லன்ச் மேப்-ஸ்ரீவில்லிபுத்தூர் கணேஷ் டிபன் கடைசன் தொலைக்காட்சிப் புகழ் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜாவும், பாரதி பாஸ்கரும் அடிக்கடி, ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் வாசல்ல இருக்கிற ‘கணேஷ் டிபன் கடை’ல இருக்கிற வெள்ளை அப்பத்தை நாள் முழுக்க சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்...’’ என்பார்கள்.

இவர்கள் என்றில்லை. இக்கடையில் வெள்ளை அப்பத்தை சாப்பிடும் எல்லாருமே அப்படித்தான் சொல்வார்கள். குறிப்பாக பெண்கள், ‘நாங்களும்தான் தினமும் சாம்பார் வைக்கறோம். ஆனா, இந்தக் கடை சாம்பார் ருசி வரவே மாட்டேங்குது’ என அலுத்துக் கொள்வார்கள்!

அந்தளவுக்கு அனைவரது நாவையும் கட்டிப் போட்டிருக்கும் இந்த ‘கணேஷ் டிபன் கடை’, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுர வாயிலில் இடதுபக்கம் இருக்கும் சன்னதி தெருவில் வீற்றிருக்கிறது.

1969ம் ஆண்டு எந்த இடத்தில் பத்துக்குப் பத்து சைசில் இயங்கத் தொடங்கியதோ அதே இடத்தில் இன்றும் அப்படியே செயல்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் இட்லி, தோசை, வடை, பூரி, அப்பம், பொங்கல், தயிர் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை உள்ளிட்ட சைவ உணவுகளுக்கு உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டு மனிதர்கள் வரை சகலரும் அடிமையாக இருக்கிறார்கள்! அதிகாலை 5 மணிக்கே இக்கடையின் முன் திரளும் கூட்டமே இதற்கு சாட்சி.

கறந்த பசும் பாலை அதன் கதகதப்பு குறைவதற்குள் அடுப்பில் ஏற்றி, காபிக் கொட்டையை அரைத்து சுடச்சுட காபி போட்டுத் தருகிறார்கள். பாலுக்கு பேர் போன ஊர் வில்லிபுத்தூர். அப்படியிருக்க காபியின் மணத்துக்கு சொல்லவா வேண்டும்?!
காலை டிபனாக பொங்கலும் தயிர்வடையும் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். சிலர் தயிர் வடையை வாங்கி அதில் பூரி, தோசையைத் தொட்டுச் சாப்பிடுகிறார்கள்!

‘‘இந்தக் கடை ஆரம்பிச்சு 50 வருஷங்களாகுது. சொந்த ஊர் கழுகுமலை பக்கம். வறுமையான குடும்பத்துல பிறந்தேன். பிழைப்பு தேடித்தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆரம்பத்துல பலகாரம் செஞ்சு தெருவுல வித்தேன். கிடைச்ச பணத்தை சேர்த்து வைச்சு இந்தக் கடையை ஆரம்பிச்சேன்.

இயற்கை உணவுனு இப்ப பலரும் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. நல்ல விஷயம்தான். அதேநேரம் அந்தக் காலத்துல இயற்கை விவசாயம்தான் நாம செஞ்சோம் என்பதை மறக்கக் கூடாது. ஒரு ஏக்கர் நிலத்துல 15 மூட்டைதான் வரும். ஆனா, உடலுக்கு ஆரோக்கியமாகவும் தரத்துல குறைவில்லாமலும் இருந்தது.

இதை மாத்தி ஏக்கருக்கு 40 மூட்டை அள்ளணும்னுதான் பசுமைப் புரட்சியப்ப உரத்துக்கு மாறினோம்...’’ என மெல்ல அசைபோடுகிறார் கடையின் உரிமையாளரான குருநாதன்.‘‘இப்ப இயற்கையோட ருசியை இழந்துட்டோம். அதேநேரம் மக்கள் தொகை அதிகரிச்சும் உணவுத் தேவை பூர்த்தியாகுது. இதை கணக்குல கொண்டு இயற்கை விவசாயத்தை திரும்ப செய்ய ஆரம்பிச்சாலும் தேவையான ரசாயனங்களையும் பயன்படுத்தணும். அதேசமயம் விளையும் பொருட்களோட தரமும் கெடாம பார்த்துக்கணும்...’’ என்கிறார் குருநாதன்.

