நியூஸ் வியூஸ்விபரீதமாகுது விர்ச்சுவல் விளையாட்டு!

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட் நம்மூருக்கு வந்தபோது, அது என்ன மாதிரியான ஊடகம் என்பது புரியாமல் நிறைய பேர் குழம்பினோம். வழக்கம்போல இதுவும் ஏதோ பணக்கார சொகுசு என்றுதான் பலரும் நம்பினோம். மிகக்குறுகிய காலத்தில் நம் அனைவரின் வாழ்க்கையையும் வளைத்துப் போட்டுவிட்டது இந்த வலை.

அதுவும் கம்ப்யூட்டரிலிருந்து மொபைல் போனுக்கும் இன்டர்நெட் விரிவடைந்த நிலையில் பயன்பாடுகளை விடவும், ‘பகீர்’ அதிர்ச்சிகளைத்தான் அதிகம் ஏற்படுத்துகிறது. நம்மில் ஏறத்தாழ எல்லோருக்குமே மூன்றாவது கையாக மாறிவிட்டது மொபைல் போன்.

கையில் போன் இல்லாவிட்டால் எதையோ இழந்துவிட்டது மாதிரியே படபடப்பாகிறோம். இன்றைய நிலையில் வாட்ஸப் இல்லாவிட்டால் பலருக்கும் வாழ்க்கையே வெறுத்துவிடும் போல. ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறோமோ இல்லையோ, ஸ்க்ரோல் செய்து லைக், கமெண்டுகள் போட்டே நேரத்தை தின்கிறோம்.

போதாக்குறைக்கு மியூசிக்கல்லி, டிக் டாக், டப்மாஷ் என்று பொழுதுபோக்கு appsகள் ஒட்டுமொத்த இளசுகளையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.சினிமாப் பாடல்களுக்கும், காமெடி வசனங்களுக்கும் கிராமம், நகரம் வித்தியாசமில்லாமல் அத்தனை பேரும் ஆக்டிங் கொடுத்து அதை வாட்ஸப்பில் பரப்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பொழுதுபோக்கு என்கிற எல்லை வரை சரி. அதையும் தாண்டி தங்களுடைய வீடியோவை வைரல் ஆக்குவதற்காக எந்த நிலைக்கும் இளைஞர்கள் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அதுபோல ‘டிக் டாக்’குக்கு மிமிக்ரி செய்த வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொள்ளும் வீடியோ காட்சி வெளிவந்து வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதைப் பார்க்கும்போதே நமக்கு ‘அய்யய்யோ’ என்று அடிவயிற்றில் பயம் கவ்வுகிறது.சமூகவலைத்தளங்களின் சக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்டவர்களை ‘ஃபோமோ’ உளவியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். நீங்களும் ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர், டிக் டாக், டப்மாஷ், மியூசிக்கல்லி உள்ளிட்ட ஏதோ ஒன்றுக்கு அடிமை என்றால் நீங்களும் ‘ஃபோமோ’தான்.அதென்ன ‘ஃபோமோ?’

Fear of missing out என்பதின் சுருக்கம்.“எல்லாருக்கும் ஒண்ணு தெரிஞ்சிருக்குன்னா, வைரல் ஆன ஒரு விஷயத்தை எல்லாரும் பார்த்துட்டாங்க. எனக்கு இன்னும் தெரியலை, நான் இன்னும் பார்க்கலை” என்கிற பதற்றம் இன்று பெரும்பாலானோருக்கு உருவாகியிருக்கிறது. யாருக்கோ தெரிந்த ஏதோ ஒரு விஷயம், உங்களுக்குத் தெரியவில்லை என்றால் உடனே ஒரு குற்றவுணர்ச்சி எழுகிறது. அது மனதை சோர்வடைய வைக்கிறது. அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறது. இதுதான் ஃபோமோ.

இது ஒன்றும் புதிய மேட்டரில்லை.அடுத்தாத்து அம்புஜத்துக்கு, அவாள் வீட்டு மாமா தீபாவளிக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாரா இல்லையா என்கிற தகவல் இன்னும் பட்டு மாமிக்கு கிடைக்கவில்லை. அதற்கு முன்பாக கிட்டு மாமா தனக்கு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டுமே என்ற பதற்றம் பட்டு மாமிக்கு ஏற்படுமில்லையா?குத்துமதிப்பாக இதைத்தான் ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் என்று நீளமாகவும் ‘ஃபோமோ’ என்று சுருக்கமாகவும் சொல்கிறார்கள்.

