‘ஒரு கல்யாண மண்டபத்தை கட்டிப் போட்டுட்டு இருங்க...’னு அட்வைஸ் கொடுத்தது ரஜினிதான்!



‘பசி’ துரை Open Talk

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் ‘பசி’ துரை. மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞன். ‘அவளும் பெண்தானே’, ‘பசி’, ‘கிளிஞ்சல்கள்’ மாதிரியான படங்களைக் கொடுத்துவிட்டு இப்போது திருநின்றவூரில் கலைமாமணி துரை திருமண மண்டபத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இனி அவர்...

எனக்கு எப்படி சினிமா ஆசை வந்ததுன்னு தெரியலை. எனக்கு முன்பாக குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்ததும் கிடையாது. வெளியாகும் ஒவ்வொரு படமும் என் பார்வையிலிருந்து தப்பாது.

டைரக்டர் யோகானந்தை அவரது குடும்ப டாக்டர் மூலமாக சந்தித்தேன். சினிமாவின் அத்தனை பக்கங்களையும் அவர் தெரிந்துகொள்ளச் சொன்னார். சவுண்ட் எஞ்சினீயராய் ஆரம்பித்து, எடிட்டிங் வரை இந்த துரை வேலை செய்யாத துறையே கிடையாது. எனக்குத் தியேட்டரில் ஆபரேட்டராக வேலை செய்யக்கூடத் தெரியும்.

நடிகர் கல்யாண்குமார் என்னை ஜி.வி.அய்யரிடம் சேர்த்துவிட்டார். மிக முக்கியமான படங்களை எடுத்து கன்னட சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் அவர். உதவி இயக்குநராக இருக்கும்போது என் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு பண்டரிபாய் ஒரு படம் இயக்கச் சொன்னார். ‘அவளும் பெண்தானே’ என்ற அந்தப் படம் 100 நாட்கள் ஓடியது.

பெண்கள், அவர்கள் குடும்பங்களில் படுகிற தீராத அவஸ்தை, வறியவர்களின் வாழ்க்கையை என் படங்களில் மிகையில்லாமல் முன்வைத்தேன். இப்போது சீட்டில் உட்கார்ந்தால் நம் முகத்தில் ரத்தம் தெறிக்கிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனாலும் நிதானம் கடைப்பிடித்து, பொதுமக்களின் நலன் கருதி எங்கள் காலத்து சினிமா இருந்தது. ஒரு படத்திற்கு திரைக்கதைதான் முக்கியம். அது தெளிவாக இல்லாமல் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

சினிமாவில் கதை சுவாசம் மாதிரின்னா, திரைக்கதையை முதுகெலும்புன்னு சொல்லலாம். சில கதைகள் சொல்லும்போது அபாரமாக இருக்கும். அதையேபடமா எடுக்கும்போது ‘சொன்னமாதிரி இல்லையே படம்’னு கேட்பாங்க. அதுக்குக் காரணம் திரைக்கதை சரியில்லாததுதான்.

பார்வையாளர்களின் கவனத்தை முழுவதும் தனக்குள் கிரகித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் திரைக்கதையின் முதல் விதி. முதல் சில நிமிடங்களிலேயே மையப்பகுதியின் ஒரு இழையையாவது தொட்டுவிட வேண்டும். நான் எப்பவும் திரைக்கதையை செறிவூட்டவே அதிக நாட்கள் எடுத்துக்கொள்வேன். அப்புறம் படம் பிடிப்பது மிக மிக எளிய விஷயம்தான்.

50 படங்களின் அனுபவத்தில் இதே நிலைதான் எனக்கு இருந்திருக்கிறது. ஆனால், இப்போது சினிமா, ஹீரோ கையில் இருக்கிறது. அல்லது டைரக்டர் தன் பிடியில் வைத்திருக்கிறார். அல்லது இவர்கள் இருவரையும் மீறி தயாரிப்பாளர் வசம்தான் சினிமா இருக்கிறது.சில வருடங்களுக்கு முன்னால் கதை சொல்ல ஒரு ஹீரோவை அணுகினேன்.

அதுவே பெரும்பாடுபட்டுத்தான் நடந்தது. அப்புறம் அவரது உதவியாளர்தான் கதையைக் கேட்க முன்வந்தார். ‘நான் கேட்டாலே ஐயா கேட்ட மாதிரி’ என்றார். என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. தமிழ் சினிமாவின் இப்போதைய வினோதங்களில்் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் இப்படி ஒரு காட்சியை நினைத்துப்பார்க்கவே முடியாது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகளோடு நான் பழகியிருக்கிறேன். எனது ‘பசி’ படத்தைப் பார்த்துவிட்டு எம்ஜிஆர். ஆச்சரியப்பட்டுப் போனார். ‘துரை, எப்படிப்பா இப்படி எடுத்தே...’னு கேட்டுக்கிட்டே இருந்தார். அவர் உற்சாகமாவதைப் பார்த்த ஜானகி அம்மாள் என்கிட்டே வந்தார். ‘நல்லா கவனி. ஐயா ரொம்ப சந்தோஷமா இருக்கார். துரை இவ்வளவு அழகா ஒரு படம் எடுத்துட்டானேன்னு என்கிட்டே சொல்லிக்கிட்டே இருந்தார். உனக்கு வேணுங்கிறதைக் கேட்டுடு...’ என்றார்.

