பை



கடைசி கடைசியாக வீட்டை அண்ணாந்து பார்த்தாள் ஜெகதா. அந்தக்கால வீடு. இரண்டு கட்டு சுற்று. ஜெகதாவின் மாமனார் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. அவ்வளவுதான். இனி இந்த வீட்டிற்கு, தான் வரப்போவதில்லை. இனிமேல் தன் வாழ்நாளில் பார்க்கவே முடியாது. சுகுணா விடமாட்டாள். தன்னைக் கூட்டிவர விடவே மாட்டாள்.

கண்கள் கலங்கியது. உதடுகள் துடித்தன. கண்ணீர் கசிந்து கன்னக் கதுப்புகளில் இறங்கியது. வாய்விட்டுக் கதறி அழவேண்டும்போல துடித்த இதயத்தைக் கட்டுப்படுத்த சிரமமாக இருந்தது.சுகுணாவிற்கு முன்னால் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்ட பெருமித கர்வத்தில் ஆட்டோவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள் சுகுணா.

சுகுணாவிற்கு கனிவு என்பதே தெரியாது. ஆயிரம் கத்திகளை உருக்கி உருவாக்கியது மாதிரி நாக்கு. சாதாரண வார்த்தையே சவுக்கால் அடிப்பதுபோலத்தான் பேசுவாள். ஈவு இரக்கமற்ற ராட்சசி.இத்தனைக்கும் சுகுணா பிறத்தி கிடையாது. நெருங்கிய உறவுக்காரப் பெண்தான். தன்னையும் தன் பிள்ளையையும் பாசமாக அரவணைத்துக்கொள்வாள் என நினைத்துத்தான் வெங்கட்டிற்கு மணமுடித்தாள்.

வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து நினைத்து ஜெகதா ஏமாந்ததுதான் மிச்சம். தோட்டம், மாந்தோப்பு, கடலைக்கொல்லை, பேங்க் பேலன்ஸ், அலமாரிக்குள் பூட்டியே வைக்கப்பட்டிருந்த பழைய நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சுகுணாவிடம் ஒப்படைத்தாள்.இனிப்பான பேச்சில் மயங்கி சொத்துக்களையும் பெயர் மாற்றிக் கொடுத்தாள். எல்லாம் வீண். எல்லாவற்றிலும் மண்.

‘‘ஒங்கம்மா இந்த வீட்ல இருந்தா... என்னால ஒங்ககூட குடும்பம் நடத்த முடியாது...’’‘‘போயிடுவேன்... எங்காச்சும் போயிடுவேன்...’’சுகுணா இப்படி பிடிவாதம் பிடிப்பாள் என்று வெங்கட் எதிர்பார்க்கவே இல்லை. ஆடிப்போனான்.இந்த இடியை ஜெகதாகூட எதிர்பார்க்கவில்லைதான். சுகுணாவா... இப்படி?ஏதோ சாதாரண கோபத்தில் சொல்கிறாள் என்றுதான் முதலில் எண்ணினான். நாளாக ஆக தன் குணத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டிருந்தாள் சுகுணா. ஜெகதாவோடு தினமும் சண்டை. ஒதுங்கிப்போனாலும் விடமாட்டாள். வெறி பிடித்தவள்போல கத்துவாள்.

வீட்டில் எந்தப் பொருளையும் ஜெகதா தொடக்கூடாது. பாபு மட்டும் விதிவிலக்கு. எட்டு வயது பேரன். பாட்டி மீது பாசமோ பாசம். உயிரையே வைத்திருந்தான். ஜெகதா ஊட்டிவிட்டால்தான் சாப்பிடுவான். ஜெகதாவின் தோளும் மடியும்தான் பாபுவிற்கு தொட்டில்.வெங்கட்டிற்கு வங்கியில் வேலை. பளு அதிகம். பொறுப்பான பதவி. எந்த நேரமும் டென்ஷன் டென்ஷன்... கொஞ்சம் கவனம் சிதறினாலும் அவ்வளவுதான். இழப்புகள் அதிகமாகி விடும்.