முன்பு எப்போதோ ஒரு பட்டு மாமிக்கு ஏற்பட்ட இந்த அச்சமும், பதற்றமும் சமூகவலைத்தள யுகத்தில் ஏராளமானோருக்கு எப்போதும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஸ்மார்ட்போன் வந்ததால் ஏற்பட்ட வினை. போதாக்குறைக்கு ‘ஜியோ’ போன்றவை தரும் அன்லிமிட்டெட் ஹைஸ்பீட் இன்டர்நெட் வசதி வேறு.

சமூகவலைத்தளங்களை எப்போதும் ஸ்க்ரோல் செய்துகொண்டே இருந்தாலும், நாம் பார்க்காத ஏதோ ஒரு வீடியோவை பக்கத்து டேபிள் பரமசிவம், லஞ்ச் டைமில் எல்லோருக்கும் போட்டுக் காட்டி சட்டென்று ஹீரோவாகித் தொலைக்கிறான்.பரமசிவத்துக்கு முன்பாக ஒரே ஒரு நாளாவது உலகத்துக்கு புதிய வீடியோ ஒன்றை வாட்ஸப்பில் ஆபீஸ் க்ரூப்பில் ஃபார்வேர்ட் செய்யவேண்டும் என்கிற கனவு நிறைவேறித் தொலைக்கவே மாட்டேன் என்கிறது.

இது மனநோயா?
ரொம்ப பெரிய வார்த்தை. மனச்சோர்வு என்று வேண்டுமானால் சொல்லலாம்.ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் பதினான்கு வயதிலிருந்து முப்பது வயதிற்குள் இருப்பவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் பேருக்கு ‘ஃபோமோ’ பிரச்சினை இருக்கிறது என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.குறிப்பாக நிறுவனங்களில் உயர்பதவி வகிப்பவர்களுக்குத்தான் இந்த ‘ஃபோமோ’ பிரச்சினை அதிகமாக இருக்கிறதாம்.

தொடர்ச்சியாக அலுவல்பூர்வமான மெயில்களை ‘செக்’ செய்துகொண்டே இருந்து பழக்கப்பட்டவர்கள், மெயில் வராத சந்தர்ப்பங்களில் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கப்போய் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

டீனேஜ் இளசுகளுக்கு தங்கள் செல்ஃபீகளுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ தளத்தில் எவ்வளவு ‘லைக்’ விழுகிறது, யார் யார் என்ன என்னவென்று ‘கமெண்ட்’ செய்திருக்கிறார்கள் என்பதை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையாவது தெரிந்துகொள்ளாவிட்டால் பதற்றம் ஏற்படுகிறது. ஏதேனும் ஒரு போட்டோவுக்கு ‘லைக்ஸ்’ குறைந்துவிட்டால், தன்னுடைய அழகு போய்விட்டதோ என்று பதற்றம் அடைகிறார்கள்.

‘வாட்ஸ் அப்’ க்ரூப்புகளில் தாங்கள் சொன்ன ‘குட்மார்னிங்’குக்கு எத்தனை பேர் ‘ரிப்ளை’ செய்திருக்கிறார்கள் என்பதை செக் செய்வதாலேயே நேரமாகி, பல பேர் காலையில் டிஃபன் கூட சாப்பிடாமல் காலேஜுக்கும், ஆபீஸுக்கும் ஓடுகிறார்கள். டிராஃபிக் சிக்னல்களில் கிடைக்கும் நாற்பது, ஐம்பது நொடிகளைக் கூட வீணாக்கிட யாரும் தயாரில்லை. உடனே மொபைலை எடுத்து புயல்வேகத்தில் ஒரு ‘டிக்டாக்கோ’, ‘டப்மாஷோ’ போட்டுத் தள்ளுகிறார்கள்.

அம்மாவோடு அன்பாகப் பேச நேரமில்லை. காதலியை/மனைவியைச் சீண்டி விளையாட அவகாசமில்லை. குழந்தைகளைக் கொஞ்ச முடியவில்லை. எப்போதும் மொபைல். நெட்டை பார்க்கவில்லை என்றால் உலகமே தன்னைத் தாண்டி எங்கோ ஓடிவிட்டதாக பயம்.
தேவுடா. என்ன எழவு இதெல்லாம்?

நான் அப்படியில்லை. எனக்கு ‘ஃபோமோ’ கிடையாது. நான் நார்மலாகத்தான் வாழ்கிறேன் என்றெல்லாம் பொய் சொல்லாதீர்கள். ‘ஃபோமோ’விலிருந்து வெளியே வரவேண்டுமானால், உங்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள்.
உங்களை நீங்களே கண்காணியுங்கள். இந்த ஸ்மார்ட் போன் கலாச்சாரம் வராத காலத்தில் என்ன என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தீர்களோ, இப்போது அதையெல்லாம் தொடர்கிறீர்களா என்று பட்டியலிட்டுப் பாருங்கள்.

