கவிதை வனம்



கேள்வி  

படுக்கையறையின்
வெளிப்புற சன்னல்
கண்ணாடியில் தெரிவது
தன் பிம்பமென்றறியாமல்
எல்லா விடியலிலும்
தன்னைத் தானே
தன் அலகால்
முட்டி முட்டித்
தோற்றுப்போகும் ஒலியில்
என்னையும்
எழுப்பிவிடுமந்த
சிட்டுக்குருவியை
இன்றேனோ காணவில்லை
தாமதமாக விழித்த
இமைகளோடு
அனிச்சையாய் நோக்குகையில்
இறகொன்று உதிர்ந்திருந்தது
இது இன்று
வந்ததற்கான அடையாளமா
அல்லது இனி
எப்போதும் வராததற்கான
அடையாளமா
என்னும் கேள்வியோடு.
- திருவெங்கட்

அச்சம்

தேவதைகளுக்கான
கருவிகளைத் தேடி
விண்ணை முட்டும்
பசுஞ்சோலைக்குள்
புகுந்திருக்கிறேன்
நட்டநடுவே
சுட்டுவிடும் தொலைவில்
பாலையின் வெம்மை
இயற்கைக்கு முரணான  
கடுங்குளிர் நடுக்கம்
ஆட்கொண்டு
உறைந்திட எத்தனிக்கையில்
இறைந்து கிடக்கும்
அண்டப் பெருவெளியில்
நின்றிருக்கும்
தேவதூதனைக் கண்டு
அஞ்சுகிறேன்
அவனும்  
ஆண் மகனென்று
- பவித்ரா பாண்டியராஜு