இட்லிக்கு இவர்கள் தரும் சாம்பார், தனித்த சுவையுடன் சப்புக் கொட்ட வைக்கிறது. இவர்களே அரைத்த வீட்டு மிளகாய்த் தூளில்தான் சாம்பாரை தயாரிக்கின்றனர். எனவேதான் வேறு எங்கும் கிடைக்காத தனிச் சுவையுடன் இருக்கிறது.மாலையில் பஜ்ஜி, வடை, போண்டா, வெள்ளையப்பம்... என ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் உண்டு. எல்லாவற்றையும் சுடச்சுட பரிமாறுகிறார்கள். முழுதும் தீர்ந்தபிறகே அடுத்த செட்டை சமைக்கிறார்கள்.

‘‘தயிர் வடைல இருக்கிற தயிர் புளிக்கக் கூடாது. அப்பதான் சுவையா இருக்கும். அதனால நைட் 11 மணிக்கு பாலைக் காய்ச்சி பொறை ஊத்தி குளிர்ச்சியான தண்ணீர்ல அதை வைப்பேன். காலை சரியா 6 மணிக்கு அந்தத் தயிரை வடைல சேர்ப்பேன்.

தயிர் வடைக்குனே ஸ்பெஷலா வடை சுடுவோம். இதுல வெறும் உளுத்த மாவுதான் இருக்கும். உப்பு, காரம் சேர்க்க மாட்டோம்.
சாம்பார் தயாரிக்கிறப்ப தனி கவனம் செலுத்தணும். ஏன்னா, சாப்பாட்டுல குறைவா ஊத்தி பிசைஞ்சு சாப்பிடுவோம். ஆனா, இட்லி, தோசைக்கு அதிகமா ஊத்தி தொட்டுப்போம்.

ஒண்ணு தெரியுமா, காலை டிபன்ல அதிகமா சாம்பார் ஊத்தி சாப்பிட்டா அன்று முழுக்க உற்சாகமா இருப்போம்!

இதை மனசுல வைச்சு தரமான பருப்பை வாங்கி மிளகாய், மல்லி, உப்பு மாதிரியான சேர்மானங்களை குறைவா சேர்க்கறோம். பருப்பை குக்கர்ல வேக வைப்பதில்லை. தனியா பாத்திரத்துல பஞ்சு மாதிரி வேக வைக்கறோம்...’’ என்கிறார் குருநாதன்.காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த டிபன் கடை திறந்திருக்கிறது. குறைவான விலைதான். ஐம்பது ரூபாயில் வயிறு நிறைய சாப்பிட்டு மீதி சில்லறையும் பெறலாம்!         
                                      
வெள்ளையப்பம்

பச்சரிசி -  200 கிராம்
புழுங்கல் அரிசி - 100 கிராம்
உளுந்து - 100 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 சிட்டிகை
மிளகு - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 தேக்கரண்டி

பக்குவம்:
அரிசி, உளுந்தை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். இதில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய், பெருங்காயம், மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு கரண்டியால் அப்பமாக விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும். மாவு அரைத்த ஒரு மணி நேரத்தில் வெள்ளையப்பம் செய்துவிட வேண்டும். இதற்கு சைடுடிஷ்ஷாக மிளகாய் சட்டினியை தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வீட்டு மிளகாய்த் தூள்

காய்ந்த மிளகாய் - 500 கிராம்
முழு மல்லி - 500 கிராம்
சீரகம் - 200 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
சோம்பு - 50 கிராம்
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி
கடுகு - 3 சிட்டிகை
கசகசா - 3 சிட்டிகை
அரிசி - 50 கிராம்
கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி
கட்டிப் பெருங்காயம் - 3 துண்டு

பக்குவம்: மிளகாய் மற்றும் மல்லியை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். மிளகாய் வத்தலைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் அடி கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் அந்தந்த பொருட்களின் மணம் வரும்வரை சிவக்க வறுக்கவேண்டும். கறிவேப்பிலையை முன்னதாகவே நிழலில் உலர்த்தி வாணலியில் மொறு மொறுவென வறுத்து சேர்த்துக்கொள்ளவும். கட்டிப் பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்து  சேர்க்கும்போது வாசனை இருந்துகொண்டே இருக்க வேண்டும்.  தூள் பெருங்காயமும் தேவைக்கேற்ப பயன்
படுத்திக் கொள்ளலாம்.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மில்லில் அரைக்கும்போது நைசாகக் கிடைக்கும். மிக்சியில் அரைத்தால் துல்லியமான பதம் கிடைக்காது. அரவை மில்லைத் தேடிச் சென்று அரைப்பது நல்லதுநான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு இந்த அளவில் மிளகாய்த் தூள் அரைத்தால் ஐந்து மாதங்களுக்கு வரும்.  

திலீபன் புகழ்

மீ.நிவேதன்