காதலனின் மனைவி



வீட்டின் முன் கார் வந்து நிற்க கணவன் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டான் என்பதை அறிந்துகொண்டாள் பத்மா. வீட்டு வேலைகளை முடித்து விட்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள்.
இந்த அபார்மெண்ட் யுகத்தில் சிறு சதவீதங்களே வாழ்ந்து கொண்டிருக்கும் தனி வீடு அவர்களுடையது. அன்று மாலை ஆறு மணிக்கே வந்து விட்டிருந்தான் சுதாகர். சாதாரணமாக இரவு எட்டு மணி ஆகிவிடும். கம்ெபனியில் பெரிய பொறுப்பு. டெபுடி ஜெனரல் மேனேஜர்.

காரின் கதவு திறக்க, சுதாகருடன் ஒரு பெண்ணும் இறங்கினாள். பத்மாவின் புருவங்கள் உயர்ந்தன. ஹீரோயின்களை சினிமாவில்தான் பார்த்திருக்கின்றாள். இப்பொழுது நேரில் பார்க்கிறாள். அழகென்றால் அப்படியொரு அழகு. அளவான உடம்பு. சிவப்பு நிறம். மயக்கும் கண்கள்.

இருவரும் காம்பௌண்டை அடைய, கதவைத் திறந்தாள். ‘‘வாங்க...’’ அந்த வரவேற்பு கணவனுடன் வந்த அந்தப் பெண்மணிக்கு.‘‘வா, தீபா...’’ சுதாகர் அவளை வரவேற்றான். வீட்டினுள் நுழைந்து சோபாவில் அமர்ந்தாள்.

‘‘என் செகரட்டரி...’’ பத்மாவிடம் அறிமுகப்படுத்திவிட்டு தானும் ஒரு சோஃபாவில் அமர்ந்தான் சுதாகர்.‘‘என்ன சாப்பிடறீங்க? ஸ்நாக்ஸ்... கூல் ட்ரிங்க்ஸ்... காபி..?’’ ‘‘பத்மா, ஒண்ணு செய். பிஸ்கட் கூல் ட்ரிங்க் தீபாவுக்குக் கொடு. எனக்கு சூடா ஒரு காபி கொண்டு வா...’’

சுதாகர் சொன்னதை ஏற்று கிச்சனுக்கு சென்றாள். இரண்டு மூன்று நிமிடங்களில் கொஞ்சம் பிஸ்கட், மிக்ஸர் ஒரு குளிர் பானக் கோப்பை இவற்றுடன், இரண்டு காபி கோப்பைகளைக் கொண்டு வந்து டீபாய் மீது வைத்துவிட்டு தானும் அமர்ந்தாள். தீபாவை பார்த்துப் புன்னகைத்தாள்.

‘‘உங்க அழகைப் பார்த்து அசந்துட்டேன்! மிஸ் இந்தியா போட்டிக்குப் போனீங்கனா கண்டிப்பா ஜெயிப்பீங்க! பாருங்க... நானே கண் வைச்சுட்டேன். வீட்டுக்குப் போய் சுத்தி போடச் சொல்லுங்க...’’ மனமாரப் பாராட்டினாள் பத்மா.
தீபாவின் முகத்தில் பெருமிதம் படர்ந்தது. ‘‘தேங்க்ஸ்...’’ ‘‘உங்க சொந்த ஊர் எது..?’’  

‘‘மதுரை... உங்க ஹஸ்பண்ட் ஊர்...’’ சொல்லிவிட்டு பிஸ்கெட்டை எடுத்து தீபா வாயில் போட்டுக்கொண்டாள். ‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா..? ஹஸ்பண்ட் என்ன பண்ணறார்?’’பத்மா இப்படிக் கேட்டதும் சுதாகரின் முகம் மாறியது. பத்மாவையும் தீபாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு சோபாவில் நெளிந்தான். பார்வையால் தீபாவிடம் கெஞ்சினான்.

அதை அலட்சியப்படுத்திவிட்டு பத்மாவை உற்றுப் பார்த்தாள் தீபா. வெகு சுமாராகத் தெரிந்தாள். தீபாவின் கண்களில் கர்வம் படர்ந்தது. ‘‘என்ன கேட்டீங்க..? கல்யாணத்தைப் பத்திதானே? முதல்ல ஒண்ணு சொல்லிடறேன். இங்க நான் வந்ததே உங்களைப் பார்க்கத்தான். அப்புறம் இன்னொன்னு. தப்பா நினைக்காதீங்க... என் அழகைப் பாராட்டினீங்க. ஆனா... என்னைப் பொறுத்தவரை நீங்க ரொம்ப சாதாரணமாத்தான் இருக்கீங்க...’’

