ஹோம் அக்ரி -38
நீர்நிறை வேளாண்மை இயற்கையானதே!
நீர்நிறை வேளாண்மை (hydroponic) இயற்கையானதா; இரசாயனங்களைப் பயன்படுத்துவதால் இந்த முறையில் விளையும் காய்கறிகள், மற்ற உணவுப்பொருட்கள் பாதுகாப்பானவையா..?
 இந்தக் கேள்வி எல்லோருக்கும் இருக்கும். இயற்கை விவசாய முறையில் விளையும் பொருட்களுக்கும் இந்த முறையில் விளையும் பொருட்களுக்கும் தரத்தை பொறுத்தவரை என்ன வேறுபாடு இருக்கும் என்பதும் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கும், நுகர்வோருக்கும் உள்ள பெரிய சந்தேகம்.
 உண்மையில் நீர்நிறை முறையில் விளையும் பொருட்கள் தரத்திலும் சுவையிலும் ஊட்டச்சத்தின் அளவிலும் இயற்கை விவசாய முறையில் விளையும் பொருட்களைக் காட்டிலும் மேம்பட்டவை. தாவரங்கள் வேர்மூலமாக தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகச்சத்து போன்ற பேரூட்டங்களையும், போரான், மாலிப்டீனம், சின்க், இரும்பு போன்ற நுண்ணூட்டங்களையும் மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கின்றன. இந்த ஊட்டங்கள் அனைத்தும் கனிமப்பொருட்கள்.
இவை அனைத்தும் சேர்த்து தாவரத்தின் தேவையில் 5%க்கும் குறைவானவையே. தாவரத்தின் மற்ற 95% தேவை கரிமப்பொருட்களான ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் மற்றும் நீரிலிருந்து கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் இந்த ஊட்டங்கள் பல்வேறு பரிமாணங்களில் நீர்ச்சத்தாகவோ, நார்சத்தாகவோ, சர்க்கரைச் சத்தாகவோ, வைட்டமின்களாகவோ, நிறப்பொருட்களாகவோ, எண்ணெய்ச் சத்தாகவோ கிடைக்கின்றன. தாவரங்கள் எடுத்துக்கொள்ளும் எந்த ஊட்டமும் அதே வடிவில் நமக்கு விளைபொருட்கள் மூலமாகக் கிடைப்பதில்லை. உதாரணமாக தழைச்சத்தை நாம் யூரியா வடிவில் செடிக்குக் கொடுத்தாலும், மண்புழு உர வடிவில் கொடுத்தாலும் நமக்கு புரதச்சத்தாக கிடைக்கிறது. இந்த புரதச்சத்து யூரியா நைட்ரஜனிலிருந்து வந்ததா, மக்கிய குப்பையின் நைட்ரஜனிலிருந்து வந்ததா என்பதைத் தரப்பரிசோதனையின் மூலமாக கண்டுபிடிக்க முடியாது. தாவரங்களும் இப்படி ஊட்டங்களின் ரிஷிமூலத்தில் பெரும் ஆர்வம் காட்டுவதில்லை.
ஆக, தாவர விளை பொருட்களின் தரமும் சுவையும் அவைகளுக்கு எளிதில் கிடைக்கும் ஊட்டங்களைப் பொறுத்தே அமைகிறது. இந்த ஊட்டங்களின் மூலத்தை பொறுத்து அமைவதில்லை.எனில் இராசாயன இடு பொருட்களை ஏன் இடக்கூடாது என்று சொல்கிறோம்? ஏன் இயற்கை ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் இரசாயன இடுபொருட்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்?
இதற்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளும் போது, ஏன் நீர்நிறை வேளாண்மை விளைபொருட்கள் இயற்கை விவசாயப் பொருட்களோடு சிறந்தவை என்பது புரியும். விவசாய இடுபொருட்கள் தாவரங்களின் தேவைகளை பொறுத்து இரண்டு வகையாகப் பட்டியலிடப்படுகின்றன. ஒன்று தாவரங்களின் ஊட்டத்திற்கு தேவையானவை. இதை பொதுவாக நாம் உரங்கள் என்று சொல்கிறோம். இரண்டாவது வகை தாவரங்களின் பாதுகாப்புக்குத் தேவையானவை. இவைகள் பெரும்பாலும் பூச்சி மருந்துகளாகவும், களைக்கொல்லிகளாகவும் இருக்கின்றன.
இந்த இரண்டாவது வகையான இடுபொருட்கள் தாவர வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் இயற்கையாகத் தேவையில்லாதவை. இந்த பொருட்களை நாம் பயன்படுத்தும்போது, இந்த பொருட்களின் எச்சங்கள் (residues) விளைபொருட்களில் வந்துவிடுகின்றன. இவைதான் உண்ணும் நமக்கு பலவிதமான உடல் உபாதைகளை நோய்கள் வாயிலாக தருகின்றன. முதல் வகையான உரங்கள் உண்பவர்களுக்கு எந்த விதமான தொந்தரவையும் தருவதில்லை.
பிறகு ஏன் இரசாயன உரங்களை விவசாயத்தில் பயன்படுத்தக்கூடாது என்கிறோம்?
இரசாயன உரங்கள்
தாவரங்களுக்கு ஊட்டத்தை தந்தாலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. மண்ணில் இடப்படும் உரங்கள் மண்ணின் இயல்பை மாற்றுகின்றன. மண்ணில் கார அமிலத்தன்மையை மாற்றி, உப்பு அளவை அதிகப்படுத்துகின்றன. மண்ணில் இடும் மொத்த உரத்தையும் தாவரங்கள் எடுத்துக் கொள்வதில்லை. மிச்சமிருக்கும் உரங்கள் மண்ணில் வாழும் நன்மை தரும் நுண்ணுயிரிகளை வாழவிடுவதில்லை.
