சித்து விளையாட்டு - 7



எல்லா மதக் கடவுள்களோடும் போலிகள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்!

இந்தப் போலிகளுக்கு மத்தியில்தான் நேர்மையை உரமாக்கி உண்மையிலேயே தங்க பஸ்பம் போல தரமான மருந்துகளை உற்பத்தி செய்துகொண்டிருக்கிற, அரசால் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடிகளும், புதிதாகப் பட்டம் படித்து வெளியேறியவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
“நேர்மையான மருத்துவர்கள் பலர் இந்த போலிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்துவிட்டு மனம் புழுங்கி இந்தத் துறையை விட்டே அகன்று கொண்டிருக்கின்றனர். இங்கே ஒரே நோய்க்கான மருந்து பதினைந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஐம்பது ரூபாய்க்கும் கிடைக்கிறது.

எந்தவித முறைப்படுத்தல்களும் இல்லாத துறையாக இது மாறிவிட்டது. அதில் போலிகளே பெரும்பாலும் ஊடுருவி தங்களது மருந்தை சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் கண்டு வெறுத்துப் போகும் நல்ல மருத்துவர்கள் பலர் போட்டியிட முடியாமல் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர். போலிகள் ஆடி கார்களில் போகும்போது அசலானவர்கள் சொற்பமான வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். நடவடிக்கை எடுக்க நினைக்கும் நேர்மையானவர்களையும் அரசியல்வாதிகள் பந்தாடுகின்றனர்.

மற்ற எந்தத் துறையைக் காட்டிலும் அதிக லஞ்சப் பணம் புழங்கும் துறை என்பதால் அவர்களுக்குள் அறிவிக்கப்படாத கூட்டு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்...” என்கிறார் இத்துறையில் இருக்கும் நேர்மையான சித்த மருத்துவர் ஒருத்தர். “என்னுடைய குழந்தைகளுக்கு ஜலதோசம், தலைவலி வந்தால்கூட மெடிக்கலில் போய் எந்தவித சித்த மருத்துவ மருந்துகளையும் வாங்க பயமாக இருக்கிறது. நானேதான் தயாரித்துக் கொடுக்க வேண்டும்...” என்கிறார் இன்னொரு மருத்துவர்.

மக்களைப் பொறுத்தவரை அலோபதி மருத்துவத்திற்கு மாற்றான, ஆயுர்வேத, சித்த மருத்துவ முறை என்றாலே கேள்வியே கேட்காத, அசைக்க முடியாத நம்பிக்கை உடனடியாகத் தோன்றி விடுகிறது. போலிகள் பெரும்பாலும் எல்லா மதக் கடவுள்களோடும் தங்களை ஐக்கியப்படுத்தி அடையாளப் படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் மட்டும் மதமாச்சரியங்கள் சுத்தமாக இல்லை.

பார்க்கிற பெரும்பாலானவர்கள் காவியுடுத்தி வெண் தாடியோடு வளய வருவதால், இந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியும் விடுகிறது. இறை மருத்துவரின் விளம்பரத்தையே பாருங்கள். கோயிலுக்குள் நுழைந்தமாதிரி இருக்கிறது. ஏதோ அருள்வாக்கு சொல்கிறவரைப் போல அவர் மேடையில் அமர்ந்திருக்கிறார். சாரை சாரையாக மக்கள் ஓடி வந்து அவருடைய கால்களில் விழுந்து அவற்றை முத்தமிடுகின்றனர்.

ஒரு முறை உத்தரப் பிரதேசத்தில் இதுமாதிரி ஆபரேஷன் பண்ணும் மருத்துவர் ஒருத்தரை வலையில் சிக்க வைக்கப் போனோம். அஸ்லம் பாபா என்பது அவருடைய பெயர். நடை உடை பாவனைகள் எல்லாமும் ஷீரடி சாய்பாபாவைப் போலவே அமைத்துக் கொண்டிருப்பார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களை உடைய பக்தர்கள் அவரிடம் வருவார்கள்.