‘‘எனக்கே தெரியும் தீபா...’’ இயல்பாகச் சொன்னாள் பத்மா. ‘‘இவரை எனக்கு நிச்சயம் செய்தப்ப இவரோட பர்சனாலிட்டிக்கு நான் சரிப்பட மாட்டேன்னு ரொம்ப தயங்கினேன். ரெண்டு பேர் வீட்டுலயும் ஜாதகம் பொருந்தியிருக்குனு கன்வின்ஸ் செஞ்சாங்க. அதை விடுங்க. நான் என்ன விஐபியா... என்னை எதுக்கு பார்க்க ஆசைப்பட்டீங்க..?’’

‘‘எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டீங்களே... ஆகலை. உங்களைப் பார்க்க வந்ததுக்கு அதுதான் காரணம்...’’சுதாகரின் முகத்தில் வியர்வைத் துளிகள் பூத்தன. ‘‘புரியலையே தீபா...’’ பத்மாவின் முகத்தில் கேள்வி படர்ந்தது.

‘‘நானும் சுதாகரும் ஒருத்தரை ஒருத்தர் அப்படி காதலிச்சோம்...’’ பட்டென்று விஷயத்தை உடைத்துவிட்டு பத்மாவை குரூரமாக நோக்கினாள் தீபா.
பத்மா தன் கண்களை விலக்கி வேறு பக்கம் பார்த்தாள்.

அப்படியே மறைந்துவிட்டால் நன்றாக இருக்குமே என சுதாகர் தவித்தான். ‘‘உங்களை கல்யாணம் செய்துகிட்டதும் சுதாகர் இந்த ஊர் வந்துட்டார். என் அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சதால நானும் இந்த ஊர் வந்துட்டேன்... சுதாகர் ஆபீஸ்லயே அதுவும் அவருக்கு செக்ரட்டரியா வேலை கிடைச்சுடுச்சு, தினமும் அவர் கூடவே இருக்கிற மாதிரி... என்ன பத்மா அமைதியாகிட்டீங்க..?’’

பழையபடி இயல்பாக தீபாவை ஏறிட்டாள் பத்மா. ‘‘உங்க காதல் பத்தி இவர் என்கிட்ட சொன்னதில்ல... சரி... ஏன் நீங்க கல்யாணம் செய்துக்கலை..?’’
‘‘வேற வேற சாதி... என் வீட்ல சம்மதிக்கலை. செத்துடுவேன்னு அம்மா மிரட்டினாங்க. அப்பா, அம்மா பேச்சை மீறி தீபாவை கல்யாணம் செஞ்சுக்க என்னால முடியலை...’’ வியர்வையைத் துடைத்தபடி சுதாகர் பதிலளித்தான்.

‘‘உயிருக்கு உயிரா காதலிச்சோம் பத்மா. ஒருநாள் கூட என்னைப் பார்க்காம சுதாகரால இருக்க முடியாது. என்னாலயும்தான். பார்க், பீச், சினிமானு நாங்க சுத்தாத இடமில்லை. அவர் கனவுல நான்... என் கனவுல அவர்...’’ தீபா அடுக்கினாள்.சட்டென்று எழுந்தாள் பத்மா. ‘‘பேசிட்டு இருங்க... கிச்சன்ல எனக்கு வேலை இருக்கு...’’ நகர்ந்தவள் திரும்பினாள். ‘‘சாப்பிட்டுப் போங்க...’’ தீபாவின் பதிலை எதிர்ப்பார்க்காமல் சமையலறைக்குள் நுழைந்தாள்.

தீபாவின் பேச்சு சப்தமும் சிரிப்பொலியும் வீடு முழுக்க எதிரொலித்தது. ஒருமுறை கூட சுதாகரின் குரல் பத்மாவுக்கு கேட்கவேயில்லை.இருபது நிமிடங்களுக்குப் பின் கிச்சனில் இருந்த பத்மாவின் பின்னால் தீபாவின் குரல் ஒலித்தது. ‘‘வரேன் பத்மா... நான் வந்தது உனக்கு சந்தோஷம்தானே..?’’ பத்மா திரும்பி அவளை வெறித்தாள். வெற்றிப் பெருமிதத்துடன் தீபா சிரித்தாள்.‘‘தீபா...’’ குரல் கேட்டுத் திரும்பியவள் பத்மாவை கண்டதும் அதிர்ந்தாள்.

