கிறிஸ்துவ மத அமைப்புக்காக கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டு எதிர்ப்பு வந்ததும் ஏன் ரத்து செய்தீர்கள்?உளளம் திறக்கிறார் ஓ.எஸ்.அருண்

சங்கீதம் கற்றோம், சம்பாதித்தோம், புகழ் பெற்றோம், வசதிகளை பெருக்கிக் கொண்டோம் என்று சராசரி வித்வானாக வாழ்வை சுருக்கிக் கொள்ளாமல் அதற்கு மேல் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என மனதார நினைப்பவர் பாடகர் ஓ.எஸ்.அருண். கர்நாடக இசையை கடைக் கோடி மனிதனுக்கும் கொண்டு போக எண்ணுபவர்.

அண்மையில் ஜெர்மனியிலுள்ள ஓர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. அருணின் கச்சேரிகளுக்கு, குறிப்பாக பஜன்ஸுக்கு தமிழகம் தாண்டியும் பெரிய கூட்டமுண்டு!எதற்காக இந்த டாக்டர் பட்டம்?

‘யுனிவர்சிட்டி ஆஃப் பீஸ்’ என்ற ஜெர்மனியின் ‘அமைதி பல்கலைக்கழகத்தை’ச் சேர்ந்தவர்களிடம் என் இசையைப்பற்றியும், எனது அறக்கட்டளை மூலம் நடக்கும் நல்ல காரியங்கள் பற்றியும் சில நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் உறுதி செய்து கொண்டு என்னை அழைத்து கௌரவித்தார்கள்!

சில வாரங்களுக்கு முன் புதுச்சேரியில் இந்த விழா நடந்தது. எனக்கு கர்நாடக சங்கீதத்திற்காக இந்த மரியாதை என்றால் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிவரும் சின்னப் பொண்ணையும் அழைத்து கௌரவித்தனர். ஆர்ப்பாட்டமில்லாமல் நாம் செய்யும் விஷயங்களை யாரோ சிலர் கவனித்து மரியாதை செய்யறபோது மனது பூரிக்கிறது. மேலும் ஆர்வம் வருகிறது.

கர்நாடக சங்கீதக் கச்சேரிகளின் மூலம் மளமளவென்று மேலே வந்தவர் நீங்கள். ஏன் இப்போது பஜன்ஸ் கச்சேரிகளில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்?

நான் தில்லியிலிருந்து வந்து இங்கு நிரந்தரமா குடியேறின புதிதில் சாஸ்த்ரீய சங்கீத கச்சேரிகளைத்தான் நிறைய பண்ணேன். சென்னை மியூஸிக் அகடமியில் பாடின ஒரு கச்சேரிக்காக தங்கப் பதக்கம் கூட பெற்றேன். கிருஷ்ணகான சபாவில் கூட இப்படி வாங்கியிருக்கிறேன்.

இப்படியே போயிட்டிருந்தபோது ஒரு நாள் எனக்குள் ஒரு சிந்தனை. ஆத்ம விசாரணை. ‘எல்லாரும் பாடற காம்போதியையும், கல்யாணியையும் நாமும் பாடறோம். கூட்டம் வருது. காசும் வருது. கேட்டவர்கள்தான் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். பாமர மக்கள் நம்மோடு எந்தத் தொடர்பிலும் இல்லையே...’ என்ற ஏக்கம்!

இந்த சங்கீதத்தை அவர்களிடம் எடுத்துப் போக நினைச்சேன். அதே சமயம் மலிவாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமா இருந்தேன். சதாசிவ பிரம்மேந்திரா, மீரா, தியாகராஜர், அம்புஜம் கிருஷ்ணா, வடலூர் வள்ளலார் போன்ற மகான்களின் பாடல்களை பாடறபோது வல்லினம், மெல்லினம் புரிவது போல எளிமையா பாடணும் என்று இப்படி பஜன்ஸை தேர்ந்தெடுத்தேன்!

அப்படியானால் சங்கீதம் இரண்டாம் பட்சமா?

யார் சொன்னது? ராக லட்சணங்கள் முக்கியம். அதே சமயம் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கீதத்தில் என் மேதமையைக் காட்டிவிட்டு வார்த்தைகளை விழுங்கி விடக்கூடாது பாருங்கள். வரிகளில் இருக்கும் பக்தி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்த நினைத்தேன். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் உழைத்தேன்.

பஜனை பாடல்களும் ஒரு அமைப்புதானே... ‘சின்னச் சின்ன பதம் வைத்து, கண்ணா நீ வா...’ என்று அம்புஜம் கிருஷ்ணாவின் பாடலைப் பாடறபோது ராகத்தோடு, ஒவ்வொரு வார்த்தையும் உணர்ச்சியோடு ஒலிக்கும். சங்கீதமே தெரியாதவர் கூட உட்கார்ந்து கேட்பார்.
தெலுங்கு கீர்த்தனைகளைக் கூட இப்படி முறையாக பதம் பிரிச்சு எளிமையா பாடறேன். இதற்கு பெரிய வரவேற்பு. இதை கவனித்தே சிருங்கேரி மடம் என்னை ஆஸ்தான வித்வானாக்கியது!

சென்னையில் ஒரு கிறிஸ்துவ மத அமைப்புக்காக கச்சேரி செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டு விளம்பரங்களும் வந்துவிட்டன. இந்து அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தபோது ஏன் கச்சேரியை ரத்து செய்தீர்கள்? பயமா?

