நோய்த்தடுப்பு கிங் நிலையம்தல புராணம்

‘நோய் வருமுன் காப்பதே சிறந்தது’ என்கிற வாசகம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், இதற்கு நல்ல உதாரணமாகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது நோய்த்தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம்.ஒரு காலத்தில் ஆட்கொல்லி நோயான பெரியம்மையைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளைச் சேமித்து வைத்து ெமட்ராஸ் மாகாணம் முழுவதும் விநியோகித்த நிறுவனம் இது.

பின்னர், இங்கேயே பல்வேறு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டன. இன்று டெங்கு, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பயங்கர நோய்களைச் சோதனை செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கூடமாகவும், ஆன்டிஜென், ஆன்டிசீரம் போன்ற நோய் கண்டறியும் மருந்துகளை உற்பத்தி  செய்யும் நிறுவனமாகவும் உள்ளது.

பரபரப்பான கிண்டி தொழிற்பேட்டையின் ஓரத்தில் அடையாறின் முகத்துவாரத்தில் இருக்கும் இந்நிறுவனம் பலரின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. காரணம், மரங்களடர்ந்த ரம்மியமான சூழலுக்குள் கட்டடங்கள் மறைந்து கிடப்பதே! ஆனாலும் அமைதி தவழும் அந்த இடத்திலிருந்தே நோய்த் தடுப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் பெரியம்மை நோய் காலம் காலமாக இருந்து வந்தது. இதற்கான தீர்வாக 1802ம் வருடம் பெரியம்மை தடுப்பூசி இங்கே கொண்டு வரப்பட்டது. முதல்முதலாக அன்னா டஸ்ட்ஹால் என்ற பம்பாயைச் சேர்ந்த மூன்று வயது குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு மெட்ராஸ், பூனா, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னாளில் இந்தத் தடுப்பூசிகளைச் சேமித்து வைக்கும் இடமாக இருந்ததுதான் கிங் நிறுவனம். அன்றைய மெ்ட்ராஸ் மாகாணத்தில் பஞ்சங்களும் நோய்களும் பிரிக்க முடியாதவையாக இருந்ததால், அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் வந்த 1884ம் வருடமே இந்நிறுவனமும் தனது செயல்பாட்டைத் துவங்கியது.

இதன் முதல் இயக்குநர் கர்னல் வால்ட்டர் கவென் கிங் என்பவர். இந்நிறுவனத்தின் முன்னோடியாக இருந்ததால் பின்னாளில் இவர் பெயரே நிறுவனத்திற்கும் சூட்டப்பட்டது. இதில், 1884ம் வருடத்தில் இருந்து இவரின் பணிகள் முறையாகத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பே தாது வருடப் பஞ்சத்திலேயே தனது வேலைகளைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கி நல்ல பெயரெடுத்துவிட்டார் கிங்.ஆரம்பத்தில் மருத்துவராக வந்த கிங், மெட்ராஸ் மாகாண சுகாதார ஆணையராக 1892-இல் நியமிக்கப்பட்டார். கூடவே, இந்நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர், 1899ம் வருடம் தடுப்பூசிப் பிரிவை கொண்டு வந்தார். தடுப்பூசி மருந்துகள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன.

1850கள் வரை இங்கிலாந்தில் இருந்தே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து வந்தது இந்தியா. பின்னர், தேவை அதிகரிக்க இங்கே உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டது. முதலில் மிருகங்களின் நிணநீரை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தப் பரிசோதனை ஆரம்பித்த இடம் மெட்ராஸ்.இங்கிருந்து சிவில் டிபார்ட்மென்ட் மூலம் இந்த மருந்துகள் மெட்ராஸ் மாகாணம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன. தவிர, பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் அனுப்பப்பட்டன.

1902ம் வருடம் நுண்ணுயிரியல் பிரிவும், 1903ம் வருடம் நோய் எதிர்ப்பு மருந்துப் பிரிவும் துவக்கப்பட்டன.உடனே, கிண்டியில் ஒரு கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய மெட்ராஸ் கவர்னர் லார்டு ஆம்ப்தில் இதற்கு ஒப்புதல் அளிக்க 1903ம் வருடம் கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. இதைக் கட்டட ஒப்பந்ததாரர் மாசிலாமணி முதலியார் இந்தோ சாராசெனிக் பாணி கட்டடக் கலையில் கட்டினார்.

இரண்டு வருடங்களில் பணி முடிக்கப்பட்டு 1905ம் வருடம் மார்ச் 11ம் தேதி கவர்னர் லார்டு ஆம்ப்தில் திறந்து வைத்தார். பின்னர், 1914ல் மீண்டும் கட்டடம் விரிவுபடுத்தப்பட்டது. இதையும் ஒப்பந்ததாரர் மாசிலாமணி முதலியாரே செய்தார். இந்த சிவப்பு வண்ணக் கட்டடம்தான் இன்று கிண்டியில் இருக்கும் கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

அன்று இந்நிறுவனம் மத்திய தடுப்பூசிக் கிடங்கு, மாகாண நுண்ணுயிரியல் ஆய்வகம் மற்றும் பொது சுகாதார ஆய்வகம் என மூன்றுவிதமான பணிகளைச் செய்தது.இதற்கிடையே இந்தியாவில் காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்கள் பரவின. இதற்கான தடுப்பூசிகளைக் கண்டறிந்திருந்த முதல் நுண்ணுயிரியலாளர் வால்டெமர் ஹாஃப்கின் இதனை இந்தியாவில் வெற்றிகரமாகப் பரிசோதித்தார். இதன்பிறகு, இந்தத் தடுப்பூசிகளும் இங்கே உற்பத்தி செய்யப்பட்டன.