இந்த நுண்ணுயிர்கள் மாண்டுபோனால் செடிகள் காற்றிலிருந்து எடுக்கும் தழைச்சத்து நின்று போகிறது. மண்ணில் இயற்கையாக இருக்கும் மணிச்சத்தையும், நுண்ணூட்டங்களையும் கூட தாவரங்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
தாவரங்கள் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்வதற்காக இயல்பாக அமைந்த பலவிதமான சாதனங்களையும் உபயோகிக்கும் திறனையும் அவை இழக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் தாவரங்களின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கிறது. பூச்சி மருந்துகள் தாவரங்களால் உறிஞ்சப்படுவதாலோ, நேரடியாக விளைபொருளில் ஒட்டிக்கொண்டிருப்பதாலோ, நாம் உண்ணும்போது நம் உடலில் சேர்கின்றன.
இந்த தாவரங்களிலும், மண்ணிலிருக்கும் இராயனக் கழிவுகள் மழைநீர் வழியாகவோ, பாசன நீர் வழியாகவோ நிலத்தடி நீரையும், ஆறு, குளங்களையும், கடலையும் மாசுபடுத்திகின்றன.
நீர்நிறை வேளாண்மையில் மண் இல்லாததால் இந்த விதமான சுற்றுச்சூழல் பாதிப்பு இருப்பதில்லை. தாவரங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டங்களும் சரியான விகிதத்தில் வழங்கப்படுவதால் அவை முழு ஆரோக்கியத்தோடு வளர்கின்றன. அவைகளின் விளைபொருட்களும் எந்த இரசாயனக்கழிவுகளின் எச்சமும் இல்லாமல் இருக்கின்றன. ஹைட்ரோபோனிக் முறையில் தாவரங்கள் ஆரோக்கியமாக இருப்பதால் பூச்சிக்கொல்லிகளின் தேவை இல்லாமல் இருக்கிறது அல்லது குறைவாக இருக்கிறது. கூடாரங்களில் செய்யப்படும் விவசாயத்தில் இது முழுவதும் தவிர்க்கப்படுகிறது.
இந்த காரணங்களாலேயே ஹைட்ரோபோனிக் விளைபொருட்கள் இயற்கை விவசாய விளைபொருட்களைக் காட்டிலும் மேம்பட்டவையாக இருக்கின்றன.ஹைட்ரோபோனிக் விவசாயத்தின் வெற்றியைப் பாதிக்கக்கூடிய காரணிகளில் மிக முக்கியமாக இருப்பது, ஹைட்ரோபோனிக் ஊட்டக்கரைசல். இக்கரைசல் வணிக ரீதியாக பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. வெவ்வேறு பயிர்களுக்கு தனித்தனியாகவும், பயிர்களின் பருவங்களுக்கு ஏற்றவாறும் பல்வேறு வகையாக கிடைக்கின்றன.
வீட்டில் சிறிய அளவில் வீட்டுத்தோட்டத்தில் செய்பவர்களும், சிறிய அளவில் தோட்டத்தில் செய்பவர்களும் இந்த கரைசல்களை வாங்கி பயன் படுத்தலாம். மற்றவர்களும், வணிக ரீதியாக செய்பவர்களும் இதை தாமாகவே தயாரித்துக் கொண்டால் மட்டுமே செலவைக் கட்டுப்பத்த முடியும். இரண்டாவது முக்கிய காரணி பயிர்களுக்கு கிடைக்கும் ஒளியின் அளவு. வெளிப்புறத்தில் ஹைட்ரோபோனிக் விவசாயம் செய்யும் போது, வெட்ட வெளியிலோ, பசுங் கூடாரத்திலோ செய்யலாம்.
தாவரங்கள் நாள் முழுவதும் வெளிச்சம் பெறுமாறு குழாய்களையும், தொட்டிகளையும் அமைப்பது அவசியம். ஆனாலும் இந்த வெளிச்சமும் உஷ்ணமும் கரைசலின் வெப்ப நிலையையும், மற்ற இரசாயன குணங்களையும் மாற்றாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உபயோகத்தை பொறுத்தும், தாவரங்களின் எடுத்துக்கொள்ளும் அளவைப் பொறுத்தும் இந்த கரைசல்களின் இரசாயன குணங்கள் மாறிக்கொண்டே யிருக்கும்.
இந்த மாற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமாக சரியான அளவிலான ஊட்டத்தை முறையாக கட்டுப்பாட்டோடு வழங்குவது மூன்றாவது வெற்றிக்கான காரணியாக அமைகிறது.கட்டடங்களின் உட்புறத்தில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு செயற்கையான முறையில் ஒளி வழங்கப்படுகிறது.
தாவரங்கள் சூரிய ஒளியின் எல்லா ஒளிக்கற்றைகளையும் பயன்படுத்துவதில்லை. அதனால் செயற்கை முறையில் ஒளிசக்தியை தரும்போது தேவையான ஒளிக்கற்றைகளை மட்டும் தந்தால் போதும். நெற்பயிர்களையும், தானியங்களையும் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்க முடியுமா?
- சவுமியா விசாலாட்சி, மணப்பாறை.இப்போதைய சூழலில் தானியங்களை யாரும் வளர்க்கவில்லை. ஆனால், வளர்ப்பது தொழில் நுட்ப ரீதியாக முடியக்கூடியதுதான். பெரும்பாலாக கீரைகளும், காய்கறிகளுமே தொழில் ரீதியாக ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்படுகின்றன.
(வளரும்)
மன்னர் மன்னன்
|