உதாரணத்திற்கு, இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர் ஒருத்தர் வருவார். இவர் மந்திரங்களை ஓதியபடி அவரது நெஞ்சில் கைவைத்து அழுத்தி ஒரு சதைத் துண்டை எடுத்து வெளியே போடுவார். பிறகு பக்கத்தில் இருக்கிற இரும்பு நாற்காலியைத் தூக்கி நோயாளியின் தலையில் அடிப்பார்.

நோயாளியின் நெஞ்சில் ரத்தக் கறை இருக்கும். ஆனால், கீறலோ காயங்களோ இருக்காது. ஏன் என்றால், ஓங்கியடித்த தெய்வ அடியில் அறுவை சிகிச்சை செய்த கீறல்கள் மாந்திரீகத் தன்மையுடன் தானாகவே ஒட்டிக் கொள்ளுமாம்!

‘உனக்கு எல்லாம் சரியாகி விட்டது, போ’ என்பதைப் போல ஒரு சைகை காட்டுவார். தட்சணையை வைத்து விட்டு வெளியேறி விட வேண்டும். அதுதான் அவருடைய தெய்வீக சக்தி என அந்த மக்கள் நம்பினார்கள். ஒருநாளைக்கு குறைந்தது ஆயிரம் பேர் அந்த பாபாவைத் தேடி வருவார்கள். அந்த பாபாவின் இடத்திற்கு சிறப்பு பேருந்துகளை அந்த மாநில அரசாங்கம் இயக்கிக் கொண்டிருந்தது.

ஏதோ சரடு விடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இணையத்தில் அஸ்லம் பாபாவைத் தேடிப் பாருங்கள். அத்தனை தகவல்களும் இருக்கின்றன. போலி மருத்துவர் அவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட அந்த இடத்திற்கு என் நண்பரும் டாக் ஷோ ஒன்றின் இயக்குநருமான சாய்ராம் தலைமையிலான குழுவினர் நேரில் போய் பொறியில் சிக்க வைத்தார்கள் அந்த போலி பாபாவை.

அவர் காலுக்கடியில் மறைத்து வைத்திருந்த வேறு விலங்குகளின் சதைத் துண்டுகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எடுத்து நெஞ்சில் இருந்து எடுப்பதைப் போல கண்கட்டி வித்தை காட்டிக் கொண்டிருந்ததை ஆதார பூர்வமாக தங்கள் நிகழ்ச்சியில் நிரூபித்தார்கள். சம்மணமிட்டு அமர்ந்திருந்த அவருடைய காலுக்கடியில் இருந்து சதைத் துண்டுகளை எடுத்து நெஞ்சில் வைப்பதை வட்டம் போட்டுக் காட்டி ஒளிபரப்பினோம்.

கல்வியறிவு குறைந்த உத்தரப் பிரதேசம் அது என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். தெருவிற்குத் தெரு படித்தவர்கள் இருப்பதாகச் சொல்லப்
படுகிற நாம் வாழும் தமிழ்நாட்டிற்கு என்னதான் ஆயிற்று? ஒரே போலிச் சாம்பலும் புகை மண்டலமும்.

காலம் முழுக்க மக்கள் இந்த மாதிரியான விஷயங்களில் முட்டாளாகத்தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கிறார்கள். எந்த விஷயத்திலும் உண்மைகள் மக்களிடம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்று நினைக்கும் பொறுப்பான மனிதர்கள் இருக்கிற வரை அவர்களும் பாவம் என்னதான் செய்வார்கள்? மக்கள் நலன் காக்கும் அமைப்புகள் அடையாளம் காட்டாவிட்டால், போலிகளை மக்களால் எப்படிக் கண்டறிய இயலும்? கல்லீரல் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எல்லாம் மக்களால் செய்ய முடியாதே?

கோவையில் இப்படி ஒரு பெண் அந்த இறை மருத்துவர் தந்த மருந்தால் செத்துப் போன வழக்கு இதுவரை என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர் மட்டுமா என்ன? தொலைக்காட்சிகளில் தோன்றாமலேயே இதுபோல தாடி பக்கத்தில் ஒரு லேடி என பல நூறுபேர் இந்த போலிச் சந்தையில் பெருகி விட்டனர். இவர்களை எப்படிக் களையெடுப்பது?

(போலிகளை துகிலுரிப்போம்)

- சரவணன் சந்திரன்