நியூஸ் வியூஸ்



பிளாஸ்டிக் டைம்பாம் மீது அமர்ந்திருக்கிறோம்!

புதுவருடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவே பிறக்கிறது. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.
இவற்றைப் பயன்படுத்தும் கடைகளில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை ஆங்காங்கே அதிகாரிகள் பறிமுதலும் செய்து வருகிறார்கள்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைகளை ஆதரித்தாலும், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

சும்மா விளையாட்டுக்காக ஒரு நாள் இதைச் செய்து பாருங்களேன். காலையில் எழுந்ததில் தொடங்கி, இரவு தூங்கும் வரை உங்கள் கண்ணில் படும் பிளாஸ்டிக் பொருட்களை வரிசையாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டே வாருங்கள்.

எழுந்ததுமே பல் விளக்க நாம் பயன்படுத்தும் டூத்பிரஷ், டூத்பேஸ்ட் டப்பாவில் பட்டியல் தொடங்க ஆரம்பிக்கும். பாத்ரூமில் இருக்கும் குழாய், வாளி, ஜக் உள்ளிட்ட இதர பிளாஸ்டிக் பொருட்களையும் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படியே எழுதிக்கொண்டு போனால் அனேகமாக 192 பக்க நோட்டு முழுக்க எழுதியிருப்பீர்கள்.

தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் போலிருக்கிறது. பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை. இரத்தமும் சதையுமாக மனித வாழ்க்கை முறையில் பிளாஸ்டிக் கலந்து விட்டிருக்கிறது.

ஆனால் -“நாம் அனைவருமே ஒரு பிளாஸ்டிக் டைம்பாம் மீது அமர்ந்திருக்கிறோம்!”ஏதோ சினிமாவிலோ, நாவலிலோ வரும் வசனமல்ல இது. இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்து.மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த புள்ளிவிவரங்களைக் கண்டு சோர்வும், அச்சமும் அடைந்து நீதிபதிகள் இவ்வாறாகச் சொன்னார்கள்.

ஆண்டுக்கு 56 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. தலைநகர் தில்லி மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 700 டன் பிளாஸ்டிக் குப்பையை கொட்டுகிறது. மிகச்சிறப்பாக பிளாஸ்டிக் குப்பை கொட்டும் நகரங்களின் பட்டியலில் அடுத்த இடம் நம்ம சென்னைக்குத்தான். 430 டன். அடுத்தடுத்து கொல்கத்தா, மும்பை நகரங்கள் மிகக்குறைந்த குப்பை வித்தியாசத்தில்(!) நம்மை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

தோராயமாக பதினாறாயிரம் டன் ஒரு நாளைக்கு கொட்டப்படுகிறது என்றால், அதில் 60 சதவிகிதம் (குத்துமதிப்பாக 10,000 டன்) பிளாஸ்டிக்கை சேகரித்து மறுசுழற்சி முறைக்கு உள்ளாக்குகிறோம். மீதி 40 சதவிகிதம் (தோராயமாக 6000 டன்) நிலத்தை மாசுபடுத்திக் கொண்டு அப்படியே தேங்கிக் கிடக்கிறது.

இதெல்லாம் 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு. கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் நிலைமை இன்னும் படுமோசமாகி இருக்கிறது. அதுவும் இந்தியாவின் பெரிய அறுபது நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புதான்.

மீதி பிளாஸ்டிக் குப்பையெல்லாம் காந்தி கணக்கு.உண்மையை சொல்லப்போனால் பாமரமக்கள் அடங்கிய கிராமப்புறங்களில் இயல்பாகவே - அறிவியல்பூர்வமாக அறியாமலேயே - சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். படித்தவர்கள் நிரம்பிய நகரங்கள்தான் உலகை நரகமாக்கிக் கொண்டிருக்கின்றன.

பிரச்னை என்னவென்றால், நகரங்களில் கொட்டப்படும் இந்த குப்பைகளைக் கொண்டுபோய் கிராமப்புறங்களில் தரிசாகக்கிடக்கும் நிலங்களில் கொட்டி சுற்றுச்சூழலையே மாசுபடுத்தி வருகின்றன உள்ளாட்சி நிர்வாகங்கள். இது தொடர்பான விவகாரத்தில்தான் உச்சநீதிமன்றம் தலையிட்டு, மேற்கண்ட விவரங்கள் எல்லாம் தெரியவந்தன.

சரி,பிளாஸ்டிக்கால் அப்படி என்னதான் பெரிய பிரச்சினை வந்துவிடும்?

