தலைநகரில் குவிந்த விவசாயிகள்…புறக்கணிக்கப்படும் குரல்களின் எழுச்சி!

ஆறு மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு கடந்த நவம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் தில்லியில் அணிதிரண்டு போராடியுள்ளனர். ஆம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில் நாடெங்கிலும் உள்ள சுமார் இருநூறு விவசாய சங்கங்கள் ஓரணியில் திரண்டு ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கப்பட்டு மேற்கண்ட போராட்டம் நடைபெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கேரளா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தில்லி ராம் லீலா மைதானத்தில் திரண்ட விவசாயிகள், நாட்டில் நிலவும் வேளாண்மைக்கான நெருக்கடிகள் பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நிகழ்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

நதிகளை இணைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்கள், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காகப் போராடுகிறார்கள், விலைக் கொள்கை நிர்ணயம் செய்யப் போராடுகிறார்கள் என மீடியாக்கள் ஆளுக்கொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அனைத்திலுமே உண்மையிருக்கிறது. ஆனால், இன்றைய விவசாயிகளின் பிரச்னை இவை மட்டுமே இல்லை. ‘எங்களைக் கண்டுகொள்ளுங்கள்; நாங்களும் மனிதர்கள்தான்...’ இதுதான் முக்கியமான கோரிக்கை.

‘கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புகள்’ என்ற வரியை பள்ளிகளில் படித்திருப்போம். அந்த கிராமங்களின் முதுகெலும்பு எதுவென்றால் விவசாயம்தான். ஆனால், நம் மத்திய அரசுகளின் தொழில் கொள்கை தொடர்ந்து இந்த முதுகெலும்பை நொறுக்கும் வேலையையே செய்துவருகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

நாடு விடுதலையடைந்தபோது நம்மிடம் தொழில்வளம் பெரிதாக இல்லை. இருந்தவை எல்லாம் விவசாய நிலங்களும் ஆடு, மாடுகளும்தான். இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாகவே இங்கு விவசாயம்தான் பொருளாதாரத்தின் அச்சாணி.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுமே வெள்ளையர்கள் விட்டுச்சென்ற கடும் பஞ்சம் தலைவிரித்தாட அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் நவீன வேளாண்மையைக் கொண்டு வந்தோம். சிந்தடிக் உரங்களும், பூச்சி கொல்லிகளும், நவீன விதைகளும் இந்திய விவசாய சந்தைக்குள் நுழைந்தன. அநேகமாய் இதுதான் முதல் கோளாறு.

தொழில்வளர்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சமும் விவசாயத்துக்குக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஆதிகாலம்தொட்டே இருந்துவருகிறது. தொண்ணூறுகளில் உலகமயமாக்கல் நிகழ்ந்தபோது இந்திய விவசாய சந்தையும் அதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் வருகை பருத்தி விவசாயிகளையும் தக்காளி, கத்தரி போன்ற விவசாயிகளையும் மிக மோசமாகச் சிதைத்தது. முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்லி வழங்கப்பட்ட இந்த பருத்தி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் மட்டும் சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

ஒருபுறம் விதை, உரம், பூச்சிகொல்லிகள், ஆட்கூலி, கருவிகள், இடுபொருட்கள் என ஒவ்வொன்றின் விலையும் கூடிக்கொண்டே இருந்தன. மறுபுறம் விளைச்சல் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. விளைந்தாலும் விலை கட்டுப்படியாக இல்லை. ஆனால், விவசாயக் கடனோ கழுத்தை இறுக்கத் தொடங்கியது.

இப்படியாக, விவசாயம் என்பது மண்ணைக் கட்டி மாரடிக்கும் சூதாட்டமாக மாறிப்போனது. நான்கு புறமும் சூழும் அழுத்தங்கள் தாளாமல் நாண்டுகொள்ளத் தொடங்கினார்கள் விவசாயிகள். அரசோ அன்றும் சரி இன்றும் சரி இதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதையுமே எடுக்கவில்லை. ஒருபுறம் மல்லையாக்களுக்குக் கோடி கோடியாய் கடன் கொடுத்துவிட்டு, அவர்களை ஃப்ளைட்டில் அனுப்பி டாட்டா காட்டிய பொதுவுடமை வங்கிகள் மறுபுறம் வெறும் பத்தாயிரம் கடனுக்காக விவசாயியைத் தற்கொலைக்கு விரட்டிக் கொண்டிருந்தன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் வந்து சேர்ந்தது கார்ப்பரேட் விவசாயம். இன்றைய தேதியில் இங்கு லாபகரமான விவசாயம் செய்வது எளிய விவசாயக் குடிகள் இல்லை. கோடீஸ்வரர்களும் பன்னாட்டு நிறுவனங்களும்தான். இங்கு நடைமுறையில் உள்ள விவசாய சட்டங்கள் அனைத்தையும் இந்த கார்ப்பரேட்களின் நலனுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசில் உள்ளவர்கள்.

