண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இச்சட்டத்தை அமுலாக்கியிருக்கின்றன.சிகிச்சை மையங்களின் பதிவகத்தில் வெறும் பதினைந்தாயிரத்து நான்கு மருத்துவமனைகள் பற்றிய தகவல்களே உள்ளன. இதைத் தவிர தேசிய மருத்துவ இயக்கத்தின் கைகளில் அரசு மருத்துவமனைகள் பற்றிய டேட்டா இருக்கிறது.

ஆனால், இந்தப் பட்டியலுமே கூட எளிதாகப் பயன்படுத்தக் கூடியது அல்ல. எனவே, இதை ஒரு நோயாளி பார்வையிட்டு தனக்குத் தேவையான ஒரு மருத்துவமனையைத் தேர்வு செய்வது என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம்.

ஒரு மருத்துவரின் கல்வித் தகுதி, அவரின் நன்மதிப்பு, கைராசி போன்றவற்றை எல்லாம் மதிப்பிடுவதற்கான வாய்ப்பு ஒரு நோயாளிக்கு அவசியம் இருக்க வேண்டும். ஆனால், நம்மிடம் இதுகுறித்து எல்லாம் எவ்விதமான நம்பத்தகுந்த ஏற்பாடுகளும் இல்லை என்பதால் உறவினர்கள், நண்பர்கள் சொல்லும் வாய்மொழி பரிந்துரைகளின் அடிப்படையில்தான் பெரும்பாலானவர்கள் சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.

மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் பற்றிய பதிவேடு ஒன்றை இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன்படி  பராமரிக்க வேண்டும். இதை அவ்வப்போது அப்டேட் செய்யவும் வேண்டும். இதில், ஒரு மருத்துவரின் பெயர், அவரது மருத்துவத் தகுதி, அவர் சேவையாற்றும் இடம் ஆகிய தகவல்கள் இருக்க வேண்டும்.

இந்த மருத்துவப் பதிவேட்டை மாநில மருத்துவ கவுன்சில்தான் பராமரிக்க வேண்டும். மத்திய கவுன்சிலுக்கு இந்தத் தகவல்கள் மட்டுமே தெரிவிக்கப்படும். மாநில கவுன்சில் என்பது மத்திய கவுன்சிலின் கட்டுப்பாட்டில் வராத சுயாதீனமான அமைப்பு. எனவே பெரிதாகக் கேள்வி எல்லாம் கேட்டுவிட முடியாது. இப்போதைய நிலவரப்படி இந்தப் பதிவேடு கடந்த 2015ம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டதுதான். அதிலும் பல மாநிலப் பதிவேடுகள் 2011ம் ஆண்டின் தகவல்களுடன் மட்டுமே நிற்கின்றன. அதன் பிறகு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் சேவைக்கு வந்திருப்பார்கள்? அவர்கள் பற்றி எல்லாம் பதிவே இல்லை!

வழக்குரைஞர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பார் கவுன்சிலில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருப்பது போல் மருத்துவர்களுக்கும் இருந்தால் என்ன?

என்னதான் நோயாளிகளின் உரிமை குறித்த மாதிரி வரைவு சிறப்பாக இருந்தாலும் நமது மருத்துவத்துறையின் இது போன்ற போதாமைகள் அந்த சட்டத்தை முழுமையாக இயங்கவிடாமல் செய்திடாதா?

தவறான மூட்டு மாற்றுக் கருவிகள் தொடர்பான ஊழலில் ஒரு நிறுவனம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், நம்மிடம் இதில் பாதிக்கப்பட்ட நிஜமான நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பான எந்த ஆவணமும் இல்லாததால் வெற்று பரபரப்புடன் இது அடங்கிவிட்டது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைப்படி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளாவது பராமரிக்கப்பட வேண்டும். மத்திய மின்னணு மருத்துவத் தகவல் சேமிப்பு, முறையாகச் செயல்படாததால் மேற்சொன்ன விவரங்கள் சேகரிக்கப்பட்டாலும் அவை அரைகுறையாகவே பதிவாகின்றன.

நோயாளிகளை குறித்த காலத்தில் தொடர்பு கொண்டு மருத்துவத்துக்கு அழைப்பது, நினைவூட்டுவது என்பதெல்லாம் அரிதினும் அரிதான விஷயங்களாகி விட்டன.நோயாளிகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் குறித்த ஒருங்கிணைந்த, மேம்பட்ட, எல்லோரும் எளிதாகக் கையாளக்
கூடிய நம்பகமான தகவல்கள் எல்லாம் நம் மருத்துவத் துறையில் முறையாகத் தொகுக்கப்படாதவரை நோயாளியின் உரிமைகள், மருத்துவர்களின் கடமைகள் என எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதனால் பயனேதும் இல்லை.இதை உணர்ந்து விஞ்ஞான பூர்வமான தரவுகளுக்குள் நுழைய வேண்டியது இன்றைய அவசர, அவசியத் தேவை.   
                                        

இளங்கோ கிருஷ்ணன்