இதில் இருக்கும் சில ரசாயனங்கள் சுற்றுச்சூழலை கடுமையாக சீர்கேடு அடையச் செய்யும். பாலிஎத்திலீன், பாலிவினைல் குளோரைடு, பாலிஸ்த்ரீன் மாதிரியான ரசாயனங்களே பிளாஸ்டிக் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் எந்த வடிவத்திலும் செய்வதற்கு வாகாக சிந்தடிக் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஒரு தனிமனிதன் ஆண்டுக்கு சுமார் 2 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்துகிறான் (அப்படியே நூற்றி இருபத்தைந்து கோடியால் பெருக்கிக் கொள்ளுங்கள்). இதுவே ஐரோப்பாவில் 60 கிலோ, அமெரிக்காவில் 80 கிலோ என்றிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் பிளாஸ்டிக்கின்
பயன்பாடு அதிகம்.

நிலங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மோசமான ரசாயனங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மண்ணின் பண்பையே மாற்றிவிடுகின்றன. இது நிலத்தடி நீரை கடுமையாக பாதிக்கிறது.

இவற்றை அருந்தும் மனிதனுக்கும் உடல்நலம் கெடுகிறது.மழைக்காலங்களில் நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமான காரணமாக இருக்கின்றன.

இவை கழிவுநீர் பாதைகளை அடைத்துக்கொண்டு, நீர் வெளியேற வகையில்லாமல் செய்கின்றன. மற்ற குப்பைகள் மாதிரி இல்லாமல் பிளாஸ்டிக், மக்குவதில்லை. இதனால், மழை பெய்து, அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதையும் பிளாஸ்டிக் குப்பைகள் தடுக்கின்றன.

இந்த குப்பைகளை உண்பதாலேயே ஒரு நாளைக்கு சராசரியாக 100 கால்நடைகள் ஜீரணப் பிரச்சினையால் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே மரணமடைகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் ஆற்றை மாசுபடுத்துவதோடு இல்லாமல், அவை போய்ச் சேரும் கடல்களையும் நாசப்படுத்துகின்றன. கடல்களில் தோராயமாக பத்து கோடியே அறுபத்தைந்து லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மிதந்து கொண்டிருக்கின்றனவாம்.

நிலத்தில் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு மரணமடைவதைப் போலவே, நீர்நிலைகளில் மீன்களும் இதர உயிரினங்களும் உண்டு பிரச்சினை ஆகிறது. காடுகளுக்கு சுற்றுலாவாகச் செல்லும் மனிதர்கள் போடும் பிளாஸ்டிக் குப்பைகளை உண்டு யானை, மான் போன்ற வனவிலங்குகளும் மரணமடைகின்றன.

மனிதனுக்கு தோல் தொடர்பான புதிய புதிய பிரச்சினைகள் உருவாவதற்கு பிளாஸ்டிக் முதன்மையான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. பிளாஸ்டிக் எரிக்கப்பட்டு, அதை சுவாசிக்கும் மனிதன் சுவாசக்கோளாறு தொடர்பான வியாதிகளுக்கு உள்ளாகிறான்.
எப்படித்தான் தடுப்பது?

எல்லா வளர்ந்த நாடுகளுமே இந்தப் பிரச்சினையில்  கையைப் பிசைந்துகொண்டுதான் நிற்கின்றன. மனிதவாழ்வில் அத்தியாவசியமான இடத்தைப் பிடித்துவிட்ட பிளாஸ்டிக்கை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.

அதேநேரம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் உலகத்தின் சுற்றுச்சூழல் சுழற்சி மிகக்கடுமையாக பாதிக்கப்படுவதையும் உணர்ந்திருக்கிறோம். இதற்கு மாற்றான விஷயங்களைக் கண்டறிவதுதான் இப்போதைய சவால்.அதற்கான முதல் படியைத் தான் தமிழக அரசு  எடுத்து வைத்திருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளை முறையாக சேகரித்து அவற்றை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்துவதே தற்காலிக தீர்வு.பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதை அரசாங்கம் செய்ய முடியாது.பிளாஸ்டிக் பயன்பாட்டை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கு ஒரு சிறிய முன்னுதாரணம்.

நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவர் நடிகை ரேவதி. சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர். இவர் ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் கையில் துணிப்பையையும் வீட்டிலிருந்தே கொண்டு செல்கிறார். துணிக்கடையிலோ அல்லது வேறு கடைகளிலோ இவர் வாங்கும் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கொடுத்தால் வாங்க மறுப்பார்.

தன்னுடைய துணிப்பையில் அவற்றைப் போட்டுத் தருமாறு கேட்டுக் கொள்வார்.ஒரு சாதாரண மனிதராக பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை நாம் இதுபோன்ற வகைகளில்தான் குறைக்க முடியும். அரசின் முயற்சிகளுக்கு நம் பங்களிப்பை வழங்க முடியும்.        

யுவகிருஷ்ணா