அவர் நல்லாயிருக்குன்னு சொன்னாலே ஆசீர்வாதம்தான். நான் அம்மா சொல்வதைக் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தேன். வாசலுக்கு வந்தோம். ‘துரை நல்ல படம் எடுத்திருக்கே... என்ன வேணுமோ கேள்...’ என்றார் எம்ஜிஆர். நான் ஜானகி அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அவர் ‘கேளு... கேளு...’ என்பதுபோல கண் ஜாடை காட்டினார். நான் கண்ணீர் பொங்க எம்ஜிஆரிடம் ‘அண்ணே... எனக்கு உங்களைக் கட்டி அணைக்கணும்போல இருக்கு. கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஒரு படம் எடுத்துக்கவா...’ என்றேன்.

‘பார்த்தாயா துரையை! அவன் அப்படித்தான்...’னு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவரை அணைத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அநேகம் பேருக்கு கிட்டாத வாய்ப்பு இது.நான் சில விஷயங்களையெல்லாம் பயப்படாமல் செய்திருக்கேன். ‘துணை’ படத்தின் கதையை எம்ஜிஆரிடம் சொன்னேன். அவர் ‘இதில் தம்பி சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும்...’ என்றார். இதைச் சொன்னதுமே ‘அண்ணனே சொல்லியாச்சா, போதும். நடிக்கிறேன்...’னு சொன்னார் நடிகர் திலகம்.

அதில் ஓர் இடத்தை மறக்கவே முடியாது. அவருக்கு வலிப்பு வருவது மாதிரி ஒரு சீன் விளக்கினேன். ‘நடிச்சுக் காட்டுப்பா...’ என்றார். ‘அண்ணே... என்மேல் கோபம் இருந்தால் நாலு அடி கொடுங்க. இப்படியெல்லாம் சொல்லாதீங்க...’ என்றேன். ‘டேய், என்னை ஓவர் ஆக்‌ஷன்னு சொல்றாங்கடா...’ எனச் சொல்லிவிட்டு ஒரே டேக்கில் நடித்து முடித்தார். கண்ணீர் நிறைந்த காட்சி அது. இப்போது நினைச்சாலும் அவர் நடித்த காட்சி அழகான புகைப்படம் மாதிரி மனதில் நிற்கிறது.

அதேமாதிரி ரஜினி. எப்பொழுது என்னைப் பார்த்தாலும் இயல்பாகப் பேசுவார். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஷூட்டிங் நடந்தபோது விடுதியில் ஒரேயொரு அறைதான் கிடைத்தது. ‘நீங்க உள்ளே இருங்க, நான் வராந்தாவில் இருக்கிறேன்...’ என்றேன். ஆனால், ஷூட்டிங் நடந்த அத்தனை நாட்களிலும் என்னுடன் ஒரே அறையில் தங்கினார் ரஜினி. அவரது நல்ல இயல்புதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது.

அப்பொழுதிலிருந்தே ரஜினியிடம் நேர்மையோடு பணிவும் இருந்தது. கிடைத்த ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தின் உறுதியை அவைதான் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அவரது படங்களை வைத்து மட்டுமே அவரது புகழ் என்பது உண்மையல்ல. அவரது பணிவும், இயல்புமே அவரைத் தாங்கி நிற்கிறது.‘சார்! ஜாக்கிரதையா இருங்க. இந்தப்பணம் கையிலே தங்காது. ஓடியே போயிடும். ஒரு கல்யாண மண்டபத்தை கட்டிப் போட்டுட்டு இருங்க...’ என்று எனக்கு சொன்னவர் அவர்தான். அவரது வார்த்தைப்படியே செய்தேன்.

கீழ்த்தளத்தில் சுபகாரியங்கள் நடக்கின்றன. மேல்தளத்–்தில் மனைவி, குழந்தைகளோடு வாழ்கிறேன். குழந்தைகள் திருமணமாகி சந்தோஷமாக இருக்கிறார்கள். மகள் சுனிதா ஆசிரியையாக இருக்கிறாள். மூத்த மகன் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இளைய மகன் பிரமோத் லண்டனில் பணிபுரிகிறான். அவர்கள் யாருக்கும் சினிமா விருப்பம் கிடையாது.

இந்த வாழ்வும் மொழியும் மிக எளிதாக தன்னை வைத்துக்கொண்டு இருக்கிறது. இதில் இன்னும் 100 படங்கள் என்னால் எடுக்க முடியும். அதற்கு எனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டும். ஆனாலும் என்ன... நான் எப்பொழுதும் சினிமாவிற்கான வண்ணக் கனவுகளோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

படங்கள் உதவி: ஞானம்

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்