ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது?



உர்ஜித் பட்டேல், சினிமா நடிகரோ தொழலதிபரோ அரசியல்வாதியோ விளையாட்டு வீரரோ இல்லை. ரிசர்வ் வங்கி கவர்னர். அப்படிப்பட்டவர் ராஜினாமா செய்கிறேன் என்று டிசம்பர் 10 அன்று அறிவித்ததும் இந்தியா பதற ஆரம்பித்தது.

ரிசர்வ் வங்கி வரலாற்றில், பதவிக்காலத்திற்கு முன்பே கவர்னர்கள் விலகுவது வெகு அபூர்வம். சுதந்திரம் பெற்றபோது ஒன்று, இரண்டு நடந்தது. கடைசியாக 90களுக்கு முன்பு நடந்தது.கடந்த 25 ஆண்டுகளில் நடக்கவில்லை. இப்போது உர்ஜித்தின் விலகுதல், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமான அதிகார சண்டையை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது.

‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ பதவி விலகுகிறேன் என்று சொன்னாலும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும், நிதி அமைச்சகத்துக்குமான உறவு முறை சுமூகமாக இல்லை என்பது நாடறிந்த ரகசியம்.வாராக்கடன்கள், வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் மிகை பணத்தினை அரசுக்கு மாற்றக் கேட்டது, குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டும் வாராக் கடன்களில் இருந்து விலக்கு அளிக்க சொன்னது... என பல்வேறு அழுத்தங்கள் அரசு தரப்பிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கப்பட்டது. இது தாங்காமல்தான் உர்ஜித் பட்டேல் வெளியேறினார் என்பது நிதர்சனம்.

ஆளும் பாஜக அரசில் மட்டும்தான் கருத்தியல் ரீதியாக முக்கியமான பொருளாதார நிபுணர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். இதற்கு முன்பாக எந்த ஆட்சியிலும் இப்படி  நடந்ததில்லை.ஆட்சிக்கு வந்தவுடனேயே முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கமுடியாது என்று மறுத்துவிட்டதால், அவர் அமெரிக்கா சென்றுவிட்டார்.

நிதி ஆயுக்கின் தலைவராக இருந்த அர்விந்த் பனஜாரியா, தனிப்பட்ட காரணங்கள் என்று காரணம் சொல்லி, மீண்டும் பேராசிரியராக அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டார். தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த சுப்ரமணியன், பதவிக் காலம் முடியும் முன்பே வெளியேறிவிட்டார்.

இந்த நீண்ட பட்டியலில் இப்போது இணைந்திருப்பது உர்ஜித் பட்டேல். அவரோடு வெளியேறி யிருப்பது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை மையத்தின் சுர்ஜித் பல்லா.உர்ஜித் பட்டேலுக்கு பதிலாக அரசால் புதியதாக நியமிக்கப்பட்டிருக்கும் திரு. சக்தி கந்தாதாஸ், இதற்கு முன்பு நிதி அமைச்சகத்தில் இருந்தவர். டிமானிடைசேஷன் சமயத்தில் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தவர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதுதான் என்று வாதாடியவர்.

பின்னாளில் ரிசர்வ் வங்கியின் தரவுகளும், சர்வேகளும், அறிக்கைகளுமே அந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று அறுதியிட்டுச் சொன்னது.
இத்தகைய பார்வைகள் உள்ள ஒருவர்தான் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். சக்தி கந்தாதாஸ் அரசின் கைப்பாவையாக இருப்பார் என்று ஒரு தரப்பும், முன்னாள் ஆணையராகவும் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்ததால் திறமையானவர் என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.

ரிசர்வ் வங்கி என்பது தன்னாட்சி அதிகாரத்தோடு இயங்கக் கூடிய அமைப்பு. அதன் தன்னாட்சியிலும், அதிகாரத்திலும் மத்திய அரசு மூக்கினை நுழைப்பது சரியான முறையன்று. இது எதிர்காலத்தில் அரசு, தன்னாட்சி நிறுவனங்கள், நீதித்துறை என மூன்றிலும் ஏகப்பட்ட குழப்பங்களையும், சீர்கேடுகளையும் உருவாக்கும்.

சர்வதேச சந்தையும், அரசுகளும் இவை அத்தனையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. அங்கே இவை அத்தனையும் எதிர்மறையாக பார்க்கப்படுகின்றன. சர்வதேச பெரு வணிக, நிதி, பொருளாதார மையங்களில் இந்த விலகல்கள், இந்திய ஒன்றியத்தின் ஸ்திரத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே சுமுகமான உறவில்லை என்பதால் பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்க ஆரம்பிக்கின்றன.ஏற்கனவே உள்ளூர் பயன்பாடு குறைந்திருக்கிறது. பணவீக்கம் ஊசலாடுகிறது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடி பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயக்கடன்களால் வேளாண்மைத் தொழில் நசுங்கியிருக்கிறது. வாராக்கடன்கள் சிக்கலால் புதிய கடன்கள் தர வங்கிகள் யோசிக்கின்றன.

இதனால் தொழிலில் மந்த சூழல் நிலவ ஆரம்பித்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் மேலேற தொடங்கியிருக்கிறது. வங்கி சாரா நிதிநிறுவனங்களின் நிதி குறைபாடுகள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. புதிய தொழில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.பட்ஜெட்டில் போடப்பட்ட நிதிப் பற்றாக்குறை எட்டே மாதங்களில் வந்துவிட்டது. மீதமிருக்கும் நான்கு மாதங்களை அதீத பற்றாக்குறையின் வழியேதான் கடக்க வேண்டியிருக்கும்.

ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஆளும் பாஜக அரசின் தோல்வியும் இப்போது இத்தோடு சேர்ந்து இருக்கிறது.டிசம்பர் 14 அன்று கவர்னராகப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தில் புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அரசும், தேர்தல் தோல்விகளால் எதையும் அழுத்தமாக வற்புறுத்தவில்லை. இந்த மந்தநிலையைச் சரியாகக் கையாளாவிட்டால், நீண்டக் கால நோக்கில் அரசும், மக்களும் பின்தங்க நேரிடும்.

இவ்வளவு சிக்கல்கள் சூழ்ந்திருக்கையில், அரசும், புதிய ரிசர்வ் வங்கி கவர்னரும்,இந்தியப் பொருளாதாரத்தை எப்படி வழி நடத்தப் போகிறார்கள் என்பதுதான் மக்கள் மனதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.மாற்றமா, ஏமாற்றமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.   என்ன நடக்கிறது?