ரத்த மகுடம்-33



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘தாயே...’’ கரிகாலன் மெல்ல அழைத்தான்.மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் தலை கேசத்தை தன் விரல்களால் பெரிய தாயார் கோதினார். பால்யத்தில் இப்படிக் கொஞ்சியது. ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஆனாலும் அப்போது எப்படி தன் மடியில் முகத்தைப் புதைத்தானோ அப்படித்தான் இப்போதும் புதைக்கிறான். அடைக்கலம் தேடுகிறான். ஆற்றுப்படுத்தலை எதிர்பார்க்கிறான். காலங்கள் மாறினாலும் அடிப்படை உணர்ச்சிகள் மாற்றம் அடைவதில்லை. அதை வெளிப்படுத்தும் விதமும் வேறாகவில்லை.

அவன் தலையை நிமிர்த்தி முகத்தை ஏறிட்டார். ‘‘சொல் கரிகாலா...’’
‘‘நீங்கள்தான் கட்டளையிட வேண்டும் தாயே...’’
‘‘எது குறித்து..?’’
‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபர் சற்று முன் சொன்னது குறித்து...’’
‘‘நீ என்ன நினைக்கிறாய்..?’’
‘‘தெரியவில்லை...’’
‘‘புரியவில்லையே..?’’

சொன்ன பெரிய தாயாரின் நயனங்களை இமைக்காமல் பார்த்தான். ‘‘உங்களுக்கா புரியவில்லை..?’’
‘‘ஆம் கரிகாலா. நிச்சயமாகப் புரியவில்லை. சூழலை ஆராய்ந்து கணத்தில் முடிவெடுக்கும் திறன் படைத்தவன் என் மகன் என இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன்...’’
‘‘இப்போது அதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறதா தாயே..?’’
‘‘இல்லை என்கிறாயா..?’’

‘‘எனில் உங்கள் ஐயத்துக்கான காரணம்..?’’
‘‘தெரியவில்லை என்று நீ சொன்ன பதில்!’’ அழுத்தமாகச் சொன்னார் பெரிய தாயார்.
வெறுமையுடன் அதுவரை இருந்த கரிகாலனின் கண்களில் உணர்வுகளின் ரேகைகள் படர்ந்தன. ‘‘இதையே தெரிந்ததைச் சொல்ல தயக்கப்படுவதாகவும் சொல்லலாம் அல்லவா..?’’

‘‘‘லாம்’தானே? ‘முடியும்’ என அறுதியிட்டு உன்னாலேயே கூற முடியவில்லையே... கரிகாலா, என் மீது எந்தளவுக்கு மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறாய் என்று மற்றவர்களை விட எனக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை என் புத்தி அலைபாய்ந்தாலும் மனம் ஒருபோதும் தடுமாறாது. எனவே வெளிப்படையாகச் சொல்! சாளுக்கிய போர் அமைச்சர் முன்வைத்திருக்கும் யோசனைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்..?’’‘‘அது கட்டளையல்லவா..?’’

சட்டென்று கேட்ட தன் மகனின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவினார். உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு தன் மகனாக கம்பீராக உரையாட இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறான். இதுதான் அவனது இயல்பு. பாலில் கலந்த நீரை எதிர்பார்த்தது போலவே இனி பிரித்தெடுப்பான்!

நிம்மதியுடன் உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘எதுவாக இருந்தால் என்ன கரிகாலா..?’’
‘‘அர்த்தங்கள் வேறு வேறு அல்லவா தாயே!’’ கேட்டபடி எழுந்து நின்றான்.

‘‘உண்மைதான். ஆனால், அது கட்டளைதான் என்று எப்படி முடிவுக்கு வந்தாய்..?’’
‘‘நீங்கள் இங்கு வருகை தந்ததை வைத்து!’’சிம்மாசனத்தில் இருந்து எழுந்த பெரிய தாயார் தன் புருவத்தை உயர்த்தினார். ‘‘காஞ்சிக்கு நான் வந்திருப்பதைக் குறிப்பிடுகிறாயா..?’’