வேலை முடிந்து வீட்டிற்கு வர எப்படியும் இரவு எட்டு மணி ஆகிவிடும். வெங்கட்டிற்கு ஹோட்டல் சாப்பாடெல்லாம் ஒத்து வராது. அரை வேக்காடாக இருந்தாலும் சுகுணா சமையல்தான் சரிப்பட்டு வரும். இதை நன்றாகப் புரிந்து வைத்திருந்த சுகுணா வேண்டுமென்றே இரவு எதையும் சமைக்க மாட்டாள்.

‘‘தலைவலி... மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு... வேணுமின்னா... ஒங்கம்மாவுக்கும் ஒங்களுக்கும் தெருமுனையில் இருக்கற கையேந்திபவன்ல போய் வாங்கி வாங்க...’’பாபுவுக்கு பண்ணுகிற ஸ்நாக்ஸையே அவளும் தின்றுவிட்டு அறைக்கதவை அறைந்து தாழிட்டுக் கொள்வாள்.

சுகுணாவைக் கேள்வி கேட்க முடியாது. கேட்டால் அன்று இரவு சிவராத்திரிதான். வாயை மூடிக்கொள்வான் வெங்கட். ஓடிப்போய் ஜெகதாவிற்கு மட்டும் ைகயேந்தி பவனிலிருந்து இட்லி வாங்கி வருவான்.

‘‘ஒனக்கு வாங்கி வரலியா...?’’
‘‘பசிக்கலைம்மா...’’‘‘அதெப்படி ஒனக்கு மட்டும் பசிக்காமப் போகும்? நீயும் சாதாரண மனுஷன்தானே...?’’
‘‘அம்மா... ப்ளீஸ்... எதுவும் கேட்காதே... என்னால முடியலை...’’‘‘என்னாலயும்தான்டா முடியலை. தெனம் தெனம் நீ இந்த ராட்சசிகிட்ட படற அவஸ்தையை சகிக்க முடியலை. வயிறு ெகாதிக்குது.

வேணாம், நான் சரியப்போற கட்டை. நீ வாழ வேண்டிய குருத்து. நீ சந்தோஷமாக நிம்மதியா வாழணும். அதுக்காக நா எங்கே வேணாலும் போகத் தயாரா இருக்கேன். என்னை எதாவதொரு முதியோர் இல்லத்துல கொண்டுபோய் விட்ரு...’’ கண்ணீர் வழிய... குரல் விம்ம... தேகம் துடிக்க கைகளைக் குவித்துக் கும்பிட்டாள் ஜெகதா.‘‘அம்மா...’’ வெடித்துக் கதறினான் வெங்கட்.

‘‘நானா விரும்பித்தான் போறேன். ஒன் மனசுல எந்த உறுத்தலும் இருக்கக் கூடாது... சரியா...?’’ சற்றே உரிமையாய் பாசமாய் அதட்டினாள்.
‘‘ம்...’’இதயத்தின் வலியை மறக்க உதட்டைக் கடித்துக்கொண்டான் வெங்கட்.
‘‘போப்போறியா பாட்டி...?’’ பாபுதான் பரிதவித்தான்.
ஜெகதாவால் பேச முடியவில்லை.

‘‘என்னைய வுட்டுட்டு போப்போறியா பாட்டி...?’’
‘‘யாரு சொன்னா? நா எங்கேயும் போக மாட்டேன். எப்பவும் உன் மனசுலயும் ஒங்கப்பா மனசுலயும்தான்டா இருப்பேன்...’’ பாபுவைத் தோளோடு அணைத்துக்கொண்டாள்.
‘‘பாட்டி... நீ போகப்போற எடத்துல ஃபேன் இருக்குமா...?’’
‘‘தெரில...’’
‘‘டிவி இருக்குமா..?’’

‘‘தெரில...’’
‘‘ஏசி இருக்குமா...?’’
‘‘தெரில...’’
‘‘இன்வெர்ட்டர் இருக்குமா...?’’
‘‘தெரில...’’ உதட்டைச் சுழித்தபடியே தலையை ஆட்டிய ஜெகதா, மேற்கொண்டு பாபுவை கேள்வி கேட்க விடாமல் முற்றுப்புள்ளி வைத்தாள். ‘‘ஆனா, நல்ல மனுஷங்க, இருப்பாங்க பாபு...’’

முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான் வெங்கட். வீட்டில் உற்சாகமாய் வலம் வந்துகொண்டிருந்தாள் சுகுணா. இன்னும் சில நிமிடங்களில் ஆட்டோ வந்துவிடும்.
‘கெழவி போய்விடுவாள்.’