இப்படி, அடுக்கடுக்கான பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல்தான் இன்று தெருவில் குதித்திருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளின் உண்மையான பிரச்னையை இந்த சிறிய கட்டுரையில் பேசித் தீர்த்துவிட முடியாது. மிகப் பெரிய நூலாக விரியும் அளவுக்கு தலையாய பிரச்னை அது. ஒருபுறம் அரசு அதை எல்லாம் சட்டையே செய்வதில்லை. மக்களுக்கும் விவசாயிகளுக்குப் பிரச்னை இருப்பது பற்றி எதுவுமே தெரிவதில்லை. தெரிந்தாலும் அதற்கு எந்தவிதமான எதிர்வினையும் செய்வதில்லை. இது எல்லாமும்தான் இன்று ராம்லீலா மைதானத்தில் போர்க் குரலாக எழுந்துள்ளது.

கோடிக்கணக்கான விவசாயிகள் அங்குள்ளார்கள். இவர்களுக்குத் தேவை பொறுப்புணர்வு மிக்க ஓர் அரசும்; அவர்களைப் புரிந்துகொள்ளும் மக்களும்தான். இதற்காகத்தான் அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமுலாக்குவது, குறைந்தபட்ச ஆதரவு விலைக் கொள்கையை மனித நேயத்துடன் அமல்படுத்துவது ஆகியவை இன்று விவசாயிகள் முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள். அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கொள்கை தங்களுக்குச் சாதகமாக இருக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த சந்தேகத்துக்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

பெரும் லாபம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் சந்தையின் எதிர்பாரா மாற்றங்கள் இந்த விலை நிர்ணயத்தை எளிய விவசாயிகளுக்கு ஆதரவாக வைத்திருக்குமா என்பதே கேள்விக்குறிதான். மேலும், பணப்பயிர்கள் மீது அதிகரித்து வரும் கார்ப்பரேட் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் எளிய, சிறு, குறு விவசாயிகளுக்கு அல்லாமல் பெரும் நிறுவனங்களுக்கே பலன் தரும் என்றும் சொல்கிறார்கள்.

பிறகு, நீர் நிலைகளின் இருப்பு, நீராதாரம் ஆகியவை பற்றிய அரசின் தொலைநோக்குப் பார்வையில் நிறைய போதாமை உள்ளது என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் நீண்ட காலமாகச் சொல்லிவருகிறார்கள். இது குறித்தும் அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.வங்கிகளில் கடன் வழங்கும் போது விவசாயிகளை நடத்துவதில் காட்டப்படும் பாகுபாடும் விவசாயிகள் போராட்டத்துக்கு முக்கியமான காரணம். கடனை வசூலிப்பதற்காக அவமானப்படுத்தும் வழிமுறைகளை தொடர்ந்து வங்கிகள் மேற்கொள்கின்றன.

உண்மையில் எந்த விவசாயியும் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்துக் கடன் வாங்குவதில்லை. விவசாயியின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள அரசோ வங்கிகளோ தயாராகவே இல்லை. இப்படிப் பல பிரச்னைகளுக்காகவும்தான் விவசாயிகள் போராடிவருகிறார்கள். விவசாயிகளின் இந்த அணி திரட்டல் பலவகைகளில் முக்கியமான ஒன்று.

இதற்கு முன்பும் சரத் ஜோஷி தலைமையிலான ஷெட்காரி சங்கடனா போன்ற ஒருங்கிணைப்புகள் நிகழ்ந்தன. ஆனால், அவர்கள் இந்தியாவை, அதன் மக்களை நகரம் மற்றும் கிராமம் என இரண்டாக முன்வைத்தனர். இந்தியா மற்றும் பாரத் என இரண்டு தேசம் இங்குள்ளது. இந்தியா நகர்ப்புற சொகுசுகளால் ஆனது.

அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவும் பாரதத்தில் உள்ள விவசாயிகள் சீரழிகிறார்கள் என்றார் ஜோஷி. ஆனால், இந்த ஒருங்கிணைவோ அப்படியான பாகுபாடுகள் எதையும் முன்வைக்கவில்லை. மேலும், இதற்கு நகர்ப்புறத்தில் உள்ள சிவில் சமூகத்திடம் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.

விவசாயிகள் இந்த அணி திரட்டல் வழியே ஒரே ஒரு விஷயத்தை ஆளும் அதிகாரத்தரப்புக்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நாடு அனைவருக்குமானது. அது எந்த கார்ப்பரேட்டுகளுக்கும் தனி நபர்களுக்கும் அதிகாரக் குழுக்களுக்கும் சொந்தமானதல்ல. அப்படியான மனநிலை ஆளும் தரப்புக்கு இருந்தால் மக்கள் வீதிக்கு வருவார்கள் என்ற செய்திதான் அது!               

இளங்கோ கிருஷ்ணன்