‘‘இந்த நேரத்தில் வந்ததை சுட்டிக் காட்டுகிறேன்! பல்லவப் பேரரசு இப்போது சாளுக்கியர்களின் வசம் இருக்கிறது. பல்லவர்கள் போல் இவர்கள் நம் உறவினர்களுமல்ல; நண்பர்களுமல்ல.

எதிரிகள்! அப்படியிருக்க நீங்கள் இங்கு வந்திருப்பதும் சாளுக்கிய போர் அமைச்சருடன் இயல்பாக பேசுவதும் சில சந்தேகங்களை எழுப்புகின்றன...’’ ‘‘அதாவது உன் தந்தையையும் என் கணவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னை அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறாய்! அப்படித்தானே..?’’கரிகாலன் மவுனமாக தலைகுனிந்தான்.

‘‘இப்படி எண்ணுவதன் மூலம் உன் தந்தை இருவரையும் நீ குறைத்து மதிப்பிடுகிறாய்... உன்னைக் குறித்து மிகை மதிப்பு கொள்கிறாய்!’’‘‘தாயே..!’’‘‘ஒன்றைப் புரிந்துகொள் கரிகாலா... சாளுக்கியர்கள் காஞ்சியை கைப்பற்ற முடிவு செய்திருப்பதும் அது தொடர்பான வேலைகளில் இறங்கியிருப்பதும் உன் தந்தையர் இருவருக்கும் முன்பே தெரியும்! நம்மிடமும் ஒற்றர்கள் இருக்கிறார்கள்.

வாதாபியில் மட்டுமல்ல... சாளுக்கிய பிரதேசங்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார்கள்! எனவே நரசிம்மவர்ம பல்லவரால் வாதாபி எரிக்கப்பட்டதற்கு பழிவாங்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் ரகசியமாக படை திரட்டி வருவதை அறிவோம். பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரிடம் இது குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறோம்..!’’

கரிகாலன் இடைமறிக்க முற்பட்டான்.வலது கையை உயர்த்தி அதை தடுத்தார். ‘‘பொறு! காஞ்சியில் போர் நிகழ்ந்தால் இங்கிருக்கும் கலைச்செல்வங்கள் அனைத்தும் அழிய வாய்ப்பிருக்கிறது என்பதால் பதுங்கிப் பாயும் விதமாக பல்லவ மன்னரையும் படைகளையும் இந்நகரத்தை விட்டு வெளியேறி மறைந்து வாழும்படி ஆலோசனை சொன்னதும் உன் தந்தையர் இருவர்தான்!’’பெரிய தாயார் பேசப் பேச கரிகாலன் பிரமை பிடித்து நின்றான்.

நெருங்கி, அவன் தோளில் தன் இரு கரங்களையும் வைத்தார். ‘‘இவ்வளவு தெரிந்த உன் தந்தையருக்கு நீ நினைப்பதுபோல் சாளுக்கியர்கள் தங்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னை அனுப்புவார்கள் என்று தெரியாமலா இருக்கும்..?!’’‘‘தாயே... அப்படியானால்...’’ மேற்கொண்டு பேச முடியாமல் கரிகாலன் தடுமாறினான்.

‘‘நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்று கேட்க வருகிறாய் அல்லவா..? சொல்கிறேன்...’’ என்றபடி உள்ளறையை நோக்கி பெரிய தாயார் நடந்தார்.
அதுவரை மறைந்திருந்து நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சிவகாமி, தன்னை நோக்கி அவர் வருவதைக் கண்டதும் தன்னைக் குறுக்கிக் கொண்டு மேலும் கதவுக்குப் பின்னால் ஒண்டினாள். கையில் இருந்த குறுவாளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

ஆனால், உள்ளறைக்குள் பெரிய தாயார் நுழையவில்லை. மாறாக ஐந்தடிகள் நடந்தப் பிறகு திரும்பி கரிகாலனை பார்த்தார். அவர் அருகில் செல்ல கரிகாலன் முற்பட்டான்.கண்களால் அங்கேயே நிற்கும்படி பெரிய தாயார் வேண்டுகோள் வைத்தார்.புரிந்ததற்கு அறிகுறியாக அவர் உணரும்படி சமிக்ஞை செய்தான்.