இந்நேரம் ஆணையர் கிங், The Cultivation of Animal Vaccine (1891), Plague Inspector’s Manual (1902), Sanitary Rules for the Prevention of Plague in Municipalities (1903) போன்ற நூல்களையும் எழுதியிருந்தார். இவர் 1906ல் இங்கிருந்து விடைபெற்றதும் கேப்டன் கிறிஸ்டோபர் என்பவர் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பின் 1917ம் வருடம் நியமிக்கப்பட்ட டாக்டர் கேசவபாய் என்பவரே இந்நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநர் ஆவார்.
இவர் காலத்தின்போது முதல் உலகப் போர் நடந்தது. அப்போது கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்த துணைநிலை ராணுவத்திற்கு இங்கிருந்து அதிகமான தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

மட்டுமல்ல, 1919ம் வருடம் இந்தியாவில் முதல் முறையாக தொற்றுக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் இங்கே அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ராணுவத்திற்கும் மக்களின் பயன்பாட்டிற்கும் அனுப்பப்பட்டன. தவிர, காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகளும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எளிய விலையில் கொடுக்கப்பட்டன.

இப்படியான நிறுவனம் சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இதனுடனே தண்ணீர் மற்றும் உணவுக்கான ஆய்வகங்களும் இருந்தன. பின்னர் இவை தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. கிங் நிறுவனமும் நோய் கண்டறியும் மருந்துகளான ஆன்டிெஜன், ஆன்டிசீரா தவிர வேறெந்த மருந்துகளையும் இப்போது உற்பத்தி செய்வதில்லை. மாறாக, இந்தியாவின் சிறந்ததொரு ஆய்வுக்கூடமாக மாறியிருக்கிறது.

இன்று இங்கே...

‘‘இது 134 வருஷங்களா இயங்கிட்டு வருகிற நிறுவனம். இன்னைக்கு நாங்க நோய் கண்டறிதல், ஆய்வு செய்தல், உற்பத்தி செய்தல், கல்வி வழங்கல் என்கிற நான்கு பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வருகிறோம்...’’ என்கிறார் கிங் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் குணசேகரன்.‘‘நோய் கண்டறிதல் துறையில் பாக்டீரியா ஆய்வு, நோய் எதிர்ப்பியல், வைரஸ் பற்றி ஆய்வு, உயிரியல் பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறை எனச் சில பிரிவுகள் உள்ளன.

இதில், வைரஸ் பற்றி ஆய்வு செய்யும் வைராலஜி துறையில் டெங்கு, சிக்கன்குனியா, தட்டம்மை, மூளைக்காய்ச்சல், ஃப்ளூ வைரஸ், பன்றிக்காய்ச்சல், போலியோ, ஜிகா, ஹெபடைட்டிஸ் உள்ளிட்ட 29 வகையான நோய்களுக்கு ஆய்வு செய்யப்படுகிறது. அதாவது அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இருந்து என்ன நோய் என்பதைக் கண்டறிய மாதிரிகள் வரும். அதைச் சரியாகக் கண்டறிந்து நாங்கள் ரிசல்ட் கொடுப்போம். அதற்கான மேம்பட்ட ஆய்வகங்கள் இங்கே உள்ளன.

அப்புறம், உயிரியல் பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறையின் வழியாக மருந்துகளும், ஊசிகளும் தரமானதா? என்பதை பரிசோதனை செய்கிறோம். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள், ஊசிகள் மட்டும் இதில் அடங்கும். தவிர, இந்தத் துறையே பன்னாட்டு தடுப்பு ஊசி மையத்தையும் கவனித்து வருகிறது.

அதாவது, சில வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்பது விதி. தமிழகத்தில் இங்கேயும், துறைமுகத்திலும் மட்டுமே இந்த ஊசி போடப்பட்டு வருகிறது. இந்த ஊசி போடும் மையமாக கிங் நிறுவனத்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அதனால், ஊசி போட்டதற்கான சான்றிதழும் இங்கே வழங்குவோம்.

மட்டுமல்ல, ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி போடுவதும் எங்கள் பணிதான். தவிர, வெளிநாடு செல்லும் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்தும் போட்டு வருகிறோம். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தேசிய போலியோ ஆய்வகமும் இங்கே செயல்பட்டு வருகின்றது.

அடுத்து, பாக்டீரியாலஜி துறை வழியாக டைபாய்டு போன்ற நோய்களுக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தத்துறையின் இன்னொரு முக்கியப் பணி வி.வி.ஐ.பிகள் வரும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகளை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிக்கை அளிப்பது.நோய் எதிர்ப்பியல் துறையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனுடன் தற்போது திசு வளர்ப்பு ஆய்வகமும் உள்ளது. திசுக்களை பதப்படுத்தி தேவைப்படுவோருக்கு வழங்குவோம். அப்புறம், பாம்புக்கடிக்கான எதிர்ப்பு மருந்தும் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றது.கல்வியைப் பொறுத்தவரை டி.எம்.எல்.டி எனப்படும் (Diploma in Medical Laboratory Technology) இரண்டு வருட கோர்ஸ் நடத்துகிறோம். இப்போது 45 பேர் படிக்கிறார்கள். தவிர, தேர்வு வாரியமாகவும் இந்த நிறுவனம் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பாராமெடிக்கல் கோர்ஸுக்கு தேர்வு நடத்தி சான்றிதழ் கொடுப்பதும் எங்கள் நிறுவனத்தின் பணிகளில் ஒன்று.அடுத்து, M.Sc. Molecular Virology என்ற கோர்ஸ் இங்கே மட்டுமே உள்ளது.  இவையெல்லாம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது...’’ என்கிறார் டாக்டர் குணசேகரன் நிறைவாக!

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா