பழைய பிளாஸ்டிக் பாட்டில்களில் பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர்!



ஒரு பாலிதீன் பை மக்குவதற்கு குறைந்தது 20 வருடங்களாகும், அதே பிளாஸ்டிக் பாட்டில்கள் எனில் எத்தனை வருடங்கள் என நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!சரி மறுசுழற்சிக்கு அனுப்பலாம் என்றாலும் எவ்வளவு பாட்டில்களை, எவ்வளவு பைகளை அனுப்பி விட முடியும்..? எனில் மீதி என்ன ஆகும்?

மண்ணிலேயே புதைந்து பூமியின் நிலத்தடி நீர் முதல், மண்வளம் வரையென அத்தனையையும் மாசுபடுத்தும். இதையெல்லாம் அறிந்த பெரம்பலூர் டான் அறக்கட்டளை குழு, சுற்றுவட்டார பள்ளிக் குழந்தைகள் பலரையும் இணைத்து அட போட வைக்கும் செயலை செய்துவருகின்றனர்.

‘‘நர்சிங் கல்லூரியையும், பிஎட் கல்லூரியையும் டான் அறக்கட்டளை சார்பா நடத்திட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் எந்த பணமும் எங்க இருந்தும் நாங்க வாங்கறதில்லை. எங்க சக்திக்கு என்ன முடியுமோ அதைத்தான் செய்யறோம்.

அப்படிதான் மரம் நடுதல், ஏரி சுத்தப்படுத்துறதுனு நிறைய செய்துட்டு இருக்கோம். இந்த நேரத்துல்தான் பிளாஸ்டிக் பாட்டில்களின் ரீ யூஸ் பத்தி ஆன்லைன்ல தெரிஞ்சுகிட்டேன்.தானாகாவே முன்வர பள்ளிக் குழந்தைகள் பலரையும் சேர்த்துக்கிட்டு பாட்டில்கள், பாலிதீன் கவர்களைக் கொண்டு வேலி அமைச்சோம். அப்ப சில சந்தேகங்கள், கேள்விகள் வந்துச்சு. அதுக்கான பதில்களை முழுமையா தெரிஞ்சிக்கிட்டுதான் இப்ப செயல்படறோம்.

அதாவது மண்ணுல இந்த பாட்டில்களை புதைச்சா மண்ணுக்கு என்ன பிரச்னைகள் வரும்... இது எந்த வகையிலையாவது ஆபத்தை ஏற்படுத்துமா... இப்படி சில கேள்விகள்.

ஆனா, சிமெண்ட் மேல வைக்கும்போது அந்த பிரச்னைகள் வராதுன்னு தெரிஞ்சது. செங்கலுக்கு பதிலா நாம இந்த பாட்டில்களை பயன்படுத்தலாம்!
அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களை பாலிதீன் கவர்கள்ல நல்லா அழுத்தி அடைச்சு அதை வெச்சு கட்டினா ஒரு செமி வீடே கட்டுற அளவுக்கு வலிமையா இருக்கும்.

இணையத்தைப் பார்த்துதான் இதை கத்துகிட்டோம்...’’ என்று சொல்லும் டான் அறக்கட்டளை நிர்வாகியான மித்ரா கிறிஸ்டோபர், ஏரியாவிலேயே பொதுப் பூங்காக்கள், பள்ளியில் உள்ள செடிகள் என எல்லா பகுதிகளிலும் சுற்றுச்சுவர் போல் இந்த பிளாஸ்டிக் சுவர்களை எழுப்பியிருக்கிறார்.

‘‘இப்ப நடைபாதை தடுப்புகளை அமைக்கறோம். இப்படி பிளாஸ்டிக் பாட்டில்கள்ல வேலி அமைக்கறதால நடக்கும்போதும் மழை பெய்யறப்பவும் செடிகளுக்கு ஆபத்து வராது. மழை நீர் தேங்காது. இதுக்காக டாஸ்மாக் கடைகள்ல இருந்து கூட பாட்டில்களை வாங்கியிருக்கோம். தெருவோரங்கள்ல கிடைக்கிற பிளாஸ்டிக் பைகளை சேகரிச்சு இந்த வேலிகளை அமைச்சுட்டு இருக்கோம்.

பிளாஸ்டிக் பாட்டில்களை ரிசைக்கிளிங் பண்ண மெஷின், இதர செலவுகள்னு நிறைய இருக்கு.ஆனா, ரீ யூஸுக்கு செலவு குறைவு. சுற்றுப்புறங்களும் பாதுகாப்பா இருக்கும். இதுதவிர பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கிராஃப்ட் வேலைகளும் செய்யலாம். வீட்ல டூத் பிரஷ் ஸ்டாண்ட், சீப்புகள் வைக்க கப், சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள்னு கூட செய்யலாம்...’’ என்ற மித்ரா, சாலையோரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை தூக்கி எறியாதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறார்!