நிச்சயமாக தாங்கள் உரையாடுவதை யாரோ மறைந்திருந்து கேட்கிறார்கள். உள்ளறையில் அவர்கள் மறைந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அங்கு சென்றது சிவகாமிதான்.

எனவே அவள்தான் கண்காணிக்கிறாள் என்பதை தன்னைப் போலவே பெரிய தாயாரும் எண்ணுகிறார். எனவேதான் அவள் அல்லது அவர்கள் செவியிலும் இனிதான் பேசப்போவது தெளிவாகக் கேட்கட்டும் என்று இரு இடங்களுக்கும் பொதுவான இடத்தில் நிற்கிறார்.

எச்சரிக்கையுடன் நிமிர்ந்து நின்றான்.மகன் தயாராகிவிட்டதைக் கண்டவர் மலர்ந்தார். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ‘‘கரிகாலா! நேர் வழியோ அல்லது தூரத்து சொந்தமோ... எப்படியிருந்தாலும் சோழ வம்சத்தின் குருதிதான் நமக்குள்ளும் ஓடுகிறது. இன்று நம்மிடம் பெரும் நிலப்பரப்பு இல்லை. என்றாலும் நம் ஆளுகைக்கும் சொந்தமாக பிரதேசங்கள் இருக்கின்றன.

அவை அளவில் சிறியதுதான். அதனால் என்ன... அது நம்முடையது! இன்றைய வரலாற்றைக் குறித்து நாளை எழுதும் சரித்திர ஆசிரியர்கள் நம்மை... சோழர்களை... குறுநில மன்னர்களாகக் கூட அன்று இல்லை எனக் குறிப்பிடலாம். ஆனால், இப்போது வாழ்பவர்கள் ஒருபோதும் நம்மை ஏளனமாக கருதமாட்டார்கள். ஏனெனில் கையளவு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டாலும் காட்டை ஆளும் தகுதியை புலிகள் இழப்பதில்லை!’’

அழுத்தமாக சொல்லிவிட்டு சில கணங்கள் அமைதியாக நின்றார். பிறகு நிமிர்ந்தபோது அவர் கண்களில் கனவு மின்னியது. ‘‘இருளில் இருந்தாலும் புலியின் உடலில் இருக்கும் வரிக் கோடுகள் மறைவதில்லை! ஒருகாலத்தில் தமிழகத்தின் தன்னிகரற்ற சக்தியாக நாமே திகழ்ந்தோம். காவிரிபூம்பட்டினம் உலகின் வணிக ஸ்தலமாக விளங்கியது.

கடல் கடந்தோம். செல்வங்களை ஈட்டினோம். தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பை நம் குடைக்குக் கீழ் கொண்டு வந்தோம். கால மாறுதலில் இப்போது ஒடுங்கி நிற்கிறோம். அதற்காக நம் வீரம் குறைந்துவிட்டதாக அர்த்தமில்லை... புரிகிறதல்லவா..?’’
பதில் பேசாமல் கரிகாலன் தலையசைத்தான்.

‘‘நம்மால் மீண்டும் திமிறி எழ முடியும்... பேரரசை ஸ்தாபிக்க முடியும்..!’’இமைகளை விரித்தானே தவிர அமைதியாகவே நின்றான்.‘‘அது முடிய வேண்டும் என்றுதான் காஞ்சிக்கு வந்திருக்கிறேன்! மகனே... இரு பேரரசுகள் மோதுகின்றன. நாம் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பெரும் போர் மூளப் போகிறது. இதை ஏன் நமக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது..?’’
‘‘சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் தாயே..!’’ உள்ளறையில் இருப்பவர்களுக்கும் கேட்கட்டும் என எடுத்துக் கொடுத்தான்.

