பகவான் - 6கற்பிக்க முடியாது! கற்கத்தான் முடியும்!!

ரஜனீஷை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த அவரது தாய்வழி பாட்டனார் திடீரென காலமானார்.இதனால் தன் ஏழாவது வயதில் பெற்றோருடன் வந்து இணைந்தார். காதர்வாரா என்கிற நகரத்தில் சிறிய அளவில் ஜவுளித்தொழில் நடத்தி வந்தார் ரஜனீஷின் அப்பா.
அதுவரை தன்னுடைய மகனை பள்ளிக்கே அனுப்பாத மாமனாரை நொந்துகொண்டு, முதல் வேலையாக அங்கிருக்கும் ஆரம்பப்பள்ளியில் ரஜனீஷைக் கொண்டு சேர்த்தார்.

பள்ளிக்குப் போன ரஜனீஷுக்கு அங்கே, தான் கற்பதற்கு எதுவுமே இல்லையென்று தோன்றியது.எழுத்தையும், எண்களையும், பெயர்களையும், வருடங்களையும், சம்பவங்களையும் மனப்பாடம் செய்வதின் மூலம் என்ன அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்? குழம்பினார்.

பள்ளியில் போதிக்கப்படும் கல்வியே அர்த்தமற்றது என்று கருதினார்.எனவே, பள்ளிக்குச் செல்லாமல் இருக்க புதிய புதிய காரணங்களைத் தேடினார்.ஆசிரியர்கள், தன்னை தேவையே இல்லாமல் அடிப்பதாக பொய் சொன்னார். ரஜனீஷின் பேச்சைக் கேட்டு அவரது சித்தப்பா பள்ளிக்குப் போய் சண்டை போட்டு அவமானப்பட்டுத் திரும்பினார்.

இப்படியே இரண்டு ஆண்டு காலம் போனது. ரஜனீஷுக்கு பள்ளிக்கூடம் கசக்கிறது என்பதை பெற்றோர் உணர்ந்தார்கள். தன்னோடு வந்து ஜவுளித்தொழிலைக் கற்றுக் கொள்ளுமாறு அப்பா வற்புறுத்தத் தொடங்கினார்.“எனக்குப் பின்பாக நீதானே இந்தத் தொழிலை எடுத்து நடத்த வேண்டும்? இந்தக் குடும்பத்தை நீதானே காப்பாற்ற வேண்டும்?”“நான் சராசரி மனிதன் கிடையாது அப்பா. என்னை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்...” என்று வாதிட்டார் ரஜனீஷ்.

சும்மா இருப்பது பெரும் ஞானமென்றும், அது ஞானிகளுக்கே உரித்தான குணமென்றும் ரஜனீஷ் வாதாடினார். கிராமப் பின்னணியில் வளர்ந்த அவருடைய அப்பா, ரஜனீஷ் பேசக்கூடிய ஞானம் போன்ற உயர்ந்த மதிப்பீடுகளைப் புரிந்துகொள்ள இயலாமல் திணறினார்.

குச்வாடாவில் ஓர் அழகான ஏரி கிடைத்ததைப் போல காதர்வாராவில் அமைதியும், இயற்கைப் பேரெழிலும் வாய்ந்த ஓர் ஆறு, ரஜனீஷுக்கு ஞானக்களமாய் அமைந்தது.பெரும்பாலான பொழுதுகளை ஆற்றங்கரையிலேயே கழிக்க ஆரம்பித்தார்.அதிகாலையிலேயே எழுந்து ஆற்றுக்குச் சென்று விடுவார்.

சமவெளியில் அமைந்த அந்த ஆறு ஓடுவதே தெரியாது. அதன் இருகரைகளும் செடி, கொடி, மரங்களோடு பசுமையாக இருக்கும். புள்ளினங்கள் இனிமையாக கீதம் இசைக்கும். விடியலில் அச்சூழல் கொடுக்கக்கூடிய ரம்மியத்தை ரஜனீஷ் வெகுவாக ரசித்தார்.

எப்போதும் ஆற்றங்கரையிலேயே நாளைக் கழிக்கும் அண்ணன் மகனை அவரது சித்தப்பா ஆரம்பத்தில் கவலையோடு பார்த்தார். ஆறோடு அவனால் உரையாட முடிகிறது என்பதை ஆச்சரியத்தோடு உணர்ந்தார்.எனவே, நன்கு நீச்சல் தெரிந்த ஒருவரிடம், “ரஜனீஷுக்கு நீச்சல் கற்றுக் கொடுங்கள்...” என்று கேட்டுக் கொண்டார்.

