தடை செய்யப்பட்ட இரு படங்களை திரையிட்ட பாகிஸ்தான்!பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதிகள் என்ற கருத்துதான் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அங்கே சுதந்திரமும் ஜனநாயகமும் இல்லை என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், இதையெல்லாம் தகர்த்து, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக மிளிர்கிறது பாகிஸ்தானின் இன்றைய அரசு.

ஆம்; ‘டைகர்ஸ்’, ‘வெர்னா’ என்ற தடைசெய்யப்பட்ட இரண்டு திரைப்படங்களை வெளியிட அனுமதியளித்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது! இத்தனைக்கும் அந்தப் படங்கள் பாகிஸ்தானின் அதிகார வர்க்கத்துக்கும், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கும் முற்றிலும் எதிரானது.

பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் சையது அமீர் ரஸா. தொண்ணூறுகளிலேயே ‘நெஸ்லே’ நிறுவனத்தில் புகழ்பெற்ற சேல்ஸ்மேன் அவர். தாய்ப்பாலுக்குப் பதிலாக ‘நெஸ்லே’யின் பால் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது சையதின் வேலை.

இதை நேரடியாகச் செய்யாமல் மருத்துவர்களின் மூலமாகவே செய்வது அவரின் ஸ்பெஷல். இதற்காக மருத்துவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தருவார். அதனால் மருத்துவர்களின் மத்தியில் சையதுக்குத் தனி மரியாதை. ஒரு நாள் வியாபார விஷயமாக மருத்துவரைப் பார்க்க கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மருத்துவர் அங்கில்லை. அதனால் சையது அங்கேயே கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் சையதை வலுக்கட்டாயமாக குழந்தைகளின் வார்டுக்கு அழைத்துப் போயுள்ளார். அங்கே குழந்தைகள் நோஞ்சானாகவும், கை, கால்கள் கோணலாகவும், படுத்த படுக்கையாகவும் இருப்பதைப் பார்த்து சையது அதிர்ச்சியடைகிறார்.
இதற்கெல்லாம் காரணம் ‘நெஸ்லே’யின் பால் பொருட்கள்தான் என்பது தெரிய வர நிலைகுலைந்து போகிறார். மனம் திருந்திய அவர் ‘நெஸ்லே’யின் வியாபார ரகசியத்தை ஊடகத்துக்கு வெளிப்படுத்த, பாகிஸ்தானே கொந்தளித்தது.

இந்தச் சம்பவத்தைக் கேள்விப்படுகிறார் போஸ்னிய இயக்குநர் டேனிஸ் டானோவிச். சிறந்த அயல் நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிய ‘நோ மேன்ஸ் லேண்டி’ன் இயக்குநர் இவர். இவ்வளவு நடந்த பிறகும் பாகிஸ்தானில் பால் பொருட்களின் விற்பனை குறையவில்லை. அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்பதை அறிகிறார் டேனிஸ். தான் அறிந்ததை உலகிற்குத் தெரிவிக்க அவர் இயக்கிய படமே ‘டைகர்ஸ்’.

ஆரம்பத்தில் பிபிசி நிறுவனம் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசும், ‘நெஸ்லே’ நிறுவனமும் வழக்குத் தொடுத்தால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால் பிபிசி பின்வாங்கிக் கொண்டது.

பிறகு சில இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்தது. ‘இமைக்கா நொடிகள்’ வில்லன் அனுராக் காஷ்யப்பும் படத்தை தயாரித்தவர்களில் ஒருவர். பாகிஸ்தானிய மருத்துவமனைகள் மற்றும் அங்கே உள்ள இடங்களில் ஷூட் செய்யப்பட்டதால் இப்படத்தை திரையிட பல நாடுகள் முன்வரவில்லை.

ஆனால், 2014ல் நடந்த டொரோண்டோ திரைப்பட விழாவில் ‘டைகர்ஸ்’ திரையிடப்பட்டு பெரும் அதிர்வைக் கிளப்பியது. இம்ரான் ஹாஸ்மி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். ‘நெஸ்லே’யைப் போலவே பல நிறுவனங்களும் உலக அளவில் உடல் ஆரோக்கியத்துக்குக் கேடுகளை விளைவிப்பதால் படத்தில் ‘நெஸ்லே’யின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் பாகிஸ்தானிலும் இந்தப் படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கதாபாத்திரங்களின் பெயர்களையும் மாற்றியிருக்கிறார்கள்.