பயமெல்லாம் இல்லை. எதற்காக கச்சேரி செய்யப் போறோம்? பாடறவர், கேட்கறவர் இருவருக்கும் மன அமைதி, சந்தோஷத்திற்காகத்தானே! அரசியல் கூட்டத்தில் ஒரு சாரார் கொடி பிடித்து எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஓயாமல் பேசுவது போல ஒரு சங்கீதக்காரன் பாட முடியுமா?

இது தவம் போல செய்ய வேண்டியது! நாலு பேர் கலாட்டா செய்யும்போது, எப்படி சிரத்தையா பாட முடியும்? சங்கதிகள் வருமா? வீம்புக்கு பாட முடியுமா?

தவிர, சங்கீதம் என்பது ஏழு ஸ்வரங்கள்தான். அதில் ‘இந்து மத கடவுளைத்தான் பாடணும், இதைப் பாடக் கூடாது’ என்று நிபந்தனை விதிப்பது நியாயமா?

மியூஸிக் என் மொழி. நான் முத்துசுவாமி தீட்சிதரைப் பாடறேன். பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடறேன். கஸல்ஸ்கூட நிறைய என் கச்சேரிகளில் இருக்கும்! உடனே அது இஸ்லாமியர்கள் இசை எனச் சொல்லிவிட முடியுமா?

அயர்லாந்து நாட்டில் அவர்களது புகழ் பெற்ற ஒரு பாடலை நம் மோகனத்தில் பாடினேன். ஏற்கனவே அந்த சாயலில் இருந்தது அப்பாடல். கொரியன், ஜப்பானிய மொழிகளில் கூட பாடியிருக்கேன். மதம் பார்த்தா பாடறோம்? உலகில் எந்தப் பாடலை எடுத்தாலும் அந்த ராகம் நம் கர்நாடக சங்கீதத்தில் இருக்கே!

இன்னொன்று - இப்போது சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றையும் பரபரப்பாக்கி விடுகிறார்கள். வெறும் அக்கப்போர். ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அதையும் மக்கள் நம்புகிறார்கள். இது எங்களுக்கு பெரிய தர்மசங்கடம்!

ஒரு காலத்தில் செம்மங்குடி, அரியக்குடி, மதுரை மணி அய்யர், எம்.எஸ். என்று ஏராளமான ஜாம்பவான்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஓர் உன்னதமான பாணி இருந்தது. அப்படியொரு இசையைத் தந்தனர். இன்று நிறையபேர் நிறைய சம்பாதிக்கிறீர்கள். ஆனால் உங்கள் சங்கீதம் அவர்களைப் போன்று ஆழமாக இல்லை என்கிறார்களே..?

ஓல்டு ஈஸ் கோல்டு. அன்றைக்கு அதற்கேற்ற சூழ்நிலை இருந்தது. நூலு மணி நேரம் பாடினாலும் கேட்க கூட்டமிருந்தது. இன்று சபாவுக்கு வராமலேயே டிவி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆர அமர கேட்கலாம்.

பிரச்னையில்லை. மக்களுக்கு பொறுமையும் போய்விட்டது. ஆக, அவர்கள் மன நிலைக்கு ஏற்றபடி நாங்கள் இசையைத் தருகிறோம். அதற்காக இன்று ஆழமே இல்லாத பாட்டு என்பதை ஒப்புக் கொள்ளமாட்டேன். அசத்தல் கலைஞர்களை நானும் பட்டியலிடட்டுமா?

முப்பத்தைந்து வருட இசை வாழ்க்கை மன நிறைவைத் தந்துள்ளதா?

நிச்சயம். என் ‘ஆலாபனை அறக்கட்டளை’க்காக நேரம் கிடைக்கிறபோது கிராமம் கிராமமா போறது, பாடறது, உதவிகள் செய்யறது ஆறுதலான விஷயம். செங்கல்பட்டு, தஞ்சாவூரிலுள்ள கருவிழி, கொட்டிவாக்கம் இப்படி பல இடங்களில் உள்ள முதியோர் இல்லங்கள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், அனாதைக் காப்பகங்கள் என்று அங்கெல்லாம் செல்கிறபோது அவர்கள் கண்கலங்குவார்கள்.

நூற்றுக் கணக்கில் தட்டுகள், கோரைப் பாய்கள், உணவுப் பொருட்கள் என்று பலவற்றை வாங்கிப்போவோம். அங்கெல்லாம் ‘ரத்ன சங்கமம்’ என்ற தலைப்பில் கச்சேரியே நடத்துவோம். அதாவது பக்க  வாத்தியத்துடன்! செங்கல்பட்டில் ஒரு பையன் ‘திருவிளையாடல்’ படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா?’ பாடச் சொல்லிவிட்டு நான் பாடியவுடன் என்னைக் கட்டிக் கொண்ட போது பேச முடியாமல் திணறி விட்டேன்!

உங்கள் குடும்பம் பற்றி..?

மனைவி ஹேமலதா எம்.ஏ. மியூஸிக் படிச்சிருக்கார். இசை வகுப்பு எடுக்கிறார். இரண்டு பசங்கள் ஹர்ஷினி, அபிநவ் கிருஷ்ணா. படிக்கிறார்கள். என் சேவை உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடவே இருந்து உதவுபவர்கள்! ‘சாந்தமுலேக, சௌக்யமு லேது’ என்பார் தியாகராஜர் சாமா ராக கீர்த்தனையில். எங்கள் வீட்டில் சாந்தம், சௌக்யம் இரண்டும் உண்டு. வேறென்ன வேண்டும்?

வி.சந்திரசேகரன்

ஆ.வின்சென்ட் பால்