ரஜனீஷுக்கு நீச்சல் கற்றுக் கொள்வதிலும் ஆரம்பத்தில் பெரிய ஆர்வமில்லை. “நீச்சல் என்றால் என்ன?” வழக்கம்போல கேள்வி கேட்டார்.“மனதுக்கு தியானம் போல உடலுக்கு நீச்சல்!” அந்தப் பயிற்சியாளர் சொன்ன பதில், ரஜனீஷை மிகவும் கவர்ந்தது. நீச்சலும் ஒருவகையில் தியானம்தான் என்பதை அறிந்தார். அதன் பிறகு ஆர்வத்தோடு பயிற்சிக்குப் போனார்.

“நீச்சலை யாரும் கற்றுக் கொடுக்க முடியாது. அதை கற்க மட்டும்தான் முடியும்...” பயிற்சியாளர் சொன்னார்.“எப்படி?” ரஜனீஷ் எதிர்க்கேள்வி கேட்க, பதில் சொல்லாமல் அவரை அப்படியே அலாக்காகத் தூக்கி ஆற்றில் ஆழமான பகுதியில் எறிந்தார் பயிற்சியாளர்.
திடீரென சில நொடிகளில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் இருந்து ரஜனீஷால் மீளமுடியவில்லை. நீரில் மூழ்கத் தொடங்கினார். நீருக்கு அடியிலிருந்த ஆற்றின் போக்கும் அவரை அடித்துச் செல்லத் தொடங்கியது.

கை, காலை அசைத்து மேலே வர முயன்றார். நீரை காலால் உதைத்து, கைகளால் விலக்கி தலையை நீர்ப்பரப்புக்கு மேலே தூக்கினார். கரையிலிருந்து கை கட்டியபடி பயிற்சியாளர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததுமே கை, கால் அசைப்பதை நிறுத்தினார். தன்னை அவர் நீந்திக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை.ஆனால், அவரோ அப்படியே சிலை மாதிரி நிற்க, ரஜனீஷ் மீண்டும் நீரில் மூழ்கினார். இரண்டாவது முறையும் தன் சொந்த முயற்சியால் மேலே வந்தார். மீண்டும் மூழ்கினார்.

பயிற்சியாளரை நம்பி பிரயோசனமில்லை என்பது புரிந்தது. ஒருமாதிரி சீரசைவில் கை, கால்களை அசைக்கும்போது தன்னுடைய உடல் வேகமாக நகர்வதை அறிந்துகொண்டார். ஒரே நேரத்தில் கை, கால் இரண்டையும் நீரில் உந்தி மேலெழுந்தால் நீர்ப்பரப்புக்கு வர முடிகிறது என்பதையும் தெரிந்து கொண்டார்.

மூன்றாவது முறையாக தலையை மேலே கொண்டுவந்து நன்கு மூச்சு வாங்கினார். அப்படியே பறவை காற்றை விலக்கி பறப்பதைப் போல, நீரை கைகளால் விலக்கி, காலை உந்தி கரைக்கு வந்து சேர்ந்தார்.

“இவ்வளவுதான் நீச்சல். நான் சொல்லிக் கொடுக்கவில்லை. நீ கற்றுகொண்டாய். இதில் மேலதிகமாக நானறிந்த சில நுணுக்கங்களை மட்டும் செய்து காட்டுகிறேன். அதுவும் உனக்கு நான் போதிப்பது அல்ல. எனக்குத் தெரிந்தவற்றை உன்னோடு பகிர்வதுதான்!” சொல்லிவிட்டு, அந்தப் பயிற்சியாளர் நீரில் பாய்ந்தார்.

அவரை ரஜனீஷ் உன்னிப்பாக கவனித்தார். உள்நீச்சல், மேல்நீச்சல், கை காலை அசைக்காமல் நீரில் மிதப்பது உள்ளிட்ட வித்தைகளைக் கற்றுக் கொண்டார்.பள்ளிக்கூடத்தில் கல்வியும் இப்படிச் செயல்முறையின் மூலம் போதிக்கப்பட்டால் எண்ணற்றவர்களுக்கு அறிவொளி கிடைக்குமே என்கிற எண்ணம்தான் ரஜனீஷுக்கு உடனடியாகத் தோன்றியது.