‘‘பல்லவ நாடு வானம் பார்த்த பூமி. அவர்களின் உணவுத்தேவையை சோழ நாட்டைச் சேர்ந்த நாம்தான் நிறைவேற்றுகிறோம். எனவே பல்லவர்களுக்கு நாம் தேவை. அதனாலயே நம்மை நட்பு சக்தியாக கருதுகிறார்கள். பெண் கொடுத்து பெண் எடுத்து உறவினர்களாகவும் கைகோர்க்கிறார்கள்...’’

‘‘ம்...’’‘‘பல்லவ நாட்டை இப்போது கைப்பற்றியிருக்கும் சாளுக்கியர்களுக்கும் நம் உதவி தேவை. உணவுத் தேவைக்காக மட்டுமல்ல. தமிழகத்தையே அவர்கள் ஆள! பல்லவ நாட்டைக் கைப்பற்றியதுடன் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் திருப்தி அடைவார் என்றா நினைக்கிறாய்..? இல்லை...

பாண்டிய நாட்டையும் தன் குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார். பாண்டிய நாட்டையும் கைப்பற்ற வேண்டுமென்றால் சாளுக்கியர்களின் படை எவ்வித இடையூறும் இன்றி சோழ நாட்டைக் கடக்க வேண்டும். எனவே நம்மை நண்பர்களாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். இதுகுறித்து உன் தந்தையர் இருவரிடமும் பேசி விட்டார்.

அவர்கள் முடிவெடுக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எனவேதான் காஞ்சிக்கு எப்படியும் நீ வருவாய் என்பதை அறிந்து உன்னிடம் பேச என்னை அனுப்பியிருக்கிறார்கள்! ஸ்ரீராமபுண்ய வல்லபரும் இதைத்தான் சுட்டிக் காட்டினார். எனவே அவர் வெளிப்படுத்திய ஆலோசனையை... கட்டளையை அல்ல... யோசிக்கச் சொல்கிறேன்...’’கண்கள் இடுங்க தன் பெரிய தாயாரைப் பார்த்தான்.

‘‘அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்க வேண்டியது உன் கடமை. உன்னை வளர்த்தவள் என்ற முறையில் ஒன்றை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். நீ சாதாரண தனி மனிதன் அல்ல. சோழ வம்சத்தின் பிரதிநிதி. இதை மனதில் வைத்து முடிவு எடு. தனிப்பட்ட நலன், உணர்ச்சிகளை விட தேசம் முக்கியம்... புரிந்ததல்லவா..?’’கரிகாலன் சிலையாக நின்றான்.

‘‘உனக்கான உடைகள் ஸ்நான அறையில் தயாராக இருக்கின்றன. குளித்துவிட்டு வா! சேர்ந்து உணவருந்தலாம்...’’சொல்லிவிட்டு உள்ளறையை நோக்கி விடுவிடுவென நகர்ந்தார்.தன் பெரிய தாயாரையே கரிகாலன் இமைக்காமல் பார்த்தான். உள்ளறைக்கு சென்றவர் அக்கம்பக்கம் பார்க்காமல் மேலும் நடந்து அடுத்த அறைக்கு சென்றதையும், இந்த அறையை ஒட்டி இருந்த உள்ளறையில் இதன் பிறகு ஒரு நிழல் அசைந்ததையும் கவனித்தான்.

அவ்வளவுதான். சீனர்களின் பாணியில் கால் கட்டை விரலை அழுத்தி ஒரே தாவாகத் தாவி உள்ளறைக்குள் நுழைந்தவன், அசைந்த நிழலை பின்பக்கமாக இறுக்கிப் பிடித்து அதன் கரங்களில் இருந்த குறுவாளை தட்டிவிட்டான்.

எதிர்பார்த்தது போலவே அது சிவகாமிதான்.திமிறியவளின் கழுத்தில் தன் முகத்தைப் பதித்தான்.அந்த அறையின் மேல் கூரையை ஒட்டியிருந்த சாளரத்தில் நின்றபடி இக்காட்சியைக் கண்ட ஒருவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.அவன், பாலகன்! கடிகையில் கரிகாலனை சந்தித்து அர்த்த சாஸ்திரம் குறித்த குறிப்பைக் கொடுத்தவன்!

(தொடரும்)
 
கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்