அண்மையில் இப்படம் ஆன்லைனில் வெளியானது. பலரும் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகிஸ்தானில்தான் இப்படம் அதிகமாகப் பார்க்கப்பட்டது என்பதுதான் இதில் ஹைலைட்.பாகிஸ்தானின் அதிகார வர்க்கம் எப்படி பெண்களின் மீது அநீதிகளை நிகழ்த்துகிறது என்பதை ஆழமாகப் பேசுகிறது ‘வெர்னா’.

சாராவும், அவளது ஊனமுற்ற கணவனும் பூங்காவுக்குச் செல்கிறார்கள். அவர்களுடன் கணவனின் தங்கையும் சேர்ந்து கொள்கிறாள். மூவரும் பூங்காவில் மகிழ்ச்சியாக அரட்டையடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கார் அவர்கள் முன் வந்து நிற்கிறது.

கணவனின் தங்கையை அள்ளிப் போட்டுக்கொண்டு கார் பறந்துவிடுகிறது. காரைத் துரத்திச் செல்கிறாள் சாரா. ஆனால், கணவனின் தங்கையை அனுப்பிவிட்டு சாரா வை வன்புணர்வு செய்கிறான் ஒருவன். அவனே மூன்று நாட்கள் கழித்து சாராவை அவளது வீட்டிலேயே கொண்டுவந்து விடுகிறான்.

இதனால் சாராவின் குடும்பத்துக்குள் குழப்பம். கணவன் பிரிகிறான். சாராவின் தந்தை தற்கொலை செய்கிறார். தாய் அமெரிக்கா பயணமாகிறாள். சாரா தன்னை வன்புணர்வு செய்தவனை எதிர்த்து வழக்குத் தொடுக்கிறாள். அவன் கவர்னரின் மகன் என்பது சாராவுக்குத் தெரிய வருகின்றன.ஃப்ளாஷ்பேக்கில் காட்சிகள் விரிகின்றன.

கவர்னரின் கார் ஒரு தெருவைக் கடக்கும்போது ட்ராஃபிக் ஜாம் ஆகிறது. சாராவும், கணவனும், அவளின் நாத்தனாரும் அதில் சிக்கிக் கொள்கிறார்கள். சாரா கோபப்பட்டு அந்தக் காரில் கவர்னர் இருக்கிறார் என்பது தெரியாமல் சத்தம் போடுகிறாள். இந்தச் சம்பவத்தாலேயே சாரா வன்புணர்வுக்கு ஆளாகிறாள். இறுதியில் நீதி கிடைக்காத சாரா, தானே நீதிபதியாகி தன்னை வன்புணர்வு செய்தவனைத் தண்டிக்கிறாள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் ஓர் இளம் பெண்ணை இளைஞர் கூட்டம் ஒன்று கேலி செய்கிறது. அதை அவளின் அண்ணன் தட்டிக்கேட்கிறான். இதற்காக அந்த அண்ணன் கொலை செய்யப்படுகிறான். அந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அதிகாரப் பின்புலம் வாய்ந்தவர்கள். இந்த உண்மைச் சம்பவமே இந்தப் படத்துக்கான பின்னணி என்கிறார் இயக்குநர் சோயிப் மன்சூர்.

கடந்த வருடமே வெளியாக வேண்டிய படம். ஆனால், கவர்னரின் மகன் பாத்திரமும், வன்புணர்வு காட்சிகளும் இருந்ததால் பாகிஸ்தான் அரசு படத்தைத் தடை செய்தது. கடந்த வாரம் பாகிஸ்தான் அரசே ஒரு காட்சியையும் வெட்டாமல் அதே படத்தை வெளியிட அனுமதி கொடுத்திருப்பதுதான் ஹைலைட்.            

டி.ரஞ்சித்