‘சனி ஒழிந்துவிடும்...!’
‘தீபாவளி, பொங்கலுக்குக்கூட கூட்டிவரக் கூடாது... அவரை அங்கே சென்று பார்க்கவும்
அனுமதிக்கக் கூடாது...!’
‘பாபுவின் மனசிலிருந்து கெழவியின் நெனைப்பை அழித்துவிட வேண்டும்...’ நதியின் நீரலைகளைப்போல சுகுணாவின் மனம் ஆர்ப்பரித்தது.
சற்றே இரைச்சலோடு ஆட்டோ வந்து நிற்க...
‘‘வாம்மா... போய் ஏறு...’’

வெங்கட்டிற்கு குரல் விம்மியது.
‘‘வர்றேன் சுகுணா...’’ பெருமிதமாய் சுகுணாவைப் பார்த்து தலையை ஆட்டினாள். அவள் வெறுப்பாய் முகத்தைத் திருப்பிக்கொள்ள, தன் உடமைகள் அடங்கிய தகரப் பெட்டியோடு ஆட்டோவில் போய் ஏறினாள்.
‘‘பாட்டி...’’

அலறியபடியே ஓடிவந்தான் பாபு. இவ்வளவு நேரமாய் எங்கிருந்தோ கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான்.‘‘வர்றேன்டா செல்லம்...’’‘‘இந்தா... பாட்டி இத வெச்சுக்க...’’ ஒரு பெரிய துணிப்பை. ஜவுளிக்கடையில் கொடுக்கப்பட்ட பை. உள்ளே என்னமோ இருந்தது. உள்ளே இருப்பது என்னவென்று தெரியாதபடி பையின் வாய்ப்பகுதியை நூல் கயிறினால் கட்டியிருந்தான். பையை வாங்காமல் ஜெகதா திகைப்பாய் பார்க்க... கன்னத்தில் முத்தமிட்டு காதினுள் என்னமோ கிசுகிசுத்தான். ஜெகதாவின் முகம் மலர்ந்தது.

‘‘வாங்கிக்க பாட்டி...’’ கெஞ்சினான்.பாபு தந்த துணிப்பையை ஆசையாய் வாங்கிக்கொண்டு, மார்போடு அணைத்தபடி... ஆட்டோவின இருக்கையில் சாய்ந்தாள் ஜெகதா.வெங்கட்டும் ஏறி பக்கத்தில் அமர... ஆட்டோ கிளம்பியது.கண்ணீரோடு கையை ஆட்டியபடி நின்றிருந்த பாபுவின் முதுகில் சுளீரென்று ஒரு அடி விழுந்தது. சுருண்டு விழுந்தான்.

‘‘கெழவிகிட்டே எதை கொடுத்தே...?’’
பாபு திருதிருவென்று விழிக்க...‘‘பையில என்னடா தந்தே...? சொல்லுடா... இப்ப சொல்லப்போறியா இல்லியா...?’’ உறுமினாள். அதட்டினாள்.
பாபு அழுத்தமாய் மௌனம் சாதிக்க சுகுணாவின் கோபம் கூடியது. வெறியானாள். தலைமுடியைக் கொத்தாய்ப் பற்றி உலுக்கினாள். பளார் பளாரென்று கன்னத்தில் அறைந்தாள்.பாபு வீறிட்டு அழுதான். ஆனால், வாயைத் திறக்கவில்லை.

அடித்து, உதைத்து, மிரட்டி, கடைசியில் மன்றாடியும் பார்த்தாள். பாபுவிடம் நடக்கவில்லை.‘‘அப்படியே கெழவி புத்தி..! கல்லுளி மங்கி... போயும் கெடுத்துட்டா! என்னை... வீட்டைவிட்டு ஒழிஞ்சு போறப்பவும் படுத்தறாளே...! நீ சொல்லலைன்னா விட்ருவேனா... விடமாட்டேன். ஒங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி தெரிஞ்சுக்கறேன். நீ கெழவிகிட்டே கொடுத்த பையை... திருப்பி வாங்கி வரச்சொல்றேன் பாரு...’’ பாபுவிடம் சவால் விடுவதுபோல ஆவேசமாகக் கத்திவிட்டு வெங்கட்டிற்கு போன் பண்ணுவதற்காக மாடியறைக்கு நடந்தாள்.