‘‘உங்களை எப்படி காண்டாக்ட் செய்யறதுனு யோசிச்சுகிட்டே இருந்தேன்...’’ பத்மா புன்னகைத்தாள். ‘‘தேங்க் காட். எதேச்சையா இன்னிக்கி உங்களைப் பார்க்க முடிஞ்சது. கொஞ்சம் பேசணும்... காபி சாப்பிடலாமா..?’’தீபாவுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் மறுக்கவில்லை. இருவரும் அருகிலிருந்த ரெஸ்டாரண்ட் சென்று எதிர் எதிரே அமர்ந்தார்கள்.

ஆர்டர் செய்ததும் ஆவி பறக்க ஃபில்டர் காபி வந்தது.
‘‘என்ன பேசணும் பத்மா..?’’
‘‘சாரி கேட்கணும்!’’
‘‘எதுக்கு..?’’ தீபாவுக்கு தலை சுற்றியது.

‘‘அன்னிக்கி அப்படி நடந்ததுக்கு!’’தீபாவுக்கு பேச்சு வரவில்லை.‘‘நீங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சதா சொன்னதும் என்னால ஜீரணிக்க முடியலை... நானும் மனுஷிதானே... அதான் பட்டுனு எழுந்து உள்ள போயிட்டேன்.

நீங்க போனதும் மனசால மட்டும்தான் நீங்க ரெண்டு பேரும் காதலிச்சீங்கனு சுதாகர் என்கிட்ட ரொம்ப நேரம் விளக்கினார்..!’’‘‘பத்மா... அது வந்து...’’ ‘‘யோசிச்சுப் பார்த்தப்ப நான் எப்படி இருப்பேன்னு பார்க்கத்தான் நீங்க வீட்டுக்கு வந்தீங்கனு புரிஞ்சுது.

உங்களை விட நான் அழகா இருக்கேனானு பார்த்திருக்கீங்க. இல்லைனு தெரிஞ்சதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கு. தன்னை விட சுமாரானவ தட்டிக்கிட்டு போயிட்டாளேனு. அதனாலதான் என்னை வெறுப்பேத்தற மாதிரி நடந்துகிட்டீங்க. இது தெரியாம நான் வேற அப்படி நடந்துகிட்டேன். அதனாலதான் சாரி கேட்க  நினைச்சேன்...’’

தீபா பேச்சிழந்து பத்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.புரிந்தது போல் பத்மாவே தொடர்ந்தாள். ‘‘உங்க மனசுல இருக்கற ஏமாற்றம் நியாயமானதுதான் தீபா... காதலி என்கிற இடத்துல இருந்து இப்ப ஒரு செகரட்டரியா, சக ஊழியரா அவர்கூட வேலை பார்க்க வேண்டிய சூழல் உங்களுக்கு... புரியுது. யூ நோ ஒன் திங்... சுதாகர் என்கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்கறார்.

தனக்கொரு நல்ல மனைவி கிடைச்சிருக்கறதா அடிக்கடி சொல்வார்... சொல்றார்! மே பீ அழகான மனைவி கிடைக்காம போயிருக்கலாம். இந்த விஷயத்துல மட்டும் அவருக்கு பேட் லக்..!’’ தீபா தலைகுனிந்தாள். அவள் கரங்களை பத்மா பற்றினாள். ‘‘எப்பனாலும் எங்க வீட்டுக்கு வாங்க... அவருக்கு மட்டுமில்ல... எனக்கும் நீங்க ஃப்ரெண்ட்தான்!’’

‘‘பத்மா... ஆக்சுவலா நான்தான் உங்ககிட்ட சாரி...’’ தீபாவின் குரல் தழுதழுத்தது.‘‘ஷ்... என்ன இது... கண்ணைத் துடைங்க...’’ தன் கர்சீப்பை எடுத்து பத்மா கொடுத்தாள். துடைத்துக்கொண்டு நிமிர்ந்து பத்மாவை பார்த்தாள். தன்னை விட பேரழகியாக அவள் தெரிந்தாள்!        

ஓசி பயணம்!

வாஷிங்டன் டி.சியின் பென்னிங்டன் சாலையில் காரில் சென்ற ரஸ்தா தாஜ் அதிர்ந்துபோனார். மெட்ரோ பஸ்ஸின் பின்புறம் இளைஞர் ஒருவர் தொங்கியபடி அபாய சவாரி செய்துகொண்டிருந்தார். உடனே அதனை க்ளிக்கி இணையத்தில் பகிர்ந்தார். “இதுபோன்ற பயணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல; இளைஞர் உயிர்பிழைத்துள்ளது ஆச்சரியமான விஷயம்” என பஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரிஸ்க் எடுத்த இளைஞர் இதுபோல ஏராளமான சர்க்கஸ் சாதனைகளை முன்பே செய்தவராம்!

சாயம் வெ.ராஜாராமன்