3F எனக்கு ரொம்பப் பிடிக்கும்!



துள்ளும் இளமையும் தூண்டில் கண்களும் ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்பெஷல். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களின் சாய்ஸில் இப்போது இந்த பஞ்சாப் கோதுமை மினுமினுக்கிறது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் டவுன்லோட் ஆகியிருக்கும் ரகுலின் மீது தெறித்து விழுகிறது சென்னை மீதான காதல்.   

‘‘அப்பா, அம்மா பெயர்களைச் சேர்த்துதான் rakulனு பேரு வச்சிருக்கேன். அதாவது ra-னா அம்மாவோட பெயர். kul-னா அப்பாவோட பெயர். ஓகேவா..?’’ கண்ணடிக்கும் ரகுலின் குடும்பம் இராணுவக் குடும்பம்.‘‘ஆர்மி ஃபேமிலினே சொல்லலாம். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம். பூர்வீகம் பஞ்சாபினாலும் வளர்ந்தது தில்லில. ஸ்கூல் டேஸ்ல வீட்ல கட்டுப்பாடு அதிகம். அதேநேரம் நான் சினிமாவுக்கு வருவதை தடுக்கவும் இல்ல.
ஸ்கூல் மதியம் 3 மணிக்கு முடியும். உடனே வீட்டுக்கு வந்துடுவேன். நைட் 7 வரைக்கும் டைட்டா இருக்கும்.

அரைமணிநேரம் ஸ்கூல் ஹோம் ஒர்க். அப்புறம் டான்ஸ் கிளாஸ், பேட்மின்டன், ஹார்ஸ் ரைடிங்னு ஏதாவது ஒரு கோர்ஸ்ல என்னை பிசியாக்கிடுவாங்க! இப்படித்தான் கராத்தேல ப்ளூ பெல்ட் வாங்கினேன்!’’ என்றவர் தன் 16வது வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
‘‘காலேஜ் டைம்ல கன்னடப் பட வாய்ப்பு வந்தது. தமிழ்ல வந்த ‘7ஜி ரெயின்போ காலனி’யோட ரீமேக் அது. முதல் நாள் கேமரா முன்னாடி நின்னப்ப கொஞ்சமும் நர்வஸ் ஆகல. சின்னவயசுல இருந்தே பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ்னு இருந்ததால அப்படி இயல்பா இருக்க முடிஞ்சது. எனக்காகவே படத்தோட க்ளைமாக்ஸை மாத்தினாங்க!

கன்னடப் படம் முடிஞ்சதும் காலேஜ் போயிட்டேன். அழகிப் போட்டில கலந்துக்கிட்டேன். மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ், பியூட்டிஃபுல் ஸ்மைல், ஃப்ரெஷ் ஃபேஸ்னு நிறைய பட்டங்கள் கிடைச்சது!தென்னிந்தியா மிகப் பெரிய சினிமா இண்டஸ்டிரினு அப்ப தெரியாது! தெலுங்கு ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ல நடிச்சப்பதான் இது புரிஞ்சுது...’’ ரசனையாக புன்னகைக்கும் ரகுல், ஒரு கோல்ஃப் சாம்பியன்.

‘‘யெஸ். நான் கம்ப்ளீட்லி ஸ்போர்ட்ஸ் கேர்ள். பேட்மின்டன், ஃபுட்பால், கிரிக்கெட்னு எல்லாத்தையும் முறையா கத்துக்கிட்டு விளையாடியிருக்கேன். அப்பாவுக்கு கோல்ஃப் ரொம்பப் பிடிக்கும். ‘நீயும் விளையாடு’னு சொன்னப்ப ‘அதெல்லாம் பெரியவங்க கேம். வயசானங்கதான் விளையாடுவாங்க’னு சொன்னேன்.

‘முதல்ல நீ அதைக் கத்துக்க. அப்புறம் உன் கருத்தை சொல்லு’னு தலையைக் கோதி கோல்ஃபை அறிமுகப்படுத்தினார். கப்புனு அதைப் பிடிச்சுகிட்டேன். ப்ளஸ் 2 படிக்கிறப்ப நேஷனல் லெவல்ல கோல்ஃப்போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சிருக்கேன்! நடிகையானபிறகு அவுட்டோர் கேம்ஸ் குறைஞ்சிடுச்சு. ஃபிட்னஸ்ல கவனம் செலுத்தறேன்...’’ தோளைக் குலுக்கும் ரகுல், F45 என்ற பெயரில் மூன்று ஜிம்களை சொந்தமாக வைத்திருக்கிறார்.

‘‘லைஃப்ல மூணு ‘F’’ ரொம்பப் பிடிக்கும். ஃபிலிம், ஃபிட்னஸ், ஃபுட்! தினமும் காலைல முக்கால் மணிநேரம் ஜிம் ஒர்க் அவுட் பண்ணுவேன். அந்த நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷா இருக்கும். ஆஸ்திரேலியால இருக்கிற ஒரு ஜிம்முக்கு ஃபிரான்ஸிசி எடுத்திருக்கேன். முதல் கிளையை ஹைதராபாத்துல தொடங்கினேன். அடுத்து வைசாக். ராணாவும், அகிலும் அதை திறந்துவச்சாங்க. மூணாவது கிளையை திரும்பவும் ஹைதராபாத்துலயே ஓபன் பண்ணியிருக்கேன். சாதாரண மக்களும் இங்க வரலாம். அதுக்கு தகுந்த மாதிரிதான் பேமன்ட் ஃபிக்ஸ் செய்திருக்கோம்...’’ என்ற ரகுலுக்கு ஹீரோயின் ஓரியன்டட் படங்கள் என்றால் அலர்ஜியாம்.

‘‘ஒரு படத்தை படமாதான் பார்க்கறேன். ஸ்கிரிப்ட்னா ஸ்கிரிப்ட்தான். இந்தில கங்கணா, வித்யா பாலன், தமிழ்ல நயன்தாரா, த்ரிஷாவுக்கு அப்படி கதைகள் பொருந்துது. பண்றாங்க. கலக்கறாங்க.  ஹீரோ, வில்லன்னு எல்லாரும் இருக்கற படங்கள்ல ஸ்கோர் பண்ணவே விரும்பறேன். முழுக்கதையையும் நானே சுமக்கிற மாதிரி ஸ்கிரிப்ட் வந்தா... வெல்கம். பண்ண முயற்சிப்பேன்.

மத்தபடி யாரையும் போட்டியா நினைப்பதில்லை. Your game is yours. என்னை விட இன்னொருத்தர் நல்லா டான்ஸ் ஆடினா, பொறாமைப்பட மாட்டேன். அது மாதிரி ஆடத்தான் முயற்சி செய்வேன்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

படங்கள்: நன்றி ‘Maxim’

டாப் - 5

* ரகுல் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘you know... you know..!’
* ஃபேவரிட் கலர் ப்யூர் வொயிட்.
* இந்தியாவில் பிடித்த weekend ஸ்பாட், கோவா.
* ரகுலின் ஹேண்ட்பேக்கில் dry fruits and nuts பாக்ஸ் ஒன்று எப்போதும் இருக்கும்.
* ரகுலுக்கு பிடிக்காத வார்த்தை diet. ‘Eat healthy’ என்பது அவர் பாலிசி.

மை.பாரதிராஜா