ஆட்டோ விரைந்துகொண்டிருந்தது.பின்னிருக்கையில் ஜெகதாவும், வெங்கட்டும் சற்றே இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். சுமந்து பெற்றெடுத்த தாய். தொட்டில் ஆட்டிய தாய். தாலாட்டிய தாய். இரவும் பகலும் பொத்திப் பொத்தி வளர்த்த தாய்...ஜெகதாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவோ, ஒட்டி அமரவோ வெங்கட்டிற்கு மனம் கூசியது. உறுத்தல் வேறு. பேசவும் இல்லை.சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போன் சிணுங்கியது. வெளியே எடுத்தான். ‘இந்த ராட்சசி எதுக்காக கூப்பிடுறா...?’ யோசனையாய் பச்சைப் பொத்தானை அழுத்தி செல்ஃபோனை காதில் வைத்தான்.

‘‘சொல்லு...’’
‘‘என்னத்த சொல்றது? போறப்ப கூட அந்த பொம்பளை... என்னைய நிம்மதியா விடலையே...!’’ மறுமுனையில் சுகுணா இரைந்தாள்.‘‘என்னாச்சு... புரியறாப்ல சொல்லு...’’‘‘ஆட்டோவுல ஏறுறப்ப... பாபு ஓடிவந்து அந்த பொம்பளைகிட்டே ஒரு பையைக் கொடுத்தான்ல...
’’
‘‘நா கவனிக்கலை! கொஞ்சம் மரியதையா பேசு சுகுணா. அதான் வீட்டை விட்டுப் போயாச்சுல்லெ? பொம்பளை... அது இதுன்னு... அநாகரீகமா பேசாதே!’’ என்றான் எரிச்சலாய்.

‘‘சரி... நாகரீமாகவே பேசறேன்... ஒங்கம்மா... அதான் அந்த மகாராணி... ஒங்க பக்கத்துலதானே இருக்காங்க...?’’‘‘ஏன், பேசணுமா...?’’‘‘அவங்ககிட்டே எனக்கென்ன பேச்சு...? அவங்க மடியில ஒரு துணிப்பை இருக்கா...?’’வெங்கட் ஜெகதாவின் பக்கம் திரும்பினான். அந்த துணிப்பையை வாஞ்சையோடு தன் மடியில் அணைத்திருந்தாள்.

‘‘இருக்கு...’’‘‘அதை நீங்க வாங்கிடுங்க...! உள்ளார என்ன இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாகணும்... பீரோவில இருந்து நகையையோ, பணத்தையோ எடுத்துத்தான் பையில போட்டுக் கொடுத்திருக்கான்னு தோணுது. அறிவு வேணாம்? புத்தி வேணாம்? நல்ல மனுஷியா இருந்திருந்தா அப்பவே... அந்தப்பையை பிரிச்சு என் முன்னால காட்டியிருக்கணும்...! திருட்டுப்புத்தி.

போறதுதான் போறோம்... இருக்கறதை சுருட்டிகிட்டுப் போயிடலாம்ங்கற பேராசை. கெட்ட எண்ணம். பொம்பளைன்னு சொன்னா பொத்துக்கிட்டு வருது ஒங்களுக்கு..!’’ காது ஜவ்வு கிழிவதுபோல கத்தினாள்.‘‘இப்ப என்னதான் வேணும் ஒனக்கு...?’’‘‘அந்த துணிப்பை என் கைக்கு வந்தாகணும்... உள்ளே என்ன இருக்குன்னு உடனே தெரிஞ்சாகணும். லைன்லயே இருக்கறேன்... பையை வாங்கிப் பிரிச்சுப் பார்த்துட்டு பதில் சொல்லுங்க...’’ கறாராய் கட்டளையிட்டாள்.பாபு ஜெகதாவிடம் துணிப்பையைக் கொடுத்ததை வெங்கட் நிஜமாகவே கவனிக்கவில்லைதான். எதையும் கவனிக்கிற நிலையிலும் அப்போது அவனில்லை.

