பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.85உலகின் ஆபத்தான நாட்டில் இதுதான் நடக்கிறது

வெனிசுலாவின் குடிமகள் பாட்ரிஷியா. வயது 24. அரசுப் பள்ளியில் வரலாறு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியை. மாதச் சம்பளம் 3,12,000 பொலிவர்கள்.மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தப் பணத்தைக் கொண்டு இரண்டு மாதம் ஜாலியாக செலவழிக்கலாம்.

ஆனால், இன்று ஒருவேளை உணவைக்கூட வாங்க முடியாது. ஆம்; பாட்ரிஷியா வாங்கும் சம்பளத்தின் மதிப்பு வெறும் 1.2 அமெரிக்க டாலர்கள். அதாவது 85 ரூபாய்!ஹைபர் பணவீக்கத்தால் வெனிசுலாவின் பணமான பொலிவரின் மதிப்பு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அத்துடன் உணவுப் பற்றாக்குறையும், விலைவாசி ஏற்றமும் அங்கே தலைவிரித்தாடுகிறது.

இது வெனிசுலா மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 30 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி அருகிலிருக்கும் தேசங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால், பாட்ரிஷியா மாதிரியான பெண்களின் நிலையோ துயரக் கடல். வருமானப் பற்றாக்குறையால் கடந்த ஜூன் மாதம் ஆசிரியை வேலையைத் துறந்துவிட்டு கொலம்பியாவில் உள்ள ஒரு மது விடுதியில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார் பாட்ரிஷியா. அங்கே ஒரு குடிகாரனால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார்.  

ஆனாலும் அந்த வேலையை அவரால் விட முடியாத நிலை. கிடைக்கும் மொத்த வருமானத்தையும் வெனிசுலாவில் வசிக்கும் குடும்பத்துக்கு அனுப்பிவிட்டு, வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸில் வாழ்க்கையை இரண்டு மாதங்கள் நகர்த்தினார். ஆனால், வெனிசுலாவின் விலையேற்றத்தால் பாட்ரிஷியா அனுப்பும் பணம் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இல்லை. வேறு வழியின்றி அந்த விடுதியிலேயே பாலியல் தொழிலாளியாக மாறிவிட்டார் பாட்ரிஷியா.

பாட்ரிஷியா மட்டுமல்ல, வெனிசுலாவில் போலீஸ், பத்திரிகையாளர், வங்கி ஊழியர் என கௌரவமாக வேலை பார்த்த ஆயிரக்கணக்கான பெண்களின் இன்றைய நிலை இதுதான்.‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கள் நிறுவனத்தை பேப்பர் பற்றாக்குறையால் மூடிவிட்டார்கள்.

இன்க் பற்றாக்குறையால் பாஸ்போர்ட்டும் எடுக்க முடியவில்லை. எப்படியோ ஈக்வடாருக்கு வந்துவிட்டேன். இங்கே பாலியல் தொழிலாளியாக மாறுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை...’’ என்று சொல்லும்போதே ஜோலியின் குரல் உடைகிறது. வெனிசுலாவின் தலைநகரான கரகாஸில் பிறந்து வளர்ந்த இவர், ஒரு பத்திரிகை நிருபர்.

வெனிசுலா பெண்களின் நிலை இதுவென்றால் ஆண்களின் நிலையோ இன்னும்  சோகம். வேலை கிடைக்காமல் விரக்தியடைந்த பல இளைஞர்கள் திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும் மாறிவிட்டார்கள். ‘‘வெனிசுலாவில் ஒரு மணி நேரத்துக்கு மூன்று பேர் பணத்துக்காகவும், ஸ்மார்ட்போனுக்காகவும் கொல்லப்படுகிறார்கள்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

2014ல் மிஸ் வெனிசுலாவான மோனிகா பியர், தன் கணவருடன் காரில் சென்றிருக்கிறார். அவர்களை வழிமறித்த கொள்ளைக்கும்பல் இருவரையும் கொன்றுவிட்டு அவர்களிடமிருந்ததைத் திருடிச்சென்றுவிட்டது. அந்தக் கொள்ளையர்கள் எல்லோரும் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வேலையை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களுக்கு எப்படியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.இந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்க, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘பனா’ என்ற ஆப்பை அங்கே உருவாக்கியுள்ளனர். சாலையில் செல்லும்போது யாராவது தாக்கினாலோ, திருட முயற்சித்தாலோ ஆப்பில் பதிவு செய்துவிட்டால் போதும். உடனே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்துவிடுவார்கள்.

என்றாலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாருமே வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. பலர் பாதுகாப்புக்காக தங்களுடைய தனித்த வீடுகளைக் காலி செய்துவிட்டு குழுவாக வாழ்கின்ற தனியார் விடுதிகளில் தஞ்சமடைவது அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் மக்கள் வாழத் தகுதியற்ற, ஆபத்தான ஒரு தேசமாக மாறிவருகிறது வெனிசுலா.