அன்றிலிருந்து ஆறு அவருக்கு மிகவும் நெருங்கிய தோழனாக மாறியது. எந்நேரமும் ஆற்றோடு அவர் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார். இரவிலும் கூட ஆற்றோடுதான் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பார்.இரவு வேளைகளில் திடீர் திடீரென தன்னுடைய டீன் ஏஜ் மகன் கிளம்பி எங்கோ வெளியில் போவதும், விடிந்தபின் வருவதும் ரஜனீஷின் தாயாருக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்தியது. சாடைமாடையாக விசாரித்தார்.

‘இரவு முழுக்க ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று உண்மையைச் சொன்னால், தன் மனநிலையை சந்தேகப் படுவார்களோ என்று நினைத்து, “சினிமாவுக்கு போகிறேன்...” என்று பொய் சொல்வார்.அந்த ஊரில் ஒரு சிறிய டெண்டு கொட்டகை இருந்தது. இரவுக்காட்சி ஒன்பதரை மணியளவில் தொடங்கும். பகல் முழுக்க அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் ஜவுளி விற்று அலுத்தவர்கள், இரவில் சினிமா பார்த்து ஓய்வெடுப்பது வழக்கம்.

அப்போதெல்லாம் வெளிவந்த திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். படமே மூன்று, மூன்றரை மணி நேரம் ஓடும். சிறிய நகரம் என்பதால் அடிக்கடி மின்தடையும் ஏற்படும். எனவே ஒரு படம் நாலு முதல் ஐந்து மணி நேரம் ஓடுவது சகஜம்.

ஓர் இளைஞன் சினிமாவுக்குப் போகிறேன் என்று சொன்னால் அது பெற்றோரால் அனுமதிக்கப்பட்டது. ஆற்றுக்குப் போய் நீந்துகிறேன், தியானம் செய்கிறேன் என்று சொன்னால் பீதியடைந்தார்கள்! எனவேதான் அம்மாவிடம் பொய் சொன்னார் ரஜனீஷ்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தபோது ஒட்டுமொத்த உலகமே அதிர்ச்சியடைந்தது. இந்திய தேசமே கண்ணீரில் மூழ்கியது.பதினேழு வயது ரஜனீஷுக்கும் அந்த சோகம் தாங்க முடியாததாக அமைந்தது. மகாத்மாவின் இழப்பை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ‘அந்த பெரும் சோகத்தை அந்த ஆற்றில் நீந்தியும், கரையில் தியானமிருந்துமே கடந்தேன்...’ என்று பின்னாளில் தன்னுடைய சீடர்களிடம் சொன்னார்.

(தரிசனம் தருவார்)

சும்மா இருப்பது எப்படி ஞானமாகும்?

இந்தக் கேள்வி ஓஷோவிடம் கேட்கப்பட்டது. ஏனெனில் அவரிடம் ஆசிரமம் தொடர்பாக எந்தப் பிரச்னையைக் கொண்டு சென்றாலும் எடுத்தவுடனேயே, “கொஞ்ச நேரம் சும்மா இரு...” என்பார்.அதற்குப் பதிலாக புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதையைச் சொன்னார் ஓஷோ.
புத்தரும், அவரது சீடர் ஆனந்தாவும் ஒரு காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட தூரம் நடந்ததால் புத்தருக்கு தாகம் எடுக்கிறது. ஆனந்தா, தண்ணீர் தேடி அலைகிறார்.

ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார்.யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி, குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார்.“எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும்...” என்று குழந்தை மாதிரி புத்தர் அடம் பிடித்தார்.

ஆனந்தாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கொஞ்சம் கோபத்துடனேயே மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார்.நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார்.

குட்டைத் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளியும் அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் வெளேரென்று தெளிந்தது. இதைக் கண்டுகொண்டிருந்த ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது.

குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர், அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார்.“மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும்.

என் மனதைத் தெளியவைக்கும் சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்!” என்றார்.புத்தர் புன்னகைத்தார்.இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, “எந்தவொரு பிரச்னை மனதை அலைக்கழித்தாலும், குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல, மனம் தெளிவடைய சும்மா காத்திருப்பது ஞானமா இல்லையா?” என்று திருப்பிக் கேட்டார் ஓஷோ.

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்