வியாழக்கிழமை ஆனால் சாய்பாபா கோயிலுக்கு போய்க்கொண்டிருந்தீர்களே, இப்போது ஏன் போவதில்லை என்று யோசியுங்கள்.இரவுகளில் டயரி எழுதிக் கொண்டிருந்தீர்களே! அந்த திருப்தியை இப்போது நீங்கள் எழுதும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் அடைகிறீர்களா?
உங்களைப் பற்றி எல்லாமே அப்பட்டமாக உங்களை அறியாதவர்களுக்குக் கூடத் தெரிகிறது.

ஊசி என்றால் உங்களுக்கு பயமென்று உங்களை இதுவரை பார்த்தே அறியாத யாரோ ஒருவர் கிண்டல் செய்கிறார் என்றால், எப்படி அவருக்குத் தெரிந்தது? நீங்கள் என்றோ போட்ட ஒரு ஸ்டேட்டஸால்தானே? உங்கள் அந்தரங்கங்களை ஊரறிந்தது எப்படி என்று சிந்தியுங்கள்.

‘தல’ சூப்பரா, ‘தளபதி’ டாப்பா என்ற டாபிக்கில் யார் யாருடனோ சண்டை போட்டிருப்பீர்களே? அதற்கு எவ்வளவு நேரத்தை வீணாக்கியிருப்பீர்கள், எவ்வளவு ஆற்றலை செலவழித்திருப்பீர்கள் என்று லேசாக ‘ரீவைண்ட்’ செய்து பாருங்கள். ‘நார்மலாக’ வாழும் ஆசை எல்லோருக்குமே உண்டு.

‘ஃபோமோ’விலிருந்து வெளியே வந்தால், ஏற்கனவே நாம் வாழ்ந்துகொண்டிருந்த பொன்னுலகம் நமக்காக எப்போதும் காத்துக் கொண்டுதான் இருக்கிறது. எங்கேயும் எதுவும் போய்விடவில்லை. வெளியே வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போதே 50 சதவிகித வெற்றியை எட்டிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

இன்டர்நெட் எப்போதும் உங்களோடு இணைந்திருக்கும் நேரத்தை படிப்படியாகக் குறைப்பதுதான் ஒரே வழி.முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் இன்டர்நெட்டை பதினைந்து நிமிடங்களுக்கு ‘ஆஃப்’ செய்துவிடுங்கள். இந்த பதினைந்து நிமிடங்களை உங்கள் அன்றாட வேலைகளில் செலவழியுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து ‘ஆன்’ செய்துவிட்டு சரியாக ஐந்தே ஐந்து நிமிடம் மட்டும் நெட்டில் இருங்கள். மீண்டும் பதினைந்து நிமிட இடைவெளி.

ஓரிரு நாட்களில் இது பழகிவிடும். இப்போது இன்டர்நெட்டுக்கு முப்பது நிமிடம் லீவு விடுங்கள். அடுத்தடுத்து முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் என்று அதிகரித்துக்கொண்டே செல்லுங்கள்.

இரவில் நேரத்துக்கு தூங்க ஆரம்பியுங்கள்.காலையில் எழுந்ததுமே கையில் மொபைல் வேண்டாம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் கேளுங்கள். காஃபியை ருசித்துக் குடியுங்கள். பேப்பர் படியுங்கள். அதில் வந்த விஷயங்களை குடும்ப உறுப்பினர்களோடு விவாதியுங்கள்.

விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு ‘பிக்னிக்’ செல்லுங்கள். வார நாட்களில் ரிலாக்ஸ் ஆகவேண்டும் என்றால், நண்பர்களோடு ஈவ்னிங் ஷோ ஏதாவது நல்ல மசாலா படம் பாருங்கள். அவ்வப்போது போகோ டிவி பாருங்கள். ‘ஃபோமோ’ போயே போயிந்தி.இணையம் அவசியம்தான். அதில் நீங்கள் இணைந்திருப்பது ரொம்ப முக்கியம்.

ஆனால்-விர்ச்சுவல் வாழ்க்கையில் நிஜவாழ்வின் இன்பங்களைத் தொலைக்காதீர்கள்.ஒரு நாளைக்கு எவ்வளவு நாள் இணையத்தில் செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

யுவகிருஷ்ணா