சிசிடிவி கேமரா போல சுகுணாவின் பார்வை எப்போதும் ஜெகதாவின் மீதேதான் படிந்திருக்கும். ஆட்டோவில் ஏறுகிற தருணத்தில் பாபு ஓடிவந்து கொடுத்ததை நன்றாக கவனித்திருக்கிறாள். அதனால்தான் துளைத்தெடுக்கிறாள். பாபுவிடம் விசாரித்திருப்பாள். விஷயத்தை கறந்திருக்க முடியாது. அடித்து மிரட்டி கடைசியாகத்தான் என்னிடம் வந்திருக்கிறாள்.

பாபு... ஒருவேளை பீரோவிலிருந்து பணத்தையோ, நகையையோ எடுத்து பையில் வைத்துக் கொடுத்திருப்பானோ? துணிப்பையின் வாய்ப்பகுதி நூலினால் கட்டப்பட்டிருந்தது வேறு ஆர்வத்தைக் கிளறியது.‘‘அம்மா... அந்தப் பையை இப்படி குடு...’’ என்றான். அவன் சுகுணாவிடம் போனில் பேசியதை ஜெகதாவும் அரைகுறையாய் கவனித்தபடிதான் இருந்தாள். முகத்தில் இருள் படிந்தது.

‘‘மாட்டேன்... என் பேரன் எனக்காகக் குடுத்தது...’’ துணிப்பையை இன்னும் இறுக்கமாய் அழுத்திக்கொண்டாள்.‘‘தரப்போறியா இல்லியா...? அவ லைன்ல இருக்கா...! இந்த பை அவளுக்கு வேணுமாம். உள்ளே என்ன இருக்குன்னு தெரிஞ்சாகணுமாம்...’’ பரிதாபமாய்க் கெஞ்சினான்.‘பாட்டி... இத யாருகிட்டயும் குடுத்திடாதே... நா சேர்த்து வெச்சிருந்த காசுலேர்ந்து ஒனக்காக வாங்கினது... எப்பவும் உன்கிட்டயே இருக்கணும்...’ துணிப்பையைக் கொடுத்தபோது தன் காதினுள் பேரன் பாபு கிசுகிசுத்ததை நினைத்துப் பார்த்தாள்.

‘‘நாந்தான் வூட்டை விட்டே வந்துட்டேனே... இன்னமும் ஏண்டா என்னை வதைக்கறீங்க...? பாபு தந்த இந்த சந்தோஷத்தைக்கூட நா அனுபவிக்கக் கூடாதா...? முடியாது வெங்கட். பாபு என்கிட்டே சொல்லியிருக்கான் யாருகிட்டயும் குடுத்துடாதேன்னு. இந்த ஒரு விஷயத்துல நான் எறங்கி வரமாட்டேன்...’’‘‘அம்மா... ப்ளீஸ்...! இந்த பை இல்லாம நான் வூட்டுக்குள்ளே ேபாவ முடியாதும்மா...’’‘‘ம்ஹும், மாட்டேன்...’’ஜெகதா பிடிவாதமாய் மறுக்க... வெங்கட் கோபமாய் அவளிடமிருந்து பிடுங்க முயன்றான்.

அவன் இழுக்க... அவள் தடுக்க... போராட்டத்தின் முடிவில் அந்த துணிப்பை... ஆட்டோவின் குலுக்கலில் வெளியே போய் விழுந்து விட்டது.

‘‘யோவ்... டிரைவர்... ஆட்டோவை நிறுத்துய்யா...’’அவர்களுடைய சண்டையை வினோதமாய் வேடிக்கை பார்த்தபடியே ஆட்டோவை நிறுத்தினான் டிரைவர்.‘‘ஒங்கம்மா கிட்டேர்ந்து பையை வாங்கியாச்சா? உள்ளே என்ன இருக்கு? என்ன இருக்கு...?’’ செல்போனின் மறுமுனையிலிருந்த சுகுணா இரைந்து கத்தியபடியே இருந்தாள்.

செல்போனை ஒரு கையில் பிடித்தபடியே ஆட்டோவிலிருந்து பொத்தென கீழே குதித்த வெங்கட்... வெறித்தனமாய் ஓடினான். ஆட்டோவிற்குப் பின்னால்... நடுரோட்டில் இருபதடி தூரத்தில் அந்தத் துணிப்பை விழுந்து கிடந்தது.தலை தெறிக்க ஓடிப்போய் துணிப்பையைக் கையிலெடுத்தான். வாய்ப்பகுதியில் கட்டப்பட்டிருந்த நூல் கயிறை பரபரவெனப் பிரித்தான். மின்னல் வேகத்தில் வந்துகொண்டிருந்த லோடு லாரியைக் கவனிக்கத் தவறி... கடைசி வினாடியில் சுதாரிப்பதற்குள்...