‘‘இத்தனைக்கும் உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஒன்று வெனிசுலா. அறுபதுகளில் லத்தீன் - அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் ஒரு தேசம் வெனிசுலாதான். ஆனால், சர்வாதிகார ஆட்சி, ஊழல், பொறுப்பில்லாத நிர்வாகம், உற்பத்தி பற்றாக்குறை, ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு என எல்லாம் சேர்ந்து வெனிசுலாவை இன்று சுடுகாடாக மாற்றியுள்ளது.

குறிப்பாக உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை பெரிய பிரச்னையாக அங்கே விஸ்வரூபவம் எடுத்துள்ளது. அதனால்தான் பெருமளவில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். உற்பத்தி பற்றாக்குறையால் இன்று ஒரு விலை, நாளை ஒரு விலை என்று நாள்தோறும் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்லும் பேரவலம். முட்டை வாங்கக்கூட பை நிறைய பணத்தை எடுத்துச் செல்லவேண்டிய நிலை. அந்தளவுக்கு பணத்தின் மதிப்பிழப்பு.  

இந்த நிலையைத்தான் பொருளாதாரத்தில் ‘ஹைபர் பணவீக்கம்’ என்கிறார்கள்...’’ என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் விஜயபாஸ்கர். தமிழகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சிகளை ஆய்வு செய்யும் ‘எம்ஐடிஎஸ்’ ஆய்வு நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் இவர்.

‘‘சாவேஸ் அதிபராக இருந்தபோது எண்ணெய் பொருளாதாரத்தை அரசாங்க மையப்படுத்தி, அதன் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு பள்ளிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார். இதனால் நல்ல மாற்றங்கள் அங்கே நிகழ்ந்தது.

ஆனால், உற்பத்தி நிறுவனங்களையும் கையகப்படுத்தி தன் கட்சி ஆட்களிடம் அவர் ஒப்படைத்தார். அத்துடன் உணவு உற்பத்தியையும் இராணுவத்திடம் கொடுத்தார். இதனால் உற்பத்தி பெருமளவில் பாதிப்படைந்தது. எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்தது.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தது. வெனிசுலா எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த ஒரு நாடு. அதனால் சாவேஸ் உருவாக்கிய எல்லா திட்டங்களும் அடிவாங்கியது.

இன்னொரு பக்கம் எண்ணெய் வளமே அபரிமிதமாக இருக்கிறது என்று உற்பத்தி துறையில் இருந்தவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இதன் காரணமாக உணவு உட்பட பல முக்கிய துறைகளில் பற்றாக்குறை அதிகமாகிவிட்டது.

எல்லாவற்றையும் அரசு மையமாக்கி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் சாவேஸ் திட்டங்களை வகுத்திருந்தாலும் அது ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை. மாறாக அது சர்வாதிகார தோரணையோடு இருந்ததால் அதிகாரத்தில் இருந்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்தது.

அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அந்நியச் செலாவணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. சாவேஸிற்குப் பிறகு வந்த மதுரோவாலும் எதையும் செய்ய முடியவில்லை. அவரும் மேல்தட்டு மக்களைப் பாதிக்காத அளவுக்கு மாற்றம் கொண்டு வருவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இது ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகமாக்கிவிட்டது.

மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உற்பத்தி அங்கே சீர்குலைந்து கிடக்கிறது. சுரண்டலும், ஊழலும் குறைந்தபாடில்லை. மதுரோ சர்வாதிகாரத்தை அதிகமாக்குகிறாரே தவிர, பிரச்னைகளைத் தீர்க்க எந்த முயற்சியையும் எடுப்பதுபோல் தெரியவில்லை.

அமெரிக்கா மாதிரியான நாடுகள் வெனிசுலாவிற்கு உதவாததும் பெரிய பிரச்னை என்று நினைக்கிறேன். இவ்வளவு நடந்தபிறகும் வேலை வாய்ப்புகள் போதுமான அளவுக்கு உருவாக்கப்படவில்லை. அரசு இன்னமும் மெத்தனமாகச்  செயல்படுகிறது.

இதுபோக வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அபகரிக்க அமெரிக்கா போன்ற நாடுகள் தீட்டும் சதித்திட்டமும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த நிலை மாற வெகு நாட்கள் பிடிக்கும். இந்தியாவில் உற்பத்தியும், விநியோகமும், உற்பத்தியான பொருட்களைப் பத்திரப்படுத்தி வைப்பதும் கட்டுக்கோப்பில் உள்ளது. அதனால் இக்கட்டான ஒரு நிலை இங்கே வர வாய்ப்பு ரொம்பக் குறைவு. ஆனாலும் வெனிசுலாவின் இன்றைய நிலை நமக்கு ஒரு பாடம்...’’ என்கிறார் விஜயபாஸ்கர்.  

த.சக்திவேல்