பதைபதைப்பாய் தலையை நீட்டினாள் ஜெகதா.‘‘பாட்டி... அங்கல்லாம் ஃபேன் இருக்குமோ... இருக்காதோ... அதான் உனக்காக இதை வாங்கியாந்தேன்...’’பாபுவின் குரல் ஜெகதாவின் காதினுள் ஒலிக்க...லாரி மோதி... மேலே தூக்கி வீசப்பட்டு ரத்த சகதியாய் கீழே விழுந்த வெங்கட்டின் அருகிலேயே அந்த துணிப்பையும் அவிழ்ந்து கிடந்தது. கூடவே அவனுடைய செல்போனும்.

உள்ளே பத்திரமாய் வைக்கப்பட்டிருந்த பனை மட்டை விசிறி வெளியே தெரிந்தது.‘‘உள்ளே... என்ன இருக்கு...? உள்ளே என்ன இருக்கு...?’’ மறுமுனையில் சுகுணா கத்திக் கொண்டேயிருந்தாள்.
                  
யானைப் பசி!

சீனாவின் யுன்னானிலுள்ள ஹோட்டல் ஓனர் சூ ஹாங்வெய், அதிகாலையில் உணவகத்தில் காலை உணவு தயாரிப்பிலிருந்தார். அப்போது அங்கு கொலைப்பசியில் வந்த காட்டு யானை அவரது ஹோட்டலின் ஸ்டோர் ரூமில் புகுந்தது. சோளம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகளை நிதானமாக 4 மணிநேரம் ஷெட்யூல் போட்டு ருசித்து சாப்பிட்டு விட்டுச் சென்றது. விடுதி உரிமையாளர் நஷ்டத்தை எந்தக் கணக்கில் எழுதுவது என யோசித்து வருகிறார்.

கிளாசிக் ரயில்!

1932ல் மக்கள் பயணித்த ரயிலை நியூயார்க்கின் மன்ஹாட்டனில் அரசு இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்கு பயண சேவை அளிக்கவுள்ள ரயில் 1932 - 77 வரை புழக்கத்தில் இருந்திருக்கிறது.“ரயிலின் விளக்குகள், விளம்பரங்கள், சீட்டுகள் என கடந்த காலத்தை நினைவுகூரவைக்கின்றன...” என மகிழ்கின்றனர் ரயிலில் பயணித்த சீனியர் குடிமக்கள்.

சுடச்சுட  திருட்டு!

அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் நடந்த திருட்டு இணையத்தில் ஹாட் வைரல். பார்க்கிங்கில் நின்ற ட்ரக் ஒன்றிலிருந்து பெட்ரோலை சூதானமாக வாயில் உறிஞ்சி திருட முயன்றார் அதிமேதாவி திருடர் ஒருவர்.

ஆனால், எசகுபிசகான தவறுகளால் பெட்ரோல் பேன்ட்டில் பட்டு தீப்பிடிக்க திருடர் நெருப்புடன் உயிர் பிழைக்க பாய்ந்து ஓடும் சிசிடிவி வீடியோவை போர்ட்லேண்ட் தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது.பேண்டேஜுடன் எஸ்கேப்பான பெட்ரோல் திருடரை போலீஸ் தேடி வருகிறது.    

தொலைத்ததற்கு போனஸ்!

அமெரிக்காவின் தெற்கு டகோடாவைச் சேர்ந்த ஹன்டர் ஷமத், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த சகோதரியின் திருமணத்திற்குச் சென்றார். பர்ஸை விமானத்தில் தவறவிட்டுவிட்டதை தாமதமாக உணர்ந்து ஷாக் ஆனார் ஹன்டர். இது நடந்த சில நாட்களில் ஹன்டரின் வீட்டு முகவரிக்கு அவர் தொலைத்துவிட்டதாக நினைத்த பர்ஸ் வந்துவிட்டது. ஹன்டரின் 60 டாலர்களுடன் 40 டாலர்களை போனஸாக சேர்த்து கடிதத்துடன் அனுப்பியிருந்தார் டாட் என்ற மர்ம மனிதர்!

மகேஷ்வரன்